கடந்த ஆண்டு ஜனவரி 24 அன்று ஒன்றிய பாஜக அரசு ஒன்றிய அரசு ஊழியர்களுக்கு மட்டும் என்ற வகையில் புதியதொரு ஓய்வூதிய திட்டத்தை ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டம் (UPS – Unified Pension Scheme) என்கிற பெயரில் அறிவித்தது. இந்தத் திட்டம் அரசு ஊழியர்களுக்கு மட்டும் என்று அறிவித்திருப்பதன் மூலம் ஆசிரியர்களைத் தனியே பிரித்து அரசு ஊழியர்கள் – ஆசிரியர்கள் ஒற்றுமையில் பிளவு ஏற்படுத்தி பிரித்தாளும் சூழ்ச்சி செய்வதே அரசின் முதல் நோக்கம்.
பாசிச மோடி அரசின் இந்த நடவடிக்கையை எதிர்த்து ஒன்றிய அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் சங்கங்கள் அனைத்தும் இப்புதிய ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்தை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும், தாங்கள் நீண்ட காலமாகக் கோரி வருவது 2002 ஆம் ஆண்டிற்கு முன்பு இருந்துவந்த பழைய ஓய்வூதிய திட்டமே என்றும் கூட்டாக அறிவித்திருக்கின்றன.
ஊழியர் சங்கங்களின் எதிர்ப்புகளுக்குச் சிறிதும் மதிப்பளிக்காத மோடி அரசு இப்பொழுது, பத்து நாட்களுக்கு முன் ஏற்கெனவே அறிவித்தவாறே புதிய ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டம் எவ்வித மாற்றமும் இல்லாமல் ஒன்றிய அரசு ஊழியர்களுக்கு மட்டும் வரும் ஏப்ரல் மாதம் முதல் தேதியிலிருந்து நடைமுறைக்கு வரும் என்று அறிவித்துள்ளது. புதிய ஓய்வூதியத் திட்டத்தில் ஆசிரியர்கள் சேர்க்கப்படவில்லை என்பது முக்கியமானதாகும்.
ஆசிரியர்களுக்கென்று தனி ஓய்வூதிய திட்டம் பின்னர் அறிவிக்கப்படலாம். அது பற்றி ஆசிரியர் சங்கங்கள் தனியே கையாள வேண்டி வரலாம். இவ்வாறு இன்று அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் சங்கம் என்று இருப்பனவற்றைப் பிரித்து ஆசிரியர்கள் தனியாகவும் அரசு ஊழியர்கள் தனியாகவும் சங்கம் அமைத்துக் கொள்ளவும் தங்கள் கோரிக்கைகளுக்காக தனித்தனியே போராடவும் நிர்ப்பந்திக்கும் சதி செயலில் அரசு ஈடுபட்டுள்ளது.
இப்பொழுது இருந்து வருகின்ற ஓய்வூதிய திட்டத்தில் என்ன சிக்கல்?
நிலவுகின்ற ஓய்வூதிய திட்டத்தை ஊழியர் சங்கங்கள் ஏன் எதிர்கின்றன?
சங்கங்கள் ஏன் இதற்கு முன்னர் அமலிலிருந்த பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் கேட்கின்றன?
இப்போது ஒன்றிய அரசு அவ்விரண்டு திட்டங்களையும் நிராகரித்துவிட்டு புதிய ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்தைக் கொண்டு வருவதற்கான அவசியம் என்ன?
இவற்றைப் புரிந்து கொள்ள இந்த மூன்று ஓய்வூதிய திட்டங்களில் உள்ள வேறுபாடுகளை அவற்றின் உட்கூறுகளை ஒப்பிட்டுப் புரிந்து கொள்வது அவசியமாகும். குறிப்பாக அரசு முன்வைக்கும் புதிய ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் ஊழியர் சங்கங்கள் கேட்கும் பழைய ஓய்வூதிய திட்டத்திற்கும் இடையேயான சாதக பாதகங்களை ஒப்பிட்டுப் பரிசீலிப்பது நமக்குத் தெளிவான புரிதலைக் கொடுக்கோடும்.
படிக்க: ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம்: அரசு ஊழியர்களின் சேமிப்பை களவாடும் மோசடி
சேமநலநிதி சேமிப்பு நிதி:
முதல் அம்சமாக, பழைய திட்டத்தில் ஓய்வூதிய பலனைப் பெற ஒரு ஊழியர் பணிக்காலம் முழுவதும் மாதம்தோறும் 10 சதவீத ஊதியத்தைக் கட்டாய சேமிப்பாக சேமநல நிதியில் (Provident Fund) சேமிக்க வேண்டும். இந்தத் தொகை ஊழியர் ஓய்வு பெறும் நாளில் அவருடைய சேமிப்பாகக் கருதி மொத்தத் தொகையும் உரிய வட்டியுடன் அவருக்கு வழங்கப்படும்.
புதிய திட்டத்தின் படியும் மாதம்தோறும் 10 சதவீதத் தொகை பிடித்தம் செய்யப்படும் இத்துடன் இந்த சேமிப்பில் அரசு தன் பங்குக்கு ஒரு 10 சதவீத தொகையையும் சேர்க்கும். ஆனால் இறுதியில் அந்த 20 சதவீதத் தொகையையும் ஓய்வூதியம் வழங்குவதற்காகவென்று அரசே எடுத்துக் கொண்டு விடும். ஓய்வு பெறும் நாளில் ஊழியர் வெறுங்கையுடன் வீட்டுக்குச் செல்ல வேண்டி நேரும், அது ஊழியர்களின் கோபத்தைத் தூண்டக்கூடும் என்பதனால் பணப்பலன் என்ற ஒரு புதிய அம்சம் சேர்க்கப்பட்டிருக்கின்றது. அதாவது ஒரு ஊழியர் 25 ஆண்டுக் காலம் பணிபுரிந்திருந்தால் அவருக்கு ஐந்து மாத சம்பளம் பண முடிப்பாக வழங்கப்படும் என்கிறது புதிய திட்டம். (அதாவது ஒரு ஆண்டுக் கால சேவைக்கு 6 நாள் சம்பளம் என்கிற விகிதத்தில்). புதிய – பழைய ஓய்வூதியத் திட்டங்களுக்கு இடையே இது மிக முக்கியமான வேறுபாடாகும்.
பழைய திட்டத்தின் படி ஒன்றிய அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் 20 ஆண்டுகள் பணி நிறைவு செய்தால் அவர்கள் முழுமையான ஓய்வூதியத்திற்குத் தகுதி பெறுவர்.
புதிய திட்டத்தில் ஒரு ஊழியர் 25 ஆண்டுகள் பணி நிறைவு செய்தால் தான் முழுமையான ஓய்வூதியத்திற்குத் தகுதி பெறுவார். முழு ஓய்வூதியம் பெறப் பணிக் காலம் 5 ஆண்டுகள் உயர்த்தப்பட்டு இருக்கிறது.
பழைய திட்டத்தின் படி அவர்கள் பணிக்காலத்தில் கடைசி மாதம் வாங்கிய அடிப்படைச் சம்பளத்தில் 50 சதவீதம் மற்றும் முழுமையான பஞ்சப்படியை (50% of Basic Pay + 100% of DA) ஓய்வூதியமாகப் பெறுவர்.
புதிய திட்டம் ஓய்வூதியம் என்பது ஊழியரின் கடைசி 12 மாத சம்பளத்தின் சராசரியில் 50 சதவீதம் என்கிறது. அதாவது சராசரி என்கிற பொழுது 12 மாதத்தில் ஊழியர் பெறுகின்ற பதவி உயர்வு மற்றும் வருடாந்திர ஊதிய உயர்வு ஆகியவற்றினால் கிடைக்கின்ற பலன்கள் குறைக்கப்படுகின்றன.
ஊதிய கமிஷன் பரிந்துரைகள்:
பழைய திட்டத்தின் படி ஊதிய கமிஷன்களின் புதிய பரிந்துரைகளின் போது ஓய்வூதியர்களுக்கான ஊதியமும் குறிப்பிட்ட விகிதத்தில் உயர்த்தப்படும்.
புதிய திட்டத்தில் ஊதிய கமிஷன்களுக்கும் ஓய்வூதியர்களுக்கும் எவ்விதத் தொடர்புமில்லை. ஒரு முறை முடிவு செய்யப்பட்ட ஓய்வூதியமே வாழ்நாள் முழுமைக்கும் தொடரும். இதனால் விலைவாசி உயர்வுகளால் ஒரு கட்டத்தில் ஓய்வூதியம் செல்லாக்காசாகிவிடும் ஆபத்து நிச்சயமாக உள்ளது.
குடும்ப ஓய்வூதியம்:
பழைய திட்டத்தின்படி அவர் ஓய்வு பெற்ற நாளிலிருந்து 10 ஆண்டுக் காலம் முடிய ஒருவேளை ஊழியர் இறந்து போனாலும் துணைவருக்கும் முழு ஓய்வூதியத் தொகை வழங்கப்படும். அந்த 10 ஆண்டுகளுக்குப் பிறகு தான் ஊழியரின் கடைசி மாத ஊதியத்தில் 50% என்பது 30% ஆகக் குறைக்கப்பட்டு அத்தொகை துணைவருக்கு அவரது வாழ்நாள் முழுவதும் வழங்கப்படும்.
இப்போது புதிய திட்டம் துணைவருக்கான ஓய்வூதியம் ஊழியர் பெற்று வந்த ஓய்வூதியத்தில் 60% என்கிறது. அயோக்கியத்தனமான முறையில் 60%, 30% என்கிற எண்களைக் காட்டி புதிய திட்டத்தில் துணைவரின் ஓய்வூதியம் அதிகம் என்பது போலப் பேசுகின்றது. ஆனால் ஊழியர் கடைசி மாதத்தில் பெற்ற ஊதியத்தில் 30 சதவிகிதம் என்பது வேறு: ஊழியர் பெற்ற ஓய்வூதியத்தில் 60% என்பது வேறு என்று பிரித்துப் பார்த்துக் கணக்கிட்டால் புதிய திட்டத்தில் எந்த உயர்வுமே இல்லை.
ஆனால் ஊழியர் இறந்த அடுத்த நாளே துணைவருக்கான ஓய்வூதியமாகக் குறைக்கப்பட்டு விடும். ஓய்வுக்குப் பின் 10 ஆண்டுகள் என்ற கணக்கீடு முறை ரத்து செய்யப்பட்டு விட்டது.
அடுத்து ஊழியரின் துணைவரும் இறந்து போனால் துணைவர் பெற்ற அதே ஓய்வூதியத் தொகை அவருடைய வாரிசுகள், மகனாக இருந்தால் 25 வயது வரையிலும், மகளாக இருந்தால் திருமணம் ஆகின்ற வரையிலும் வழங்கப்படும். மகள் திருமணமாகி கணவனை இழந்த விதவையாக இருந்தால் அவரது வாழ்நாள் முழுமைக்கும் அல்லது மறுமணம் வரையிலும் ஓய்வூதியம் வழங்கப்படும்.
ஒருவேளை மகனோ மகளோ மாற்றுத்திறனாளியாக இருந்தால் அவரது வாழ்நாள் முழுமைக்கும் ஓய்வூதியம் வழங்கப்படும்.
ஊழியர் திருமணமாகாதவராக இருந்தால் ஓய்வூதியம் அவரது பெற்றோர்களுக்கு அதாவது தந்தைக்கு அவர் இறந்தபின் தாய்க்கு வழங்கப்படும்.
புதிய திட்டம் ஊழியரின் குடும்பம் என்பது அவருடைய துணைவர் மட்டுமே என்று வரையறை செய்துள்ளது. துணைவர் தவிர பிற வாரிசு உறவுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டு விட்டன. மணமாகாத ஊழியரின் பெற்றோருக்கும் கூட ஓய்வூதியம் கிடையாது. இது, இன்றைய பாஜக ஆட்சியாளர்கள் எவ்வளவு குரூரமான மனசாட்சியே இல்லாத பாசிஸ்டுகள் என்பதை உணர்த்துகின்றதல்லவா?
2002 ஆம் ஆண்டுக்கு முந்தைய, பிந்திய ஓய்வூதிய திட்டங்கள்:
பழைய ஓய்வூதிய திட்டம் (OPS – Old Pension Scheme) எனப்படுவது ஒன்றிய அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 1950 முதல் 2004 வரை நடைமுறையிலிருந்து வந்ததாகும் ஓய்வூதிய திட்டமாகும். 2002 ஆம் ஆண்டில் அப்போதைய பாஜக ஆட்சியில் வாஜ்பாயி பிரதமராக இருந்த பொழுது திடீரென்று ஒரு நாள் பழைய ஓய்வூதியத் திட்டம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. பிறகு 2004 ஜனவரியிலிருந்து இந்த அறிவிப்பு நடைமுறைக்கு வந்தது. பழைய மற்றும் புதிய ஊழியர்களைப் பிரித்தாளும் சூழ்ச்சியுடன், அப்போது வரையிலும் அரசு ஊழியர்களாகப் பணி செய்து வரும் அனைவருக்கும் பழைய ஓய்வூதிய திட்டம் அப்படியே தொடரும் என்றும், இனி வேலைக்குச் சேரும் புதிய ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு மட்டும் ஓய்வூதிய திட்டம் ரத்து செய்யப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டது. உடனேயே 2004க்கு பின்னர் அரசுப் பணியில் சேர்ந்த ஊழியர்களுக்கென்று தேசிய ஓய்வூதிய திட்டம் (NPS – National Pension System) என்கிற தனித் திட்டத்தை அறிவித்தது.
படிக்க: பழைய ஓய்வூதிய திட்டம் கோரி அரசு ஊழியர்கள் போராட்டம்
தேசிய ஓய்வூதிய திட்டம் (National Pension System) எனப்படும் இடைப்பட்ட ஓய்வூதிய திட்டம்:
புதியத் திட்டம் பல பாதக அம்சங்களைக் கொண்டிருந்தது வெளிப்படையாகத் தெரிந்தது.
தேசிய ஓய்வூதிய திட்டத்தில் அரசு ஊழியர் ஒருவர் ஓய்வூதியம் பெற மாதாந்திர ஊதியத்தில் 10% தொகையை சேமநல நிதியில் சேமிக்க வேண்டும். அரசு தனது சார்பில் இணையான இன்னொரு 10 சதவீத தொகையை அதே சேமிப்பில் சேர்க்கும். அரசு மற்றும் தனியார் நிதி நிறுவனங்களில் முதலீடு செய்து பெருக்கும். ஊழியர் ஓய்வு பெறும் நாளில் இந்த சேமிப்புத் தொகையிலிருந்து 60% தொகை ஊழியருக்கு மொத்தமாக வழங்கப்படும் மீதமுள்ள 40% தொகையை ஊழியர் விரும்பும் அரசு மற்றும் தனியார் நிதி நிறுவனங்களில் முதலீடு செய்து அதிலிருந்து வரும் வட்டித் தொகையை ஓய்வூதியமாக மாதம்தோறும் வழங்கும். இதுவே 2004 ஆம் ஆண்டுக்குப் பிறகு அரசுப் பணியில் சேர்ந்து இருக்கின்ற ஊழியர்களுக்கான தேசிய ஓய்வூதிய திட்டம் ஆகும்.
இத்திட்டம் அரசு ஊழியர்களுக்கு எவ்வளவு பாதகமானது என்பது வெளிப்படையாகத் தெரிந்திருந்த போதிலும், தமது அப்போதைய உறுப்பினர்களுக்குப் பாதகம் இல்லை என்ற வகையிலும் நாம் குறிப்பிட்டுச் சொல்ல முடியாத வேறு பிற காரணங்களினாலும், அன்றைய சங்கத் தலைமைகள் இவ்வறிவிப்பை எதிர்த்துப் போராடி முறியடிக்காமல் அரசு ஊழியர்களுக்குத் துரோகம் செய்தன. பின்னாட்களில் பழைய ஊழியர்கள் ஓய்வு பெற்று வெளியேற புதிய ஊழியர்கள் சங்கங்களில் கணிசமாக அணி சேர்ந்த பொழுது சங்கத் தலைமைகள் 2004க்கு பிறகு பணியில் சேர்ந்த புதிய ஊழியர்களுக்கும் அதே பழைய ஓய்வூதிய திட்டமே வேண்டும் என்று கோரிக்கை வைத்துப் போராடத் தொடங்கின. ஆனாலும் அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் சங்கங்கள் முன்வைத்த கோரிக்கைகளை அடுத்தடுத்து வந்த எந்த ஆட்சியும் கண்டு கொள்ளவே இல்லை.
ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டம் கொண்டுவரக் காரணம் என்ன?
ஊழியர் சங்கங்களின் போராட்டத்துக்குப் பணிந்து விட்டதா ஒன்றிய அரசு?
அப்படி எல்லாம் எதுவும் இல்லை. இதை இப்படி வேண்டுமானால் சொல்லலாம். முன்னர் வாஜ்பாயி அரசு குப்புறத் தள்ளியது என்றால் இன்றைய மோடி அரசு குழி பறிக்கிறது.
2004இல் ஒன்றிய பாஜக அரசு கொண்டுவந்த தேசிய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்தியதோடு ஒரு சில மாநிலங்கள் தவிர பிற எல்லா மாநில அரசுகளும் கூட மாநில அரசு ஊழியர்களுக்கு அந்தக் கொள்கையையே பின்பற்றி வருகின்றன. 2004க்குப் பிறகு புதிதாகச் சேர்ந்த அரசு ஊழியர்கள் ஒன்றியத்திலும் மாநிலங்களிலும் இதுவரை சிறு பகுதியினர் மட்டுமே ஓய்வு பெற்றிருக்கிறார்கள். வரும் இரண்டு ஆண்டுகளில் தான் பெரும்பான்மை ஊழியர்கள் ஓய்வு பெற இருக்கிறார்கள்.
அவர்களின் ஓய்வூதிய கணக்குகளில் மாதம்தோறும் 20% ஊதியம் சேமநல நிதிக் கணக்கில் சேமிப்பாக வைக்கப்பட்டிருக்கிறது. இன்றைய அரசு ஊழியர்களின் சம்பளத்தில் 20% என்பது பல ஆயிரங்கள் இருக்கும் என்பதை எவரும் கணக்கிட்டு அறிய முடியும். அவ்வகையில் ஒன்றிய அரசு இருப்பில் இன்று இருக்கும் சேமிப்புத் தொகை என்பது சற்றேறக்குறைய ஏழு லட்சம் கோடி ஆகும். இன்னும் பிற மாநில அரசு ஊழியர்களையும் சேர்த்தால் மொத்தம் 12 லட்சம் கோடிக்கும் மேல் வருகிறது என்கிறார்கள் ஊழியர் சங்கத் தலைவர்கள்.
இன்றைய நிலையில் ஊழியர்கள் ஓய்வு பெற்றால் அந்த சேமிப்பிலிருந்து 60% தொகையை அவர்களுக்கு மொத்தமாகக் கொடுத்தாக வேண்டும்.
இதை விரும்பாத ஒன்றிய அரசு கையிருப்பில் இருக்கும் 12 லட்சம் கோடி தொகையை கார்ப்பரேட் முதலாளிகளின் நலனுக்கு வாரிக் கொடுக்கும் நோக்கத்தில் தான் அரசு ஊழியர்களுக்கு மாதம்தோறும் ஒரு தொகையை ஓய்வூதியமாகக் கொடுத்து விடுவது என்று முடிவு செய்திருக்கிறது.
எனவே இன்றைய தேசிய ஓய்வூதிய திட்டத்தில் இருக்கின்ற அரசு ஊழியர்கள் அனைவரும் மார்ச் 31ஆம் தேதிக்குள் புதிய ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்தில் இணைந்து கொள்ளலாம். உயிருள்ள காலம் வரையில் நல்ல தொகையை ஓய்வூதியமாக வாங்கலாம் என்று அரசு ஊழியர்களின் மேல் அக்கறை காட்டி பேசுகிறது. இன்று உடனே மொத்தத் தொகை வேண்டுமா? வாழ்நாள் முழுவதும் ஓய்வூதியம் வேண்டுமா நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள் என்று ஆசை காட்டி அழைக்கிறது.
மாறிக்கொண்டவர்கள் மீண்டும் பழைய திட்டத்துக்குத் திரும்ப முடியாது என்பதையும் தெளிவுபடுத்தி விட்டது இதுவா அதுவா நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள் என்று மிகவும் ஜனநாயகமாகப் பேசுகிறது.
இதுவே புதிய ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டம் உருவானதற்குக் காரணமாகும். செட்டியார் ஆற்றைக் கட்டி இரைக்கிறார் என்றால் சும்மா ஒன்றும் இல்லை. தமது ஊழியர்களின் மீது அக்கறை போன்ற தோற்றம் காட்ட முற்படுகின்றது மோடி அரசு. ஆனால் இவற்றை உடைத்துப் பேசி அரசின் நோக்கத்தை அம்பலப்படுத்த இன்னமும் தயக்கம் காட்டுகின்றன சங்கத் தலைமைகள், ”எங்களுக்குத் தேவை பழைய ஓய்வூதிய திட்டம்” என்று மட்டுமே பேசுகின்றன.
தங்களுக்குள் ஒன்று படாமல் பெயரளவே எதிர்ப்பு காட்டும் அரசு ஊழியர் – ஆசிரியர் சங்கங்களின் இயலாமையையும் ஒற்றுமையின்மையையும் பயன்படுத்திக் கொண்டு பாசிச பாஜக அரசு திட்டமிட்டு அரசு ஊழியர்களின் பணத்தைக் கொள்ளையடிக்கப் புறப்பட்டிருக்கிறது. எனவே அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் கோரிக்கைக்கு இந்திய மக்கள் அனைவரும் ஆதரவளித்து அரசு ஊழியர்கள் ஆசிரியர்களின் கோரிக்கையான பழைய ஓய்வூதிய திட்டத்தைப் பெற்றுக் கொடுக்கப் போராட வேண்டும்.
ஆதி
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram