முருகனை மீட்போம்! கருப்பனைக் காப்போம்! | துண்டறிக்கை

நாட்டின் பல்வேறு பகுதிகளில் மதக்கலவரங்களையும் இனக்கலவரங்களையும் தூண்டிவிட்டு, இஸ்லாமியர்கள் மற்றும் பூர்வகுடி மக்களின் சொத்துக்களையும் தொழில்களையும் சேட்டுகள், மார்வாடிகள் உள்ளிட்ட வடநாட்டு ஹிந்திகாரர்களுக்கு தாரை வார்ப்பதையே வழக்கமாகக் கொண்டிருக்கிறது ஆர்.எஸ்.எஸ் - இந்து முன்னணி கும்பல்.

ஜல்லிக்கட்டையும் அரிட்டாபட்டியையும் மீட்டோம்!

முருகனை மீட்போம்!
கருப்பனைக் காப்போம்!

இந்து முன்னணி-பி.ஜே.பி கும்பலை விரட்டியடிப்போம்!

அன்பார்ந்த பெரியோர்களே!

குன்றிருக்கும் இடமெல்லாம் குமரன் இருப்பான் என்று தமிழ்க்கடவுள் முருகனைக் குறிப்பிடுவார்கள். அதற்கேற்ப மதுரையைச் சுற்றியுள்ள பல்வேறு மலைகளில் முருகன் கோவிலும் அதனுடன் கருப்பு, அய்யனார், அம்மன் கோவில்களும் அமைந்துள்ளன. அதிலும், திருப்பரங்குன்றம், பிரான்மலை, கீழவளவு, மேலவளவு என மதுரையைச் சுற்றியுள்ள பல மலைகளில் குலதெய்வ கோவில்களும், தர்கா வழிபாடும், சமண பள்ளிகளும் இணைந்தே இருக்கின்றன. கோவிலில் வழிபடும் மக்கள் தர்காவிலும் வழிபடுகின்றனர். இவை மதுரை மக்களின் ஒற்றுமையின், மதநல்லிணக்கத்தின் அடையாளம். இதுதான் நமது பெருமையின் அடையாளம்.

அமைதியான முறையில் வாழ்ந்து வரும் நம்மிடையே கலவரத்தை ஏற்படுத்த தொடர்ச்சியாக முயற்சித்து வருகிறது இந்து முன்னணி – ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி மதவெறி கும்பல்.

சமீபத்தில், அழகர் மலை, தேன்கூடு மலை, இருளாயி மலை, ஆண்டிமலை, சோமகிரி கருப்பு மலை, கழிஞ்ச மலை போன்ற அரிட்டாபட்டியைச் சுற்றிலும் உள்ள பல்வேறு மலைகளை ஆக்கிரமித்து அதிலுள்ள குலதெய்வ வழிபாடுகளை அழித்து கனிம வளங்களை கொள்ளையடிப்பதற்காக பல்வேறு சதித்தனத்தை அரங்கேற்றியது இந்தக் கும்பல்தான்.

மலைகளையும், அதிலுள்ள தெய்வங்களையும் குலதெய்வங்களாக வழிபட்டுவரும் மேலூர் சுற்றுவட்டார மக்கள் கொந்தளித்து டங்ஸ்டனுக்கு எதிராக போராடியதில் அரிட்டாபட்டியின் மலைகள் மீட்கப்பட்டன.

இப்போது திருப்பரங்குன்றத்தைக் கைப்பற்றும் நோக்கில் இந்து முன்னணி கும்பல், மலையில் ஆடு கோழி பலியிடக்கூடாது என்று பிரச்சனையைக் கிளப்பிவருகிறது. மலையில் தீபம் ஏற்ற வேண்டும் என்று கலவரம் உருவாக்க முயற்சித்து தோற்றுப்போன இக்கும்பல் மலையின் மீதுள்ள தர்காவை அகற்ற வேண்டும் என்கிறது.

குல தெய்வங்களுக்கு ஆடு, கோழி பலிகொடுப்பது நமது மரபு

திருப்பரங்குன்றம் மலையடிவாரத்தில் உள்ள கருப்பு கோயில், நாகம்மாள் கோயில், வெயிலுக்குந்த அம்மன் கோயில்களிலும், பெருமாளுக்கு புகழ்பெற்ற அழகர்கோவில் மலையடிவாரத்திலுள்ள பதினெட்டாம் படி கருப்பு கோயிலிலும் ஆடு, கோழிகள் பலியிடுவது வழக்கமான மரபுகளில் ஒன்றாகும். இவ்வளவு ஏன், இளம் ஆட்டு இரத்தத்துடன் திணையரிசியை பிசைந்து தமிழ்க்கடவுளான முருகனுக்கு படையலிடும் வழக்கம் இருந்ததாக, கி.பி-7ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கடைச்சங்க நூலான திருமுருகாற்றுப்படையிலும் குறிப்பிடப்பட்டுள்ளது. பத்துப்பாட்டின் முதன்மைப் பாடலான திருமுருகாற்றுப்படையானது, மதுரையைச் சேர்ந்த புலவர் நக்கீரரால் பாடப்பட்டதாகும். இதில் சிறப்பு என்னவென்றால், இந்தத் திருப்பரங்குன்றம் மலையிலேயே நக்கீரரை நினைவு கூர்வதற்கான இடமும் அமைந்துள்ளது.

தமிழ் மக்களால் பெரிதும் போற்றி வணங்கப்பட்ட, வேடர்குல தலைவனான முருகனை சுப்பிரமணியனாக மாற்றி நம்மிடம் இருந்து பிரித்த பார்ப்பன கும்பல்தான், ஆர்.எஸ்.எஸ், இந்து முன்னணி, பா.ஜ.க என்ற பெயரில் இன்று ஆடு, கோழி பலியிடும் நமது மரபையே மொத்தமாக தடைசெய்ய முயற்சிக்கிறது.

மதுரையை ஹிந்தி மார்வாடி-சேட்டுகளுக்கு தாரைவார்க்கும் சதி!

திருப்பரங்குன்றம் மலையில் ஆடு, கோழி பலியிட்டு வணங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பிப்ரவரி மாதம் 4-ஆம் தேதி மதுரையில் ஆர்ப்பாட்டம் நடத்திய பி.ஜே.பி – இந்து முன்னணி கும்பல், திருப்பரங்குன்றத்தை அயோத்தியாக்குவோம் என்று வெறிபிடித்து கொக்கரித்தது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மதுரை மக்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்ததால் திருப்பூர், கோவை போன்ற பல மாவட்டங்களில் உள்ள ஹிந்திக்காரர்களை அணிதிரட்டி வந்திருந்தது.

இதன் பின்னணி என்ன?

ஏற்கெனவே, மதுரை மீனாட்சியம்மன் கோவில் சன்னதியை சுற்றியுள்ள மதுரையின் முக்கிய கடைவீதிகளின் வணிக வளாகங்கள் அனைத்தையும் ஹிந்தி மார்வாடிகள், சேட்டுகள் ஆக்கிரமித்துள்ளனர். அவர்களின் பணபலத்தையும் உதவியையும் வைத்துக் கொண்டு, அவ்வப்போது வெளியூர் ஆட்களைக்கொண்டுவந்து கலவரங்களை ஏற்படுத்த முயற்சித்து வருகின்றது இந்து முன்னணி – பி.ஜே.பி கும்பல். இப்போது இந்த கும்பல் திருப்பரங்குன்றத்தை இலக்கு வைத்துள்ளது.

இந்துக்களின் பாதுகாவலர்கள் என்று நாடகமாடிக்கொண்டு, மதக்கலவரங்களை நடத்தி உள்ளூர் வணிகர்களை அப்புறப்படுத்திவிட்டு, ஹிந்தி மார்வாடி-சேட்டுகளுக்கு தமிழ்நாட்டைக் கூறுபோட்டுக் கொடுப்பதுதான் இந்த கும்பலின் நோக்கம்.

தமிழ்நாட்டில் மட்டுமல்ல, ஜி.எஸ்.டி, புதிய கல்விக் கொள்கை, நீட்… போன்ற சட்டதிட்டங்கள் மூலமாக குஜராத்தி, மார்வாடி, பார்ப்பன, பனியா முதலாளிகளான அம்பானி, அதானி, அகர்வால் கார்ப்பரேட் கும்பலுக்கு நமது நாட்டின் மொத்தத் தொழில்களையும் வளங்களையும் கூறுபோட்டுக் கொடுக்கும் வேலையைத்தான் மோடி-அமித்ஷா கும்பல் செய்து வருகிறது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் மதக்கலவரங்களையும் இனக்கலவரங்களையும் தூண்டிவிட்டு, இஸ்லாமியர்கள் மற்றும் பூர்வகுடி மக்களின் சொத்துக்களையும் தொழில்களையும் சேட்டுகள், மார்வாடிகள் உள்ளிட்ட வடநாட்டு ஹிந்திகாரர்களுக்கு தாரை வார்ப்பதையே வழக்கமாகக் கொண்டிருக்கிறது ஆர்.எஸ்.எஸ் – இந்து முன்னணி கும்பல்.

கலவரக் கும்பலுக்குத் துணைபோகும் அரசும், அதிகாரிகளும்!

சிக்கந்தர் தர்காவில் ஆடு கோழி பலியிடுவதற்கு தடை விதித்து பிரச்சினையை தொடங்கி வைத்ததே திருப்பரங்குன்றம் இன்ஸ்பெக்டர் மதுரை வீரன்தான். மேலும், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராடிய இஸ்லாமிய மக்களைத் தடுத்து, அமைதிப்பேச்சுவார்த்தை என்று நாடகமாடி, ஆடு கோழி பலியிடும் தங்களுடைய மரபை நிலைநாட்டுவதற்காக தர்கா நிர்வாகிகள் கொடுத்த ஆதாரங்களைப் பரிசீலிக்க மறுத்து, ஆடு, கோழி பலியிடக்கூடாது என்று உத்தரவிட்டது திருமங்கலம் ஆர்.டி.ஓ கண்ணன்தான்.

இந்து முன்னணி கும்பல் கலவரத்தைத் தூண்டும் நோக்கத்தில் ஆர்ப்பாட்டம் செய்வதற்கு மதுரை உயர்நீதிமன்றத்தில் முறையிட்ட போது, அதற்கு ஒப்புதல் தெரிவித்தது தமிழ்நாடு அரசின் தலைமைக் குற்றவியல் வழக்கறிஞர்தான்.

மக்களிடம் சென்று தங்களது சதித்திட்டத்தை அரங்கேற்ற முடியாமல் தோற்றுப்போன இக்கும்பல், அரசு உறுப்புகளில் ஊடுருவியுள்ள ஆர்.எஸ்.எஸ் உளவாளிகளை வைத்துக் கொண்டு தங்களது நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்ள முயற்சிக்கிறது. திராவிட மாடல், பாசிச எதிர்ப்பு என்று சொல்லிக் கொள்ளும் திமுக அரசாங்கமோ இதனைத் தடுக்காமல் வேடிக்கை பார்க்கிறது.

முருகனை மீட்போம்! கருப்பனைக் காப்போம்!

இன்று, திருப்பரங்குன்றத்தை இந்து முன்னணி கும்பல் ஆக்கிரமித்தால், நாளை, பாண்டி, பதினெட்டாம் படி கருப்பு, அய்யனார், அம்மன் போன்ற நமது குலதெய்வ வழிபாட்டிலும் ஆடு, கோழிகளை பலியிடக்கூடாது என்று உத்தரவிடும். மீறி, பலியிட்டு வணங்கினால், கலவரங்களை நடத்தி கொலை, பாலியல் வன்கொடுமை, சூறையாடல் உள்ளிட்ட கொலைபாதக செயல்களில் ஈடுபடும். எனவே, நமது தெய்வங்கள், நமது மரபு, நமது வழிபாட்டு உரிமையையும் நமது வாழ்வாதாரங்களையும் நாமே காப்பாற்றிக்கொள்ள வேண்டும்.

ஜல்லிக்கட்டு மரபை மீட்டெடுக்க கிளர்ந்தெழுந்த அலங்காநல்லூர் மக்களும், டங்ஸ்டனிடமிருந்து அரிட்டாபட்டியைக் காப்பாற்றிய, அரிட்டாபட்டி-மேலூர் சுற்றுவட்டார மக்களும்தான் நமக்கு வழிகாட்டிகள். ஆட்சியாளர்களையும், நீதிமன்றத்தையும் பின்வாங்கவைத்த ஜல்லிக்கட்டு, அரிட்டாபட்டி போராட்டங்கள் தான் நமது மரபு.

அந்த வழியில், தமிழ்நாட்டின் மதநல்லிணக்க மரபை மீட்டெடுப்போம்!

தமிழ்க்கடவுளான முருகனையும் கருப்பனையும் காப்போம்!

ஆடு, கோழி பலியிடும் மக்களின் வழிபாட்டு முறைகளை நிலைநாட்டுவோம்!

சாதி, மதம் கடந்து ஒன்றிணைவோம்!


மக்கள் அதிகாரம்
தமிழ்நாடு – புதுவை
9962366321

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram