கடந்தாண்டு கோவை வடவள்ளி பகுதியைச் சேர்ந்த ஓய்வுபெற்ற பேராசிரியரான காமராஜ் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுவைத் தாக்கல் செய்திருந்தார். அம்மனுவில் தனது மகள்கள் கீதா மற்றும் லதா 2016-ஆம் ஆண்டு ஈஷா ஆசிரமத்திற்கு யோகா கற்கச் சென்றனர். அங்குள்ளவர்கள் தனது மகள்களை மூளைச் சலவை செய்து அங்கேயே தங்கவைத்துவிட்டனர் என்று தெரிவித்திருந்தார்.
மேலும், ஈஷா ஆசிரமத்தில் தனது மகள்களைத் தனி அறையில் அடைத்துத் துன்புறுத்துவதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன. இதனால் நானும் எனது மனைவியும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளோம். நான் ஈஷா ஆசிரமத்தின் மீது வைத்த குற்றச்சாட்டுகளுக்காக ஈஷாவிடம் பொது மன்னிப்பு கேட்டால்தான் எனது மகள்களிடம் பேச முடியும் என்று கூறுகிறார்கள். அத்துடன் நான் ஈஷா யோகா ஆசிரமத்துக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டால் சாகும் வரை உண்ணாவிரதம் இருப்பேன் என்று தன்னுடைய இரண்டாவது மகளையே கூறவைத்து மிரட்டுவதாகவும் கூறி தனது இரண்டு மகள்களை மீட்டுத்தருமாறு தன்னுடைய மனுவில் தெரிவித்திருந்தார்.
காமராஜருடைய ஆட்கொணர்வு மனுவை செப்டம்பர் 30 ஆம் தேதி விசாரித்த சென்னை உயர்நீதிமன்றத்தின் நீதிபதிகள் எம்.எஸ்.சுப்பிரமணியம், சிவஞானம் ஆகியோர் தலைமையிலான அமர்வு ஈஷா ஆசிரமத்தின் மைய நிறுவனர் சத்குரு என்று அழைக்கப்படும் ஜக்கி வாசுதேவ் தனது மகள்களுக்குத் திருமணம் செய்துவைத்து விட்டு மற்ற பெண்களுக்கு மொட்டை அடித்து சன்னியாசிகளாக மாற்றி ஈஷா ஆசிரமத்தில் வாழ ஜக்கி ஏன் ஊக்குவிக்கிறார் எனக் கேள்வி எழுப்பினர்.
மேலும், விசாரணைக்குப் பின்னர் ஈஷா ஆசிரமத்தின் மீது நிலுவையில் உள்ள பாலியல் குற்றச்சாட்டுகள் உள்ளிட்டு அனைத்து கிரிமினல் வழக்குகளையும் விசாரித்து அக்டோபர் 4-ஆம் தேதி அறிக்கையாக சமர்ப்பிக்கும்படி போலீசாருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
படிக்க: சத்குருவின் சட்டவிரோத சாம்ராஜ்யம் கட்டிஎழுப்பப்பட்டது எப்படி? – பாகம் 1
சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின்படி அக்டோபர் 1, 2 ஆகிய தேதிகளில் கோவை மாவட்ட சமூக நல அலுவலர் அம்பிகா தலைமையில் சமூக நலத்துறை அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள், குழந்தைகள் நல அதிகாரிகள் ஆறு குழுக்களாகப் பிரிந்து ஈஷா யோகா ஆசிரமத்தில் உள்ளவர்கள் எந்த நிலையில் உள்ளனர், ஆசிரமத்தில் வேறு என்ன மாதிரியான பிரச்சினைகள் உள்ளன போன்றவற்றை ஆய்வுசெய்து அறிக்கையாக நான்காம் தேதி நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க இருந்தனர்.
சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆய்வறிக்கை சமர்ப்பிக்கப்பட்டால் தங்களுடைய முறைகேடுகள், பெண்களுக்கு இழைக்கப்படும் பாலியல் துன்புறுத்தல்கள் அம்பலப்பட்டு விடும் என்று அஞ்சிய ஈஷா ஆசிரமம், தன்னுடைய வழக்கறிஞர் ரோஹத்கி மூலம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுத் தாக்கல் செய்தது. அதில் சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவு மிகையானது என்றும், ஈஷா யோகா அறக்கட்டளை போன்ற ஒரு நிறுவனத்தில் காவல்துறையோ ராணுவத்தையோ அனுமதிக்க முடியாது. எனவே, இம்மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தது.
அதன்படி அக்டோபர் மூன்றாம் தேதியே ஈஷா ஆசிரமம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்ற நீதிபதிகள் சந்திரசூட், பார்திவாலா, மனோஜ் மிஸ்ரா அடங்கிய அமர்வு அவசர வழக்காக விசாரித்தது. நீதிபதி சந்திரசூட் காணொளி வாயிலாக காமராஜருடைய மகள்களான கீதா மற்றும் லதா ஆகிய இருவரிடமும் விசாரணை நடத்தினார். இருவரும் தங்கள் சுய விருப்பத்திலேயே ஈஷா ஆசிரமத்தில் இருப்பதாகத் தெரிவித்தனர்.
எனவே, ஈஷா ஆசிரமத்திற்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்றுவரும் வழக்கு விசாரணையை உச்சநீதிமன்றத்திற்கு மாற்றியும் போலீசால் சென்னை உயர்நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட வேண்டிய அறிக்கையை உச்சநீதிமன்றத்தில் சமர்ப்பிக்க உத்தரவிட்டும் ஈஷா ஆசிரமத்தில் போலீஸ் விசாரணை நடத்த இடைக்காலத் தடை விதித்தும் என்று உத்தரவிட்டு அக்டோபர் 18-ஆம் தேதிக்கு வழக்கு விசாரணைக்கு உச்சநீதிமன்ற அமர்வு ஒத்திவைத்துள்ளது.
படிக்க: யானைகளின் வழித்தடத்தை அழித்து விவசாயிகளின் வயிற்றிலடித்த ஜக்கி !
இவ்வாறு உச்சநீதிமன்றத்தின் நடவடிக்கைகளான ஈஷா ஆசிரமத்தின் கோரிக்கையை ஏற்று வழக்கை அவசர வழக்காக விசாரித்தது; குறிப்பாக, வழக்கை உச்சநீதிமன்றத்துக்கு மாற்றியது; போலீசின் அறிக்கையை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவிடாமல் தடுத்தது ஆகிய நடவடிக்கைகள் உச்சநீதிமன்றமானது ஈஷா ஆசிரமத்தையும் கார்ப்பரேட் சாமியாரான ஜக்கியையும் காப்பாற்றும் வகையில் செயல்பட்டு வருவதையே நமக்கு வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.
மேலும், இதற்கு முன்னர் ஈஷா ஆசிரமத்தின் மீது யானை வழித்தடங்களாக உள்ள வனநிலத்தை அழித்து ஈஷா ஆசிரமம் கட்டப்பட்டுள்ளது, ஈஷா ஆசிரமத்திற்குப் பயிற்சிக்காகச் செல்லும் பெண்கள் மாயமாவது மற்றும் பாலியல் வன்கொடுமைகளுக்கு உள்ளாக்கப்படுவது, இந்த ஆசிரமத்தின் நடமாடும் மருத்துவக் குழுவைச் சேர்ந்த மருத்துவர் சரவணமூர்த்தி அரசுப் பள்ளி மாணவிகள் 12 பேருக்கு பாலியல் தொல்லை கொடுத்திருப்பது ஆகிய குற்றச்சாட்டுகளும் உள்ளன.
இந்த நிலைமையிலும் உச்சநீதிமன்றம் ஜக்கியை பாதுகாக்கும் வகையில் செயல்பட்டு வருவது அப்பட்டமான மக்கள் விரோத நடவடிக்கையாகும். மேலும், கார்ப்பரேட் சாமியாரான ஜக்கி இந்துராஷ்டிரக் நச்சுக் கருத்துகளை மக்கள் மத்தியில் விதைப்பதற்காக ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க. கும்பலின் கையாளாகச் செயல்பட்டு வரும் சாமியார் ஆவார். ஆகவே, உச்சநீதிமன்றமானது ஜக்கியை பாதுகாப்பதன் மூலம் ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. கும்பலின் நலனுக்காகவே செயல்படுகிறது என்பது மீண்டும் நிரூபணமாகியுள்ளது.
இன்குலாப்
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram