நேற்று இரவு (அக்டோபர் 8) சாம்சங் தொழிலாளர்களின் வீடுகளுக்குச் சென்ற போலீசு தொழிற்சங்க நிர்வாகிகள் உள்பட 10க்கும் மேற்பட்ட தொழிலாளர்களைக் கைது செய்ததுடன் போராட்டப் பந்தலையும் அகற்றியுள்ளது.
காஞ்சிபுரம் சுங்குவார்சத்திரம் பகுதியில் உள்ள சாம்சங் தொழிற்சாலையைச் சேர்ந்த தொழிலாளர்கள் எட்டு மணி நேர வேலை, சங்கம் அமைக்கும் உரிமை உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 25 நாட்களுக்கும் மேலாகத் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
நேற்று (அக்டோபர் 8) காலை போலீசார் பேருந்துகளில் ஏறி சாம்சங் தொழிலாளர்கள் இருக்கிறார்களா என்று சோதனை செய்ததுடன் மற்ற கம்பெனிகளுக்கு வேலைக்குச் செல்லும் தொழிலாளர்களின் அடையாள அட்டையையும் வாங்கி சோதனை செய்துள்ளனர்.
அதோடு போலீசானது பயங்கரவாதிகளைப் பிடிக்கப் போவது போல நள்ளிரவில் சாம்சங் தொழிற்சங்க நிர்வாகிகள் தொழிலாளர்களின் வீடுகளுக்குள் புகுந்து 10க்கும் மேற்பட்டோரைக் கைது கைது செய்துள்ளது.
அத்துடன் அதே நாளில் சாம்சங் நிறுவனம் அருகில் உள்ள தனியார் இடத்தில் பந்தல் அமைத்து போராட்டம் நடத்தி வந்த நிலையில் போலீசானது தொழிலாளர்களைப் போராட்டத்தைக் கைவிடும்படி மிரட்டியதோடு இரவோடு இரவாக போராட்ட பந்தலையும் அகற்றியுள்ளது.
படிக்க: தி.மு.க அமைச்சர்களும் சாம்சங் நிறுவனமும் செய்திருக்கும் கூட்டுசதி
இன்று (அக்டோபர் 9) காலை தி.மு.க அரசின் போலீசு அடக்குமுறையைக் கண்டித்து சாம்சங் தொழிலாளர்கள் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். 200க்கும் மேற்பட்ட தொழிலாளர்களைப் போலீசை வைத்து கைது செய்துள்ளது தி.மு.க அரசு.
ஒருபுறம் சாம்சங் தொழிலாளர்களின் போராட்டத்திற்கு விரைவில் தீர்வு காணப்படும் எனத் தெரிவிக்கும் தி.மு.க அரசு மறுபுறம் போலீசைக் கொண்டு போராடும் தொழிலாளர்களை ஒடுக்கி வருகிறது.
தி.மு.க அரசானது அமெரிக்க கார்ப்பரேட் நிறுவனங்களின் முதலீட்டையும் சாம்சங் நிறுவனத்தின் லாபத்தையும் சாம்சங் தொழிலாளர்களின் போராட்டம் பாதித்து விடக்கூடாது என்ற தன்னுடைய கார்ப்பரேட் பாசத்தால் போராடும் தொழிலாளர்களைப் போலீசைக் கொண்டு ஒடுக்கி வருகிறது.
இன்குலாப்
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram