கடந்த சில நாட்களாக தோழர்கள் சிலர் என்னிடம் “விடுதலை – பாகம் 2 பார்த்துவிட்டீர்களா? படம் நன்றாக உள்ளது. உங்கள் கருத்துகளை எழுதுங்கள்” என்று கூறினார்கள்.
படம் என்றால் தொடர்ந்து மூன்று மணி நேரம் பார்க்க வேண்டும். அதுவும் அரசியல் படம் என்றால் அதன் வசனங்களை கூர்ந்து கவனிக்க வேண்டும். நிறுத்திவிட்டு மீண்டும் மீண்டும் பார்க்க வேண்டும். இது ஒரு பெரிய வேலை. மேலும் பல தோழர்கள் இப்படத்தை மிகவும் பாராட்டி எழுதி வருவதால், நாம் இப்படத்தைப் பற்றி விமர்சனம் எழுதி அது என்ன விளைவை உண்டாக்கும், பொறுமையாக பிறகுப் பார்க்கலாம் என்றே நினைத்து வந்தேன்.
ஏற்கெனவே வெற்றிமாறனின் அசுரன் படம் தொடர்பாக நான் எழுதிய விமர்சனம் மிகக் கடுமையாக இருந்ததாக பலரும் கூறினார்கள். அதிலே இப்போதுவரை எனக்கு மாற்றுக் கருத்தில்லை.
இதற்கிடையே, இந்துமதவெறிக் கும்பல் இப்படம் குறித்து ஊடக சந்திப்பு நடத்தி இருந்தது. முகநூலிலும் இப்படம் குறித்து பலரும் எழுதி வந்தனர். எப்படியாகினும் நேற்று இரவு விடுதலை பாகம் 2 பார்க்க நேர்ந்தது.
தமிழ்நாட்டில் நடைபெற்ற தொழிலாளர் போராட்டங்கள், விவசாயிகள் போராட்டங்கள், அவை அழித்தொழிப்புப் போராட்டங்களுக்கு இட்டுச்சென்றதன் காலம், அழித்தொழிப்புப் போராட்டங்களின் முடிவு, அரசியல் போராட்டங்களும் அமைப்பாக்குவதன் தேவைகளும் முன்வைக்கப்பட்ட அக்காலகட்டங்களில் நடைபெற்ற பல்வேறு நிகழ்வுகளை மலர்களாக்கி மாலையாகக் கோர்த்து சூட்டியிருக்கும் படம்தான் விடுதலை – பாகம் 2.
இயக்குனர் வெற்றிமாறன் உள்ளிட்ட குழுவினர் சிறந்த படைப்பையே படைத்திருக்கின்றனர்.
இது ஒரு அரசியல் பிரச்சாரப் படம் என்போருக்கு எனது பதில், ஆம் இது ஒரு அரசியல் பிரச்சாரப் படம்தான். இப்படத்திற்கு இளைஞர்களால் கிடைத்திருக்கும் வரவேற்பு என்பது, சிவப்பு அரசியலின் அவசியத்தையும் தேவையையும் உணர முடிவதற்கான ஒரு வாய்ப்பு. இப்படம் மூலமாக கம்யூனிசம் என்றால் என்ன என்பதை கற்றுக்கொள்ளலாம் என்பதல்ல, கம்யூனிசம் என்றால் இட்லி கதையை சொல்லிக்கொண்டிருக்கும் நபர்களுக்கு மத்தியில் கம்யூனிசத்தின் மீது – சிவப்பின் மீது நம்பிக்கையை ஒரு துளியேனும் இளைஞர்கள் மத்தியில் இப்படம் உருவாக்கும் என்பதால் வரவேற்க வேண்டிய அவசியம் உள்ளது.
1960-களில் தமிழ்நாட்டில் எழுந்த நக்சல்பாரிகளின் எழுச்சி, 1980-களில் மீண்டும் உருவான எழுச்சி, அதற்குப் பிந்தைய தமிழ்த்தேச விடுதலைப் போராட்டங்கள், அதன் தேவைகள் – அவசியங்கள் அப்போது நடைபெற்ற பல உண்மை நிகழ்வுகளை நம் கண்முன்னே கொண்டுவந்து உயிர்ப்புடன் ஒரு திரைப்படத்தினை படைத்து இருக்கிறார்.
“இப்போதைய பாசிசச் சூழலுக்கு நீ என்ன செய்யப்போகிறாய்?” என்ற கேள்வியை இப்படத்தைப் பார்த்து இரசித்து வியந்தோதும் இரசிகனிடம் நாம் கண்டிப்பாக கேட்கலாம்.
புலவர் கலிய பெருமாளின் அரசியல் என்ன? இறுதிக்கட்டத்தில் அவரின் செயல்பாடுகள் என்ன? தோழர் தமிழரசனின் வாழ்வு, இறுதிக்கட்டத்தில் அவரின் அரசியலும் வழிமுறையும் தொடர்பான பிரச்சினைகள் குறித்தெல்லாம் இப்படத்தினை ஒட்டிப் பேசத் தேவையில்லை. ஏனென்றால் அது பேசுபொருளும் அல்ல.
மக்களுக்காக வாழ்ந்தவர்களைப் பற்றிய நேர்மறையான அம்சங்களை நாம் கற்றுக்கொள்வதற்கு எப்போதும் முயல வேண்டும். அதே நேரத்தில் தவறுகள் மீதும் நம்முடைய விமர்சனங்கள் கறாராக இருத்தல் வேண்டும்.
இப்படத்தைப் பொறுத்தவரை நாயகத்தனமான அணுகுமுறை இன்றி நிகழ்காலத்தில் உள்ள பிரச்சினைகளையும் குழைத்து ஒவ்வொரு பாத்திரங்களும் அதற்கேற்றபடி செதுக்கப்பட்டிருக்கின்றன. அதில் இயக்குனர் உள்ளிட்ட பலரின் உழைப்பு மின்னுகின்றது.
குமரேசன் என்ற வள்ளலார் பக்தனான போலீசு கான்ஸ்டபிள், தன்னுடைய அம்மாவுக்கு கடிதம் எழுதும்போது தொடங்கும் படம் அக்கடிதம் முடிவடையும் போது முடிவுறுகிறது. புதிய ஜனநாயகம் இதழ் படிக்கும் வரை நான் கூட நக்சல்பாரிகள் என்றாலே பயங்கரவாதிகள் என்று ஆளும் வர்க்கம் உருவாக்கிய கருத்தை ஏற்று, அக்கருத்தை பரப்பிவந்தேன். இந்நிகழ்வுகள் எல்லாம் சூரியின் தடுமாற்றங்களைக் காணும் போது வந்து போயின.
மக்களுக்காகப் போராடுவோரை போலீசு எப்படி நடத்தும் என்பதற்கு எடுத்துக்காட்டாய் படம் தொடங்குகிறது. பெருமாள் வாத்தியாரை அடித்து சித்திரவதைச்செய்து அம்மணமாக்கி அதற்குப்பிறகு கேள்விகள் கேட்கும் டி.எஸ்.பி-யிடம் எவ்வித குற்ற உணர்ச்சியும் இருப்பதில்லை. “அய்யோ நம்மை அம்மணமாக்கிவிட்டார்களே” என்று கூனிக்குறுகாமல் எத்தனை அடி வாங்கினாலும் உறுதியாக தன்னுடைய அரசியலை எடுத்தியம்பும் பெருமாள் வாத்தியார். டி.எஸ்.பி-யும் பெருமாள் வாத்தியாரும் அவரவர் வர்க்கத்தின் பிரதிநிதிகள்.
ஒக்கிப் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவச்சென்ற எங்களை போலீசு பெரும்படையுடன் கைது செய்ததும் தோழர்களையெல்லாம் ஜட்டியுடன் மண்டைக்காடு போலீசு நிலைய லாக்கப்பில் வைத்து அடித்ததும் என்னை நிர்வாணமாக பல மணி நேரம் வைத்திருந்து போலீசு விசாரணை செய்ததும் நினைவிலாடின.
பெருமாள் வாத்தியார் என்ற ஆசிரியர் அனைவருக்கும் கல்வியினால் மாற்றத்தை கொண்டு வரமுடியும் என்று எண்ணும் ஒருவர். அவ்வூரைச் சேர்ந்த கருப்பனிடம் “நீயும் வந்து படி” என்று கூற அவரோ “எல்லோரையும் ஒன்றாக படிக்க வைப்பீர்களா?” என்று சாதித் தீண்டாமையைக் கேள்வி கேட்டு கடந்து செல்கிறார். பண்ணையாரால் பாலியல் வன்கொடுமைக்கு அழைத்துச் செல்லப்பட்ட தனது மனைவியை மீட்கச் செல்லும் கருப்பன், பண்ணையாரை கொலை செய்ய, கருப்பனை பாதுகாத்து பத்திரமாக போலீசில் சரணடைய வைக்க முயல்கிறார் வாத்தியார். போலீசும் பண்ணையாரும் இணைந்து கருப்பனையும் அவரது மனைவியையும் கொல்கிறார்கள். அவர்களுக்கு ஆதரவாக இருந்த வாத்தியாரை குற்றுயிராக விட்டுவிடுகிறார்கள்.
இந்த அரசின் மீது வைத்திருக்கும் நம்பிக்கை தகர்ந்த பின்னர், ஒருவர் பற்றிச் செல்ல செங்கொடியைத் தவிர வேறேது உண்டு!
வாத்தியாரைக் காப்பாற்றும் கம்யூனிசத் தலைவர் ஒருவர் அவரை அரசியல் படுத்துகிறார், தன் வாழ்வின் அனுபவங்கள் ஊடாக கம்யூனிஸ்ட் கட்சியின் முழுநேர ஊழியராகிறார் வாத்தியார். சங்கம் அமைப்பதற்காக சர்க்கரை ஆலைக்கு வேலைக்குச் செல்கிறார், அமைப்பாளராகிறார். அந்த ஆலை முதலாளியின் மகள் மகாலட்சுமியும் கம்யூனிஸ்டு என்பதால் அவர் தன் குடும்பத்திற்கெதிராகவும் உழைக்கும் வர்க்கத்துடனும் நிற்கிறார். உழைக்கும் மக்கள் மீதான தோழமை இருவரையும் இல்லற வாழ்வுக்குள் நுழைக்கிறது. கம்யூனிச இயக்க வரலாற்றில் பெண்களுடைய மகத்தான தியாகத்தின் – உறுதியின் சில துளிகளை மகாலட்சுமியிடம் காணலாம்.
சாரு மஜூம்தாரின் கருத்துகள் வாத்தியாரிடம் ஆதிக்கம் செலுத்தும் வேளையில், அவரின் அரசியல் ஆசான் கே.கே. சர்க்கரை ஆலை முதலாளியால் கொல்லப்பட, அதற்கெதிராக அழித்தொழிப்பை தொடங்குகிறார்கள். தேசிய இன விடுதலையை முன்வைத்து மக்களை அணிதிரட்ட வேண்டும் என்ற கருத்துக்கும் வருகிறார்கள். அழித்தொழிப்புப் பாதையில் உள்ள தவறுகளை, மருதையாற்றுப் பாலம் வெடிகுண்டு விபத்து உள்ளிட்ட நிகழ்வுகள் மூலம் பெருமாள் வாத்தியாரும் மற்றவர்களும் அனுபவப்பூர்வமாக உணர்கிறார்கள். தனிமனித சாகச செயல்பாடுகள் மக்களை அணிதிரட்டுவதற்கு தடையாக உள்ளதையும் அதை ஆளும் வர்க்கம் பயன்படுத்திக்கொள்வதையும் உணர்கிறார்கள். இச்சூழலில்தான் இவரை அழிக்க அரசின் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. பெருமாள் வாத்தியார் உள்ளிட்டோர் கொல்லப்படுகின்றனர்.
அரசு யாருக்காக இருக்கிறது? மக்களால் தெரிவு செய்யப்படும் அமைச்சர்களின் மதிப்பு என்ன? அரசு என்ற உறுப்பில் உள்ள அதிகாரிகள்தான் அனைத்தையும் தீர்மானிக்கிறார்கள் என்பவையெல்லாம் வழிநெடுக தூவப்பட்டிருக்கின்றன, திகட்டாமல்.
“அமைச்சராக வரும் இளவரசு, ஏன்யா குழந்தைய சுட்டீங்க? பொதுமக்கள சித்திரவதை செஞ்சீங்க? நான் தலைவர் கிட்ட போறேன், நாளைக்கு தேர்தல்ன்னா நான்தான் மக்கள்கிட்ட போகணும்” என்று சண்டையிடுவதும் அரசு ஆளும் வர்க்கத்தின் கருவி, அதிகாரிகள்தான் அதன் பொறிகள் என்பதை அறிந்து பொட்டிப்பாம்பாய் அடங்குவதும் சிறப்பு.
பெருமாள் வாத்தியார் கொல்லப்பட்டப் பின்னரும், அவர் காணாமல் போய்விட்டார் என்று அப்பிரச்சினையை நீர்த்துப் போகச் செய்வதும் மக்களை சித்திரவதை செய்த தகவல்களை பத்திரிகையில் வரவிடாமல் தடுப்பது குறித்து ஐ.ஏ.எஸ்.-ஐ.பி.எஸ். அதிகாரிகள் விவாதிப்பதும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. ஒருவிரல் புரட்சி, ”சிங்கம்” பூச்சாண்டிகளுக்கு மத்தியில் தமிழ் சினிமாவில் இப்போதைய காலக்கட்டத்திற்கு மிகவும் தேவையானதாக இத்திரைப்படம் உள்ளது. நான் படித்து கலெக்டராகி மக்களுக்கு சேவை செய்வேன் என்பதெல்லாம் சாத்தியமே இல்லை; இந்த அரசே மக்களுக்கு எதிரான அமைப்புதான் என்பதை இக்காட்சிகள் மூலம் யாரொருவருக்கும் நாம் எளிதாக புரியவைக்க முடியும்.
பெருமாள் வாத்தியாரைப் பிடிக்கப்போய் தவறுதலாகக் குண்டு கான்ஸ்டபிள் மீது பாய, கான்ஸ்டபிளை கொன்று தன் தவறை மறைக்கும் சேத்தனின் வாயாலேயே பெருமாள் வாத்தியார் இவ்வுண்மையை வெளிக்கொணர்கிறார். இவ்வுண்மை தெரிந்த மேலும் மூவரை சேத்தன் சுட்டுக்கொன்று விடுதலைப்படை கணக்கில் சேர்ப்பதெல்லாம் போலீசும் இராணுவமும் இப்போதுவரை காஷ்மீர் முதல் ஆந்திரா வரை செய்து கொண்டிருப்பவைதான்.
இப்பிரச்சினையை ஒடுக்கப்பட்ட சாதியைச் சேர்ந்தவரைக் கொண்டு கையாள வேண்டும் என்று ஐ.ஏ.எஸ்–ஐ.பி.எஸ். அதிகாரிகள் நரித்தனமாக யோசித்து அமுதனை தெரிவு செய்கிறார்கள். நிராயுதபாணியான பெருமாள் வாத்தியார் உள்ளிட்டோரைக் கொல்லும் அமுதன், சக போலீசுக்காரர்களைக் கொன்ற இன்ஸ்பெக்டர் சேத்தனை மரியாதையாக அழைத்துச்செல்கிறார். அதுதான் போலீசு. அது ஒரு காலத்திலும் மக்களுக்காக, உண்மைக்காக நின்றதும் இல்லை, இனி நிற்கப்போவதும் இல்லை.
அரசு என்பது பாதிக்கப்பட்ட – சுரண்டப்பட்டோரிடமிருந்து சுரண்டுவோரை காப்பாற்றுவதற்குத்தானே. போலீசு அதிகாரியாகி மக்களுக்கு சேவை செய்வேன் என்பதெல்லாம் சினிமாவுக்கான வீரவசனங்கள்தான். உண்மையில் அப்படிசொன்ன பலரும் அமுதன்களாகவும் சேத்தன்களாகவுமே இருக்கின்றனர்.
அரசின் உறுப்பாக – போலீசாக இருப்பதே இம்மக்களுக்கு எதிரியாக இருப்பதுதான் என்பதை உணரும் கதாப்பாத்திரம்தான், குமரேசனாக வரும் சூரி.
வள்ளலார் பக்தரான குமரேசன் தன் காதலியைக் காப்பாற்ற பெருமாள் வாத்தியாரைக் காட்டிக்கொடுக்கிறார். கைது செய்யப்பட்ட பெருமாள் வாத்தியாரை கொண்டு செல்கையில், அவரின் கொள்கைகளைக் கேட்டுக்கொண்டே அவரை அறிவதன் ஊடாக, பொதுவுடமைக் கொள்கைகளையும் அதன் போராட்டங்களையும் புரிந்துகொள்கிறார். இதுநாள்வரை செய்த வேலைகள் எல்லாம் மக்களுக்கு எதிரானவை என்ற குற்ற உணர்ச்சி அவரை பிய்த்துத் தின்கிறது.
போலீசு என்பதே உழைக்கும் மக்களுக்கு எதிரான அமைப்பு என்பதை தனது வாழ்க்கையினூடாக விளக்கும் பெருமாள் வாத்தியாரின் சொற்கள் குமரேசனையும் இன்னும் சில போலீசுக்காரர்களையும் நிலைகுலைய வைக்கின்றன. ஒரு எஸ்.ஐ. பெருமாள் வாத்தியாரை சுட மறுத்து ஒழுங்கு நடவடிக்கைக்கு தயாராகிறார். போலீசு ஜீப் ஓட்டும் குமரேசனோ இனியும் இந்த போலீசு வேலையில் இருக்க முடியாதென, கொலைகாரப் போலீசுகளை ஜீப்புடன் மலை முகட்டில் விட்டுச் செல்கிறார்.
குமரேசனின் கடிதம் இவ்வாறு நிறைவுறுகின்றது, “அம்மா இனிமேல் நான் கடிதம் போடவில்லையென்றால் நான் இறந்துவிட்டேன் என நினைத்துக்கொள்”.
அரசு என்ற,போலீசு என்ற மக்கள் விரோத நிறுவனம் உண்மைக்காக – மக்களுக்காக இருப்போரை எதுவும் செய்யும் என்பது குமரேசன் தன் தாய்க்கு சொல்வது மட்டுமல்ல!
***
படத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி என்ற வாக்கியம் வரும் இடங்களும் அரிவாள் சுத்தியல் சின்னம் வரும் இடங்களும் தணிக்கைத்துறையால் மறைக்கப்பட்டுள்ளன.
காஷ்மீர் ஃபைல்ஸ், தி காஷ்மீர் ஸ்டோரி போன்ற இந்து மதவெறி பாசிஸ்டுகளின் திரைப்படங்களுக்கு சொர்க்கபுரியான தணிக்கைத்துறை கம்யூனிஸ்ட் அடையாளத்தை அழிக்க முயல்கின்றது. எவ்வளவு மறைத்தாலும் நெருப்பை யாராலும் பொட்டலம் கட்டமுடியாது. யார் நினைத்தாலும் கம்யூனிஸ்டுகளின் தியாகத்தை வரலாற்றை யாராலும் நெருங்கக்கூட முடியாது. “உழுபவனுக்கு நிலம். உழைப்பவனுக்கு அதிகாரம்” என்பதைச் சாதித்தவர்களும் கம்யூனிஸ்டுகள்தான். இன்றைக்கு உலக மக்கள் பெற்ற உரிமைகள் அனைத்தும் கம்யூனிஸ்டுகளின் போராட்டத்தின் விளைவால் பெற்றவையே.
இன்று இந்தியாவில் அரங்கேறிவரும் பாசிசம் என்பது ஒரு சித்தாந்தம். அதை வீழ்த்த வேண்டும் என்றால் மாற்று சித்தாந்தம் தேவை. அதற்கு தகுதியான ஒரே சித்தாந்தம் கம்யூனிசம் மட்டுமே.
விடுதலை பாகம் 2-இல் சில குறைபாடுகள் இருந்தாலும் அவை அப்படம் கூற வந்த நேர்மையை – துணிச்சலை எங்கேயும் குறைக்கப் போவதில்லை.
பெருமாள் வாத்தியாரும் குமரேசன்களும் ஏன் அமுதன்களும் கூட நம்மிலிருந்துதான் உருவாகிறார்கள். உண்மையை உணரும்போது தன்னலம் தவிர்ப்பவர்கள் குமரேசனாகவும் பெருமாள் வாத்தியாராகவும் மகாலட்சுமியாகவும் மாறுகின்றனர். தன்னலம் காப்பவர் அமுதன்களாக மாறுகின்றனர்.
நெருக்கடிகளே ஒருவரை உயர்த்தும் அல்லது தாழ்த்தும்.
விடுதலைப்படையின் ஆதரவாளரான போலீசு ஏட்டு ஒருவர், சித்திரவதைக்கு உள்ளாகும்போதும் இரகசியம் காப்பார். துரோகி ஒருவன் காட்டிக்கொடுப்பான். ஏனோ தெரியவில்லை, இக்காட்சிகள் என் மனக்கண்ணில் பல துரோகிகளை கொண்டு வந்து காட்டின.
இறுதிக்கட்ட காட்சியில், வாத்தியார் டி.ஏ-விடம், “மக்களை அமைப்பாக்க வேண்டும். அதுவே முக்கியம்” என்பார். ஆம், மக்களை அமைப்பாக்குவது முன் எப்போதையும் விட இப்போது மிக முக்கியமான பணி. அதைத் தவிர்ப்பதை விட ஆபத்தான பணியும் வேறேதும் இல்லை.
ஆம்,
விடுதலையின் பாதை சிவப்பு!
வேறேதுமில்லை…
தோழர் மருது,
செய்தித்தொடர்பாளர்,
மக்கள் அதிகாரம்,
தமிழ்நாடு – புதுவை
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram