மெரிக்காவை தளமாகக் கொண்டு இயங்கும் போர்ப்ஸ் (Forbes) இணையதளம் கடந்த அக்டோபர் 9-ஆம் தேதியன்று 2024-ஆம் ஆண்டின் இந்தியாவின் முதல் நூறு பணக்காரர்களின் பட்டியலையும், கடந்த ஆண்டை ஒப்பிடும்போது இந்திய பணக்காரர்களின் சொத்து மதிப்பு இந்தாண்டு எவ்வளவு உயர்ந்துள்ளது என்ற தரவுகளையும் வெளியிட்டுள்ளது.

நாம் அனைவரும் அறிந்துள்ளபடி நடப்பு ஆண்டிலும் ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவரான முகேஷ் அம்பானி இந்தியாவின் முதல் நூறு பணக்காரர்கள் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்துள்ளார். அம்பானியின் சொத்து மதிப்பு கடந்த ஓராண்டுக் காலத்தில் மட்டும் 2 லட்சத்து 31 ஆயிரத்து 198 கோடி ரூபாய் (27.5 பில்லியன் அமெரிக்க டாலர்) வரை அதிகரித்துள்ளதன் மூலம் மொத்த சொத்து மதிப்பு 10 லட்சத்து 4 ஆயிரத்து 572 கோடி ரூபாயாக (119.5 பில்லியன் டாலர்) இமாலய வளர்ச்சியடைந்துள்ளது.

இரண்டாவது இடத்தில் உள்ள அதானி குழுமத்தின் தலைவரான கௌதம் அதானி சொத்து மதிப்பு கடந்த ஓராண்டு காலத்தில் மட்டும் 4 லட்சத்து 3 ஆயிரத்து 543 கோடி ரூபாய் (48 பில்லியன் டாலர்) வரை அதிகரித்துள்ளது. இதன்மூலம் அதானியின் சொத்து மதிப்பானது 9 லட்சத்து 75 ஆயிரத்து 177 கோடி ரூபாயாக (116 பில்லியன் டாலர்) உயர்ந்துள்ளது.

குறிப்பாக, கடந்த ஓராண்டில் மட்டும் அதானியின் சொத்து மதிப்பானது அம்பானியின் சொத்து மதிப்பு அதிகரித்துள்ளதை விட இரு மடங்கு அதிகரித்துள்ளது. மேலும், கடந்த 2023-ஆம் ஆண்டில் வெளியான ஹிண்டன்பர்க் அறிக்கையால் உலகப் பணக்காரர்கள் பட்டியலில் மூன்றாவது இடத்திலிருந்து முப்பதாவது இடத்திற்குச் சரிந்த அதானி, அப்பட்டியலிலும் படிப்படியாக முன்னேறிக் கொண்டிருக்கிறார். அதன்பிறகும் ஓ.சி.சி.ஆர்.பி. அறிக்கை, ஃபினான்சியல் டைம்ஸ் பத்திரிகையின் குற்றச்சாட்டுகள், செபி தலைவர் மீதான ஹிண்டன்பர்க் அறிக்கை என அதானி மீது பல மோசடி புகார்கள் எழுந்தபோதும் அதானி குழுமத்தின் இந்த அசுர வளர்ச்சிக்கு மோடி-அமித்ஷா கும்பலுக்கும் அதானிக்கும் உள்ள நெருங்கிய உறவே காரணமாகும்.

அதற்குச் சான்றாக, சென்ற ஆண்டு ஒன்றிய நிதிநிலை அறிக்கையில் பசுமை ஹைட்ரஜன் உற்பத்திக்கு ரூ.35,000 கோடி நிதி ஒதுக்கியது; கிரீஸ் நாட்டின் கவாலா, வாலோஸ், அலெக்ஸாண்ட்ரூபோலி ஆகிய துறைமுகங்களில் அதானி முதலீடு செய்ய கிரீஸ் பிரதமருடன் மோடி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டது; மகாராஷ்டிரா சிவசேனா-பா.ஜ.க. மாநில அரசு ஆசியாவின் மிகப்பெரிய குடிசைப் பகுதியான தாராவியை அதானிக்கு தாரைவார்ப்பதற்காக தாராவி மறுசீரமைப்புத் திட்டத்தை அதானிக்கு வழங்கியது; சில மாதங்களுக்கு முன்னர் மீண்டும் ஹிண்டன்பர்க் அறிக்கை வெளியாகி அதானிக்கும் பங்குச்சந்தை ஒழுங்காற்று வாரியமான செபிக்கும் உள்ள உறவு அம்பலப்பட்டு நாறிக்கொண்டிருந்த சமயத்திலும் அதானியின் நலனுக்காக அண்டை நாடுகளுக்கு மின்சாரம் வழங்குவதற்கான விதிகளைத் திருத்தியது உள்ளிட்ட மோடி அரசின் பல நடவடிக்கைகளை நாம் கூற முடியும்.


படிக்க: அதானிக்கும் செபிக்கும் உள்ள உறவு: நடப்பது அம்பானி-அதானிகளின் கும்பலாட்சி என்பதற்கான நிரூபணம்!


அதேபோல், கடந்த ஓராண்டில் மட்டும் அம்பானி-அதானி இருவரும் 6 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமாகச் சொத்துகளைக் குவித்துள்ளனர். அம்பானி மற்றும் அதானி குழுமம் வெளியிடும் விவரங்களின்படியே போர்ப்ஸ் இணையதளம் அவர்களுடைய சொத்து மதிப்பைக் கணக்கிடுகிறது எனில், கணக்கில் காட்டாமல் ஊழல் முறைகேடுகள் மூலமும் பங்குச்சந்தை மோசடிகள் மூலமும் எத்தனை லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான மக்கள் பணத்தைக் கொள்ளையடித்திருப்பர் என்பதைக் கற்பனை செய்து பார்த்தாலே தலை சுற்றுகிறது.

ஒருபுறம் நாட்டின் பெரும்பான்மையான உழைக்கும் மக்களை அதிகப்படியான ஜி.எஸ்.டி., சுங்கக்கட்டணம், பெட்ரோல் மற்றும் டீசல் விலை மூலம் ஒட்டச்சுரண்டும் மோடி அரசானது, மறுபுறம் அம்பானி-அதானிகள் கொழுக்க தன்னுடைய பாசிச ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கிறது. இக்கும்பல் ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க-வின் துணையுடன் இந்தியாவின் மொத்த வளங்களையும் கொள்ளையடித்து நாட்டில் கடுமையான ஏற்றத்தாழ்வுகளை உருவாக்கி வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் மக்கள் கடுமையான வறுமை நிலைக்குத் தள்ளப்படுவதுடன் உயிர்வாழ்வதற்காக இஸ்ரேல் போன்ற போர் சூழல் நிலவும் பகுதிகளுக்கும் செல்லவேண்டிய கொடூரமான நிலைக்குத் தள்ளப்படுகின்றனர். எனவே, இந்திய உழைக்கும் மக்களைப் பேரழிவுக்குள் தள்ளிக்கொண்டிருக்கும் ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க; அம்பானி அதானி-அதானி பாசிசக் கும்பலை வீழ்த்துவதே இந்திய உழைக்கும் மக்களின் முதன்மை கடமை.


பிரவீன்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram