காசாவில் உறைபனியால் குழந்தைகள் மரணம் – தொடரும் இஸ்ரேலின் படுகொலைகள்!

எகிப்தின் ரஃபா எல்லையில் ஆயிரக்கணக்கான நடமாடும் வீடுகள் வைக்கப்பட்டிருக்கின்றன. இஸ்ரேலின் அனுமதி மறுப்பால் காசாவிற்குள் கொண்டு செல்ல முடியாத நிலைமை உள்ளது.

காசாவில் கடுமையான குளிரின் காரணமாக ஆறு குழந்தைகள் இறந்துள்ளதாக மருத்துவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பிப்ரவரி 25 அன்று காசா நகரத்தில் உள்ள ஃப்ரெண்ட்ஸ் ஆஃப் தி பேஷண்ட் சாரிட்டபிள் மருத்துவமனையின் (Friends of the Patient Charitable Hospital) மருத்துவ இயக்குநர் டாக்டர் சயீத் சலா (Saeed Salah), பிறந்து ஒன்று முதல் இரண்டு நாட்களே ஆன மூன்று குழந்தைகள் உயிரிழந்துள்ளதாகத் தெரிவித்தார். அன்று காலையே மேலும் இரண்டு குழந்தைகளும் உயிரிழந்துள்ளன. தெற்கு காசாவில் உள்ள கான் யூனிஸில் ஆறாவது மரணம் பதிவாகியுள்ளது.

“பிறந்த குழந்தைகளைக் குளிரிலிருந்து பாதுகாக்கின்ற எந்த வசதியும் அவர்களின் குடும்பத்தினருக்கு இல்லை” என அல் ஜசீராவின் ஹானி மஹ்மூத் தெரிவிக்கிறார்.

இந்த சம்பவங்களை “இஸ்ரேலின் கிரிமினல் கொள்கைகளின் விளைவு” என ஹமாஸ் குற்றம் சாட்டியுள்ளது. ஹமாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், காசா பகுதிக்குள் தங்குமிடம் மற்றும் பிற அத்தியாவசியப் பொருட்கள் கொண்டு வருவதைச் சர்வதேச சமூகம் தலையிட்டு உறுதி செய்ய வேண்டும்” என்று கூறப்பட்டுள்ளது.

காசாவிற்குள் தற்காலிக வீடுகள் எடுத்து வரப்படுவதைக் கொலைகார இஸ்ரேல் தடுத்து வருவதால், குழந்தைகள் உயிரிழப்பு ஏற்பட்டிருக்கிறது. எகிப்தின் ரஃபா எல்லையில் ஆயிரக்கணக்கான நடமாடும் வீடுகள் வைக்கப்பட்டிருக்கின்றன. இஸ்ரேலின் அனுமதி மறுப்பால் காசாவிற்குள் கொண்டு செல்ல முடியாத நிலைமை உள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின் கூற்றுப்படி, டிசம்பரில் புதிதாகப் பிறந்த எட்டு குழந்தைகளும், கொடூரமான குளிரின் பக்கவிளைவுகளால் மேலும் 74 குழந்தைகளும் இறந்துள்ளனர்.


படிக்க: காசா மீதான போர் நிறுத்தம்: காசா மீண்டது, பாலஸ்தீனமும் மீளும்!


இஸ்ரேலால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள மேற்குக் கரைப் பகுதியில் இஸ்ரேலின் தாக்குதல்கள் அதிகரித்து வருவது குறித்து உலக சுகாதார நிறுவனம் (WHO) எச்சரித்துள்ளது. அங்கு சுகாதார பாதுகாப்பு கட்டமைப்புகளின் மீதும் தாக்குதல் நடத்தப்படுவதாக WHO தெரிவித்துள்ளது.

ஏப்ரல் மற்றும் டிசம்பர் 2024க்கு இடைப்பட்ட காலத்தில் மட்டும், மேற்குக் கரையில் உள்ள சுகாதார கட்டமைப்புகளின் மீது 694 தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக WHO ஆவணப்படுத்தியுள்ளது. அங்கு இராணுவ நடவடிக்கைகளும் தீவிரமடைந்துள்ளன.

துல்கரேம் (Tulkarem) அகதிகள் முகாமில் உள்ளவர்களை, இஸ்ரேலிய ராணுவம் வலுக்கட்டாயமாக வெளியேற்றியுள்ளது. அங்குள்ள 100 அடுக்குமாடிக் குடியிருப்புகளை இடித்துத் தள்ளியுள்ளது. பல வீடுகளுக்கு தீ வைத்து எரித்துள்ளது.

ஜெனின் நகராட்சியில் நடத்தப்பட்டு வரும் தாக்குதலால் 20,000க்கும் மேற்பட்ட மக்கள் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டுள்ளனர். அங்கும் அகதிகள் முகாமில் உள்ள வீடுகளை இடித்துத் தள்ளியுள்ளது இஸ்ரேல் இராணுவம்.

போர்நிறுத்த ஒப்பந்தத்தை எல்லாம் தூக்கியெறிந்துவிட்டு, பாலஸ்தீன மக்களைத் தொடர்ந்து படுகொலை செய்து கொண்டிருக்கிறது, இனவெறி பிடித்த நெதன்யாகு அரசு. உலக ரவுடி அமெரிக்கா, ”ஏன் போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறுகிறாய்” என்று இஸ்ரேலைக் கண்டிக்கவில்லை. நாம் அதை எதிர்பார்க்கவும் அவசியமில்லை.

பாலஸ்தீன மக்களின் விடுதலை உணர்வைக் குலைத்து விடலாம் என்று இந்த ஓநாய்கள் நினைப்பது ஒருநாளும் நடக்காது. சர்வதேச சமூகமும், உழைக்கும் மக்களும், போராட்டக் களத்தில் நிற்கும் பாலஸ்தீன மக்களுக்கு என்றும் துணை நிற்பார்கள். அமெரிக்க, இஸ்ரேல் ரவுடி அரசுகளைப் போர்க்குற்றவாளிகளாக உலகின் முன் நிறுத்தியே தீர வேண்டும்.


அய்யனார்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க