கடந்த ஆண்டு மே மாதம் மணிப்பூரில் குக்கி இன பழங்குடி மக்களுக்கு எதிராக திட்டமிட்டுக் காவிக் கும்பலால் அரங்கேற்றப்பட்ட கலவரம் தற்போது ஓராண்டுக்கும் மேலாக தொடர்ந்து கொண்டிருக்கிறது. இதுவரை 250-க்கும் மேற்பட்டோர் கலவரத்தில் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். 60,000-க்கும் மேற்பட்ட மக்கள் அகதிகளாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், நவம்பர் 7-ஆம் தேதி “அரம்பை தெங்கோலைச்” சேர்ந்த மெய்தி இனவெறிக் கும்பல் ஒன்று மணிப்பூரின் ஜிரிபாம் மாவட்டத்தில் உள்ள “சோ” பழங்குடி மக்கள் வசிக்கும் கிராமத்திற்குள் புகுந்து துப்பாக்கியால் தாக்குதல் தொடுத்துள்ளது. துப்பாக்கிச் சூட்டிற்குப் பயந்து பழங்குடி மக்கள் கிராமத்தை விட்டு வெளியேறியுள்ளனர். ஜோசங்கிம் எனும் 31 வயது பழங்குடியின பெண் காலில் துப்பாக்கிச் சூடு பட்டதால், தப்பித்து ஓட முடியாமல் மெய்தி இன வெறி கும்பலிடம் சிக்கியுள்ளார்.
மூன்று குழந்தைகளுக்குத் தாயான, அப்பெண்ணைக் கொடூரமான முறையில் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்து, உயிருடன் எரித்து படுகொலை செய்துள்ளது காட்டுமிராண்டிகளான மெய்தி இனவெறிக் கும்பல்.
இது குறித்து, ஜிரிபாம் காவல் நிலையத்தில் வழக்கு (FIR)பதிவு செய்துள்ள அப்பெண்ணின் கணவர், தன் மனைவி கூட்டுப் பாலியல் சித்திரவதை செய்யப்பட்டு எரித்துக் கொல்லப்பட்டார் என்று வாக்குமூலம் கொடுத்துள்ளார்.
மேலும் இத்தாக்குதலில், 17-க்கும் மேற்பட்ட வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன. பழங்குடியின மக்கள் வீடுகளிலிருந்த பொருட்களை மெய்தி இனவெறிக் கும்பல் சூறையாடிச் சென்றுள்ளது.
இக்கிராமத்தில் நடந்த வன்முறையைத் தடுக்காத, பாதுகாப்புப் படையினரைக் கண்டித்து “ஹமர் மாணவர் சங்கம் ஜிரிபாம்” அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், “கொலை மற்றும் தீ வைப்பு சம்பவங்கள் சி.ஆர்.பி.எஃப்(CRPF) கீழ் நடந்துள்ளன. ஒரு மணி நேரத்திற்கும் மேலாக தாக்குதல் நடந்துள்ளது, தாக்குதல் நடந்த இடத்திலிருந்து கல்லெறியும் தூரத்தில்தான் சி.ஆர்.பி.எஃப் படை உள்ளது. சாதி, மதம், இனம் ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல் இந்தியக் குடிமக்களைப் பாதுகாப்போம் என்ற உறுதிமொழியை வழங்கத் தவறியதற்காகப் பாதுகாப்புப் படைகள் வெட்கித் தலைகுனிய வேண்டும்” என்று கூறியுள்ளது.
கிராம மக்களும் தாக்குதலின் போது சி.ஆர்.பி.எஃப். படை வீரர்கள் கைக்கட்டி வேடிக்கை பார்த்ததை அம்பலப்படுத்தியுள்ளனர்.
படிக்க: மணிப்பூர்: வன்முறையைத் தீவிரப்படுத்த ஆயத்தமாகும் காவிக் கும்பல்
இதனைப் போன்ற பழங்குடியின மக்கள் மற்றும் பெண்கள் மீதான பாலியல் வன்முறை தாக்குதல்கள் ஒன்றரை ஆண்டுகளாக மணிப்பூரில் தொடர்ந்து நடந்துக் கொண்டிருக்கிறது. குக்கி பழங்குடியின பெண்கள் இருவர் கூட்டுப் பாலில் வன்கொடுமை செய்யப்பட்டு நிர்வாணமாக அடித்து இழுத்துச் செல்லப்பட்ட காட்சி ஒட்டுமொத்த இந்தியாவையும் உலுக்கியது.
மணிப்பூர் காடுகளை அம்பானி-அதானிகளுக்கு தாரைவார்ப்பதற்காகவும் மெய்தி இன மக்களை தங்களது அடித்தளமாக மாற்றிக்கொள்வதற்காகவும் ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க. கும்பலால் குக்கி பழங்குடியின மக்கள் மீது திட்டமிட்டு நடத்தப்படும் இன அழிப்பு கலவரம் இது. சமீபத்தில் மணிப்பூரில் குக்கி இனமக்கள் மீதான இன அழிப்பைத் தொடங்கியது நான்தான்” என மணிப்பூர் மாநில பா.ஜ.க. முதல்வர் பைரன் சிங் ஒப்புதல் வாக்குமூலம் கொடுக்கும் ஆடியோ (Audio) ஒன்று வெளியாகிக் காவி கும்பலின் சதித்திட்டத்தை உறுதிப்படுத்தியது.
எனவே, குக்கி பழங்குடியின மக்களைக் காப்பாற்றுவதற்காகவும், நம் நாட்டின் வளங்களைப் பாதுகாப்பதற்காகவும் மணிப்பூரில், காவி கும்பல் நடத்தி வரும் இந்த இன அழிப்பு கலவரத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்களைக் கட்டியமைக்க வேண்டும்.
துருவன்
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram