ஹமாஸ் ராணுவத் தலைவர் படுகொலை: இனவெறி தலைக்கேறிய இஸ்ரேல்

ஹமாஸின் தலைவரைப் படுகொலை செய்த பின்னரும் இனவெறி இஸ்ரேல் தனது போரை நிறுத்தப்போவதில்லை என்று அறிவித்துள்ளது. இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு “ஹமாஸுக்கு எதிரான நடவடிக்கைகள் நிறைவடைய இன்னும் நீண்ட தூரம் செல்ல வேண்டும்” என்று கூறியுள்ளார்.

மாஸ் அமைப்பின் ராணுவத் தலைவரான யாகியா சின்வரை (Yahya Sinwar) அக்டோபர் 17 அன்று இஸ்ரேல் ராணுவம் படுகொலை செய்துள்ளது.

காசாவில் இஸ்ரேல் நடத்திவரும் ராணுவத் தாக்குதல்கள் ஒரு ஆண்டை கடந்துள்ள சூழலில் பாலஸ்தீன ஆதரவு அமைப்பு தலைவர்களை இஸ்ரேல் ராணுவம் குறிவைத்து படுகொலை செய்து வருகிறது.

ஈரானின் தலைநகரில் வைத்து  ஹமாஸ் அமைப்பின் அரசியல் பிரிவுத்தலைவர் இஸ்மாயில் ஹனியேவை (Ismail Haniyeh) இஸ்ரேல் கடந்த மாதம் படுகொலை செய்தது. அதன் பிறகு லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் ஹசன் நஸ்ரல்லா (Hassan Nasrallah), ஈரான் ராணுவத்தின் துணை தளபதி என வரிசையாக இஸ்ரேல் படுகொலை செய்தது.

தற்போது வடக்கு காசாவில் இருந்த ஹமாஸ் அமைப்பின் ராணுவத் தலைவரான யாகியா சின்வரை மிகக்கொடூரமான முறையில் படுகொலை செய்துள்ளது. அவர் பதுங்கி இருந்த கட்டிடத்தின் மீது டிரோன் தாக்குதல் நடத்தி கட்டிடத்தை முதலில் உருக்குலைய செய்தது. இந்த தாக்குதலில் அவருடன் இருந்த பாதுகாவலர்கள் படுகொலையாகினர். ஆனால் சின்வர் குறித்து தகவல் தெரியவில்லை. அதன் பிறகு படுகாயமடைந்திருந்த சின்வரை இஸ்ரேல் ராணுவம் ஸ்னைப்பர் மூலம் தலையில் சுட்டு படுகொலை செய்துள்ளது.

இந்தப் படுகொலையை அரங்கேற்றிய பிறகு அது சின்வர் தானா என்பதை உறுதிப்படுத்துவதற்காக அவரது பல்லை எடுத்து டி.என்.ஏ ஆய்வின் மூலம் இஸ்ரேல் ராணுவம் உறுதிப்படுத்தியுள்ளது.


படிக்க: லெபனான்: மருத்துவமனைகளைக் குறிவைத்துத் தாக்கும் இஸ்ரேல்!


சின்வர் கொலையானது உறுதி செய்யப்பட்ட பிறகு இஸ்ரேல் பாதுகாப்புத்துறை அமைச்சர் யோவ் காலண்ட், இது ஹமாஸ் அமைப்பு சரணடையும் நேரம் எனவும் அனைத்து பணயக்கைதிகளையும் விடுவித்து விட்டு சரணடையுங்கள் எனவும் பேட்டியளித்துள்ளார்.

அது மட்டுமின்றி போர்ச் சூழலை மேலும் பதற்றமாக்கும் வகையில் சின்வர் மரணமடையும் இறுதி நொடி டிரோன் காட்சிகளையும் இஸ்ரேல் ராணுவம் வெளியிட்டுள்ளது. அதில் டிரோன் தாக்குதலுக்குப் பிறகு மிக மோசமாகச் சிதிலமடைந்த கட்டிடத்தில் ராணுவ உடை மற்றும் ஆயுதத்துடன் ஒரு கை துண்டிக்கப்பட்ட நிலையில் ஒரு நாற்காலியில் அமர்ந்திருந்தார். உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த நிலையிலும் கூட அங்கு பறந்து கொண்டிருந்த இஸ்ரேலின் டிரோனை தனது கையிலிருந்த குச்சியை விட்டு எறிந்து தாக்க முயன்றார்.

ஹமாஸின் தலைவரைப் படுகொலை செய்த பின்னரும் இனவெறி இஸ்ரேல் தனது போரை நிறுத்தப்போவதில்லை என்று அறிவித்துள்ளது. இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு “ஹமாஸுக்கு எதிரான நடவடிக்கைகள் நிறைவடைய இன்னும் நீண்ட தூரம் செல்ல வேண்டும்” என்று கூறியுள்ளார்.

ஹமாஸ் அமைப்பை ஒழித்துக்கட்டுவதாகக் கூறிக்கொண்டு இனவெறி இஸ்ரேல் பாலஸ்தீன மக்களை இனப்படுகொலை செய்து வருகிறது. அப்பாவி மக்களையும் குழந்தைகளையும் படுகொலை செய்தாலும், ஹமாஸ் தலைவர்களை கொன்றொழித்தாலும் இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு இருக்கும் வரையில் பாலஸ்தீன விடுதலைக்கான போராட்டம் தொடரும்.

செய்தி ஆதாரம்: தீக்கதிர்


ராஜேஷ்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க