தேர்தல் தகிடுதத்தங்களை மறைப்பதற்காகச் சட்டத்தைத் திருத்திய மோடி அரசு

தேர்தல் ஆணையம் என்பது பாசிச கும்பலால், தேர்தல் ஜனநாயகம் என்று சொல்லிக் கொள்வதற்காக ஒரு பொம்மைப் போன்றே செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

பாசிச கும்பலானது தேர்தல் விதிகளைத் தொடர்ந்து திருத்தி வருகின்ற நிலையில், தற்போது தன்னுடைய தேர்தல் முறைகேடுகளை மறைப்பதற்காக தேர்தல் நடத்தை விதி 93(2a)-வைத் திருத்தியுள்ளது.

கடந்த அக்டோபர் மாதம் நடைபெற்ற ஹரியானா சட்டமன்றத் தேர்தலின் போது வாக்குச் சாவடியில் பதிவான வாக்குகள் தொடர்பான வீடியோ, சிசிடிவி கேமரா காட்சிகள் மற்றும் தேர்தல் ஆவணங்களின் நகல்களைத் தனக்கு தேர்தல் ஆணையம் வழங்க வேண்டும் என்று வழக்கறிஞர் மெஹ்மூத் பிரச்சா பஞ்சாப் ஹரியானா உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இம்மனு டிசம்பர்-9 ஆம் தேதி அன்று விசாரணைக்கு வந்தது. மெஹ்மூத் பிரச்சாரவின் மனுவை எதிர்த்து தேர்தல் ஆணையம், “அக்டோபர் மாதம் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் மெஹ்மூத் பிரச்சா வேட்பாளர் இல்லை. எனவே அவர் தேர்தல் தொடர்பான ஆவணங்களைக் கேட்க முடியாது” என்று தெரிவித்தது.

அதற்கு பதிலளித்த பிரச்சா, “வேட்பாளருக்கும், தேர்தலில் போட்டியிடாத நபருக்கும் இடையே உள்ள ஒரே வித்தியாசம், வேட்பாளர்கள் தேர்தல் தொடர்பான ஆவணங்களை இலவசமாக பெற முடியும் ஆனால் வேட்பாளர் அல்லாதவர்கள், தேர்தல் தொடர்பான ஆவணங்களைப் பெறுவதற்கு பரிந்துரைக்கப்பட்ட தொகையை செலுத்த வேண்டும். அத்தொகையை செலுத்திய பின், ஆவணங்கள் கட்டாயம் வழங்கப்பட வேண்டும்” என்று தெரிவித்தார்.

பிரச்சாவின் வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், 17 C பகுதி 1 மற்றும் பகுதி 2 உள்ளிட்ட தேவையான அனைத்து ஆவணங்களையும் ஆறுவாரங்களுக்குள் பிரச்சாவுக்கு வழங்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டது.

ஆனால் பாசிச கும்பலானது நீதிமன்றத்தின் உத்தரவை துளியும் பொருட்படுத்தாமல், தேர்தல் நடத்தை விதிகள் 93 (2a) வைத் திருத்தி உள்ளதாக, மத்திய சட்டம் மற்றும் நீதி அமைச்சகம் மூலம் கடந்த 20 ஆம் தேதி அன்று அறிவித்தது.

இந்த தேர்தல் நடைத்தை விதிகள் 93(2a)-வைத் திருத்தியதன் மூலம் இனி தேர்தல் தொடர்பான சிசிடிவி காட்சிகள், வாக்கு பதிவுகள் போன்றவை பொதுமக்களின் பார்வைக்கு வழங்கப்படப் போவதில்லை. சட்டத் திருத்தத்தில் என்ன குறிப்பிடப்பட்டு உள்ளதோ அவற்றை மட்டுமே மக்கள் பார்க்க முடியும். இத்திருத்தத்தில் எவை எவை திருத்தப்பட்டது என்பதையும் தெளிவாக குறிப்பிடவில்லை.

முக்கியமாக தேர்தல் தொடர்பான ஆவணங்களைப் பொதுமக்களுக்கு வழங்கும்படி தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடுகின்ற நீதிமன்றத்தின் அதிகாரத்தையும் பறித்துள்ளது. இதற்கு தற்போது வரை உயர்நீதிமன்றமும் உச்சநீதிமன்றமும் எந்தவித கருத்துக்களையும் தெரிவிக்கவில்லை என்பதையும் இங்கே கவனிக்க வேண்டும்.


படிக்க: ஜார்க்கண்ட் சட்டமன்றத் தேர்தல்: பா.ஜ.க-வை தோல்வியுறச் செய்தது எது?


குறிப்பாக இங்கே கவனிக்க வேண்டியது என்னவென்றால் அக்டோபரில் நடந்து முடிந்துள்ள ஹரியானா சட்டமன்றத் தேர்தலிலும், நவம்பர் மாதம் நடைபெற்ற மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தலிலும் வெற்றி பெறுவதற்காக எதிர்கட்சிகளுக்கு வாக்களிக்கக் கூடியவர்களை வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கியுள்ளதை மறைப்பதற்கே இத்திருத்தத்தை மேற்கொண்டுள்ளது.

மோடி தலைமையிலான பாசிச கும்பல் ஆட்சிக்கு வந்தப் பிறகு தேர்தல் ஆணையரை நியமிப்பது முதல், இன்று தேர்தல் நடத்தை விதிகள் என அனைத்து விதிகளையும் தனக்கு ஏற்றார் போல் மாற்றியுள்ளது. இன்று தேர்தல் நடத்துவது முதல், முடிவுகள் வெளியிடுவது வரை அனைத்தையும் பாசிச கும்பலே முடிவு செய்கின்றது. தேர்தல் ஆணையம் என்பது பாசிச கும்பலால், தேர்தல் ஜனநாயகம் என்று சொல்லிக் கொள்வதற்காக ஒரு பொம்மைப் போன்றே செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

ஆனால் இந்தியா கூட்டணிக் கட்சிகள் திருடனிடம் நீதியை எதிர்பார்ப்பது போல மீண்டும் மீண்டும் தேர்தல் ஆணையத்திற்கும் உச்சநீதிமன்றத்திற்கும் கடிதம் எழுதிக் கொண்டிருக்கின்றனர். அக்கடிதங்களை தேர்தல் ஆணையமும், உச்சநீதிமன்றமும் கண்டு கொள்வதாகத் தெரியவில்லை.

இன்று தேர்தல் ஆணையம் முதல் நீதிமன்றங்கள் வரை அனைத்தும் பாசிச மயமாகி உள்ளது. அக்கும்பலால் நடத்தப்படுகின்ற தேர்தலும் பாசிசக் கும்பலுக்கு சாதகமாக அமையும் என்பதையே நடந்து முடிந்த இரண்டு மாநிலத் தேர்தல்களும் நமக்கு உணர்த்துகின்றன.

எனவே நியாயமான முறையில் தேர்தல்கள் நடத்தப்படவேண்டுமென்றால் அதற்கு எதிர்கட்சிகள் பாசிச கும்பலுக்கு எதிராக வலுமையான போராட்டங்களை முன்னெடுக்கவேண்டும் என்பதே முன்நிபந்தனையாக உள்ளது.


ஆசாத்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க