சென்னை கிண்டியில், கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு அரசு மருத்துவமனை (KCSSH) செயல்படுகிறது. இங்கு, மருத்துவர் பாலாஜி ஜெகன்னாத் புற்றுநோய்ப் பிரிவின் துறைத்தலைவராக இருக்கிறார். நவம்பர் 13 அன்று புதன்கிழமை காலை 10.30 மணியளவில் பெருங்களத்தூரைச் சேர்ந்த விக்னேஷ் என்பவர், மருத்துவர் பாலாஜியை அவரது அறையில் சந்தித்துள்ளார். அப்போது, தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் டாக்டர் பாலாஜியை தாக்கியுள்ளார். இதில் மருத்துவர் பாலாஜி படுகாயமடைந்துள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய கிண்டி கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனையின் இயக்குநர் பார்த்தசாரதி, “உடலில் நெறிகட்டுவதைப் போல கட்டிகள் ஏற்படும் பிரச்சினைக்காகத் தனது தாயை சிகிச்சைக்காக அந்த நபர் அழைத்து வந்தார். அவரது வாழ்நாளை அதிகரிப்பது தொடர்பான சிகிச்சைகள் வழங்கப்பட்டு வந்தன” என்றார்.
மேலும், தாக்குதல் சம்பவம் குறித்து விவரித்த மருத்துவர் பார்த்தசாரதி, “அவர் நல்லபடியாக வந்துள்ளார். டாக்டருடன் அரைமணி நேரம் உரையாடியுள்ளார். இதற்கு முன்னதாக தனது தாயை டிஸ்சார்ஜ் செய்து தனியாரிடம் சென்று சிகிச்சை அளித்துள்ளார்” என்றார்.
அரசு மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்ட சிகிச்சை தொடர்பாக தனியார் மருத்துவமனையில் கூறப்பட்ட தகவல்களின் அடிப்படையில், மருத்துவர் பாலாஜி மீது அவர் தாக்குதல் நடத்தியதாக அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், அரசு மருத்துவர் மீதான தாக்குதலைக் கண்டித்து வேலை நிறுத்தப் போராட்டத்தை நடத்த உள்ளதாக அரசு மருத்துவர்கள் சங்கம் அறிவித்தது.
படிக்க: மருத்துவர் பாலாஜி மீதான தாக்குதல்! சீரழிந்து போயிருக்கும் மருத்துவக் கட்டமைப்பின் வெளிப்பாடு!
இதற்கடுத்து மருத்துவர்களின் போராட்டத்தில் வைக்கப்பட்ட கோரிக்கைகளின் அடிப்படையில், மாநிலத்தின் அனைத்து அரசு மருத்துவமனைக் கல்லூரிகள், ஆரம்ப சுகாதார மையங்கள், மாவட்ட மருத்துவமனைகள் ஆகியவற்றில் பாதுகாப்பை உறுதிசெய்யும் வகையில் ஆயுதம் தாங்கிய போலீஸ் ஒருவரை நியமிப்பதாகவும், கிண்டி அரசு மருத்துவமனைக்குத் தனியாக ஒரு அவுட்போஸ்ட் காவல்நிலையத்தை அமைப்பதாகவும் அரசு தரப்பில் உறுதியளித்ததன் அடிப்படையில் மருத்துவர்களின் போராட்டம் வாபஸ் வாங்கப்பட்டது. மேலும், மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் முதல்வர் மற்றும் அரசு மருத்துவமனைகளின் தலைவர் ஆகியோர் தலைமையில் வன்முறை தடுப்புக்குழு அமைக்க வேண்டும், ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் சிசிடிவி கேமரா மற்றும் மின்விளக்குகளை அமைக்க வேண்டும் என வழிகாட்டுதல்களைத் தமிழ்நாடு அரசு கொடுத்துள்ளது.
மேலும், ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் உள்ளதுபோன்று நோயாளிகள், உறவினர்களின் கையில் டேக் கட்டும் நடைமுறை படிப்படியாக அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் செயல்பாட்டுக்கு வரும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். டேக் வண்ணங்கள் முறையே
- சிவப்பு நிறம் – தீவிர சிகிச்சைப் பிரிவு
- மஞ்சள் நிறம்- சிறப்பு மருத்துவ சிகிச்சைப் பிரிவு
- பச்சை நிறம்- சிறப்பு அறுவை சிகிச்சைப் பிரிவு
- நீல நிறம் – பொது மருத்துவம்.
உண்மையில், மருத்துவர்கள் பணிபாதுகாப்பு கேட்டு நடத்தும் போராட்டத்திற்கு, குறைவான மருத்துவர் நியமனம், பணிச்சுமை, மருத்துவ உபகரணங்கள் மற்றும் மருந்து தட்டுப்பாடு முதலியவைதான் காரணங்களாக இருக்கின்றன. ஆனால், அவற்றைப்பற்றிப் பேசாமல் வெறுமனே மருத்துவர்கள் பாதுகாப்பை உறுதி செய்கிறோம் என கண்துடைப்பிற்காக சில நடவடிக்கைகளை மேற்கொள்வதோடு தி.மு.க அரசு தன் கடைமையை முடித்துக் கொள்கிறது.
சமீபத்தில், கொல்கத்தாவில் ஆர்.ஜி.கர் மருத்துவமனையில் முதுகலை பயின்று வந்த மருத்துவ மாணவி பாலியல் வன்புணர்விற்கு ஆளாக்கப்பட்டுக் கொல்லப்பட்டார். இதை எதிர்த்து நாடு தழுவிய அளவில் போராட்டங்கள் நடந்தன. இந்த சம்பவத்திற்குப் பிறகு மருத்துவர்கள் மற்றும் பயிற்சி மருத்துவர்கள் 36 முதல் 48 மணி நேரம் வரை பணியில் அமர்த்தப்படுவது பேசுபொருளானது. இவ்வளவு பணிச்சுமையில் உள்ள மருத்துவர்களின் மனநிலை எவ்வாறு இருக்கும் என யோசித்துப்பார்த்தால் அவர்கள் கடுமையாக நடந்துகொள்வதன் காரணத்தைப் புரிந்து கொள்ள முடியும். ஆனால் மருத்துவர்களின் நிலைமை பொதுமக்களுக்குத் தெரியாமல் இருப்பதால் மருத்துவர் – பொதுமக்களுக்கு இடையில் சண்டைகள் உருவாகின்றன. இதுமட்டுமல்லாமல் போதிய உபகரணங்கள் மற்றும் மருந்துகள் இல்லாததால் என்னதான் மருத்துவர்கள் சரியான மருத்துவத்தை வழங்க முயற்சி செய்தாலும் அதனைச் செய்ய முடியாமல் பொதுமக்களுடன் தகராறு வளர்கிறது.
படிக்க: பெருகி வரும் நீரிழிவு நோய்: உழைக்கும் மக்களைக் கைவிடும் அரசு மருத்துவமனைகள்
உலக சுகாதார நிறுவனத்தின் படி, 1000 மக்களுக்கு ஒரு மருத்துவர் இருக்க வேண்டும். ஆனால், இந்தியாவில் 836 பேருக்கு ஒரு மருத்துவர் என்ற அளவில் மருத்துவர்கள் உள்ளதாக சுகாதாரத்துறை இணையமைச்சர் அனுப்பிரியா மக்களவையில் தெரிவித்துள்ளார். மேலும், இது WHO நிர்ணயித்ததை விடச் சிறந்தது என்று கூறியுள்ளார். நாட்டில் உள்ள 731 மருத்துவக்கல்லூரிகளில் ஆண்டுக்கு 1,12,112 இளங்கலை மருத்துவ படிப்புகளுக்கான இடங்களும், 72,627 முதுநிலை மருத்துவ படிப்புக்கான இடங்களும் உள்ளன. தமிழ்நாட்டில் மட்டும் 1,49,399 மருத்துவர்கள் உள்ளனர். தமிழ்நாட்டில், மருத்துவர் – மக்கள்தொகை விகிதம் 1:495 ஆக உள்ளது.
ஆனால், இந்தியாவில் சுகாதார நிபுணர்களின் பணியிடங்கள் மிகவும் சீரற்றதாக உள்ளது, மருத்துவர்கள் நகர்ப்புற மையங்களில் குவிந்துள்ளனர். இந்த ஏற்றத்தாழ்வு, சுகாதார சேவைகளை அணுகுவதில் குறிப்பிடத்தக்க இடைவெளிகளை ஏற்படுத்துகிறது, குறிப்பாகப் பல ஆரம்ப சுகாதார நிலையங்களில் (PHC) குறைவான மருத்துவ பணியாளர்கள் உள்ளனர். சுகாதார நிலையங்களில் சுமார் 70 சதவிகித பணியிடங்கள் காலியாக உள்ளன. சமூக சுகாதார மையங்களில் (CHCs) நிபுணத்துவ மருத்துவர்களின் பற்றாக்குறை அதிகமாக உள்ளது. அறுவைசிகிச்சை நிபுணர்கள், மகப்பேறு மருத்துவர்கள், மகப்பேறு மருத்துவர்கள், மருத்துவர்கள் மற்றும் குழந்தை மருத்துவர்கள் – ஆகிய தேவையான மருத்துவர்களில் பெரும் பகுதியினர் கிராமப்புற மையங்களில் இல்லை. நிபுணத்துவ மருத்துவர்களின் எண்ணிக்கை பல ஆண்டுகளாக உயர்ந்து வந்தாலும், அது தேவைக்கேற்ற அளவுக்கு நிரப்பப்படவில்லை, இதன் விளைவாகச் சுகாதாரத்தை வழங்குவதில் குறிப்பிடத்தக்க இடைவெளி ஏற்பட்டுள்ளது.
கூடுதலாக, பல சுகாதார நிலையங்களில் உள்கட்டமைப்பு மற்றும் அத்தியாவசியமான உபகரணங்கள் இல்லை. இதில் போதிய நோயறிதல் வசதிகள், படுக்கைகள் மற்றும் அத்தியாவசிய மருத்துவப் பொருட்களின் பற்றாக்குறை ஆகியவை அடங்கும். கிராமப்புறங்களில் மருத்துவர்கள் பணியமர்த்தப்பட்டால், அவர்களைத் தக்கவைப்பது சவாலாக உள்ளது. கிராமப்புறங்கள் பெரும்பாலும் வறுமை மற்றும் குறைந்த கல்வி நிலைகள் உள்ளிட்ட சமூகப் பொருளாதார சவால்கள் உள்ளதால் மருத்துவர்கள் கிராமப்புறங்களில் பணியாற்ற வருவதில்லை.
மேலும், நகர்ப்புறங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளிலும் போதிய மருத்துவர்கள் மற்றும் மருத்துவ பணியாட்களை நியமனம் செய்வதில்லை. இதனால் வேலை செய்யும் மருத்துவர்கள் மற்றும் மருத்துவ பணியாட்களுக்கு வேலைச்சுமை கூடுகிறது. இதனால் அவர்கள் மிகுந்த மனவுளைச்சலுக்கு ஆளாகின்றனர். எனவே தங்களது வேலையை மகிழ்வுடன் பார்ப்பதற்குப் பதிலாக வெறுப்புடன் பார்க்கும் நிலைமை உள்ளது. இவ்வாறு பணியிடங்களை நிரப்பாமல் தனியார் நிறுவனங்கள் மூலம் ஒப்பந்தத்திற்கு ஊழியர்களை நியமிப்பது, ஏ.ஆர்.டி, மனநல பிரிவு போன்ற மருத்துவமனை கட்டமைப்புகளைத் தனியாருக்குத் தாரை வார்க்கும் போக்கு அதிகரித்து வருகிறது.
படிக்க: கொல்கத்தா: மக்கள் போராட்டமாக மாறிவரும் மருத்துவர்களின் உண்ணாவிரதப் போராட்டம்!
இந்த சம்பவத்தில் குற்றச்செயலில் ஈடுபட்ட விக்னேஷை கைது செய்துள்ளோம் உரிய நடவடிக்கையை மேற்கொண்டுள்ளோம் என திமுக அரசு வாய்ச்சவடால் அடித்துக்கொண்டு இருக்கிறது. இந்த பிரச்சினையை மருத்துவருக்கும் விக்னேஷ் இருவருக்குமான பிரச்சனையாக ஆளும் வர்க்க ஊடகங்கள் காட்டுவதன்மூலம் மருத்துவ பணியாட்கள் பற்றாக்குறை மற்றும் மருத்துவத் துறை தனியார்மயத்தை மூடி மறைக்கும் வேலையைச் செய்கின்றன.
இச்சம்பவத்தில், பாதிக்கப்பட்டவர் மருத்துவர் பாலாஜி மட்டுமல்ல மருத்துவரைக் குத்திய விக்னேஷும்தான். அடிப்படையான மருத்துவ வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்காமல் அலட்சியமாக நடந்துகொண்ட ‘திராவிட மாடல்’ அரசுதான் இருவரையும் பாதிப்பிற்குள் தள்ளியுள்ளது. இதுபோல அன்றாடம் மருத்துவமனை ஊழியர்களுக்கும் நோயாளிகளுக்கும் மருந்து தட்டுப்பாடு, உபகரணப் பழுது ஆகிய காரணங்களால் சண்டைகள் நடந்துகொண்டே இருக்கிறது.
இச்சம்பவத்தின் முதல் குற்றவாளி அரசுதான். அரசின் தனியார்மயக் கொள்கையை விரட்டியடிக்காமல் இது போன்ற பிரச்சனைகளுக்கு போலீஸ் பாதுகாப்பை அதிகப்படுத்துவது, சிசிடிவி கேமரா பொருத்துவது போன்றவையெல்லாம் நிரந்தர தீர்வினைத் தராது. உழைக்கும் மக்களாகிய நாம் அனைவரும் மருத்துவ தனியார்மயத்திற்கெதிராக போராட்டத்தில் இறங்குவதன் மூலமே இதற்கு நிரந்தர தீர்வினை அடைய முடியும்.
அசுரன்
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram