திமுக அமைச்சர்களும் சாம்சங் நிறுவனமும் செய்திருக்கும்
கூட்டுசதியை வன்மையாக கண்டிக்கிறோம்
இன்று (07-10-2024) மாலை 3 மணி அளவில் திமுக அமைச்சர்கள் TRP ராஜா, தா மோ அன்பரசன், வி சி கணேசன் மூவர் முன்னிலையில் நமது சாம்சங் இந்தியா தொழிலாளர் சங்கத்தின் பேச்சுவார்த்தைக் குழு தோழர் அ சவுந்தரராஜன், இ முத்துக்குமார், சங்க நிர்வாகிகள் எல்லன், மாதேஷ், மோகன்ராஜ், பாலாஜி, ஹாசிம், சிவனேசன், சுபாஷ் உள்ளிட்ட 9 பேர் குழு பேச்சு வார்த்தை நடத்தியது.
ஊதிய உயர்வு உள்ளிட்ட அனைத்து கோரிக்கைகளையும் எங்கள் சங்கத்தோடு பேசுவதற்கு நிர்வாகம் சம்மதிக்க வேண்டும்; அரசின் முன்னால் பேச்சுவார்த்தை நடத்த அரசு அவர்களுக்கு அறிவுறுத்த வேண்டும்; தொழிற்சங்க உரிமைகளை ஒருபோதும் நாங்கள் சமரசம் செய்ய முடியாது என்று நமது நிலையை திட்டவட்டமாக தெரிவித்தோம். மேற்கண்ட நமது கோரிக்கைகள் குறித்து சாம்சங் நிர்வாகத்திடமும் முதலமைச்சரிடமும் நாளை தெரிவித்துவிட்டு எங்கள் முடிவை சொல்லுகிறோம் என்று அமைச்சர் த மோ அன்பரசன் அவர்கள் தெளிவுபட சொன்னார்.
நாம் வெளியே வந்து விட்டோம். பேச்சு வார்த்தையில் நடந்த அனைத்து விஷயங்களும் ஊடகங்கள் முன்னால் நமது தரப்பில் தெரிவிக்கப்பட்டன.
நாம் வந்த பிறகு ஏற்கெனவே திட்டமிடப்பட்ட அமைச்சர்களும் சாம்சங் நிறுவனமும் ஏற்படுத்தி வைத்திருக்க கூடிய ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் என்ற ஆவணத்தை சாம்சங் தொழிற்சாலையில் இருந்து முன்கூட்டியே அழைத்து வரப்பட்ட ஒரு சில அப்பாவி தொழிலாளிகளை கையில் வைத்துக்கொண்டு சாம்சங் நிறுவனமும் அமைச்சர்களும் ஒரு உடன்பாடு ஏற்பட்டதாகவும் அந்த செய்தியை ஊடகங்களுக்கு சாம்சங் தொழிலாளர்களின் கோரிக்கையில் உடன்பாடு ஏற்பட்டது என்று அமைச்சர் அலுவலகங்களில் இருந்து அறிக்கையில் வெளியிடப்படுகின்றன. இதை எல்லா ஊடகங்களும் சமீபத்தில் வெளியிட்டுள்ளன. மேலும் தொழிற்சங்க போராட்டம் குறித்தும் தலைவர்கள் குறித்தும் அவதூறு செய்திகளை சாம்சங் நிர்வாகம் திட்டமிட்டு உருவாக்கி செய்து வருகிறது. இவை எல்லாவற்றிற்கும் பின்னால் கார்ப்பரேட் நிறுவனமும் அமைச்சர்களும் உடந்தையாக பகிரங்கமாக செயல்பட்டது என்பது தொழிலாளிவர்க்க வர்க்க போராட்டத்தில் திமுக அரசு செய்திருக்கிற மாபெரும் துரோகம் கருங்காலித்தனம்.
பெரும்பான்மை தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் இருக்கிறபோது, அவர்கள் கோரிக்கைகள் குறித்து முதலமைச்சரிடம் பேசிவிட்டு நாளை சொல்கிறோம் என்று சொன்ன இந்த அமைச்சர்கள் புறவழியான சதி திட்டத்தின் மூலம் நிர்வாகத்துக்கு ஆதரவான ஒரு குழுவோடு பேச்சுவார்த்தை நடத்தி உடன்பாடு ஏற்பட்டதாக செய்திவெளியிடுவது குழப்பம் ஏற்படுத்துவதாகும். சாம்சங் நிறுவனம் மற்றும் அமைச்சர் பெருமக்களின் இந்த இழிவான செயலை சிஐடியூ வன்மையாக கண்டிக்கிறது. நம்முடைய வீரம் செறிந்த வேலைநிறுத்தம் போராட்டம் தொடரும். நாளை போராட்ட பந்தலில் தொழிலாளர்கள் குடும்பத்தோடு சங்கமிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
இ முத்துக்குமார்,
தலைவர்,
சாம்சங் இந்தியா தொழிலாளர் சங்கம் (சி.ஐ.டி.யூ)
முகநூலிலிருந்து… முத்துக்குமார்
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram