பாசிச பா.ஜ.க அரசு வங்கிகள் சட்டத் திருத்த மசோதாவை [The Banking Laws (Amendment) Bill, 2024] டிசம்பர் 3 அன்று மக்களவையில் நிறைவேற்றியுள்ளது. ‘வங்கி சீர்திருத்தம்’ என்ற பெயரில் கொண்டுவரப்பட்டுள்ள இந்த மசோதா வங்கிகள் தனியார் மயமாக்கப்படுவதைத் தீவிரப்படுத்துவதாகவே அமைந்துள்ளது.

அம்பானி – அதானிகளுக்குச் சேவை செய்வதையே நோக்கமாகக் கொண்டுள்ள பாசிச பா.ஜ.க அரசிடம் வேறு எதை நாம் எதிர்பார்க்க முடியும்.

இச்சட்டத் திருத்த மசோதா ஆகஸ்ட் 9, 2024 அன்றே மக்களவையில் அறிமுகப்படுத்தப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த மசோதா இந்திய ரிசர்வ் வங்கிச் சட்டம் 1934, வங்கி ஒழுங்காற்றுச் சட்டம் 1949, பாரத ஸ்டேட் வங்கி சட்டம் 1955, வங்கி நிறுவனங்கள் (கையகப்படுத்துதல் மற்றும் பரிமாற்றம்) சட்டம் 1970, வங்கி நிறுவனங்கள் (கையகப்படுத்துதல் மற்றும் பரிமாற்றம்) சட்டம் 1980 ஆகிய ஐந்து சட்டங்களில் மொத்தம் 19 திருத்தங்களை முன்மொழிகிறது.

வங்கி துறையை வலுப்படுத்துவதற்காகவும் வாடிக்கையாளர் சேவையை மேம்படுத்துவதற்காகவும் இந்த மசோதா கொண்டுவரப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார். ஆனால் இம்மசோதாவில் முன்மொழியப்பட்டுள்ள திருத்தங்கள் கார்ப்பரேட்டுகள் மக்கள் பணத்தைக் கொள்ளையடிப்பதைத் தீவிரப்படுத்துவதாகவே உள்ளன.

பொதுத்துறை வங்கிகளை படிப்படியாகத் தனியார் மயமாக்கும் முயற்சியின் நீட்சியே இந்த மசோதா என்று எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சனம் செய்துள்ளன. பொதுமக்கள், வங்கி வாடிக்கையாளர்கள் மற்றும் ஊழியர்களின் நலனுக்கு முன்னுரிமை தராமல் கார்ப்பரேட் நலன்களை இம்மசோதா முன்னிறுத்துவதாகவும் சாடியுள்ளனர்.

கூட்டுறவு வங்கிகளின் இயக்குநர்களின் (தலைவர் மற்றும் முழுநேர இயக்குனர் தவிர) பதவிக்காலம் 8 ஆண்டுகளில் இருந்து 10 ஆண்டுகளாக உயர்த்தப்பட்டுள்ளது, வங்கி இயக்குநர்களுக்கான செலவினங்கள் 40 மடங்கு (₹5 லட்சத்திலிருந்து ₹2 கோடியாக) உயர்த்தப்பட்டுள்ளது, வங்கி தணிக்கையாளரின் ஊதியத்தை வங்கி நிர்வாகமே நிர்ணயித்துக் கொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது ஆகியன அதிகாரம் மையங்களை உருவாக்கும் என்றும் எதிர்க்கட்சியினர் விமர்சனம் செய்துள்ளனர்.

மேற்குறிப்பிட்ட திருத்தங்களால் கிராமப்புற வங்கி சேவைகள் குறைவதுடன் சிறு குறு வணிகர்கள் கடன் பெறுவதும் கடினமாகும் என்று எதிர்க்கட்சியினர் கூறியுள்ளனர்.

இதனை வேறு வார்த்தைகளில் கூறுவதென்றால், அதானி அம்பானி போன்ற ஒரு சில கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு மட்டுமே கடன் கொடுக்கும் நிறுவனங்களாக பொதுத்துறை வங்கிகள் மாற்றப்பட்டு வருகின்றன என்பதுதான் இதன் பொருள்.


படிக்க: பா.ஜ.க ஆட்சியில் மாபெரும் வங்கிக் கொள்ளை! | புஜதொமு


இந்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்த திரிணமூல் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் கல்யாண் பானர்ஜி “பொதுத்துறை வங்கிகளில் மத்திய அரசின் பங்கை 51 சதவிகிதத்திலிருந்து 26 சதவிகிதமாகக் குறைத்து வங்கிகளை தனியார்மயம் ஆக்குவதே இம்மசோதாவின் உண்மை நோக்கம்” என்று கூறியுள்ளார்.

சி.பி.எம் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர். சச்சிதானந்தம் பேசுகையில் “தனியார்மயமாக்கல் காரணமாக ஆயிரக்கணக்கான பொதுத்துறை வங்கி ஊழியர்கள் வேலை பாதுகாப்பின்மையை எதிர்கொள்கின்றனர். இந்த மசோதா அவர்களின் கவலைகளைக் களையவில்லை. அரசாங்கம் வேலைவாய்ப்பு நிலைத்தன்மைக்கு முன்னுரிமை கொடுக்காமல், தனியார்மயமாக்கலுக்கும் பெருநிறுவன நலன்களுக்கும் முக்கியத்துவம் அளிக்கிறது. இது வங்கித்துறையின் நிலைத்தன்மையைப் பாதிக்கும், நிதி உள்ளடக்கத்தைக் குறைக்கும், முறைகேடுகளுக்கு வாய்ப்பளிக்கும்.

அரசாங்கம் தனது அணுகுமுறையை மறுபரிசீலனை செய்து, பொதுத்துறை வங்கி அமைப்பை வலுப்படுத்துவதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். தனியார்மயமாக்கலுக்காக நாட்டின் நிதி இறையாண்மையைத் தியாகம் செய்யக்கூடாது” என்று பாசிச பா.ஜ.க அரசின் கார்ப்பரேட் சேவையை விமர்சனம் செய்துள்ளார்.

எதிர்க்கட்சியினரின் விமர்சனங்களைக் காது கொடுத்துக் கேட்கக்கூட பாசிச மோடி அரசு தயாராக இல்லை. தற்போது மக்களவையில் நிறைவேற்றியதைப் போலவே இந்த மசோதாவை அடுத்து மாநிலங்களவையிலும் நிறைவேற்றும்.

எனவே பாசிச மோடி அரசை நாடாளுமன்றத்தில் மட்டும் எதிர்த்தால் போதாது. நாடாளுமன்றத்தைக் கடந்து களப் போராட்டங்களைக் கட்டியமைக்க வேண்டும். அது மட்டுமே பாசிஸ்டுகளைப் பணிய வைக்கும்.


ராஜேஷ்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram