டாடாவிற்காக இரக்கப்பட ஏனோ எங்களால் முடியவில்லை

டாடாவின் நாய் “கோவா” கலங்கியது என்று ஆளும் வர்க்கத்தின் மீடியாக்கள் கொக்கரிக்கின்றன!
பீகாரின் தொல்குடி “குவா” உழைக்கும் மக்களை டாடா குழுமமும் இந்த அரசும் கொன்றொழித்தது உங்களுக்குத் தெரியுமா?

டாடாவின் நேனோ உங்களுக்குத் தெரியும்!
அதற்காக 900 ஏக்கர் விவசாய நிலத்தை அபகரிக்க சுட்டுத்தள்ளப்பட்ட சிங்கூர் மக்களின் ஒப்பாரி உங்களுக்குத் தெரியுமா?

உலகையே உலுக்கிய போபால் விஷ‌வாயு தாக்குதல்
இப்போதும் எண்ணிப்பார்த்தால் நெஞ்சம் பதைக்கிறது.. குலை நடுங்குகிறது….
அதற்குக் காரணமான கொலைக்குற்றவாளி ஆண்டர்சன் கைதை
கண்டித்த கொடூரன் இந்த டாடா என்பது உங்களுக்கு தெரியுமா?

டாடா எஃகு ஆலைக்காக ஒரிசாவிலும், கலிங்கா நகரிலும்
ஒடுக்குமுறைக்கு ஆளான
பழங்குடியின மக்களின் வரலாறு உங்களுக்குத் தெரியுமா?

நம்மையும் நம்மைப் போன்ற காலனிய நாடுகளையும்
ஒட்டச்சுரண்டி இரத்தம் குடித்த பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திற்கு
முதல் உலகப்போரில் இரயில் தண்டவாளங்கள் அமைக்க
இரும்பு உற்பத்தி செய்து கொடுத்த
தேசவிரோதி டாடா என்பது உங்களுக்குத் தெரியுமா?

மியான்மர் நாட்டின் இராணுவ சர்வாதிகாரத்திற்கு
கனரக வாகனங்களை வழங்குவதாக
ஒப்பந்தம் போட்ட சர்வதேச குற்றவாளி டாடா என்று உங்களுக்குத் தெரியுமா..?

இவையெல்லாம் கசப்பாக இருந்தாலும்..
உங்களால் ஏற்க முடியாவிட்டாலும்..
இதுதான் உண்மை!

ஆளும் வர்க்க ஊடகங்களின் வாந்திகளுக்கும் வக்கிரங்களுக்கும்
நாம் பலியாகி
டாடாவை நம் தேசத்தின் அடையாளம் என்று கொண்டாடத் துணிந்தால்
நாளை இதே ஊடகங்கள் அம்பானியையும் அதானியையும்
தேசத்தின் கடவுள்களாக உங்கள் முன் நிறுத்துவார்கள்…

இந்த பாசிஸ்டுகளை கொண்டாடத் தயாரா?

தூத்துக்குடியில் 13 பேரைச் சுட்டுக்கொன்ற வேதாந்தாவை
வளர்ச்சியின் முன்மாதிரியாகக் காட்டுவார்கள்..
இவர்களையும் நீங்கள் கொண்டாடத் தயாரா?

எண்ணிப்பாருங்கள்…

ஒரு இறப்பைக் கொண்டாட வேண்டுமென்ற
குரோத மனநிலை
எங்களுக்கு இல்லை..

ஆனால்.. நீங்கள் “சிகரம் தொட்டதாக” கொண்டாடுகிற “டாடாவின் சிகரம்”
உழைப்பால் எட்டியது இல்லை…
இந்திய பழங்குடி, உழைக்கும் மக்களின்
பிணக்குவியலின் மூலம் அடையப்பட்டது…

உழைக்கும் மக்களின் ஒப்பாரிகளும் – ஓலங்களும் அந்த இரத்த வாடையும்..
எங்களின் வர்க்க ஆத்திரத்தை உரசிப்பார்க்கத்தான் செய்கிறது…


தினேஷ்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க