கிரிக்கெட் வீரர்கள் பயிற்சி பெறுவதற்கும், இந்திய கிரிக்கெட் அணியில் சேர்வதற்கும் பாலமாக இருக்கும் கிளப்புகளில் ஒன்றான மும்பையிலுள்ள கார் ஜிம்கானா (Khar Gymkhana) கிளப்பில் கடந்த 2023 ஆம் ஆண்டு இந்திய மகளிர் அணி கிரிக்கெட் வீராங்கனை ஜெமிமா ரோட்ரிகஸ் (Jemimah Rodrigues) கௌரவ உறுப்பினராகச் சேர்க்கப்பட்டார். குறிப்பாக, இந்திய மகளிர் கிரிக்கெட் அணியில் சிறப்பாக விளையாடியதைத் தொடர்ந்தே கிளப்பில் கௌரவ உறுப்பினராக அவர் சேர்க்கப்பட்டு மூன்று ஆண்டுகளுக்கான அடையாள அட்டை வழங்கப்பட்டிருந்தது. தற்போது அந்த அங்கீகாரத்தை கார் ஜிம்கானா கிளப் அக்டோபர் 20 அன்று ரத்து செய்துள்ளது.

ஜெமிமாவின் தந்தை ஞாயிற்றுக் கிழமைகளில் கூட்டங்கள் நடத்தி கிறித்தவ மதத்திற்கு மதமாற்றம் செய்யும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார் என்று அப்பகுதியின் பஜ்ரங் தள் குண்டர்கள் அந்தக் கிளப்பிடம் புகாரளித்துள்ளனர். மேலும், நடவடிக்கை எடுக்காவிட்டால் பஜ்ரங் தள் போராட்டங்கள் நடத்தவிருப்பதாகவும், சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்பட்டால் தாங்கள் பொறுப்பில்லை என்று அச்சுறுத்தியுள்ளது.

இது குறித்து கார் ஜிம்கானா கிளப்பின் உறுப்பினர் ஷிவ் மல்கேத்ரா கூறுகையில் “ஜெமிமாவின் தந்தை இவான் ரோட்ரிகஸ் (Ivan Rodrigues) மத பிரச்சாரத்திற்காகக் கிளப்பின் அங்கீகாரத்தைப் பயன்படுத்தியுள்ளார். விளையாட்டு வீரர்களை கௌரவப்படுத்தும் வகையில் பி.வி. சிந்து மற்றும் பலர் கௌரவ உறுப்பினர்களாக உள்ளனர். ஆனால், அதனை ஜெமிமாவின் தந்தை தவறாகப் பயன்படுத்தி மத பிரச்சாரம் செய்வதற்குப் பயன்படுத்தியுள்ளார். பிரதர் மானுவல் மினிஸ்டிரீஸ் (Brother Manuel Ministries) என்ற பெயரில், இங்குள்ள அறையை 35 முறை தங்களது பெயரில் பதிவு செய்து அங்கு கூட்டங்களை நடத்தியுள்ளார். ஜிம்கானாவின் விதிமுறைப்படி மத நடவடிக்கைகளுக்கு இங்கே இடமில்லை. எனவே அவரை (ஜெமிமாவை) நீக்கியுள்ளோம்” என்றார்.

மேலும், “நாடு முழுவதும் மதமாற்றங்கள் நடப்பது பற்றி நாங்கள் கேள்விப்படுகிறோம். ஆனால் இங்கு எங்கள் கண் முன்னரே நடக்கிறது. நடனம், விலையுயர்ந்த இசைக் கருவிகள், பெரிய திரைகள் இருந்தன. கார் ஜிம்கானாவின் துணை விதி 4ஏ-வின்பட, எந்தவொரு மத நடவடிக்கையையும் அது அனுமதிக்காது” என்று அவர் கூறினார்.

ஜெமிமாவின் தந்தை இவான் ரோட்ரிகஸ் இதை முற்றிலும் மறுத்துள்ளார். அங்கு வழிப்பாட்டு கூட்டங்கள் மட்டுமே நடத்தப்பட்டதாக அவர் கூறியுள்ளார்.


படிக்க: கர்நாடகா : குடகில் ஆயுதப் பயிற்சி அளிக்கும் பஜ்ரங் தள் !


ஜெமிமாவை கிளப்பிலிருந்து நீக்கிய பின்னர், கார் ஜிம்கா கிளப்பின் தலைவர் விவேக் தேவ்னானி (Vivek Devnani) பஜ்ரங் தள் கொங்கன் பகுதி இணை ஒருங்கிணைப்பாளர் கௌதம் ரவ்ரியாவிடம் (Gautam Ravriya, Bajarang Dal Konkan Chapter Co Convenor) மன்னிப்பு கேட்டு கடிதம் எழுதியுள்ளார்.

கௌதம் ராவ்ரியாவுக்கு எழுதிய கடிதத்தில் தேவ்னானி, “விருந்து மண்டபம் மத நடவடிக்கைகளுக்காகப் பயன்படுத்தப்படுவதாக எனக்குத் தனிப்பட்ட முறையில் எதுவும் தெரியாது. எதிர்காலத்தில் இதுபோன்ற எந்தவொரு நிகழ்வையும் கார் ஜிம்கானா வளாகத்தில் நடக்க அனுமதிக்கப்படாது என்று நான் உங்களுக்கு உறுதியளிக்கிறேன்” என்று கூறியுள்ளார்.

இந்நிகழ்வு குறித்து தி டைம்ஸ் ஆஃப் இந்தியா ராவ்ரியாவிடம் கேட்டதற்கு “நாங்கள் மன்னிப்பை ஏற்றுக்கொண்டோம். ஆனால் எதிர்காலத்தில், இதுபோன்ற சம்பவம் நடந்தால் மன்னிப்பை ஏற்க மாட்டோம். அப்போது அதை ‘பஜ்ரங் தள் பாணி’யில் கையாள்வோம் என்று நாங்கள் அவரை எச்சரித்துள்ளோம்” என்று வன்முறைக் கும்பலுக்கே உரிய தொனியில் பதிலளித்துள்ளார்.

இது அப்பட்டமான பாசிச கும்பலாட்சி நிறுவப்பட்டு வருவதை நமக்கு உணர்த்துகிறது. சிறுபான்மையினர் அனைவரும், அது சமூகத்தில் நன்கு அறியப்படும் கிரிக்கெட் வீரராக இருந்தாலும் சரி, அவர்களும் இரண்டாம் தரக் குடிமக்களாக மாற்றப்படுவர் என்பதற்கான மற்றுமொரு எச்சரிக்கை தான் இந்த நிகழ்வு.


மாறன்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க