2001-ஆம் ஆண்டு ஜிம்பாப்வே நாட்டின் மீது அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியமும் சேர்ந்து பொருளாதாரத் தடை விதித்தன. 20 ஆண்டுகளுக்கும் மேலாக நடைமுறையில் இருந்துவரும் பொருளாதாரத் தடையை நீக்கக்கோரி சர்வதேச அரங்குகள் அனைத்திலும் தொடர்ந்து முறையிட்டுக் கொண்டிருக்கிறது ஜிம்பாப்வே. ஆனாலும் இதுவரையிலும் எந்த பயனும் இல்லை.
உலகம் முழுவதிலும் உலகமயம் தாராளமயம் என்ற கொள்கைகள் நடைமுறையில் இருந்துவரும் நிலையில் தனி ஒரு நாட்டின் மீது விதிக்கப்படும் பொருளாதாரத் தடை என்பது ஒரு நாட்டை உலகிலிருந்தே தனிமைப்படுத்தி விடுகிறது. மனித குலத்துக்கே கேடு விளைவித்துவிட்ட முத்திரையைக் குத்துகிறது. உண்மையில் பொருளாதாரத் தடை என்பது அந்த நாட்டின் மீது போர் தொடுப்பதை விடவும் மோசமான விளைவுகளை ஏற்படுத்துகிறது.
ஜிம்பாவே நாட்டின் அதிபர் எம்மெர்சன் டபுட்சோ மங்கக்வா (Emmerson Dumbudzo Mnangagwa) இருபது ஆண்டுகளைக் கடந்து நீடிக்கும் இந்த பொருளாதாரத் தடையால் ஜிம்பாவே ஏறக்குறைய 15 ஆயிரம் கோடி டாலர் ( ரூ. 12.5 லட்சம் கோடி) இழப்பைச் சந்தித்திருக்கிறது என்று குற்றம் சுமத்துகிறார். 1.7 கோடி மக்கள் தொகையை மட்டுமே கொண்ட ஒரு நாட்டிற்கு, இது ஈடு செய்யக் கடினமான தொகையாகும். இத்தனை ஆண்டுக் காலத்துக்குப் பொருளாதாரத் தடை விதிக்கும் அளவுக்கு ஜிம்பாப்வே இழைத்த குற்றம் என்ன? மனித குலத்துக்குக் கேடு விளைவிக்கும் போதை மருந்து உற்பத்தியில் ஈடுபட்டதா? அவற்றை அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் கொண்டு போய் கொட்டியதா? என்று கடும் கோபத்துடன் அவர் கேள்வி எழுப்புகிறார். எதுவுமே இல்லை.
ஜிம்பாப்வே 1890-இல் இருந்து பிரிட்டனின் காலனியாக இருந்து வந்தது. 1980-ஆம் ஆண்டுதான் விடுதலைப் படை கட்டி ஆயுதப் போராட்டம் நடத்தி சுதந்திரத்தை வென்றது. இந்தியாவை கிழக்கிந்திய கம்பெனி ஆண்டதைப் போல செசில் ரொடேஸ் (Cecil Rodes) என்கிற பிரிட்டானியக் கம்பெனிதான் 1880-இல் ஜிம்பாப்வே நாட்டை ஆக்கிரமித்து அடிமைப்படுத்தியது. தொடர்ந்து அந்த நாட்டின் பெயரையே தனது பெயரில் “ரொடீசியா” என்று மாற்றியது.1980-ஆம் ஆண்டு விடுதலைக்குப் பிறகுதான் ஜிம்பாப்வே என்று மீண்டும் பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
ஆனாலும் தென்னாப்பிரிக்காவைப் போலவே சொந்த நாட்டுக்குத் திரும்பிச் செல்லாமல் அங்கேயே தங்கிவிட்ட வெள்ளையர்கள் பலரும் ஏராளமான விளைநிலங்களைப் பண்ணைகளாக வளைத்து வைத்திருந்தனர். 4.5 சதவிகிதம் மட்டுமே இருந்த வெள்ளையர்கள் 50 சதவிகிதத்திற்கும் மேற்பட்ட நிலங்களை உடைமையாகக் கொண்டிருந்தனர். மீதமுள்ள 50 சதவிகித நிலங்களைத்தான் 95.5 சதவிகித பூர்வ குடிமக்கள் சிறு குறு அளவில் உடைமையாகப் பெற்றிருந்தனர்.
படிக்க: நமீபியா: மக்களின் பட்டினியைப் போக்க காட்டு விலங்குகளை அரசே கொல்லும் அவலம்!
இந்நிலையில்தான் அன்றைய அதிபராக இருந்த ராபர்ட் முகாபே நிலச் சீர்திருத்தச் சட்டம் கொண்டு வந்து 2001-ஆம் ஆண்டு வெள்ளையர்களிடமிருந்த நிலங்களை அரசு சார்பில் நட்ட ஈடு இன்றி கையகப்படுத்தி உள்ளூர் மக்களுக்கு மறு விநியோகம் செய்தார். வெள்ளையர்கள் நட்ட ஈடு கேட்ட நிலையில் அது கறாராக மறுக்கப்பட்டது. உண்மையில், 90 ஆண்டுக் கால சுரண்டலுக்கு நட்ட ஈடு தர வேண்டிய வெள்ளையர்கள், நட்ட ஈடு கேட்டது அயோக்கியத்தனமானதாகும்.
இவ்வாறு மக்களின் நிலத்தை மக்களுக்கு மீட்டுக் கொடுத்ததே ஜிம்பாப்வே அரசு செய்த குற்றம். இந்த குற்றத்திற்காகத்தான் அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியமும் ஜிம்பாப்வே மீது பொருளாதாரத் தடை விதித்துள்ளன.
90 ஆண்டுக்காலம் காலனியாதிக்கத்தின் கீழ் அடிமைப்பட்டு கிடந்த ஒரு நாடு எழுந்து நின்று ஒரு தற்சார்பான பொருளாதாரத்தை நிறுவிக்கொள்ள முயலும் நிலையில் இந்த பொருளாதாரத் தடை அதன் வளர்ச்சியின் குரல்வளையை நெரிக்கிறது என்று தடை விதித்த நாடுகள் மீது குற்றம் சுமத்துகிறார் இன்றைய ஜிம்பாப்வேயின் துணை அதிபர் கான்ஸ்டான்டினோ சிவெங்கா (Constantino Chiwenga). இந்த பொருளாதாரத் தடை பெரும் அநீதி என்று பல ஆசிய ஆப்பிரிக்க நாடுகளும் கண்டித்து குரல் கொடுத்து வருகின்றன.
ஆப்பிரிக்கக் கண்டத்தைச் சேர்ந்த தென்னாப்பிரிக்கா, அங்கோலா, நமீபியா, போட்சுவானா, காங்கோ, மொசாம்பிக், ஜாம்பியா உள்ளிட்ட 16 நாடுகள் அடங்கிய தெற்கு ஆப்பிரிக்க வளர்ச்சி குழுமம் என்கிற கூட்டமைப்பு (SADC – Southern Africa Development Community) இந்தத் தடைக்கு எதிரான கண்டனத்தை சர்வதேச அரங்குகள் பலவற்றிலும் பதிவு செய்துள்ளது. குறிப்பாக 2019-ஆம் ஆண்டிலிருந்து அக்டோபர் 25-ஆம் நாளை பொருளாதாரத் தடைக்கான எதிர்ப்பு தினமாக அறிவித்து அந்நாளில் கண்டம் முழுவதும் பெரும் மக்கள் போராட்டங்கள் நடந்து வருகின்றன. அவ்வாறே இந்த ஆண்டும் கடந்த அக்டோபர் 25-ஆம் நாள் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன. இரண்டாவது பெரிய நகரமான புலவாயோ நகரில் மாபெரும் கண்டனப் பொதுக்கூட்டத்தில் ஜிம்பாப்வேயின் அதிபர் மக்களுக்கு உரையாற்றினார்.
அதே நாளில் அமெரிக்காவின் நியூயார்க் மாநிலத்தின் புரூக்ளின் நகரில் “டிசம்பர் 12” என்ற கறுப்பின மக்களின் இயக்கம் இந்த பொருளாதாரத் தடைக்கு எதிரான கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தியுள்ளது.
படிக்க: ஜிம்பாவே கருப்பின மக்களின் நிலத்திற்கான போராட்டம் !
இவ்வளவுக்கும் பிறகு ஜிம்பாப்வே சக ஆப்பிரிக்க நாடுகளைக் காட்டிலும் பல சமூக நலக் குறியீடுகளில் வளர்ந்திருக்கிறது எனில், அந்நாட்டு மக்களின் ஏகாதிபத்திய எதிர்ப்புணர்வும், முன்முயற்சியும், கடுமையான உழைப்பும், விடாப்பிடியான போராட்டமும்தான் காரணமாகும். ஜிம்பாப்வேயில் 80 சதவிகித உற்பத்தி பொருட்கள் உள்நாட்டிலேயே உற்பத்தி செய்யப்படுகின்றன. கல்வி வளர்ச்சியில் தென்னாப்பிரிக்காவை அடுத்து இரண்டாவது நிலையில் ஜிம்பாப்வே இருக்கிறது. சுய சார்பாக இயங்கும் மருத்துவ கட்டுமானங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. விவசாயத்தில் பாசனம் இல்லாத பகுதிகளில் விளைவிக்கக்கூடிய வறட்சியைத் தாங்கி வளரும் தன்மை கொண்ட பூர்வீகமான தானிய பயிர்கள் வளர்த்தெடுக்கப்பட்டிருக்கின்றன.
அதேசமயத்தில், “லுக் ஈஸ்ட்” (Look East) என்ற கொள்கையை வகுத்துக் கொண்டு சீனா மற்றும் பிற ஆசிய நாடுகளுடனான வர்த்தகத்தில் ஜிம்பாப்வே ஈடுபட்டு வருகின்றது. இதைப் போன்ற பொருளாதாரத் தடைகள் கியூபா நாட்டின் மீதும் பல ஆண்டுகளாக நடைமுறையிலிருந்து வருகிறது என்பதும் இந்த நேரத்தில் கவனிக்கத்தக்கதாகும். அமெரிக்காவும் ஐரோப்பாவும் தற்சார்பு பொருளாதாரத்தை வளர்த்தெடுக்க முயலும் எந்த நாட்டையும் விட்டு வைப்பதில்லை. அந்நாடுகளுக்கு எதிராக எவ்வித இடையூறுகளையும் செய்யத் தயங்குவதே இல்லை. எனவே ஜிம்பாப்வே மீதான இந்த பொருளாதாரத் தடைகளை முடிவுக்குக் கொண்டுவர ஆப்பிரிக்கா கண்டம் முழுவதும் நடைபெற்று வருகின்ற இந்த போராட்டத்தை இந்தியாவும் கட்டாயமாக ஆதரிக்க வேண்டும். அதற்காக உழைக்கும் மக்கள் குரல் எழுப்ப வேண்டும்.
ஆப்பிரிக்காவின் முழக்கத்தை நாமும் முழங்குவோம்.
“ஜிம்பாப்வே மீதான பொருளாதார பயங்கரவாதத்தை நிறுத்து”.
ஆதி
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram