ஐ.நா தீர்மானம்: இஸ்ரேலின் இனப்படுகொலையை ஆதரிக்கும் பாசிச மோடி அரசு

தற்போது ஐ.நா தீர்மானத்தின் மீதான வாக்களிப்பைப் புறக்கணித்ததன் மூலம் போர் வெறி பிடித்த இஸ்ரேல் – அமெரிக்காவின் இனப்படுகொலைக்கு ஆதரவாக நிற்பதைப் பாசிச மோடி கும்பல் உறுதிசெய்துள்ளது.

பாலஸ்தீனத்தின் பகுதிகளில் சட்டவிரோதமாகக் குடியேறியுள்ள இஸ்ரேல் அரசானது இன்னும் 12 மாதத்திற்குள் பாலஸ்தீனத்தை விட்டு வெளியேற வேண்டும் என்று செப்டம்பர் 18 ஆம் தேதி பாலஸ்தீனத்தால் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தை ஐ. நா பொதுச் சபை நிறைவேற்றியுள்ளது. ஆனால், இந்த தீர்மானத்தின் மீதான வாக்களிப்பை இந்தியா புறக்கணித்துள்ளது.

அதன்படி கடந்த ஜூன் மாதம் பாலஸ்தீன பகுதிகளை இஸ்ரேல் ஆக்கிரமித்திருப்பது சட்டவிரோதமானது. மேலும் முடிந்தவரை இஸ்ரேல் விரைவாக வெளியேற வேண்டும் என்று ஐ. நா வின் சர்வதேச நீதிமன்றத்தின் 15 பேர் கொண்ட நீதிபதிகள் குழு கருத்து தெரிவித்திருந்தது. அந்த கருத்தை வரவேற்ற ஐ. நா பொதுச் சபை பாலஸ்தீனத்தின் தீர்மானத்தை நிறைவேற்றிய நிலையில், தீர்மானத்திற்கு ஆதரவாக 124 நாடுகளும் தீர்மானத்திற்கு எதிராக 14 நாடுகளும் வாக்களித்தன. இந்தியா, அமெரிக்கா உட்பட 43 நாடுகள் தீர்மானத்தின் மீதான வாக்களிப்பைப் புறக்கணித்துள்ளன.

தீர்மானம் பற்றி கருத்து தெரிவித்துள்ள மேற்கு கரை சுகாதார அமைச்சகம், “இஸ்ரேல் ஆக்கிரமிப்புகளிலிருந்து வெளியேற வேண்டும் மற்றும் அதன் குற்றங்கள் முடிவுக்குக் கொண்டு வரவேண்டும் என்பதற்கு ஆதரவாக ஐ. நா வின் உறுப்பு நாடுகளில் மூன்றில் இரண்டு பங்கு நாடுகள் இருப்பது உலகளாவிய ஒருமித்த கருத்தைப் பிரதிபலிக்கிறது. மேலும் தற்போது பாலஸ்தீன மக்களிடமிருந்து பறிக்க முடியாத சுய ஆட்சி உரிமைகளை உறுதிப்படுத்தும் விதமாக உள்ளது” என்று தெரிவித்துள்ளது.

தீர்மானத்துக்கு வாக்களிப்பதிலிருந்து இந்தியா விலகி இருப்பது குறித்து ஐக்கிய நாடுகள் அமைப்புக்கான நிரந்தர உறுப்பினர் பர்வதனேனி ஹரிஷ் கூறுகையில் “இன்று நடைபெற்ற வாக்கெடுப்பில் இந்தியா பங்கு பெறவில்லை. நாங்கள் அமைதியான பேச்சுவார்த்தை மூலமாகத் தீர்வை கோரி வருகிறோம். மோதலை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு இதனைவிட்டால் வேறு வழியில்லை. எனவே நாம் அனைவரும் இரு நாடுகளையும் ஒன்றுபடுத்துவதற்குப் பாடுபட வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.


படிக்க: லெபனான் மீதான இஸ்ரேலின் பயங்கரவாதம் – மக்கள் அதிகாரம் கண்டனம்


போர் தொடங்கியதிலிருந்து பாசிச மோடி அரசானது அதானியின் நிறுவனமான “அதானி-எல்பிட் அட்வான்ஸுடு சிஸ்டம்ஸ் இந்தியா” (Adani-Elbit Advanced Systems India Limited) மூலம் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 20 “ஹெர்ம்ஸ் 900” ரக ட்ரோன்களை இஸ்ரேலின் இனப்படுகொலைக்கு ஆதரவாக அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆரம்பத்தில் இருந்தே பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக இருக்கிறோம் என்று தெரிவித்துவந்த பாசிச கும்பல், தற்போது ஐ.நா தீர்மானத்தின் மீதான வாக்களிப்பை புறக்கணித்து இஸ்ரேல் – அமெரிக்காவின் மனம் கோணாத வகையில் செயல்பட்டுள்ளது. இதற்கு முன்னரும் பாசிச மோடி அரசானது யூத இனவெறி பிடித்த இஸ்ரேலின் பாலஸ்தீனத்தின் மீதான போரை நிறுத்த வலியுறுத்திய சில தீர்மானங்களை புறக்கணித்துள்ளது.

பாலஸ்தீனத்தில் கொத்துக்கொத்தாக அப்பாவி மக்களும் குழந்தைகளும் கொடூரமாக இனப்படுகொலை செய்யப்பட்டு வரும் சூழலிலும் மேற்கூறிய நடவடிக்கைகள் மூலம் பாசிச மோடி அரசானது பாலஸ்தீன மக்களுக்கு எதிராகவும், போர் வெறி பிடித்த இஸ்ரேல் – அமெரிக்காவுக்கு ஆதரவாகவும் செயல்பட்டு வருவது மீண்டும் ஒரு முறை அம்பலமாகியுள்ளது.


இன்குலாப்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க