அக்டோபர் 8 ஆம் தேதியன்று டாடா இன்ஸ்டிடியூட் ஆப் சோஷியல் சயின்சஸ் (Tata Institute of Social Sciences – TISS) பல்கலைக்கழகத்தின் ஹைதராபாத் வளாகத்தில் உள்ள பாலினம் மற்றும் வாழ்வாதாரங்கள் பிரிவின் (School of Gender and Livelihoods) உதவி பேராசிரியர் அர்ஜுன் சென்குப்தாவுக்கு (Arjun Sengupta) ஆர்ப்பாட்டம் செய்யும் மாணவர்களை ஊக்குவித்ததாகக் கூறி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இது குறித்த செய்தி “தி இந்தியன் எக்ஸ்பிரஸ்”-இல் நேற்று (அக்டோபர் 20 அன்று) வெளியானது.
ராமர் கோவில் திறப்புக்கு எதிர்ப்பு தெரிவித்த மாணவர் தலைவரும் பி.எச்.டி மாணவருமான ராமதாஸ் பிரினி சிவானந்தன் (Ramadas Prini Sivanandan) ‘தேசவிரோத’ செயல்களில் ஈடுபட்டதாகப் பொய்யாகக் குற்றம்சாட்டப்பட்டு 2 ஆண்டுகள் இடைநீக்கம் செய்யப்பட்டதைக் கண்டிக்கும் விதத்தில் அக்டோபர் 4 ஆம் தேதியன்று மாணவர் அமைப்புகள் சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு சென்குப்தா பேசியதையடுத்து அவர் தற்போது இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
தனக்கு வழங்கப்பட்ட நோட்டீஸ் அர்த்தமற்றது, அரசியலமைப்பிற்கு விரோதமானது, சட்டவிரோதமானது என்று சென்குப்தா தெரிவித்துள்ளார். மேலும் இந்த விஷயம் குறித்து தன்னிடம் எந்த விளக்கமும் கேட்கப்படவில்லை என்றும் தெரிவித்தார்.
அவருக்கு வழங்கப்பட்ட நோட்டீஸில், “பரவலாகப் பரப்பப்பட்ட இன்ஸ்டாகிராம் காணொளியில், [சென்குப்தா] சுமார் 20 மாணவர்களுடன், பதாகைகளை ஏந்தியிருப்பதையும்; 2024 ஜூன் மாதத்தில் டாடா கல்வி அறக்கட்டளை (Tata Education Trust – TET) ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட இடைநிறுத்தக் கடிதத்திற்கு எதிராகவும், இடைநீக்கம் செய்யப்பட்ட ராமதாஸ் கே.எஸ் என்ற மாணவருக்கு ஆதரவாகவும் குரல் எழுப்ப முற்போக்கு மாணவர் மன்றம் (Progressive Students Forum – PSF) மற்றும் முற்போக்கு மாணவர் அமைப்பு (Progressive Students Organisation – PSO) ஆகியோரை ஊக்குவிப்பதையும் காண முடிகிறது” என்று கூறப்பட்டுள்ளது.
டாடா கல்வி அறக்கட்டளையால் நிதியளிக்கப்பட்ட சுமார் 119 ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத ஊழியர்களின் ஒப்பந்தங்கள் டிசம்பருக்குப் பிறகு புதுப்பிக்கப்படுமா என்பது உறுதியாகத் தெரியாத நிலை தற்போது உள்ளது.
முற்போக்கு மாணவர் மன்றம் அங்கீகரிக்கப்பட்ட அமைப்பு அல்ல என்றும், சிவானந்தனின் இடைநீக்கம் தொடர்பாக மும்பை உயர் நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வரும் நிலையில், அவர் நீதிமன்ற அவமதிப்பு செய்ததாகவும் சென்குப்தாவுக்கு அனுப்பப்பட்ட நோட்டீஸில் கூறப்பட்டுள்ளது.
“கல்வி மற்றும் அது தொடர்புடைய அறிவு பெறும் பயிற்சியில் மாணவர்களைச் சிறப்பாகச் செயல்பட ஊக்குவிப்பதற்காக கற்பித்தல், ஆராய்ச்சி மற்றும் கள நடவடிக்கை ஆராய்ச்சியை மேற்கொள்ள டாக்டர் சென்குப்தா நியமிக்கப்பட்டுள்ளார். ஆனால், அதற்கு மாறாக ஒரு ஆசிரியருக்கான பணிகளுக்குத் தொடர்பில்லாத செயல்பாடுகளை அவர் ஊக்குவிப்பதாகத் தெரிகிறது. முழக்கமிடுதல், இதேபோன்ற போராட்டங்களுக்கு அங்கு இருக்கும் மாணவர்களை ஊக்குவித்தல் மற்றும் தூண்டுதல் ஆகிய செயல்பாடுகள் டி.ஐ.எஸ்.எஸ் வளாகங்களின் அமைதியான கல்விச் சூழலை சீர்குலைக்கக்கூடும்” என்று ஷோ-காஸ் நோட்டீஸில் கூறப்பட்டுள்ளது.
அக்டோபர் 13 அன்று நோட்டீஸுக்கு சென்குப்தா பதிலளித்தார்.
“அக்டோபர் 4 ஆம் தேதி டி.ஐ.எஸ்.எஸ் ஹைதராபாத் வளாகத்தில் அம்பேத்கர் மாணவர் சங்கம் (Ambedkar Students’ Association – ASA) மற்றும் முற்போக்கு மாணவர் அமைப்பு (PSO) ஏற்பாடு செய்திருந்த மாணவர் கூட்டத்தில் நான் ஆற்றிய உரையின் ஒரு பகுதியை இந்த [பரவலாகப் பரப்பப்பட்ட இன்ஸ்டாகிராம்] காணொளி வழங்குகிறது. மேற்கூறிய காணொளியில், டிசம்பர் 31, 2024-க்குப் பிறகு ஏராளமான ஆசிரியர்கள் பணிநீக்கம் செய்யப்படுவதால் கற்றலில் ஏற்படும் தாக்கங்கள் குறித்து டி.ஐ.எஸ்.எஸ் மாணவர் அமைப்புகளிடையே ஒரு பொதுவான புரிதலும் கவலையும் இன்று ஏற்பட்டுள்ளது என்ற உண்மையை அங்கீகரிப்பதற்காக டி.ஐ.எஸ்.எஸ் வளாகங்களில் உள்ள மூன்று முக்கிய மாணவர் அமைப்புகளையும் – பி.எஸ்.எஃப், ஏ.எஸ்.ஏ மற்றும் பி.எஸ்.ஓ – நான் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளேன்” என்று அவர் கூறினார்.
“[நோட்டீஸில்] கூறப்படுவதற்கு மாறாக… காணொளியை மேலோட்டமாகப் பார்த்தாலே, எனது பேச்சின் போது நான் முழக்கமிட்டேன் என்பதோ மாணவர்களைத் தூண்டிவிட்டேன் என்பதோ முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது என்பது தெளிவாகத் தெரியும்” என்று சென்குப்தா மேலும் கூறினார்.
படிக்க: புனே: பல்கலைக்கழக வளாகத்தில் முஸ்லீம் மாணவரை தாக்கிய ஏ.பி.வி.பி
பாபர் மசூதியை இடித்துவிட்டுக் கட்டப்பட்ட ராமர் கோவிலின் திறப்பிற்கு தனது எதிர்ப்பைப் பதிவு செய்த பி.எச்.டி மாணவரை பல்கலைக்கழகம் 2 ஆண்டுகள் இடைநீக்கம் செய்ததென்பது அப்பட்டமான ஜனநாயக மறுப்பாகும். இதைக் கண்டிக்கும் விதத்தில் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் ஒரு உதவிப் பேராசிரியர் கலந்துகொண்டதென்பது வரவேற்கத்தக்க ஒரு செயலாகும்.
ஆனால், பல்கலைக்கழக நிர்வாகமோ அந்த உதவிப் பேராசிரியருக்கு ஷோ-காஸ் நோட்டீஸ் அனுப்பி மிரட்டல் விடுத்துள்ளது. இது பல்கலைக்கழகங்களில் ஜனநாயக வெளி சுருங்கி வருவதைக் காட்டுகிறது.
ஒருபுறம், ஜனநாயக உணர்வுள்ள பாசிச எதிர்ப்புணர்வுடைய அனைத்து மாணவர்களும் மாணவர் அமைப்பினரும் பேராசிரியர்களும் தொடர்ந்து அச்சுறுத்தப்பட்டும் ஒடுக்கப்பட்டும் வருகின்றனர். மறுபுறம் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் மாணவர் பிரிவான ஏ.பி.வி.பி பல்கலைக்கழக நிர்வாகங்களின் துணைகொண்டு வளர்ந்து வருகிறது.
ஆதலால், பாசிச இருளை நீக்குவதற்கான செயல்பாடுகளின் மூலம் மட்டுமே கல்வி காவிமயமாக்கப்படுவதைத் தடுக்கவும், கல்வி நிலையங்களில் ஜனநாயகத்தை நிலைநிறுத்தவும் முடியும்.
பொம்மி
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram