அன்பார்ந்த வாசகர்களே,
இலங்கையில் 2024 நவம்பர் 14-ஆம் தேதி நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் அனுர குமார திசநாயக தலைமையிலான தேசிய மக்கள் சக்தி (NPP) கூட்டணி அபார வெற்றிபெற்று 159 இடங்களை கைப்பற்றி மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் ஆட்சியமைத்தது. அதற்கு முன்னர் 2024 செப்டம்பர் மாதத்தில் நடந்த இலங்கையின் அதிபர் தேர்தலில், அனுர குமார திசநாயக வெற்றிபெற்றார்.
இதனையொட்டி, இலங்கையில் அதிபர் தேர்தல் நடைபெறுவதற்கு முன்னர், 2024 ஏப்ரல் மாத புதிய ஜனநாயகம் இதழில், “அமெரிக்க-இந்திய சதுரங்க ஆட்டத்தின் கீழ் இலங்கை” என்ற தலைப்பிலான கட்டுரையும், செப்டம்பர் மாதத்தில் அதிபர் தேர்தல் முடிவுகள் வெளியானபோது புதிய ஜனநாயகம் சார்பாக வினவு தளத்தில், “இலங்கை அதிபர் தேர்தல் முடிவு: வளர்ச்சி முகமூடியில் மற்றுமொரு பாசிச சக்தி!” என்ற தலைப்பிலான கட்டுரையும் வெளியிடப்பட்டது.
இக்கட்டுரைகளில் இலங்கையில் ஆட்சியைப் பிடித்துள்ள அனுர குமார திசநாயக தலைமையிலான ஜே.வி.பி. கட்சியை (Janatha Vimukthi Peramuna) சிங்கள இனவெறி, பௌத்த மதவெறி, பாசிச இயக்கம் என்று எழுதியிருந்தோம். இவ்வாறு வரையறுத்தது தவறாகும். உண்மையில், ஜே.வி.பி. கட்சியானது, சிங்கள தேசியவாதத்தை உயர்த்திப் பிடிக்கும் முதலாளித்துவக் கட்சியாகவே உள்ளது.
இலங்கையில், ஆளும் வர்க்கக் கட்சிகள் மக்களால் வெறுத்து ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், மீண்டும் ஒரு மக்கள் எழுச்சி நடைபெறாமல் தடுக்கவும், தமது சுரண்டலையும் ஆதிக்கத்தையும் தக்கவைத்துக் கொள்ளவும் இலங்கையின் ஆளும் வர்க்கங்கள் பாசிபிச (pacifism) சதியில் ஈடுபட்டுள்ளன. அதாவது, மக்கள் கொந்தளிப்புக்கு வடிகால் வெட்டி, சில ஜனநாயக – சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம் தற்போதைய கட்டமைப்பைக் கட்டிக்காக்க முயற்சிக்கின்றன.
ஆளும் வர்க்கத்தின் இந்தப் பாசிபிச சதிக்கு, இடதுசாரி தோற்றம் கொண்ட அனுரா தலைமையிலான ஜே.வி.பி. கட்சியும் அதன் தேசிய மக்கள் சக்தி கூட்டணியும் உடந்தையாக இருந்து, இலங்கையின் தற்போதைய கட்டமைப்பைப் பாதுகாக்கின்றன. ஆட்சியிலுள்ள ஜே.வி.பி. தலைமையிலான மக்கள் சக்தி கூட்டணி மேற்கொண்டுவரும் ஜனரஞ்சக நடவடிக்கைகள் அனைத்தும், ஒரு சில ஜனநாயக – சீர்திருத்த அம்சங்களைக் கொண்டிருந்தாலும், அவை மக்களின் போராட்டங்களைத் திசைதிருப்பி சாந்தப்படுத்தும் வர்க்க சமரசத் தன்மை கொண்டவையே ஆகும்.
இலங்கையின் யதார்த்த நிலைமைகளை ஆழமாகப் பரிசீலிக்காமல், மேற்குறிப்பிட்ட இரண்டு கட்டுரைகளில் ஜே.வி.பி-யை பாசிச இயக்கம் என்று வரையறுத்தது தவறு என்பதை உணர்கிறோம். இத்தவறுக்காக சுயவிமர்சனம் ஏற்கிறோம். இனி இதுபோன்ற அரசியல் தவறுகள் ஏற்படாமல் இருப்பதற்கு உறுதியேற்கிறோம்.
ஆசிரியர் குழு, புதிய ஜனநாயகம்
(புதிய ஜனநாயகம் – ஜனவரி 2025 இதழ்)
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram