அன்பார்ந்த உழைக்கின்ற மக்களே,
“2026 சட்டமன்றத் தேர்தல்: வேண்டும் ஜனநாயகம்” என்ற தலைப்பில் புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி ஆக்ஸில்ஸ் இந்தியா கிளை சங்கம் மற்றும் மக்கள் அதிகாரம் அமைப்புகள் இணைந்து மார்ச் 3 அன்று காஞ்சிபுரம் காவலன் கேட் பகுதியில் தெருமுனை கூட்டத்தையும் புதிய ஜனநாயகம் 40 ஆம் ஆண்டு தொடக்க விழா நிகழ்ச்சியையும் நடத்தின.
இக்கூட்டம் மக்கள் அதிகாரத்தின் காஞ்சிபுரம் மாவட்ட இணை செயலாளர் தோழர் சரவணன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. தலைமை உரையில் ”ஜனநாயகம் என்ற போர்வையில் பாசிச பா.ஜ.க அரசு முதலாளிகளுக்குச் சேவை செய்து நாட்டையே ஒட்டுமொத்தமாக கார்ப்பரேட்டுகளிடம் அடகு வைத்திருக்கிறது, சட்டத் திருத்தம் என்ற பெயரில் பல நாசகார திட்டங்களைப் புகுத்தி நாட்டை கொள்ளையடிப்பதற்கும் இயற்கை வளங்களைக் கொள்ளையடிப்பதற்கும் தோதான சட்டங்கள் நிறைவேற்றப்படுகின்றன. தமிழகத்தில் பரந்தூர் விமான நிலையம் மேல்மா சிப்காட் போன்ற திட்டங்களால் உழைக்கின்ற மக்கள் பாதிப்படைகிறார்கள். சாம்சங் தொழிலாளர்கள் சட்ட ரீதியான உரிமை பறிக்கப்பட்டுள்ளது. இவை அனைத்தும் ஜனநாயகம் என்ற பெயரில் நடைபெறுகிறது. எனவே இவற்றை முறியடிக்க வேண்டும் ஜனநாயகம்” என்று உரையாற்றினார்.
மும்மொழி கொள்கையின் தீமைகளைப் பற்றி உரையாற்றிய சமூக செயல்பாட்டாளர் மைத்திரி அன்பு அவர்கள் ”மொழி, பண்பாடு, கலாச்சாரம் இலக்கியம் என மக்களின் பல்வேறு கூறுகளை தமிழ் உள்ளடக்கியது. இந்தியைத் திணிப்பதற்காக தேசியக் கல்விக் கொள்கை வழியாக மும்மொழி என்ற பெயரில் நம் தாய் மொழியை அழிக்கப் பார்க்கிறார்கள். இவர்களின் இக்கொள்கையால் மூன்றாம் வகுப்பு ஐந்தாம் வகுப்புக்குப் பொதுத்தேர்வு நடத்துவது மாணவர்களைப் பெரிதும் பாதிக்கும். இவற்றை முறியடிக்க வேண்டும்” என்றார்.
திராவிட தமிழர் பேரவை இயக்கத்தைச் சேர்ந்த தோழர் சாரதா தேவி அவர்கள் பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமை குறித்து உரையாற்றினார். ”அனைத்து மதங்களும் பெண்களை அடிமைப்படுத்திக் கொண்டிருக்கின்றன. மத புராணங்களும், இதிகாசங்களும் பெண்கள் மீது நிகழ்த்தப்படும் வன்முறையை ஆதரிக்கின்றன. இது ஆணாதிக்கத்தின் வெளிப்பாடு இதுவே பெண்கள் மீதான வன்முறைக்கு அடிப்படை. இவற்றை உடைத்தெறிய வேண்டும்” என்றார்.
“வேண்டும் ஜனநாயகம்” என்ற தலைப்பில் உரையாற்றிய புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் ஆ.கா.சிவா அவர்கள் ”சிறப்புப் பொருளாதார மண்டலத்தில் பணி செய்யக்கூடிய தொழிலாளர்களுக்குச் சுதந்திரம் இல்லை; ஜனநாயகம் இல்லை; தொழிற்சங்கம் தொடங்க அனுமதி இல்லை. புதிய தொழிலாளர் சட்டத் திருத்தம் நடைமுறைப்படுத்தப்பட்டு பதினாறு மணி நேரம் வரை வேலை வாங்குகிறார்கள். தொழிலாளர் உரிமைகள் மறுக்கப்படுகின்றன. சாம்சங் ஆலையில் இன்றும் போராட்டம் நீடிக்கிறது. காஞ்சிபுரத்தைச் சுற்றி உள்ள பகுதிகளில் பரந்தூர், மேல்மா சிப்காட் என சாதாரண உழைக்கும் மக்களின் வாழ்வாதாரங்கள் பறிக்கப்படுகிறது. அதே நேரத்தில் கார்ப்பரேட்டுகள் கொள்ளையடிப்பதற்கு வழிகள் திறந்து விடப்படுகின்றது. பெரும்பான்மை உழைக்கும் மக்களின் மீதான இந்த அநீதி அடக்குமுறைக்கு எதிராகப் பெருந்திரளான மக்கள் அணிதிரண்டு போராடுவதன் மூலம் மட்டுமே மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தையும் ஜனநாயகத்தையும் நிலைநாட்டிக்கொள்ள முடியும். இந்தப் போராட்டத்தின் தொடர்ச்சியாக பாசிச எதிர்ப்பு ஜனநாயக குடியரசு என்ற மாற்று அரசமைப்பினை நிறுவிக் கொள்ள முடியும்” என்று சிறப்புரையாற்றினார்.
திராவிட விடுதலை இயக்கத்தின் தோழர் ரவி பாரதி அவர்கள் புதிய ஜனநாயகம் 40-ஆம் ஆண்டு பற்றி உரையாற்றினார். புரட்சிகர அமைப்புக்கு பத்திரிகை மிகவும் முக்கியமான தேவை. புதிய ஜனநாயகம் இதழில் இதுவரை விளம்பரங்களே வெளியானதில்லை. லாப நோக்கமில்லை. நெருக்கடியான காலகட்டங்களில் கூட புதிய ஜனநாயகம் துணிச்சலோடு கருத்துக்களை வெளியிட்ட பத்திரிகை. பல அடக்குமுறைகள் தடைகளை உடைத்துள்ளது. முற்போக்கு கருத்துக்களை மார்க்சிய லெனினியத்தை விரும்பும் அனைவரும் அவசியம் வாசிக்க வேண்டிய பத்திரிகை என்று உரையாற்றி புதிய ஜனநாயகம் இதழுக்கு வாழ்த்து தெரிவித்தார்.
புதிய ஜனநாயகம் இதழின் 40-ஆம் ஆண்டு வரலாறு குறித்து உரையாற்றிய புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி மாநில ஒருங்கிணைப்புக் குழு தோழர் சுந்தர் அவர்கள் பத்திரிகை சுதந்திரம் நசுக்கப்பட்டு, பாசிச கும்பலுக்கு எடுபிடியான பத்திரிகைகள் வெளியாகும் காலகட்டத்திலும் மக்களுக்கான அரசியலைப் பேசி மார்க்சிய லெனினிய பார்வையில் 40 ஆண்டு காலமாக புதிய ஜனநாயகம் இதழை வெளியிட்டு வருகிறோம். பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியிலும் புதிய ஜனநாயகம் ஆசிரியர் குழு இப்பணியைச் செய்து வருகிறது. இந்த சூழ்நிலையில் முற்போக்கு அமைப்புகளுக்கும் ஜனநாயக சக்திகளுக்கும் எமது பத்திரிக்கைக்கு ஆதரவாகக் களத்தில் நிற்போருக்கும் புதிய ஜனநாயகம் இதழை வாசிக்கும் அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.
இறுதியாகப் பேசிய பாலாறு பாதுகாப்பு கூட்டு இயக்கத்தைச் சேர்ந்த தோழர் காஞ்சி அமுதன் ”ஆர். எஸ். எஸ் இயக்கத்தின் செயல்பாடுகள் மீதான விமர்சனங்களை முன் வைத்தார். மேலும் யூத இனவெறி பாசிசம் போல இந்து மத வெறி பாசிசம் இந்தியாவில் அரங்கேறி வருகிறது” என்று உரையை நிறைவு செய்தார்.
நன்றி உரையாற்றிய புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி ஆக்சில்ஸ் இந்தியா கிளையின் செயற்குழு உறுப்பினர் v.சங்கர் அவர்கள் தெருமுனை கூட்டத்தில் உரையாற்றிய பல்வேறு இயக்கத் தோழர்கள், கிளை சங்க உறுப்பினர்கள், மக்கள் அதிகாரம் தோழர்கள் மற்றும் கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.
தகவல்
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி
ஆக்ஸில்ஸ் இந்தியா கிளைச் சங்கம்,
மக்கள் அதிகாரம்.

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram