தூத்துக்குடி மாவட்டம் தருவைகுளம் கிராமத்தை சேர்ந்த மகாராஜா, தேனிலா ஆகியோரின் விசைப்படகுகளில் கடந்த 20/08/2024 மற்றும் 23/08/2024 ஆகிய தேதிகளில் 22 மீனவர்கள் மீன்பிடிக்க சென்றனர்.
கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர்களை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் 05/09/2024 அன்று கைது செய்து நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர். செப்டம்பர் 8 ஆம் தேதி வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது 12 பேருக்கு தலா 1.5 கோடி ரூபாய் (இலங்கை பணம்) அபராதம் செலுத்துமாறும், செலுத்த தவறினால் ஆறு மாதம் சிறை தண்டனை என்றும், மேலும் 10 பேருக்கு இம்மாதம் 10 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்குமாறும் தீர்ப்பு அளிக்கப்பட்டது.
இது குறித்து தருவைகுளம் கிராமத்து மக்கள் மற்றும் கைது செய்யப்பட்ட மீனவர்களின் உறவினர்கள் ஒன்றிய, மாநில அரசுகள் இதில் தலையிட்டு மீனவர்கள் விடுவிக்க வேண்டும் என்ற கோரிக்கை மனுவை தூத்துக்குடி கலெக்டர் மற்றும் கனிமொழி எம்.பி ஆகியோரிடம் அளித்தனர்.
அடுத்த கட்டமாக 22 மீனவர்களையும், 2 விசைப்படகுகளையும் இலங்கை அரசு விடுவிக்க வேண்டும். ஒன்றிய மாநில அரசுகள் இதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி 1000க்கும் மேற்பட்டோர் 09/09/2024 அன்று தருவைகுளத்தில் உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டனர். இதனால் கிராமத்தில் உள்ள கடைகள் அடைக்கப்பட்டது. 250 விசைப்படகுகள் மற்றும் 350 நாட்டுப் படகுகள் கடலுக்குள் செல்லாமல் நிறுத்தி வைக்கப்பட்டது.
இந்நிலையில் இந்த உண்ணாவிரதப் போராட்டத்திற்கு ஆதரவு அளிக்கும் வகையிலும், துணை நிற்கும் வகையிலும் மக்கள் அதிகாரம், சிபிஐ (எம்-எல்) லிபரேஷன், மே 17 இயக்கம் தோழர்கள் சென்றனர். ஆனால் இந்த அமைப்புகள் வந்தால் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படும், உங்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸ் போராடிய மக்களை மிரட்டியது. போலீசின் இந்த நடவடிக்கையை வன்மையாக கண்டிக்கிறோம்.
ஒருபுறம் இலங்கை அரசால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவது, சிறையில் அடைக்கப்படுவது, மீனவர்களின் படகுகள் பறிமுதல் செய்யப்படுவது, இலங்கை கடற்படையால் மீனவர்கள் சுட்டுக் கொல்லப்படுவது ஆகியவை தொடர்ந்து நடைபெற்றவண்ணம் உள்ளது. இப்பிரச்சனைகளுக்கு இலங்கை அரசை கண்டித்தும் ஒன்றிய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும் மீனவர்கள் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து வந்துள்ளனர். ஆனாலும் இப்பிரச்சனைக்கு இன்று வரை தீர்வு எட்டப்படவில்லை.
பாதிக்கப்பட்ட மக்களின் வலிகள், பிரச்சனைகள் பிற பகுதி மீனவர்களுக்கும், உழைக்கும் மக்களுக்கும் சரியான வகையில் கடத்தப்பட வேண்டும். இவ்விசயத்தில் உழைக்கும் மக்களின் ஒற்றுமையான போராட்டத்தின் வழியாக மட்டுமே ஒன்றிய, மாநில அரசுகளுக்கு அழுத்தம் கொடுக்க முடியும். அதன் வழியாகவே தீர்வு எட்டப்பட முடியும் என்பதே நிதர்சனமான உண்மையாக உள்ளது. இந்த வழியை அடைக்கும் வேலையைத்தான் போலீசு செய்கிறது. இப்போராட்டத்தை பாதிக்கப்பட்ட ஒரு கிராமத்து மீனவ மக்களின் போராட்டம் என்பதாக சுருக்கும் வேலையை போலீஸ் செய்கிறது. மக்கள் ஒற்றுமையை தடுத்து போராட்டத்தை முடக்கும் வேலையை செய்கிறது. இதனால் ஜனநாயக சக்திகள் போராட்டத்திற்கு வந்தால் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படும் என்றும் மக்களை கைது செய்வோம் என்று போலீஸ் மிரட்டுகிறது. இதை வன்மையாக கண்டிக்கிறோம்.
இப்படிக்கு,
மக்கள் அதிகாரம் – நெல்லை மண்டலம்,
சிபிஐ (எம்-எல்) லிபரேசன்,
மே 17 இயக்கம்.

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram