தேவர் கண்ட நல்லூர் ஊராட்சியை திருவாரூர் நகராட்சியுடன் இணைக்கும் திட்டத்தைக் கைவிடக் கோரி ஜனவரி 20 அன்று ஊர் பொதுமக்கள் சார்பாக கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுக்கப்பட்டது.
இந்த மனு கொடுக்கும் நிகழ்வுக்கு தலைமையாக உச்சிமேடு லெனின் மாவட்ட இணை ஒருங்கிணைப்பாளர் மக்கள் அதிகாரம். தோழர் குரு, தோழர் அஜித், கண்ணன், சரவணன் மற்றும் கிராம பெண்களும் கலந்து கொண்டார்கள்.
”திருவாரூர் நகராட்சியுடன் தேவர் கண்ட நல்லூர் ஊராட்சி கிராமத்தை இணைத்தால் அங்கு இருக்கும் மக்கள் தங்கள் வாழ்வாதாரமான விவசாயத்தை இழப்பார்கள். இதனால், விவசாய நிலங்கள் அழிக்கப்பட்டு பிளாட்டாக மாறிவிடும். குறைந்த ஊதியத்திற்காக 100 நாள் வேலை கிராமம் முழுவதும் செய்து கொண்டிருக்கிறார்கள்; அதுவும் அழிக்கப்பட்டு விடும்” என்று மனுவில் கூறப்பட்டுள்ளது.
மேலும் ”நகராட்சியுடன் இணைப்பதனால் மக்கள் மீது அதிக வரிகள் சுமத்தப்படும் என்ற சூழல் உள்ளது. ஏற்கெனவே நகராட்சியுடன் இணைக்கப்பட்ட பகுதிகள் மோசமான நிலையில் தான் இருக்கிறது. குறிப்பாக திருவாரூர் அருகே உள்ள நகராட்சியைச் சேர்ந்த அழகிரி காலனி போன்ற பகுதிகளில் இன்னும் பாதாளச் சாக்கடை கூட அமைக்கவில்லை. இருக்கக் கூடிய நகராட்சியை மேம்படுத்தாமல் அதை விட்டுவிட்டு இந்த அரசாங்கமானது மேலும் இருக்கக்கூடிய கிராமங்களை நகராட்சியுடன் இணைக்கும் திட்டத்தைச் செய்கிறது. ஏதோ ஒரு குறைந்தபட்சமாக விவசாயத்தை செய்து கொண்டிருக்கக் கூடிய கிராமங்களை அழித்துவிட்டு அதையும் நகராட்சியுடன் இணைக்கும் வேலையைத் தான் செய்து கொண்டிருக்கிறது. ஆகையால், இந்த ஊராட்சியை நகராட்சியுடன் இணைக்கும் திட்டத்தைக் கைவிட வேண்டும்” என்றும் அதில் தெரிவிக்கப்பட்டது.
அடுத்த கட்டமாக ஊர் பொதுமக்கள் சாலை மறியல் செய்வதற்குத் தயாராக உள்ளார்கள். மாவட்ட நிர்வாகமானது தங்களது கோரிக்கையை ஏற்று தேவர் கண்ட நல்லூர் ஊராட்சியை நகராட்சியுடன் இணைக்கும் முடிவைக் கைவிடாவிட்டால் அடுத்தடுத்து காத்திருப்பு போராட்டம் உள்ளிருப்பு போராட்டம் நடத்துவது என்று மக்கள் சார்பாக முடிவு செய்யப்பட்டுள்ளது.
தோழர் லெனின்,
மக்கள் அதிகாரம்,
மாவட்ட இணை ஒருங்கிணைப்பாளர்,
திருவாரூர்.

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram