இந்த ஆண்டு ஜனவரி மாதம் முதலாக, முருகனுக்குச் சொந்தமான திருப்பரங்குன்றம் மலையை இஸ்லாமியர்கள் அபகரிக்க நினைப்பதாக, இந்து முன்னணி, ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க. கும்பல் தீவிர வெறுப்புப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது. மதுரையில் கலவரத்தை நடத்துவதற்கான முயற்சியில் இறங்கியுள்ளது.
ஆனால், உண்மையில் தமிழர் பண்பாட்டின் மீது பார்ப்பனக் கும்பல்தான் பல நூற்றாண்டுகளாக ஆதிக்கம் செலுத்த முயன்று வந்துள்ளது; தமிழர் அடையாளம் கொண்ட முருகன் வழிபாடு ஆகப் பெருமளவில் அழிக்கப்பட்டு, பார்ப்பன ஆதிக்கம்தான் நிலைநாட்டப்பட்டுள்ளது.
தமிழ்க் கடவுளும், வேடர்குலத் தலைவனுமான முருகனை இந்தப் பார்ப்பனக் கும்பல் அபகரித்துக் கொண்டது பற்றி தமிழ்நாட்டின் மக்களுக்கு எடுத்துரைப்பது நமது கடமையாகும். இது பார்ப்பன பாசிசத்திற்கு எதிரான போராட்டத்தின் அங்கமாகும்.
நாட்டார் தெய்வ வழிபாடும்
பார்ப்பன வழிபாட்டு முறையும்
ஆரியப் பார்ப்பனியத்திற்கு சொந்தமாக கடவுள்கள் இல்லை. அது, இந்தியத் துணைக் கண்டத்தில் பரவியிருந்த நாகரிக மக்களின் கடவுள்களைத் தன்வயப்படுத்திக் கொண்டதன் மூலமே பார்ப்பனிய மேலாதிக்கத்தைச் செலுத்தி வந்துள்ளது என்பதுதான் வரலாறு. அதில் ஒன்றுதான் முருகனை, சுப்பிரமணியனாக்கிய கதை!
பார்ப்பனியமானது பல்வேறு காலகட்டங்களில் நாட்டார் தெய்வ வழிபாட்டின் மீது தொடர்ந்து தாக்குதல் தொடுத்து வந்துள்ளது. சைவ, வைணவ சமயங்கள் பார்ப்பனியத்தின் தாக்குதலுக்கு ஆட்பட்டு தமது மரபை முற்றிலும் கரைத்துக் கொண்டுவிட்டன. அவை பார்ப்பனியத்தின் வாகனங்களாகிவிட்டன. ஆனால், தமிழ்நாட்டில் பெரும்பான்மை மக்களால் பின்பற்றப்படும் நாட்டார் தெய்வ வழிபாடுகளை இந்தக் கும்பலால் முற்றிலுமாகத் தன்வயப்படுத்திக் கொள்ள முடியவில்லை.

இதனால், பார்ப்பனர்களின் கடவுள் வழிபாட்டு முறைக்கும் நாட்டார் தெய்வ வழிபாட்டு முறைக்கும் நேர்மாறான பல்வேறு வேறுபாடுகள் உள்ளன.
பார்ப்பனியத்தினால் சுவீகரிக்கப்பட்ட கடவுள்கள், மனிதன் இறந்த பின் சொர்க்கத்தை அடைவதற்காகவும், அடுத்த பிறவியில் சுகம் கிடைக்க வேண்டும் என்பதற்காகவும் வணங்கப்படும் கடவுள்களாக மாற்றப்பட்டன.
இந்தக் கடவுள்களை வணங்கும் மக்களால் இவற்றைப் பூசிக்க முடியாது. பிறப்பின் அடிப்படையிலேயே உயர்வு-தாழ்வு கற்பிக்கும் கடவுள்களாக இவை உள்ளன. இந்தக் கடவுள்களுக்குப் பூசை செய்யும் உரிமை பார்ப்பனர்களுக்கு மட்டுமே உரியது. இதன்மூலம் அவர்கள் பிற மக்களிடமிருந்து மேலானவர்களாகக் கருதப்படுகின்றனர். இந்தக் கடவுள்கள் அனைத்தும் பார்ப்பன சாதிய வர்ணாசிரம முறையைப் போதிக்கின்றன. மேலும், இந்தக் கடவுள்களின் கதைகளோ, மக்களுக்கு தொண்டு செய்பவையாக இல்லாமல், இவர்களுக்குள் சண்டையிட்டுக் கொள்ளும் கதைகளாகவே அமைந்துள்ளன. பாலியல் வக்கிரங்களே இவற்றின் லீலைகளாக அமைந்துள்ளன.
மக்களிடமிருந்து தனித்து, ஏழை எளிய மக்களும் சூத்திரர்கள் என்று சொல்லப்பட்ட மக்களும் தீண்டாத வகையில், புனிதம் என்று போதிக்கப்பட்ட “கருவறை”களில் இவை வைக்கப்பட்டுள்ளன.
மாறாக, நாட்டார் தெய்வங்களோ மக்களுடன் மக்களாக வாழ்ந்து, இறந்த தமது முன்னோர்களைக் குறிக்கின்றன அல்லது அந்தந்த மக்களின் பண்பாட்டைக் கதைக்களமாகக் கொண்டுள்ளன.
இந்தத் தெய்வங்கள் மக்கள் வாழும் காலத்தில் அவர்களைக் காக்கும் பொருட்டு வணங்கப்படும் தெய்வங்களாகும். பெரும்பாலும் காவல் தெய்வங்களாகவே இவை விளங்குகின்றன. நாட்டார் தெய்வ வழிபாட்டு முறையும் மிகவும் எளிமையானது, ஜனநாயகமானது. பிறப்பின் அடிப்படையில் யாரும் பூசாரிகளாக வேண்டிய அவசியமில்லை. பூசாரிகள் என்பதாலேயே மக்களிடமிருந்து எந்த வகையிலும் உயர்ந்தவர்கள் அல்லர். தவறு செய்யும் பூசாரிகள் பூசை செய்வதில் இருந்து விலக்கப்படுவர். கோயில் பூசாரிகளுக்கென்று தனிப்பட்ட அதிகாரங்களோ, மக்களிடமிருந்து மேலான அங்கீகாரமோ இல்லை. பூசை என்பது அவர்களுக்கு வழங்கப்பட்ட பொறுப்பு மட்டுமே. பூசை முடிந்தவுடன் அனைவரும் சமம்.
குறிப்பாக, பார்ப்பனக் கடவுள்களை மக்களுக்குப் புரியாத சமஸ்கிருத மொழியில் பார்ப்பனர்கள் வணங்குவதைப் போல அன்றி, நாட்டார் தெய்வங்களை அந்தந்த மக்களின் மொழிகளிலேயே வணங்குகின்றனர். அவரவருக்குப் பிடித்தமான உணவுகளையே அத்தெய்வங்களுக்குப் படைத்து மகிழ்கின்றனர்.
இவ்வாறு பல வகைகளில் பார்ப்பனக் கடவுள்களும் நாட்டார் தெய்வங்களும் நேரெதிரான பண்பாடு, பழக்க வழக்கங்கள், மரபுகள், வழிபாட்டு முறைகளைக் கொண்டுள்ளன.
தமிழ்க்கடவுளான தாயும் மகனும்
பூர்வகுடித் தமிழ் மக்களால் வணங்கப்பட்ட தெய்வங்கள், கொற்றவை, பழையோள் உள்ளிட்ட பல தாய் தெய்வங்களும், முருகு, செவ்வேள், நடுவேள் போன்ற பல மகன் தெய்வங்களும் ஆகும்.
குறிஞ்சி நில மக்கள் விவசாயம் கண்டுபிடிக்கும் முன்பே வேலனை தங்களது தெய்வமாக வழிபட்டிருக்கின்றனர். இது தாய் வழிச் சமூகத்திலிருந்து தோன்றிய வழிபாடாகும். இன்றும் கூட, தமிழ்நாட்டில் காணப்படும் அம்மன் கோயில்களில் ஆண் துணையின்றி தனித்து நிற்கும் பெண் தெய்வங்களே உள்ளன. இந்தியாவின் பிற பகுதிகளில் ஆண் தெய்வங்களிலிருந்து தனித்து நின்று, போர்க்கோலம் எடுத்த பெண் தெய்வங்களை வழிபடும் வழக்கைக் காண முடியாது.
இந்தத் தாயும் மகனுமாகிய தெய்வங்கள் சீற்றமுடையவர்களாகவும், கோபம் கொண்டவர்களாகவும் இருக்கின்றனர். இந்தத் தெய்வங்களுக்கு, தாங்கள் வேட்டையாடும் மிருகத்தின் மாமிசத்தைப் படையலிடுவது பூர்வகுடி மக்களின் வழக்கமாக இருந்துள்ளது.
கி.பி. 2-3 ஆம் நூற்றாண்டுகளில் தமிழ்நாட்டில் சமண மதம் தழைத்தோங்கி வளர்ந்தது. சமணத்தின் அடிநாதமான “புலால் உண்ணாமை” கோட்பாட்டினால், மிருகபலி கேட்கும் – மாமிசம் படைக்கப்படும் இந்தத் தெய்வங்கள் மக்களால் பின்னுக்குத் தள்ளப்பட்டன.
சைவ, வைணவ பக்தி இயக்கங்கள்:
முருகன் வழிபாட்டில் மாற்றம்
கி.பி. 5-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில், சமண, பௌத்த மதங்களுக்கு எதிராகத் தோன்றிய சைவ, வைணவ பக்தி இயக்கங்கள் முருகன் வழிபாட்டைத் தன்வயமாக்க முற்பட்டன. தாய்வழித் தெய்வமான முருகன், தந்தை வழித் தெய்வமாக மாற்றப்பட்டார். இதற்காக பல்வேறு புராணக் கதைகள் புனையப்பட்டன.
இருப்பினும், கி.பி. 7-ஆம் நூற்றாண்டு முதல் 15-ஆம் நூற்றாண்டு வரை, வைதீக பார்ப்பன மதத்தால் தமிழ்க்கடவுள் முருகன் விலக்கப்பட்டார். பார்ப்பனியம் உச்சத்தில் இருந்த இராஜராஜன் காலத்திலும், முருகனுக்கு வைதீக அங்கீகாரம் கிடைக்கவில்லை.
அருணகிரிநாதரால் மீட்டெடுக்கப்பட்ட முருகன் வழிபாடு
14-ஆம் நூற்றாண்டில், மாலிக் காபூர் படையெடுப்புக்குப் பின்னர், சமூக வாழ்வின் நிம்மதியையும் நம்பிக்கையையும் இழந்த, வறுமையில் இருந்த தமிழ்ச் சமூகத்திற்கு புத்துயிரூட்ட, இளமையும் வீரமும் பொருந்திய முருகன் மீண்டும் அருணகிரிநாதரால் முன்னிலைக்குக் கொண்டு வரப்பட்டார்.

விசயநகர அரசின் ஆட்சியில் அதிகாரம் தெலுங்கு மொழி பேசுவோரின் கைகளில் இருந்தபோது, தமிழ்மொழியைக் காக்கும் தெய்வமாக முருகனை முன்னிறுத்தினார் அருணகிரிநாதர். தமிழ்நாடு முழுவதும் பல்வேறு ஊர்களிலும் குன்றுகளிலும் முருகனுக்கான வழிபாட்டுத் தலங்களை உருவாக்கினார். ஆனால், விசயநகர ஆட்சிக் காலத்தில், சைவ, வைணவ சமயங்கள் தங்களது தனித்தன்மையை இழந்து, பார்ப்பனிய மரபுகளுக்கு அடிமையாகிவிட்டன. அருணகிரிநாதர் மீட்டெடுத்த முருகனும் அதற்கு விதிவிலக்கல்ல.
முருகனைக் கைப்பற்றிய பார்ப்பனர்கள்
18-ஆம் நூற்றாண்டின் இறுதிக்குள், எல்லா முருகன் கோயில்களிலும் பூசை செய்யும் உரிமை, பண்டாரம் எனும் சாதியினரின் கையிலிருந்து பார்ப்பனர்களிடம் சென்றது.
தமிழ் கடவுளான முருகனுக்கு வேத மந்திரங்கள் முழங்கத் தொடங்கின; மயில் வாகனம் முன்னிலை பெற்று, ஆட்டுக்கிடா வாகனம் பின்னுக்குத் தள்ளப்பட்டது; முருகன், சுப்பிரமணியன் – கார்த்திகேயன் ஆனான்; குறமகள் வள்ளியோடு, இந்திரன் மகள் தெய்வானையும் (தேவசேனா) முருகனின் மனைவியாக்கப்பட்டாள்.
இவ்வாறு முருகன் தமிழ் மக்களிடமிருந்து பார்ப்பனர்களால் அபகரிக்கப்பட்டான். இந்தத் திருடர்கள்தான், திருப்பரங்குன்றத்தை இஸ்லாமியர்கள் அபகரிக்க நினைப்பதாக அவதூறு பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
திருப்பரங்குன்றம்: பன்முகப் பண்பாடு
முருகன் வழிபாட்டில் அறுபடை வீடுகளில் முதன்மையானதாக திருப்பரங்குன்றமே விளங்குகிறது. அதேபோல, சமணர் வரலாற்றில் குறிப்பிடப்படும் எண்பெருங்குன்றங்களிலும் திருப்பரங்குன்றமே முதன்மையாக உள்ளது. இங்கு சமணத் துறவிகள் வாழ்ந்ததற்கான அடையாளங்கள், கல்வெட்டுகள் தமிழி எழுத்துகளுடன் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
மதுரை சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள பல குன்றுகளில், வெவ்வேறு சமய வழிபாட்டுத் தலங்கள் இருப்பது போலவே திருப்பரங்குன்றத்திலும் நிறைந்துள்ளன. சைவம், வைணவம், நாட்டார் மரபுகளும், இஸ்லாம், கிறித்துவம் போன்ற சமயங்களின் கோயில்களும் கலந்து பண்பாட்டுத் தலைநகராக திருப்பரங்குன்றம் விளங்குகிறது.
மலையடிவாரத்திலும் மலைப்பகுதியிலும் முருகன் கோயில், சத்தியகிரி ஈஸ்வரர் (பரங்கிரிநாதர்) கோயில், ஆவுடைநாயகியம்மன் கோயில், உமையாண்டார் கோயில், சமண குகை தளம், மகாவீரர், பார்சுவநாதர் சிற்பங்கள், பழனியாண்டவர் கோயில், தீபத்தூண், காசி விசுவநாதர் கோயில், ஆறுமுக நயினார் கோயில், சொக்கநாதர் கோயில், பால்சுனை கண்ட சிவன் கோயில், தவ்வை கோயில், பத்திரகாளியம்மன் கோயில், பேச்சியம்மன் கோயில், இருளப்ப சாமி கோயில், வீர ஆஞ்சநேயர் கோயில், சப்த கன்னிமார் கோயில், மலையடி கருப்பு, நாகம்மாள் கோயில், வெயிலுக்கு உகந்த அம்மன், சத்தியகிரி முத்தையா கோயில், சிக்கந்தர் தர்கா ஆகிய பல்வேறு வழிபாட்டுத் தலங்கள் உள்ளன.

இவை ஆன்மீக வழிபாட்டுத் தலங்கள் என்பதையும் தாண்டி, தொல்குடி மக்களின் வாழ்வியலின் ஓர் அங்கமாக இருந்திருப்பதை அங்குள்ள கொற்றவை, சேட்டை தெய்வங்களின் கோயில்கள் உள்ளிட்ட பண்பாட்டுக் கூறுகள் மூலம் உணர முடிகிறது.
திருப்பரங்குன்றத்தில் சமணம்
சுமார் 2,200 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே சமண சமயத்தின் அறநெறிகளை பரப்பும் சமணத் துறவிகள் திருப்பரங்குன்றம் மலையில் வாழ்ந்து வந்திருக்கிறார்கள். சமண சமயம் கி.பி. 10-ஆம் நூற்றாண்டு வரை இப்பகுதியில் செல்வாக்கு பெற்றிருந்தது.
இதற்குச் சான்றாக, திருப்பரங்குன்றம் ரயில் நிலையத்தின் எதிரே உள்ள மலைக்குன்றின் மேலே காணப்படும் இயற்கைக் குகைத்தளத்தில் கி.மு. முதலாம் நூற்றாண்டைச் சேர்ந்த ஐந்து தமிழிக் கல்வெட்டுகளும் 20-க்கும் மேற்பட்ட சமணர் கற்படுக்கைகளும் காணப்படுகின்றன.
பழனியாண்டவர் கோயிலின் பின்புறம் உள்ள பாறையில், கி.பி. 10-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த மகாவீரர், பார்சுவநாதர், பாகுபலி, தரணேந்திரன் (இயக்கன்), பத்மாவதி (இயக்கி) உள்ளிட்ட இயக்கர், மாந்தர் சிற்பங்கள் வடிக்கப்பட்டுள்ளன. இவற்றை செதுக்கியவரின் பெயர், அனந்த வீர்யன் என வட்டெழுத்துக் கல்வெட்டில் பொறிக்கப்பட்டுள்ளது.
காசி விசுவநாதர் கோயிலின் எதிரே உள்ள பாறையில், பார்சுவநாதர் மற்றும் கோமதீஸ்வரர் சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன. அரிட்ட நேமிபடாரர் என்னும் சமணத் துறவி, சல்லேகனை (உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்தல்) மேற்கொண்ட தகவலை உறுதிப்படுத்தும் ஆயிரமாண்டுகளுக்கும் மேற்பட்ட நிசிதிகை கல்வெட்டு, சிக்கந்தர் தர்காவின் பின்புறத்திலுள்ள பாறையில் காணப்படுகிறது.
திருப்பரங்குன்றம்: பெயர் தொடர்பான தரவுகள்
திருப்பரங்குன்றம் மலையின் பெயரை “சிக்கந்தர் மலை” என மாற்ற முயற்சிப்பதாக இந்து முன்னணியினர் பொய்யான குற்றச்சாட்டுகளை வைக்கின்றனர். இதுவரை இஸ்லாமியர்கள் இப்படியான கோரிக்கையை விடுத்ததற்கான எந்த ஆதாரமும் இல்லை.
திருப்பரங்குன்றம் மலைக்கு பரங்குன்றம், தண்பரங்குன்றம், தென்பரங்குன்றம், திருப்பரங்கிரி, முருகன் மலை, சத்தியகிரி, கந்தமலை, கந்தமாதனம், பரமசினம், சிக்கந்தர் மலை ஆகிய பல பெயர்கள் உள்ளன.
தமிழின் தொன்மையான சங்க இலக்கியங்கள், திருப்பரங்குன்றத்தை “தண்பரங்குன்றம்” அல்லது “பரங்குன்றம்” என்றே குறிப்பிடுகின்றன. எனினும், இன்று இது “திருப்பரங்குன்றம்” என்றே பொதுவாக அழைக்கப்படுகிறது.
முருகன் – மாமிசம் விரும்பும்
குறிஞ்சி நிலத்துக் கடவுள்
மலைக்காட்டில் கிழங்கு, தேன் எடுத்து, வேட்டையாடி வாழும் குறிஞ்சி நிலத்தினரின் கடவுள் முருகன் என தொல்காப்பியம் வரையறுக்கிறது. எனவே, குறிஞ்சி நிலத்துக் கடவுளுக்குப் படைக்கப்பட்ட உணவு என்ன என்பதை அறிந்து கொள்வது அவசியம்.
முருகனோடு தொடர்புடைய விழாக்களில் ஒன்றாக, “வேலன் வெறியாட்டு” குறிப்பிடத்தக்கது.
முருகு (அணங்கு) ஆட்கொண்ட பெண்களுக்காகவே, “வேலன் வெறியாட்டு” நிகழ்த்தப்பட்டதாக சங்க இலக்கியங்கள் தெரிவிக்கின்றன. இந்த நிகழ்வில், முருகனின் பூசாரியாக “வேலன்” என்பவன் செயற்படுவான். தலைவியின் தாய், வேலனை அழைத்து வெறியாட்டை நிகழ்த்த ஏற்பாடு செய்வாள். வேலன், தினை அரிசி, மலர்களுடன் களம் அமைத்து, ஆட்டுப் பலி கொடுப்பான். பலிகொடுத்த ஆட்டின் குருதியுடன் தினை அரிசியை கலந்து வீடுகளை சுற்றிலும் தூவுவான். இதனை “வெறியாட்டு” என காமக் கண்ணியார் கூறுகிறார் (அகநானூறு 22).
இது மட்டுமின்றி நற்றிணை, ஐங்குறுநூறு, மதுரைக் காஞ்சி உள்ளிட்ட சங்க இலக்கியங்களிலும் இந்த வெறியாட்டு பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.
“சிறு தினை மலரொடு விரைஇ மறி அறுத்து…” என பழமுதிர்ச் சோலையில் முருகனை வழிபடும்போது, சிறிய தினை அரிசியை மலர்களுடன் கலந்து, ஆட்டுப் பலி கொடுத்ததை திருமுருகாற்றுப்படை விவரிக்கிறது. 12-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த “கல்லாடம்” எனும் நூலிலும், வேலன் வெறியாட்டுச் சடங்குகள் விரிவாக கூறப்பட்டுள்ளன.
திருப்பரங்குன்றத்தில் ஆடு, சேவல் பலி – பண்டைய வழக்கம்
முருகனுக்கு “ஆடு, சேவல் நேர்த்திக்கடன் கொடுக்கும் வழக்கம்” தொன்மை வாய்ந்தது. திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் நேர்த்திக் கடனாக ஆடு, சேவலை விட்டுவிட்டு வருவது இன்றும் நடைபெற்று வருவது இதற்குத் தக்க சான்றாகும். கோயில் நிர்வாகம் இதற்குச் சான்றாக இரசீது வழங்குகிறது.
மலையடிவாரத்தில் உள்ள மலையடிக் கருப்பு கோயில், நாகம்மாள் கோயில், வெயிலுக்கு உகந்த அம்மன் கோயில் போன்ற இடங்களில் ஆடு, சேவல் பலி கொடுக்கும் வழக்கம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. எனவே, திருப்பரங்குன்றம் மலைப்பகுதியில் ஆடு, சேவல் பலி கொடுக்கும் வழக்கம் புதியதல்ல. இது காலம் காலமாக அனைத்து சமூகத்தினராலும் பின்பற்றப்பட்டு வரும் ஒரு பரம்பரைச் சடங்காக இருக்கிறது.
தமிழரின் பழமையான தெய்வமான முருகன் வழிபாடானது, குறிஞ்சி நிலத்தின் காவலராகத் தொடங்கி, காலப்போக்கில் பக்தி இயக்கங்களின் வழியே திசைமாற்றப்பட்டது. பார்ப்பனியத்தின் தலையீடுகள், முருகனுக்கான தமிழர் வழிபாட்டை மாற்றி, முருகனை வேத மரபுகளின் கீழ் அமையச் செய்தன.
சங்க இலக்கியங்களால் உறுதிப்படுத்தப்படும் இறைச்சி உணவு பழக்கம், பலியிடுதல் – நேர்த்திக்கடன் ஆகியவை தமிழர் வாழ்வியல்-வழிபாட்டு அடையாளங்களாகும். திருப்பரங்குன்றம் போன்ற தலங்கள் சைவம், சமணம், இஸ்லாம் உள்ளிட்ட பன்முகப் பண்பாட்டின் அடையாளமாக, தமிழரின் பாரம்பரியமாக விளங்குகின்றன.
இந்தப் பாரம்பரியங்களை மறுக்கும் மதவெறி அரசியல் – கலவர முயற்சிகள், தமிழர் பண்பாட்டுத் தனித்தன்மையைப் பாதிக்கும் அபாயமாகும். இத்தகைய பார்ப்பன மதவெறி பாசிச சக்திகளிடம் இருந்து முருகனை மீட்பது என்பது, தமிழர் தனித்தன்மையை, மத நல்லிணக்கத்தை நிலைநாட்டுவதற்கான முயற்சியே.
(இக்கட்டுரையில் இடம்பெற்றுள்ள பல்வேறு விவரங்கள், வரலாற்று ஆய்வாளர் தொ.பரமசிவம் எழுதிய “வரலாற்று நோக்கில் முருக வழிபாடு” மற்றும் மதுரையைச் சேர்ந்த பண்பாட்டுச் சூழலியலாளர் தமிழ்தாசன் எழுதிய “திருப்பரங்குன்றம், சத்யகிரி மலையா, சிக்கந்தர் மலையா” ஆகிய கட்டுரைகளை அடிப்படையாகக் கொண்டு தொகுக்கப்பட்டவை.)
நீலன்
(புதிய ஜனநாயகம் – மார்ச் 2025 இதழ்)
(மார்ச் 2025 புதிய ஜனநாயகம் இதழில் வெளியான இக்கட்டுரையில் முருகன் நாட்டார் தெய்வமென தவறாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. அதனை திருத்தியுள்ளோம்)
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram