போலிகளை உருவாக்கும் குஜராத் மாடல்!

பா.ஜ.க. கும்பல் ஆளும் குஜராத்தில் அடுத்தடுத்து போலி வங்கி, போலி நீதிமன்றம், போலி மருத்துவமனைகள் கண்டுபிடிக்கப்பட்டதன் தொடர்ச்சியாக தற்போது போலி மருத்துவ வாரியமும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பாசிசக் கும்பலால் வளர்ச்சியடைந்த மாநிலமாக ஊதிப்பெருக்கப்பட்ட குஜராத் மாடல் என்பது போலிகளை உருவாக்குகின்ற போலி மாடல் என்பது இதன் மூலம் அம்பலமாகிறது.

குஜராத் மாநிலத்தில் செயல்பட்டுவந்த போலி மருத்துவ கல்வி வாரியம் ஒன்று ரூ.79,000-க்கு போலி மருத்துவ பட்டங்களை விற்பனை செய்துவந்த செய்தி வெளியாகி நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சூரத் நகரில் போலி மருத்துவர்கள் அதிகமான கிளினிக்குகளை நடத்தி வருவதாக கடந்த டிசம்பர் 5-ஆம் தேதி பாணடேசரா போலீசுக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து அந்நகரின் பாம்ரோலி பகுதியில் உள்ள கிளினிக்குகளில் சோதனை மேற்கொள்ளப்பட்டது.

அந்த சோதனையில் கவிதா கிளினிக், பிரின்ஸ் கிளினிக் மற்றும் ஷ்ரேயன் கிளினிக் ஆகிய மூன்று கிளினிக்குகளை நடத்துபவர்கள் தகுதியற்ற போலி மருத்துவர்கள் என்பது கண்டுபிடிக்கப்பட்டது. இவர்களுக்கு பட்டங்களை விற்ற கும்பலானது, போலியான மருத்துவ வாரியத்தை உருவாக்கி நடத்திவந்துள்ளது. மேலும், அக்கும்பல் கடந்த 22 ஆண்டுகளாக போலி மருத்துவப் பட்டங்களை விற்பனை செய்துவந்துள்ளது என்ற அதிர்ச்சிகர தகவல் விசாரணையில் வெளிவந்துள்ளது.

அதாவது, மருத்துவத்துறையைப் பயன்படுத்தி மோசடியாக பணம் சம்பாதிக்கும் நோக்கத்தில், குஜராத் மாநிலம் சூரத்தை சேர்ந்த மருத்துவர் ரமேஷ், அகமதாபாத்தைச் சேர்ந்த மருத்துவர் ராவத்  மற்றும் இவர்களின் உதவியாளர் இர்பான் சையத் ஆகிய மூவரும் இணைந்து கடந்த 2002-ஆம் ஆண்டு அகமதாபாத்தில் போலியான ஹோமியோபதி மருத்துவ கல்வி வாரியத்தை (Board of Electro Homoeopathic) தொடங்கியுள்ளனர்.

இவ்வாரியம் சட்டப்பூர்வமானது என்று அரசாங்கத்தை நம்பவைப்பதற்காக WWW.BehmGujarat.Com என்ற போலியான இணையதளத்தை உருவாக்கி, அதன்மூலம் இளங்கலை ஹோமியோபதி மற்றும் அறுவைச் சிகிச்சை (BEMS) மருத்துவ படிப்பிற்கான மாணவர்களின் விண்ணப்பங்களை பதிவு செய்து வந்துள்ளனர்.

இணையதளத்தில் விண்ணப்பிப்பவர்களிடம் ரூ.1,500-ஐ பதிவு கட்டணமாக பெற்றுக்கொண்டு 15 நாட்களுக்குள்  போலி மருத்துவ பட்டங்களை உருவாக்கி ரூ.75,000-க்கு விற்றதுடன், அப்பட்டத்தைப் புதுப்பிப்பதற்காக ஆண்டுதோறும் ஒவ்வொருவரிடமிருந்தும் ரூ.15,000 வசூலித்து வந்துள்ளனர்.

அதிலும், மருத்துவராவதற்கு எந்தவித தகுதியுமற்ற 8 மற்றும் 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களிடம் ரூ.75,000 பெற்றுகொண்டு போலியான மருத்துவப் பட்டங்களை விற்று வந்துள்ளனர் என்ற தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. இவர்களுக்கு மருத்துவம் பற்றி எதையும் கற்றுக்கொடுக்காத இக்கும்பல், ஹோமியோபதி சட்டப்பூர்வமானது என்ற நீதிமன்ற தீர்ப்பை மேற்கோள் காட்டி போலீசிடமிருந்து எப்படி தப்பிப்பது, மற்றவர்களை எப்படி ஏமாற்றுவது போன்ற கிரிமினல் பாடங்களை மட்டும் தவறாமல் நடத்தி வந்துள்ளனர்.

அதேசமயத்தில், இக்கும்பலிடமிருந்து பட்டம் பெற்று கிளினிக் நடத்துபவர்களிடம் லாபத்தில் தங்களுக்கும் பங்கு தரவேண்டுமென்று மிரட்டி ரூ.5,000 முதல் ரூ.10,000 வரை பறித்து கோடிக்கணக்கான பணத்தினை கொள்ளையடித்திருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இம்மோசடிக் கும்பலைப் பற்றி துணை போலீசு கமிஷனர் விஜய்சிங் குர்ஜார் கூறுகையில் “ரசேஷ் வீட்டில் நடத்திய சோதனையில் ஹோமியோபதி, அலோபதி மருந்துகள், சிரப் பாட்டில்கள் மற்றும் ஏழு வெற்று பட்டப்படிப்பு சான்றிதழ்கள், ஐந்து அச்சடிக்கப்பட்ட புதுபித்தல் படிவங்கள் மற்றும் விண்ணப்பப் படிவங்களையும் கைப்பற்றி ரசேஷ் மற்றும் உதவியாளர் இர்பான் சையத் இருவரையும் கைது செய்தோம். இவர்களிடமிருந்து பெற்ற தகவலின் அடிப்படையில் அகமதாபாத்தில் உள்ள மருத்துவர் ராவத்துக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்தியதில் 10 வெற்றுப் பட்டங்கள், 30 அச்சிடப்பட்ட பட்டங்கள், 160 விண்ணப்பப் படிவங்கள், 12 அடையாள அட்டைகள் மற்றும் போலி பட்டங்கள் பெற்ற 1,250 பேரின் பெயர் கொண்ட பட்டியலை கண்டுபிடித்தோம்” என்றார்.


படிக்க: குஜராத்: இந்துத்துவ மடமையை விதைக்கும் வி.என்.எஸ்.ஜி.யு பல்கலைக்கழகம்


ரசேஷ் மற்றும் ராவத் உள்பட 14 பேரும் கைது செய்யப்பட்டு அவர்களின் மீது குஜராத் மருத்துவ பயிற்சியாளர்கள் சட்டத்தின் கீழ் (GMBA) வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், மாதாந்திர கட்டணம் மற்றும் வருடாந்திர கட்டணம் மூலம் கடந்த 20 ஆண்டுகளில் இக்கும்பல் மிரட்டி பறித்த மொத்த தொகையை கண்டறிவதற்கு குற்றவாளிகளின் வங்கி கணக்கை ஆய்வு செய்து வருவதாகவும் போலீசு தெரிவித்துள்ளது.

மருத்துவத்துறையை அரசு கைக்கழுவி தனியார்மயப்படுத்தியதன் விளைவாக இன்று மருத்துவத்துறை மிகப்பெரிய மாஃபியா கும்பலிடம் சிக்கியுள்ளது என்பதையே மேற்கூறிய தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் விளைவாக, சேவைத்துறை என்பது மாறி மருத்துவத்துறை இன்று கொள்ளையடிப்பதற்கான சந்தையாகவும் கார்ப்பரேட்டுகளின் வேட்டைக்காடாகவும் மாறியுள்ளது.

குறிப்பாக, பா.ஜ.க. கும்பல் ஆளும் குஜராத்தில் அடுத்தடுத்து போலி வங்கி, போலி நீதிமன்றம், போலி மருத்துவமனைகள் கண்டுபிடிக்கப்பட்டதன் தொடர்ச்சியாக தற்போது போலி மருத்துவ வாரியமும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பாசிசக் கும்பலால் வளர்ச்சியடைந்த மாநிலமாக ஊதிப்பெருக்கப்பட்ட குஜராத் மாடல் என்பது போலிகளை உருவாக்குகின்ற போலி மாடல் என்பது இதன் மூலம் அம்பலமாகிறது.

குஜராத்தில் கண்டறிப்பட்ட இத்தகைய போலிகள் பெரும்பாலும் அரசு கட்டமைப்பின் துணையுடனும் ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க. கும்பலின் பக்கபலத்துடனும்தான் நடந்துவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. எனவே, இந்த போலி மருத்துவ கல்வி வாரியமும் காவி கும்பலின் துணையுடன் நடத்தப்பட்டிருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது.

மேலும், இந்தாண்டு நீட் தேர்வு மோசடிகள் அம்பலமானபோது குஜராத் உள்ளிட்ட பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் பல்வேறு வகையான மோசடி முறைகேடுகள் நடந்திருந்தது அம்பலப்பட்ட நிலையில்,  தற்போது குஜராத்தில் அதே மருத்துவக் கல்வி துறையில் போலி மருத்துவ வாரியமும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது குஜராத் உள்ளிட்ட பா.ஜ.க. மாநிலங்களில் கல்வி மற்றும் மருத்துவ மாஃபியாக்கள் செயல்பட்டுவருவதையும், அத்துறைகளில் கும்பலாட்சியை நிறுவுவதற்கான முன்னெடுப்புகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருவதையும் வெளிச்சம் போட்டு காட்டுகிறது.


இன்குலாப்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க