தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் பிறப்பித்த உத்தரவைத் தொடர்ந்து “இராணுவ நிலையத்திலிருந்து அலறல்கள்” (Screams from the Army Post) என்ற தலைப்பில் வெளியான கட்டுரை குறித்து “தி கேரவன்” பத்திரிகைக்கு பிரஸ் கவுன்சில் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இதையடுத்து, தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்தின் உத்தரவை எதிர்த்து, “தி கேரவன்” நிறுவனம் டெல்லி உயர் நீதிமன்றத்தில் ரிட் மனுத் தாக்கல் செய்துள்ளது.
“ஜம்மு-காஷ்மீரின் பூஞ்ச் மற்றும் ரஜௌரி மாவட்டங்களில் 22 டிசம்பர் 2023 அன்று இந்திய இராணுவ வீரர்களால் ஏராளமான பொதுமக்கள் சித்திரவதை செய்யப்பட்டது குறித்தும், அதனால் ஏற்பட்ட காயங்களின் விளைவாக மூன்று பேர் இறந்தது குறித்தும் பிப்ரவரி மாத (கேரவன்) இதழில் கட்டுரை வெளியிட்டிருந்தோம். இராணுவ நிலையத்திலிருந்து அலறல்கள் (Screams from the Army Post) என்று தலைப்பிடப்பட்ட அக்கட்டுரை தொடர்பாக அக்டோபர் 1 (2024) அன்று, தி கேரவன் பத்திரிகைக்கு இந்திய பிரஸ் கவுன்சிலிடமிருந்து (Press Council of India) ஒரு ஷோ-காஸ் நோட்டீஸ் வந்தது” என்று அக்டோபர் 15, 2024 தேதியிட்ட அறிக்கையில் “தி கேரவன்” தெரிவித்துள்ளது.
கேரவன் பத்திரிகையின் வலைத்தளத்திலிருந்து இருந்து 24 மணி நேரத்திற்குள் அக்கட்டுரையை நீக்க வேண்டும் என்று அரசால் அச்சுறுத்தப்பட்டதால் தனது வலைத்தளத்திலிருந்து அக்கட்டுரையை நீக்கி, உத்தரவில் பட்டியலிடப்பட்ட URL-களை அப்போது (பிப்ரவரி 2024) அகற்றியிருந்தது “தி கேரவன்” பத்திரிகை. ஆனால், கட்டுரை நீக்கப்பட்ட பின்னரும், தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் மார்ச் 5 அன்று இந்திய பிரஸ் கவுன்சிலுக்கு (பி.சி.ஐ) தனது புகாரை அனுப்பியுள்ளது.
படிக்க: தி கேரவன் பத்திரிகையின் கருத்துச் சுதந்திரத்தை ஒடுக்கும் பாசிச மோடி அரசை கண்டிக்கின்றோம்!
“ஏழு மாதங்களுக்குப் பிறகு எங்களுக்கு ஒரு ஷோ-காஸ் நோட்டீஸ் அனுப்ப பி.சி.ஐ எடுத்த முடிவு குறித்து நாங்கள் அதிர்ச்சியடைந்துள்ளோம். புகார் குறித்து பி.சி.ஐ மதிப்பீடு செய்து பார்த்திருந்தாலே இது தி கேரவனுக்கு எதிரான தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்தின் தணிக்கை நடவடிக்கை என்பதும் பத்திரிகை சுதந்திரத்தை ஒடுக்கும் செயல் என்பதும் தெளிவாகியிருந்திருக்கும். மேலும், பிரஸ் கவுன்சில் (விசாரணைக்கான நடைமுறை) விதிமுறைகளின், விதிமுறை 5 இன் கீழ் நிர்ணயிக்கப்பட்ட நாற்பத்தைந்து நாட்களுக்கு அப்பால் ஷோகாஸ் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. எனவே இது (சட்ட) வரம்பை மீறிய நடவடிக்கையாகும் (barred by limitation)” என்று கேரவன் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
“பத்திரிகை சுதந்திரத்தைப் பாதுகாப்பதும், பொது நலனுக்காக செய்திகளை முன்வைப்பதற்கான உரிமையை நிலைநிறுத்துவதும் பி.சி.ஐ-யின் கடமை. இந்த ஷோ-காஸ் நோட்டீஸை எங்களுக்கு அனுப்புவதன் மூலமும், பொருத்தமற்ற விதிமுறைகளை மீறியதாகக் கூறுவதன் மூலமும், பி.சி.ஐ அதன் கடமையிலிருந்து தவறவிட்டுவிட்டது” என்று அந்த அறிக்கையில் கேரவன் மேலும் கூறியுள்ளது.
மேலும், கேரவன் தான் வெளியிட்ட கட்டுரையின் உள்ளடக்கத்தில் உறுதியாக இருப்பதாகத் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
முன்னதாக காஷ்மீர் மக்கள் மீதான பாசிச மோடி அரசின் அடக்குமுறைகளை அம்பலப்படுத்தியதற்காக ஆகஸ்ட் 2023-இல் “தி காஷ்மீர் வாலா” வலைத்தளம் மற்றும் அதன் சமூக ஊடகப் பக்கங்கள் முடக்கப்பட்டன. அதேபோல், காஷ்மீரில் ராணுவத்தின் அட்டூழியங்களை வெளியிட்டதற்காக தற்போது “தி கேரவன்” பத்திரிகை அச்சுறுத்தப்படுகிறது.
எனவே, பாசிச மோடி அரசைத் தொடர்ந்து பல்வேறு வகைகளில் அம்பலப்படுத்தி வரும் கேரவன் பத்திரிகைக்கு ஜனநாயக உணர்வுள்ள அனைவரும் துணைநிற்க வேண்டும். இல்லாவிட்டால் வெறும் “கோடி மீடியாக்கள்” (Godi media) மட்டுமே நாட்டில் எஞ்சி நிற்கும்.
பொம்மி
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram