கொல்கத்தாவில் உள்ள ஆர். ஜி. கர் அரசு மருத்துவமனையில் கடந்த ஆகஸ்ட் 9-ஆம் தேதி முதுகலை பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து, பா.ஜ.க. கும்பல் பெண்கள் மீதான பாலியல் வன்முறைக்கு எதிராக போராடுகிறேன் என்ற பெயரில் நாடகமாடி கலவரம் செய்ய முயற்சித்து வருகிறது. ஆனால், பா.ஜ.க-வின் உண்மை முகத்திரையைக் கிழித்துக் காட்டும் வகையில் மோடியின் வாரணாசி தொகுதியில் ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 1-ஆம் தேதி உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள பணாரஸ் ஹிந்து பல்கலைக்கழகத்தில், பி.டெக் (B.Tech) படித்து வந்த மாணவி இரவு தனது நண்பருடன் சேர்ந்து நடைப்பயிற்சி செய்துக்கொண்டிருந்தபோது, பைக்கில் வந்த மூன்று பேர் மாணவியின் நண்பரை கடுமையாக தாக்கிவிட்டு மாணவியை அங்கிருந்து காட்டுப்பகுதிக்குள் கடத்திச்சென்று துப்பாக்கி முனையில் மிரட்டி கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்ததுடன் அதனை வீடியோவாகவும் எடுத்து வைத்து மிரட்டி, “இது குறித்து வெளியே சொன்னால் உன்னைக் கொன்றுவிடுவோம்” என்று மிரட்டிவிட்டு அங்கிருந்து சென்றுள்ளனர்.
படிக்க : மகாராஷ்டிரா தேர்தல் தேதி: எஜமானின் உத்தரவுக்காக காத்திருக்கும் தேர்தல் ஆணையம்!
அங்கிருந்து தப்பித்து விடுதிக்கு சென்ற மாணவி தனக்கு நேர்ந்த கொடூரத்தைப் பற்றி சக தோழிகளிடம் தெரிவித்த பின்னர் அனைவரும் இணைந்து பல்கலை நிர்வாகம் மற்றும் போலீசுதுறையில் புகாரளித்தனர். அதன் பிறகு சி.சி.டி.வி. காட்சிகளை பரிசோதித்து பார்த்தபோது அந்த மூன்று பேரும் பா.ஜ.க-வின் ஐடி விங்கை சேர்ந்த அபிஷேக் செமளஹான், குனால் பாண்டே மற்றும் சக்சின் பட்டேல் என்பது தெரிய வந்தது.
இந்த பொறுக்கிகள் பா.ஜ.க-வை சேர்ந்தவர்கள் என்பதால் போலீசு இந்த மூவரையும் கைது செய்யாமல், காப்பாற்றும் வேலையில் இறங்கியது.
பின்னர் மாணவர்கள் அனைவரும் இணைந்து 10 நாட்கள் தொடர்ச்சியாக போராடியதன் விளைவாக, உள்ளூர் லங்கா போலீசு நிலையத்தின் பொறுப்பாளரை இடைநீக்கம் செய்து மாணவர்களை அமைதிப்படுத்த முயற்சித்தது. ஆனால், அதன் பின்னரும் குற்றவாளிகளை கைதுச் செய்யாமல் சுமார் இரண்டு மாதங்கள் கழித்து டிசம்பர் 31-ஆம் தேதிதான் மூவரையும் கைது செய்தது பா.ஜ.க-வின் கூலிப்படையான போலீசு.
சமீபத்தில் இவ்வழக்கு விசாரணையானது அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி கிரிஷன் பஹல் அமர்வில் விசாரணைக்கு வந்தது, அப்போது குற்றவாளிகள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், குனால் பாண்டே மற்றும் ஆனந்த் ஆகியோர் மீது இதைத்தவிர வேறு எந்த குற்ற வழக்குகளும் இல்லை என்றும் டிசம்பர் 31-ஆம் தேதியிலிருந்து கடந்த ஏழு மாதங்களாக சிறையில் வாடுவதாகவும் எனவே இருவருக்கும் ஜாமீன் வழங்கும்படி நீதிபதியிடம் தெரிவித்தார். இதற்கு ஏற்றார்போல் போலீசும் நீதிமன்றத்தில் போதுமான ஆதாரங்களை சமர்ப்பிக்காமல் இந்த பாலியல் பொறுக்கிகளை காப்பாற்றியது.
தன் பங்கிற்கு நீதிமன்றமும் இருவர் மீதும் வேறு வழக்குகள் இல்லாததனால் இருவரையும் பிணையில் விடுதலை செய்யும்படி தீர்ப்பளித்தது. பாலியல் பொறுக்கிகளை பிணையில் விடுதலை செய்கிற நீதிமன்றம், சமூகப் பிரச்சினைகளுக்காக குரல் கொடுத்ததால் பல ஆண்டுகளாக சிறையில் சித்திரவதையை அனுபவித்துவரும் உமர்காலித் போன்ற செயற்பாட்டாளர்களையும் எழுத்தாளர்களையும் விடுதலை செய்வதில்லை என்பதை இங்கு குறிப்பிட வேண்டியுள்ளது.
படிக்க : லடாக்கில் புதிய மாவட்டங்கள்: மக்களை ஏமாற்ற முடியாது
பில்கிஸ் பானு வழக்கில் நீதுமன்றத்தின் மூலம் விடுதலை செய்யப்பட்ட பொறுக்கிக் கும்பலுக்கு எப்படி மாலை அணிவித்து மரியாதை செய்ததோ, அதேபோன்றே தற்போது இந்த மாணவி வழக்கில் விடுதலைச் செய்யப்பட்ட பொறுக்கிகளுக்கும் தன்னுடைய பாரம்பரிய வழக்கத்தின்படி மாலை அணிவித்து கேக் வெட்டி கொண்டாடியது பா.ஜ.க. கும்பல். அந்த வீடியோவானது சமூக வலைதளத்திலும் பகிரப்பட்டது.
இதனைப் பற்றி கருத்து தெரிவித்துள்ள உ.பி. காங்கிரஸ் தலைவர் அஜய் ராய், “நீதிமன்றத்தால் ஜாமீனில் வெளிவந்துள்ள குற்றாவாளிகள் பாதிக்கப்பட்டப் பெண்ணை மிரட்டவோ அல்லது கொலை செய்யவோ மாட்டார்கள் என்பதற்கு என்ன உத்தரவாதம்? மோடியின் சொந்த நாடாளுமன்றத் தொகுதியில் இச்சம்பவம் நடந்திருப்பது அங்குள்ள சட்டம் ஒழுங்கு பிரச்சினையை காட்டுகிறது” என்றார்.
கடந்த சனிக்கிழமை அன்று டெல்லியில் நடைபெற்ற “நீதிமன்றங்களின் முக்கியப் பங்கு” என்ற மாநாட்டில் பேசிய மோடி, “பெண்களுக்கு எதிராக நடைபெறும் பாலியல் துன்புறுத்தல்களை தடுப்பதற்கும் குற்றவாளிகளை தண்டிப்பதற்கும் கடுமையான சட்டங்கள் உள்ளன, அதனை நீதிமன்றங்கள் விரைந்து நடைமுறைப்படுத்த வேண்டும்” என்று பேசினார். மோடியின் இத்தகைய பேச்சுகளும், “நரி- வந்தன்”, “ஆன்டி ரோமியோ”, “பேட்டி பதாவோ”, “பேட்டி பச்சாவோ” போன்ற பா.ஜ.க-வின் கோஷங்களும் வெறும் வெற்றுக் கூச்சல்கள் என்பது ஊரறிந்த உண்மை. ஏனென்றால் பா.ஜ.க-ஆர்.எஸ்.எஸ். கும்பல் பெண்களை அடிமையாக கருதும் பார்ப்பனிய வர்ணாசிரமக் கொள்கையினை தனது கோட்பாடாகவே கொண்டது. ஆசிபா, உன்னாவ், ஹதராஸ், பில்கிஸ்பானு, மணிப்பூர் தொடங்கி தற்போது மல்யுத்த வீராங்கனைகள் வரை பா.ஜ.க. கும்பல் பெண்களுக்கு இழைத்த கொடூரம் கொஞ்சநஞ்சமல்ல. பாலியல் குற்றவாளிகளின் கூடாரமாகத்தான் பா.ஜ.க கும்பல் உள்ளது.
படிக்க : அசாம்: பெங்காலி முஸ்லீம்களைக் குறிவைக்கும் காவிக் குண்டர்கள்
பெண்கள் மீது தொடுக்கப்படும் தாக்குதலுக்கு போதைக் கலாச்சாரமும் ஆபாச இணையதளங்களும் பெண்களை போக பொருளாக சித்தரிக்கும் நுகர்வு வெறியும் முக்கிய காரணங்களாக உள்ளன. பல இடங்களில் இவற்றை ஊட்டி வளர்க்கும் வேலையை பா.ஜ.க. கும்பல் செய்து வருகிறது. எனவே ஆபாச இணையதளங்களையும் போதைப் பொருட்களையும் அடிப்படையிலேயே பெண்களுக்கு விரோதமாக உள்ள ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க. கும்பலையும் தடை செய்வதன் மூலமே பெண்களுக்கு எதிரான பாலியல் தாக்குதல்களிலிருந்து பெண்களைப் பாதுகாக்க முடியும்.
இன்குலாப்