ஜார்க்கண்ட் மாநிலத்தில் காவிக் கும்பலானது பழங்குடியின மக்களிடையே இந்து பழங்குடியினர்கள் தான் உண்மையான பழங்குடியினர்கள் கிறிஸ்தவ பழங்குடியினர்கள் போலியானவர்கள் என்ற மதவெறிப் பிரச்சாரத்தின் மூலம் பழங்குடியின மக்களிடையே மோதலைத் தூண்டி வருகிறது.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஜார்க்கண்ட் முக்தி மோர்சா (ஜே.எம்.எம்) மற்றும் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், பாசிச மோடி அரசானது முதல்வர் ஹேமந்த் சோரனை கடந்த ஜனவரி மாதம் ஊழல் வழக்கில் கைது செய்து சிறையில் அடைத்தது. அதன் மூலம் ஜே.எம்.எம் கட்சியை உடைத்து ஆட்சியைக் கைப்பற்றி விடலாம் என்று நினைத்தது. அம்முயற்சி தோல்வியடைந்த நிலையில் மத வெறுப்பு பிரச்சாரத்தைப் பாசிச கும்பல் கையில் எடுத்துள்ளது.
சத்தீஸ்கர் மாநிலத்தைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் பழங்குடியின பிரிவான அகில பாரதிய வனவாசி கல்யாண் ஆசிரமம் என்கிற மதவெறி அமைப்பு ஜார்க்கண்ட் பழங்குடியின மக்களிடையே “இந்து பழங்குடியினர் மட்டும்தான் உண்மையான பழங்குடியினர்; கிறிஸ்தவ பழங்குடியினர் போலியானவர்கள். அதனால் அவர்கள் பழங்குடியின பட்டியலிலிருந்து நீக்கப்பட வேண்டும். இந்து பழங்குடியின ‘வனவாசி’களே இனிமேல் ஜார்க்கண்டின் பழங்குடியின மக்கள்” என்ற பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது. கிறிஸ்தவ பழங்குடியினருக்கு எதிரான வெறுப்பு பிரச்சாரத்தில் இவர்கள் மாநிலம் முழுவதும் ஈடுபட்டு வருவதால் ஒரு சில இடங்களில் வன்முறை ஏற்படுவதற்கான நிலைமைகள் உருவாகியுள்ளது.
படிக்க: பஸ்தர்: பழங்குடியினர் மீது பயங்கரவாத தாக்குதல்களை ஏவும் ராணுவ முகாம்கள்
பா.ஜ.க-வின் அரசியல் கணக்கு தெரிந்தே கடந்த 2021 ஆம் ஆண்டிலேயே ஹேமந்த் சோரன் பழங்குடியினரின் உரிமைகள் மற்றும் பழக்கவழக்கங்களை சட்டப்பூர்வமாகப் பாதுகாக்க “சர்ணா” குறியீடு தொடர்பான தீர்மானம் ஒன்றை சட்டமன்றத்தில் நிறைவேற்றினார். இத்தீர்மானமானது பழங்குடியின மக்கள் எந்த ஒரு மதத்தையும் சார்ந்தவர்கள் அல்ல என்பதை வலியுறுத்துகிறது. ஆனால் இதற்கு ஒப்புதல் அளிக்காத ஒன்றிய அரசு இந்து பழங்குடியினர்தான் உண்மையான பழங்குடியினர்கள் என்று பழங்குடியின மக்களிடையே மத மோதலை தூண்ட முயற்சி செய்து வருகிறது.
கடந்த நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய மோடி காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் உங்களின் செல்வங்களை எல்லாம் ஊடுருவல்காரர்களுக்கும் அதிகம் குழந்தை பெற்றுக் கொள்பவர்களுக்கும் கொடுத்து விடுவார்கள் என்று இஸ்லாமிய மத வெறுப்பைத் தூண்டினார். அதேபோன்று இவ்வாண்டு இறுதியில் நடக்கவிருக்கும் ஜார்க்கண்ட் சட்டமன்றத் தேர்தலில் பெருவாரியாக உள்ள பழங்குடியின மக்களை தங்கள் பக்கம் அணி திரட்டிக் கொள்வதற்கு காவிக் கும்பலானது அம்மக்களிடையே மத மோதலைத் தூண்டி வருகிறது.
இன்குலாப்
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram