போராடும் சாம்சங் தொழிலாளர்கள் – அடையாள அட்டையை முடக்குவேன் என மிரட்டும் நிர்வாகம்!

போராட்டத்தில் ஈடுபட்டுவரும் தொழிலாளர்கள் திங்கட்கிழமைக்குள் (செப்டம்பர் 23) பணிக்குத் திரும்ப வேண்டும் என்றும், தவறும் பட்சத்தில் போராட்டத்தில் ஈடுபடும் தொழிலாளர்களின் அடையாள அட்டை முடக்கப்படும் என்றும் சாம்சங் நிறுவனம் மிரட்டல் விடுத்துள்ளது.

0

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே இயங்கும் சாம்சங் தொழிற்சாலையில் 1500க்-கும் மேற்பட்ட நிரந்தர தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். தொழிற்சங்க அங்கீகாரம், ஊதிய உயர்வு, போனஸ், 8 மணி நேர வேலை உள்ளிட்ட எட்டு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி செப்டம்பர் 9 ஆம் தேதி முதல் 12 நாட்களுக்கும் மேலாக சாம்சங் தொழிலாளர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

குறைந்த சம்பளம், சட்டத்துக்குப் புறம்பான பணி நிலைமைகள், அனுமதிக்கப்பட்ட விடுமுறைகளையே பயன்படுத்த முடியாத சூழல் என பல்வேறு குற்றச்சாட்டுக்கள் இந்நிறுவனத்தின் மீது எழுந்துள்ளது.

இந்நிலையில் அங்கு பணிபுரியும் தொழிலாளர்கள் சி.ஐ.டி.யு சங்கத்தில் இணைந்து கொண்டு, சங்கம் பதிவு செய்வதற்காக அனைத்து ஆவணங்களையும் வழங்கியுள்ளனர். ஆனால், தொழிலாளர் நலத்துறை இதுவரை சங்கத்தைப் பதிவு செய்யவில்லை. இதை எதிர்த்து சாம்சங் தொழிலாளர்கள் 12 நாட்களுக்கும் மேலாகப் போராடி வருகின்றனர்.

போராடும் தொழிலாளர்கள் மீது போலீசு அடக்குமுறையைக் கட்டவிழ்த்துவிட்டுள்ளது. தி.மு.க அரசோ தொழிலாளர் நலன்களைக் காற்றில் பறக்கவிட்டு அந்நிய முதலீட்டை ஈர்த்துக் கொண்டிருக்கிறது.


படிக்க: சாம்சங் தொழிலாளர்கள் போராட்டம் வெல்க! | பு.ஜ.தொ.மு


தொழிற்சங்கத்தை ஏற்க மறுப்பது மட்டுமல்ல, தொழிற்சங்கத்தை உடைப்பதற்காக சங்கம் அமைக்கப்பட்ட நாளிலிருந்து, கடந்த 85 நாட்களாக நிர்வாகம் அனைத்து விதமான தகிடுதத்தங்களையும் மேற்கொண்டு வருவதாகத் தொழிற்சங்க நிர்வாகிகள் குற்றம் சாட்டுகின்றனர்.

அதுமட்டுமல்லாமல், சாம்சங் நிறுவனம் உருவாக்கும் போட்டி தொழிலாளர் கமிட்டியில் இணையுமாறு ஆலைக்குள் பணி புரியும் தொழிலாளர்களை அச்சுறுத்துவது கட்டாயப்படுத்துவது மிரட்டுவது போன்ற வன்முறை நடவடிக்கைகளையும் நிறுவனம் மேற்கொண்டு வருகிறது.

இந்தப் போராட்டம் தொடர்பாக தொழிற்சாலை நிர்வாகம், தொழிற்சங்கம் மற்றும் தொழிலாளர் நலத்துறை சார்பில் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றது. மூன்று முறை நடைபெற்ற பேச்சு வார்த்தைகள் தோல்வியில் முடிந்துள்ளன. பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்த நிலையில், வேலை நிறுத்தப் போராட்டத்தில் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் தொழிலாளர்கள் திங்கட்கிழமைக்குள் (செப்டம்பர் 23) பணிக்குத் திரும்ப வேண்டும் என்றும், தவறும் பட்சத்தில் போராட்டத்தில் ஈடுபடும் தொழிலாளர்களின் அடையாள அட்டை முடக்கப்படும் என்றும் சாம்சங் நிறுவனம் மிரட்டல் விடுத்துள்ளது.

மேலும், இந்த ஆண்டுக்கான தீபாவளி போனஸ் தொழிலாளர்களின் வருகைப் பதிவிற்கு ஏற்ப வழங்கப்படும் என்றும், வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள் பணிக்கு வராத நாட்களுக்கு ஏற்ப பிடித்தம் செய்யப்பட்டு போனஸ் வழங்கப்படும் என்றும் நிறுவனம் கூறியுள்ளது.

கூடுதலாக, வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வரும் தொழிலாளர்களுக்கு தீபாவளி பரிசை வழங்க இயலாது என்றும் சாம்சங் நிறுவனம் திமிர் தனமாகக் கூறியுள்ளது.

ஆனால், நிறுவனத்தின் மிரட்டல்களைப் பொருட்படுத்தாமல் சாம்சங் தொழிலாளர்கள் தங்களது போராட்டத்தைத் தொடர்ந்து வருகின்றனர். போராடி வரும் சாம்சங் தொழிலாளர்களுக்கு அனைவரும் துணை நிற்க வேண்டும்.


பொம்மி

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க