அரசு பேருந்தில் ஆர்.எஸ்.எஸ் வாசகம்!

ஒவ்வொரு முனையிலும் ஒவ்வொரு இடத்திலும் எதிர்த்து நிற்போம்!

ன்று (செப்டம்பர் 10) காலை ஒரு வழக்கிற்காக, திருவள்ளூர் மாவட்ட நீதிமன்றம் செல்ல திருவள்ளூர் ரயிலடியில் உள்ள அரசு பேருந்து ஏறினேன்.

ஓட்டுநருக்கு அருகில் உள்ள கண்ணாடியில் பாரத் மாதா கி ஜெய் என்ற முழக்கத்துடன் ஆர்.எஸ்.எஸ்-இன் பாரத மாதா படமும் இந்துஸ்தானம் ஏன் அவசியம் என்பதைப் பற்றி ஒரு சிறிய வாசகமும் இடம்பெற்றுள்ளது.

அந்த வாசகத்தின் கீழே பாரதியார் என்றும் பெயர் போட்டிருந்தது. எனக்குத் தெரிந்த வகையில் பாரதியார் இப்படி ஒரு பாப்பா பாட்டு எழுதியது போல இல்லை. ஆர்.எஸ்.எஸ் பாசிஸ்டுகள் எப்படி எல்லா இடத்திலும் ஊடுருவி தங்கள் கருத்துகளைப் பதிய வைக்கிறார்கள் என்பது மிகவும் முக்கியம். இதை அந்த இடத்தில் எதிர்கொள்ளாமல் நாம் வேறு எங்கேயும் எதிர்கொள்ள முடியாது.

என்னைத் தவிர அந்த பேருந்தில் இருந்தவர்கள் அத்தனை பேரும் சட்டக் கல்லூரி மாணவர்கள். சிலர் ஊழியர்களாக இருக்கலாம். யாருக்கும் இது தவறாகக் கூட தெரியவில்லை, ஏன் கவனிக்காமல் கூட போய் இருக்கலாம்.

ஓட்டுநரின் கடவுள் நம்பிக்கையை நான் கேள்விக்குள்ளாகவில்லை. ஒவ்வொரு ஓட்டுநரும் தன்னுடைய பணியைச் சரியாகச் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தின் அடிப்படையில் செயல்படுவார்கள். அவர்களுக்குப் பிடித்த கடவுள் படத்தை தாங்கள் வேலை செய்யும் பணியிடத்திற்கு அருகில் வைப்பார்கள்.

நான் ஏறிய அரசு பேருந்தில் கூட ஓட்டுநர் அவருக்குப் பிடித்த கடவுள் படத்தை மாற்றி வைத்திருந்தார். அதுவல்ல பிரச்சனை, அதன் கூடவே ஆர்.எஸ்.எஸ்-இன் சேதமில்லாத இந்துஸ்தானம் தொடர்பான படத்தையும் வைத்திருந்தார்.

நீதிமன்றம் நிறுத்தம் வந்தவுடன் “இது என்ன போட்டோ?” என்று ஓட்டுநரிடம் கேட்டேன்.

“பாரதமாதா போட்டோ” என்றார்.

“ஆர்.எஸ்.எஸ்-இன் வாசகத்தைக் கொண்ட பாரத மாதா போட்டோவை வைக்கலாமா?” என்று கேட்டேன்.

அமைதியாக இருந்தார்.

“யாரோ வைத்திருப்பார்கள், யார் வைத்தார்கள் என்று எனக்குத் தெரியாது” என்றார்.

“உங்களுக்குத் தெரியாமல் நடந்த சம்பவம் என்றால் இதனால் ஏற்படும் அனைத்து பிரச்சனைகளுக்கும் நீங்கள் பொறுப்பாவீர்களா? இல்லையா?” என்று கேட்டேன்.

இதற்கிடையில் நடத்துநர், “என்ன பிரச்சனை?” என்றார்.

“ஆர்.எஸ்.எஸ்-இன் படத்தை எப்படி அரசு பேருந்தில் வைக்க முடியும்?” என்று கேட்டேன்.

இதற்கிடையில் ………..- இல் பணிபுரியக்கூடிய ஒரு பெண், நான் பேசிக் கொண்டிருப்பதை மடைமாற்றும் வகையில், “ஸ்டுடென்ட்ஸ் இருக்கிறாங்க இறங்குங்க சார்” அதையே திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருந்தார்.

“ஆர்.எஸ்.எஸ் படத்தை இங்கே வைத்தது பற்றி பதில் சொல்லாமல் இறங்க மாட்டேன்” என்று உறுதியாக இருந்தேன்.

பேருந்தில் பலரும் அமைதியாக நான் பேசுவதைக் கேட்டுக் கொண்டிருந்தார்கள்.

“இந்த நாட்டின் பெயர் என்ன இந்தியாவா? இந்துராஷ்டிரமா? அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படையில் அரசு பேருந்தில் ஆர்.எஸ்.எஸ் – இன் படத்தை வைப்பதற்கு இடம் இருக்கிறதா?

“அகண்ட பாரதம் மேப் போட்டு அதில் ஆர்எஸ்எஸ் இன் பாரத மாதாவை வைப்பதற்கு யார் உரிமை கொடுத்தது?”

“உங்களுக்குப் பிடித்த கடவுளை வழிபடுகிறீர்கள் என்பது வேறு. ஆர்.எஸ்.எஸ் என்ற மத வெறி அமைப்புக்கு ஆதரவாக இருக்கிறார்கள் என்பது வேறு” என்று நான் பேசிக் கொண்டிருந்தேன்.

“பசங்க யாராவது வச்சிருப்பாங்க நாங்க என்ன செய்ய முடியும்?” என்றார் நடத்துநர்.

“நாளைக்குத் தனி தமிழ்நாடு வேணும், ஆர்.எஸ்.எஸ் அமைப்பை தடை செய்யனும்னு யாராவது ஒரு படம் கொடுத்தா அதுவும் மாட்டி வைப்பீங்களா?” என்றேன்.

வேறு வழியின்றி ஓட்டுநர் ஆர்.எஸ்.எஸ்-இன் பாரதமாதா போட்டோவை எடுத்து கீழே வைத்து விட்டார்.

“இப்ப போதுமா சார்?” என்றார்.

நான் இறங்கும்போது அந்தப் பெண் மீண்டும் ஆரம்பித்தார்.

“அம்மா நீங்க எல்லாம் மக்கள் பணத்தில் தான் சம்பளம் வாங்குறீங்க, ஆர்.எஸ்.எஸ் காரன் கிட்ட கிடையாது.
அதாவது நினைவிருக்கா?” என்றேன்.

அந்தப் பெண் மேற்கொண்டு பேசவில்லை.

நான் இறங்கியவுடன் தான் பேருந்து கிளம்பியது.

ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க; அம்பானி – அதானி பாசிசம் ஒழிக என்பதன் பொருள் சமூக வலைத்தளத்தில் கருத்து பதிவிடுவது மட்டுமல்ல. நாம் காணும் திசையெல்லாம் ஆர்.எஸ்.எஸ் பாசிச கும்பலுக்கு எதிராக போராடுவது தான்!

ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க பாசிஸ்டுகளை ஒவ்வொரு முனையிலும் எதிர் கொள்வோம்.

ஏனென்றால் இது தமிழ்நாடு!


முகநூலிலிருந்து… தோழர் மருது

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram