செப்டம்பர் மாதம் 12 ஆம் தேதியன்று சாம்சங் தொழிலாளர்கள் தங்களின் அடிப்படை வாழ்வாதாரத்தைப் பாதுகாப்பதற்காக சங்கம் அமைக்கும் உரிமை, 8 மணி நேர வேலை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஒரு மாதத்திற்கும் மேலாகப் போராட்டம் நடத்தினர்.

இதனையடுத்து திமுக அரசும் சாம்சங் நிறுவனமும் CITU தொழிற்சங்கமும் இணைந்து நடத்திய முத்தரப்பு பேச்சுவார்த்தையில் தொழிலாளர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்று சாம்சங் நிறுவனமும் திமுக அரசு அறிவித்த பிறகு தொழிலாளர்கள் போராட்டத்தைக் கைவிட்டு வேலைக்குத் திரும்புவதாக அறிவித்தனர்.

ஆனால் சாம்சங் நிறுவனமானது போராட்டம் முடிந்து ஒரு மாதத்திற்கும் மேலான பிறகும் முத்தரப்பு பேச்சுவார்த்தையின் போது வாக்குறுதியளித்த எதனையும் நிறைவேற்றாமல் நிறுவனத்தில் வேலை பார்க்கும் 1450 தொழிலாளர்களில் 450 பேருக்கு மட்டுமே வேலை வழங்கியுள்ளது. ஆயிரம் தொழிலாளர்கள் இன்னும் வேலைக்கு அழைக்கப்படவில்லை.

நிறுவனத்தில் வேலைக்கு அனுமதிக்கப்பட்டுள்ள 450 தொழிலாளர்களையும் பயிற்சி என்கிற பெயரில் கொடுமைப்படுத்துவதுடன் பயிற்சி கொடுப்பவரை வைத்து தொழிற்சங்கத்திற்கு வெளித்தலைமை, மூன்றாம் நபர் எதற்கு என்று தொழிலாளர்களை மூலைச் சலவை செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது.

தனது நிர்வாகத்திற்கு ஆதரவாக அமைக்கப்பட்டுள்ள தொழிலாளர் குழுவை ஏற்கச் சொல்லி அதற்கான படிவத்தில் கையெழுத்திடச் சொல்லிக் கட்டாயப்படுத்தி வருகிறது சாம்சங் நிறுவனம்.


படிக்க: சாம்சங் இந்தியா நிறுவன தொழிலாளர்களின் முதுகில் குத்திய தி.மு.க. அரசு!


சாமசங் நிறுவனத்தின் பழிவாங்கல் நடவடிக்கைகள் ஒருபுறம் இருக்க, திமுக அரசோ சாம்சங் தொழிலாளர்களை முதுகில் குத்துவதன் மூலம் தனது கார்ப்பரேட் பாசத்தை வெளிப்படுத்தி வருகிறது. தமிழ்நாடு அரசின் தொழிலாளர் துறை, தொழிற்சங்க சட்டத்தின்படி பதிவு செய்யப்பட்ட விண்ணப்பத்தை ஏற்று பதிவுச்சான்றிதழ் வழங்க வேண்டும். ஆனால் திமுக அரசானது தொழிற்சங்கத்திற்கு அனுமதி வழங்க மறுப்பதுடன் தொழிற்சங்கத்தைப் பதிவு செய்வது தொடர்பான வழக்கு நீதிமன்றத்திற்கு விசாரணைக்கு வரும்போதெல்லாம் திமுக அரசு தனது வழக்கறிஞரை வைத்து வழக்கை நீட்டிக்கச் செய்து சாம்சங் நிறுவனத்திற்கு ஆதரவாகச் செயல்பட்டு வருகிறது. இது தொழிலாளர்களின் முதுகில் குத்தும் துரோக நடவடிக்கையாகும்.

முத்தரப்பு பேச்சுவார்த்தையின்போது எந்தவித பழிவாங்கும் நடவடிக்கையிலும் ஈடுபடாமல் தொழிலாளர்களின் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்படும் என்று பேசிய சாம்சங் நிறுவனமும், மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசும் இணைந்து தொழிலாளர்களுக்கு எதிரான நடவடிக்கைகளில் தற்போது ஈடுபட்டு வருகிறன.

சாம்சங் நிறுவனத்திற்கு ஆதரவாகச் செயல்படும் திமுக அரசைக் கண்டித்து நவம்பர் 15 ஆம் தேதி நடைபெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


இன்குலாப்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க