டந்த பிப்ரவரி 9 அன்று, மோடி “இ.டி நவ்” (ET Now) தொலைக்காட்சி நிகழ்ச்சியில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், கடந்த ஒன்றரை ஆண்டுகளாக நாட்டின் எதிர்கால வளர்ச்சிக்கான திட்டமிடலில் 15 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்களின் கருத்துக்களைப் பெற்றுள்ளதாகவும், அவற்றை ஆய்வு செய்து வருவதாகவும் கூறினார்.

இந்த அறிவிப்பு “கோடி மீடியா”வால் (Godi Media) பெரிய அளவில் பரப்புரை செய்யப்பட்டது. சமூக ஊடகங்களிலும் பரவலாக விவாதிக்கப்பட்டது.

இது குறித்து ஏப்ரல் 15 அன்று மீண்டும் ஒருமுறை “அடுத்த 25 ஆண்டுகளில் (அதாவது 2047 ஆம் ஆண்டில்) இந்தியாவை எவ்வாறு பார்க்க விரும்புகிறார்கள் என்பது குறித்து 15 இலட்சத்துக்கும் மேற்பட்ட மக்களிடமிருந்து ஆலோசனைகளைப் பெற்றுள்ளேன்” என்று மோடி கூறினார்.

மேலும், பல்வேறு மாநில அரசுகள், தொழில்துறை அமைப்புகள் மற்றும் கல்வியாளர்களுடன் 2,700-க்கும் மேற்பட்ட கூட்டங்கள், கருத்தரங்குகள் மற்றும் பயிலரங்குகள் நடத்தப்பட்டதாகவும் ஒன்றிய அரசு தரப்பில் கூறப்பட்டது.

இது குறித்து, ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்துக்கு மோடி அளித்த நேர்காணலில், இந்த ஆலோசனைகளின் செயல்முறையை விரிவாக விளக்கினார். அனைத்து பல்கலைக்கழகங்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்களுடன் தொடர்பு கொண்டு கருத்துகளைப் பெற்றதாகவும், அவற்றைச் செயற்கை நுண்ணறிவின் உதவியுடன் வகைப்படுத்தியதாகவும் கூறினார். மேலும், இந்தத் திட்டம் 25 ஆண்டுகள், 5 ஆண்டுகள் மற்றும் 100 நாட்கள் என மூன்று பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

முதலில் 15 இலட்சம் பேரிடம் கருத்துக் கேட்டுள்ளதாகக் கூறிய மோடி, அந்த எண்ணிக்கையை மே 16 அன்று திடீரென 20 இலட்சமாக உயர்த்திக் கொண்டார்.

அடுத்ததாக, ஆகஸ்ட் 15 அன்று “கோடிக்கணக்கான மக்களிடம் கலந்தாலோசிக்கப்பட்டு, அவர்களின் ஆலோசனைகள் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன. மக்களின் ஆலோசனைகளைக் கேட்டிருந்தோம். விக்சித் பாரத் 2047 க்கு கோடிக்கணக்கான மக்கள் எண்ணற்ற ஆலோசனைகளை அனுப்பியிருப்பது நமக்கு மகிழ்ச்சியளிக்கிறது” என்று கூறினார்.


படிக்க: பொய், பித்தலாட்டம், கலவரம் இவைதான் ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க.வின் அரசியல் ! | ரவி வீடியோ


ஆனால், இந்த ஆலோசனைகள் குறித்த விவரங்களைத் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் கேட்டபோது, பிரதமர் அலுவலகம் ஒரு வியக்கத்தக்க பதிலை அளித்துள்ளது. கோரிக்கை “குறிப்பிட்டதாக இல்லை” (not specific) என்றும், “பொருத்தமற்ற மற்றும் முடிவற்ற விசாரணை வடிவில் உள்ளது” (roving and open-ended inquiry) என்றும் கூறி தகவல்களை வழங்க பிரதமர் அலுவலகம் மறுத்துவிட்டது. மேலும், இந்தக் கோரிக்கை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் பிரிவு 2(f)-ன் கீழ் வராது எனவும் தெரிவித்துள்ளது.

இந்த மறுப்பு நம்மிடையே பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.

இது குறித்து காமன்வெல்த் மனித உரிமைகள் அமைப்பின் வெங்கடேஷ் நாயக் கூறுகையில், “கோரப்பட்ட கேள்விகளுக்கான பதிவுகள் இல்லை என்றால் அதைத் தெளிவாகத் தெரிவிக்க வேண்டும்” என்று சட்டத் தீர்ப்புகள் வலியுறுத்துவதைச் சுட்டிக்காட்டியுள்ளார்.

தகவல்  உரிமை ஆர்வலர் காந்தி, பிரதமர் அலுவலகத்தின் இந்த மறுப்பை “கண்டனத்திற்குரியது” என விமர்சித்துள்ளார்.

முன்னதாக, அக்டோபர் 11 அன்று, தகவல் உரிமைச் சட்டத்தின் செயல்பாடு குறித்து சதர்க் நாகரிக் சங்கதன் (Satark Nagrik Sanghathan) அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கை பல அவலங்களை வெளிக்காட்டுகிறது. நான்கு மாநிலங்களில் தகவல் ஆணையர்கள் இல்லாமல் மாநில தகவல் ஆணையங்கள் பல மாதங்களாகச் செயலிழந்துள்ளன. மத்திய தகவல் ஆணையமோ 11 பேர் இருக்க வேண்டிய இடத்தில் வெறும் மூன்று தகவல் ஆணையர்களைக் கொண்டு செயல்பட்டு வருகிறது.

பாசிச மோடி அரசு சட்டத் திருத்தங்களாலும், தகவல் ஆணையர்களை நியமிக்காமலும் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை முடக்குவதை ஒருபுறம் செய்து கொண்டிருக்கிறது. இது ஒருபுறம் இருக்கட்டும். தகவல் இருந்தால் தானே தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் பதிலளிக்க முடியும். நடத்தப்படாத கருத்துக்கேட்புக் கூட்டங்கள் குறித்தான தரவுகள் எப்படி அரசிடம் இருக்கும்.

நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளை வெளியேற்றிவிட்டு சட்ட மசோதாக்களை நிறைவேற்றும் பாசிச மோடி அரசா 20 இலட்சம் பேரிடம் கருத்துக் கேட்டு கலந்தாலோசித்து முடிவெடுக்கும். மோடியின் பேச்சு முற்றிலும் வழக்கமான வாய்ச் சவடால் தான் என்பதைத் தெளிவாகப் புரிந்துகொள்ள முடிகிறது. அந்த சவடாலுக்கு “கோடி மீடியா”வும் ஊதுகுழல்களாகச் செயல்பட்டுள்ளன என்பதே உண்மை.


பொம்மி

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க