14.10.2024
மனவளர்ச்சி குறைபாடுடைய பெண் மீதான
பாலியல் வன்கொடுமை குற்றவாளியுடன் கூட்டாளியாக செயல்பட்ட
விருத்தாச்சலம் போலீசு இன்ஸ்பெக்டர் முருகேசனை கைது செய்!
பத்திரிகை செய்தி
கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை வட்டம், பாலி கிராமத்தைச் சேர்ந்த தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த மனவளர்ச்சிக் குறைபாடுடைய (Intellectual Disability 50%) இளம் பெண் ஒருவர் கடந்த மே மாதம் 18 ஆம் தேதி காணாமல் போனார். இது தொடர்பாக விருத்தாச்சலம் போலீசு நிலையத்தில் புகார் கொடுத்து முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. 20 நாட்கள் கழித்து விருத்தாச்சலம் பேருந்து நிலையத்தில் உறவினர் ஒருவரால் கண்டறியப்பட்டார். அன்றைய நாள் மாலையில் விருத்தாச்சலம் போலீசு நிலையத்தில் பெற்றோர் மற்றும் உறவினர்கள் பெண்ணை ஒப்படைத்தனர்.
அந்தப் பெண் காணாமல் போகவில்லை. ஆண்டனி ஆகாஷ் என்பவரால் மேற்படி தேதியில் திருமண ஆசை காட்டி கடத்திச் செல்லப்பட்டு பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டுள்ளார். இதை அறிந்த பெண்ணின் பெற்றோர் மேற்கண்ட குற்றத்தின் அடிப்படையில் பாதிக்கப்பட்ட பெண் பிறவியிலேயே மனநலம் குன்றியவர் என்பதால் அதற்கேற்ற வகையில் விசாரித்து வழக்குப் பதிவு செய்து சம்பந்தப்பட்ட குற்றவாளியைக் கைது செய்ய வேண்டும் எனப் புகார் கொடுத்தும் புகார் மீது நடவடிக்கை இல்லை. நிகழ்வு நடந்து ஐந்து மாதங்கள் கடந்த பின்னரும் முதல் தகவல் அறிக்கை பாலியல் வன்புணர்வு வழக்கு பிரிவின் கீழ் திருத்தம் செய்யப்படாமல் உள்ளது. இது அவர்களுக்கு இழைக்கப்படும் அநீதி. இதை மக்கள் அதிகாரம் வன்மையாகக் கண்டிக்கின்றது.
குற்றம் சாட்டப்பட்ட நபரைத் தப்ப வைப்பதற்கான அனைத்து வேலைகளையும் செய்துள்ளது போலீசு. குற்றவாளிகளைப் பிடித்து சட்டத்தின் முன் நிறுத்துவதற்குப் பதில் தனக்கு வழங்கப்பட்ட சட்டப்படியான அதிகாரத்தை வைத்துக்கொண்டு பாதிக்கப்பட்ட அப்பாவி பெண்ணையும் அவர் குடும்பத்தாரையும் மிரட்டி வருகிறது விருத்தாச்சலம் போலீசு.
ஒரு பெண் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டதை உறுதி செய்யும் மருத்துவப் பரிசோதனையை மேற்கொள்ளாமல் தடயங்களை அழிக்கும் வேலையில் விருத்தாச்சலம் போலீசு ஆய்வாளர் முருகேசன் ஈடுபட்டுள்ளார். அதன் அடிப்படையில் இந்த குற்ற சம்பவத்தில் விருத்தாச்சலம் போலீசு ஆய்வாளரை இந்த வழக்கின் முதன்மைக் குற்றவாளியாகக் கருதி அவர் மீது குற்றவழக்கு பதிவு செய்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். மனவளர்ச்சி குன்றிய பெண்ணை ஏமாற்றி திருமண ஆசை காட்டி பாலியல் பலாத்காரம் செய்த ஆண்டனி ஆகாஷ் என்ற நபர் மீது மேற்படி புகாரின் அடிப்படையில் கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகள் தலைவிரித்தாடும் இச்சூழலில் மனவளம் குன்றிய இப்பெண்ணுக்கு நேர்ந்த கொடுமைகள் அதிர்ச்சியடைய வைக்கின்றன. இது போன்ற பெண்களுக்கு எதிரான குற்றங்களில் போலீசுத்துறையின் செயல்பாடுகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. பாதிக்கப்பட்ட பெண்களுக்கு எதிராகச் செயல்படும் போலீசுத் துறையினரையும் அதே வழக்கில் குற்றவாளியாகச் சேர்த்து விசாரணை மேற்கொள்ள வேண்டும் எனத் தமிழ்நாடு அரசைக் கேட்டுக்கொள்கிறோம்.
விருத்தாச்சலம் போலீசு ஆய்வாளர் திரு. முருகேசன் அவர்களின் திட்டமிட்ட தடயங்கள் அழிப்பு போன்ற குற்றச்செயல்கள் காரணமாகவும் பாதிக்கப்பட்ட பெண்ணுக்குத் தமிழ்நாடு அரசு ரூபாய் 20 லட்சம் இழப்பீடு வழங்கிட வேண்டும். முதல் தகவல் அறிக்கையானது மன வளர்ச்சி குன்றிய பெண்ணை கடத்தியது, பாலியல் வன்புணர்வு செய்தது ஆகிய பிரிவுகளின் கீழ் திருத்தப்பட வேண்டும். பாதிக்கப்பட்ட பெண்ணைக்கடத்தி பாலியல் வன்புணர்வு செய்த வழக்கில் ஆண்டனி ஆகாஷ் உடனே கைது செய்யப்பட வேண்டும். அந்தப் பெண்ணை பாதுகாக்கவேண்டும் என்ற அடிப்படையில் பாதிக்கப்பட்ட பெண்ணின் தாயாருக்குத் தமிழ்நாடு அரசு, அரசு வேலை வழங்க வேண்டும். தமிழ்நாடு அரசு இதை உடனே நடைமுறைப்படுத்த வேண்டுமென மக்கள் அதிகாரம் கேட்டுக் கொள்கிறது.
ஜனநாயக சக்திகள், பெண்கள் மீதான அடக்குமுறைகளுக்கு எதிராகப் போராடக்கூடியவர்கள், சாதிய அடக்குமுறைக்கு எதிராகப் போராடுபவர்கள், பெண்கள் அமைப்புகள் என அனைவரும் இந்த பிரச்சினையில் தலையிட்டு உடனே நடவடிக்கை எடுக்கக் கோரி இணைந்து போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும் என மக்கள் அதிகாரம் கோருகிறது.
தோழமையுடன்
தோழர் சி. வெற்றிவேல் செழியன்,
மாநிலச் செயலாளர்,
மக்கள் அதிகாரம்
தமிழ்நாடு – புதுவை
9962366321
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram