மகாராஷ்டிரா மாநிலம் ரத்தினகிரி மாவட்டத்தில் உள்ள ராஜாபூர் கிராமத்தில் ஹோலி பண்டிகையின்போது மசூதி ஒன்றின் மீது காவி கும்பல் தாக்குதல் நடத்தியுள்ளது. இத்தாக்குதல் தொடர்பான காணொளிகள் சமூக வலைதளங்களில் பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.
மார்ச் 31 ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு இஸ்லாமிய மக்கள் நோன்பு இருந்து வருகின்றனர். இம்மாதத்தில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையிலும் மசூதிகளில் இஸ்லாமிய மக்கள் சிறப்பு தொழுகை நடத்துவது வழக்கம். இந்த வருடம் வடமாநிலங்களில் இந்துக்களால் கொண்டாடப்படும் ஹோலி பண்டிகையானது, இஸ்லாமிய மக்கள் சிறப்பு தொழுகை நடத்தும் மார்ச் 14, வெள்ளிக்கிழமை அன்று வந்தது. இதனை இஸ்லாமிய வெறுப்பு ஆயுதமாக மாற்றிய காவி கும்பல், வடமாநிலங்களில் இஸ்லாமிய மக்கள் மீதான கொலைவெறியாட்டத்தை கட்டவிழ்த்து விட்டுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலத்தின் ரத்தினகிரி மாவட்டத்தில் கடந்த மார்ச் 14 வெள்ளிக்கிழமை அன்று “மடாச்சி மிரவ்னுக்” எனும் மரத்தின் நீண்ட பகுதியை சுமந்து செல்லும் ஷிம்கா ஊர்வலம் நடந்தது. ராஜாபூர் கிராமத்தில் உள்ள சகல் கார்வாடியில் தொடங்கி இரண்டு கி.மீ. தொலைவில் உள்ள தோபே ஷ்வர் கோவிலில் ஊர்வலம் முடிவடையும். ஊர்வலத்தின் போது மரத்தின் அடிபகுதி ஜமா மசூதியின் படிகளில் சில நிமிடங்கள் வைக்கப்படுவது பாரம்பரியமாக பின்பற்றப்படும் வழக்கமாகும்.
இந்தாண்டும் கடந்த வெள்ளிக்கிழமை அன்று இரவு 7.30 மணிக்கு ஜமா மசூதியில் மரத்தின் அடிப்பகுதி சில நிமிடங்கள் வைக்கப்பட்டது. மசூதியின் உள்ளே இஸ்லாமிய மக்கள் தாராவீஹ் தொழுகையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது யாரும் எதிர்பாராத வகையில் காவி குண்டர்கள் மரத்தின் அடிப்பகுதியை கொண்டு மசூதியின் கதவை தாக்கியது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. காவி குண்டர்கள் முழக்கமிட்டுகொண்டு மசூதியின் கதவை உடைப்பதும் அதனை மசூதி அதிகாரிகள் தடுப்பதும் காணொளிகளாக சமூக வலைதளங்களில் பரவின.
தாக்குதல் நடந்தபோது மசூதிக்கு வெளியே நின்று கொண்டிருந்த ஒருவர் இதுகுறித்து கூறுகையில் “ஒவ்வொரு வருடமும் அவர்கள் மசூதியின் வாயிலுக்கு மரத்தை கொண்டு வருகிறார்கள். நாங்கள் ஊர்வலத்தை பார்க்க செல்கிறோம். இந்த முறையும் அவர்கள் படிகள் வரை வந்தார்கள். எது அவர்களை வாயிலுக்குள் மரத்தை கொண்டு மோதச் செய்தது என்று எனக்கு தெரியவில்லை. முதல் முயற்சியிலேயே அவர்கள் வாயில் கதவை உடைத்து உள்ளே வந்தார்கள். நாங்கள் அவர்களை வெளியே தள்ளி வாயிலை மூடினோம். மீண்டும் அவர்கள் மரத்தை கொண்டு வாயிலின் மீது ஆக்ரோஷமாக மோதினர். இந்த கும்பலால் குறைந்தது இரண்டு பேர் காயமடைந்தனர்” என்று தெரிவித்துள்ளார்.
படிக்க: திருப்பரங்குன்றம்: இஸ்லாமியர்களின் வழிபாட்டு உரிமையை நிலைநாட்டு!
மசூதி மீதான தாக்குதல் தொடர்பாக ராஜாபூரில் உள்ள இஸ்லாமிய சமூகத்தினர் போலீஸ் கண்காணிப்பாளருக்கு புகார் கடிதம் எழுதியுள்ளனர். அதில் “ஹோலி ஷிம்கா மொஹத்சவ் கொண்டாட்டத்தின் போது, ஜமா மசூதியின் பிரதான வாயிலை ஒரு கும்பல் குறைந்தது மூன்று முதல் நான்கு முறை தாக்கியது. இது கொங்கனின் இந்து-இஸ்லாமியர் ஒற்றுமைக்கு அடியாக மாறியுள்ளது” என்று அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தாக்குதல் நடத்திய காவி குண்டர்கள் மீது வழக்கு பதிந்து கைது செய்யவில்லை எனில் மும்பை உயர்நீதிமன்றத்தில் குற்றவியல் ரிட் மனு தாக்கல் செய்யப்படும் என்றும் அக்கடிதத்தில் எச்சரிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், வரவிருக்கும் உத்தரப்பிரதேச சட்டமன்றத் தேர்தலை குறிவைத்து, பா.ஜ.க. முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் தலைமையில் அரசு-அதிகார அமைப்புகளின் துணையுடன் ஹோலி பண்டிகையின் போது இஸ்லாமிய மக்கள் மீது தாக்குதல்கள் கட்டவிழ்த்து விடப்பட்டன. ஹோலி பண்டிகையில் தங்கள் மீது மேலே வண்ணப்பொடி படக்கூடாது எனில் இஸ்லாமியர்கள் வீட்டிற்குள்ளேயே இருந்துகொள்ள வேண்டும் என்று உத்தரப்பிரதேச போலீஸ் கண்கானிப்பாளர் அனுஜ் சவுத்திரி பகிரங்க மிரட்டல் விடுத்தார். அதேபோல், வருடம் முழுக்க வெள்ளிக்கிழமை வருகிறது, ஒரு நாள் வீட்டிற்குள் தொழுகை நடத்துவதால் ஒன்றும் கெட்டுவிடாது என்று முதல்வர் யோகி ஆதித்யநாத் இஸ்லாமிய மக்கள் மீதான தாக்குதலை முன்னின்று தொடங்கிவைத்தார்.
இதனையடுத்து, ஹோலி பண்டிகையை காரணம்காட்டி உத்தரப்பிரதேசத்தில் மசூதிகளை தார்பாய்களால் மூடியது பா.ஜ.க. கும்பல். இஸ்லாமிய மக்கள் பெரும்பான்மையாக வசிக்கும் பகுதிகளிலும் மசூதிகள் உள்ள பகுதிகளிலும் திட்டமிட்டு 144 தடை உத்தரவை யோகி ஆதித்யநாத் அரசு அமல்படுத்தியது. குறிப்பாக, இஸ்லாமிய மக்கள் அதிகம் வசிக்கும் சம்பல் பகுதியில் கொரோனா காலத்தில் விதிக்கப்பட்ட ஊரடங்கை போன்று அனைவரும் வீட்டிலேயே தடுத்து வைக்கப்பட்டனர். மசூதிக்கு செல்வதற்கு இஸ்லாமிய மக்களை அனுமதிக்காத போலீசு, மசூதிகளுக்கு முன்பாக ஹோலி கொண்டாட்டத்திற்கு மட்டும் அனுமதி கொடுத்து கரசேவையாற்றியது.
மேலும், உத்திரபிரதேச மாநிலத்தின் மீன்வளத்துறை அமைச்சராக இருக்கும் சஞ்சய் நிஷாத் பேசுகையில், “தங்கள் மனதில் நஞ்சு கொண்ட சிலர் மக்களை தவறான பாதையில் வழிநடத்துகின்றனர். ஹோலி பண்டிகையின் வண்ணங்களில் அவர்களுக்கு (இஸ்லாமிய மக்களுக்கு) சிக்கல் இருந்தால் கதவுகளை அடைத்துக் கொண்டிருக்க வேண்டாம். நாட்டை விட்டே வெளியேறலாம்” என்று இஸ்லாமிய மக்களுக்கு எதிரான மதவெறுப்பை கக்கினார்.
படிக்க: இஸ்லாமிய மக்களை அகதிகளாக்கும் காவி பாசிஸ்டுகள்: கரசேவையில் நீதித்துறை
இதனைப் போலவே ராஜஸ்தானின் தெளசாவில் ஹோலி கொண்டாட்டத்தின் போது வண்ணம் பூச மறுத்ததற்காக 25 வயது மாணவனை மூன்று பேர் கொண்ட கும்பல் அடித்தே கொன்ற கொடூரம் அரங்கேறியுள்ளது. கர்நாடகாவில் கதக் மாவட்டத்தில் உள்ள லக்ஸ்மேஷ்வர் நகரில் பேருந்துக்காக காத்திருந்த பள்ளி சிறுமிகள் மீது இருசக்கர வாகனத்தில் வந்த கும்பல் ஒன்று ரசாயன பொடியை வீசி சென்றுள்ளனர். அதில் மாட்டு சாணம், பினாயில் உள்ளிட்ட ராசாயணப் பொருட்களும் கழிவுகளும் கலக்கப்பட்டிருந்ததால் மாணவிகளுக்கு மூச்சுத்திணறல், மார்பு வலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தற்போது நான்கு சிறுமிகளின் நிலைமை மோசமடைந்து வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இவையன்றி வடமாநிலங்களில் பல இடங்களில் இஸ்லாமிய மக்கள் மீதான திட்டமிட்ட தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.
ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க. கும்பல் இந்தியாவில் ஆட்சிக்கு வந்த பிறகு விநாயகர் சதுர்த்தி, இராம நவமி போன்ற இந்து மத பண்டிகைகளும் மத ஊர்வலங்களும் இஸ்லாமிய மக்களுக்கு எதிரான ஆயுதங்களாக மாற்றப்பட்டுள்ளன. இந்து மத பண்டிகை நாட்களில் மசூதிகள் மீதும் இஸ்லாமியர்கள் மீதும் காவி கும்பல் திட்டமிட்டு வன்முறை தாக்குதல்களை நடத்தி வருகின்றது. காவி கும்பல் தாக்குதல் நடத்துவதற்கு ஏதுவாக 144 தடை உத்தரவு அமல்படுத்துவது, கலவரங்களை வேடிக்கை பார்ப்பது, இஸ்லாமிய மக்கள் மீது பொய் வழக்குகளை பதிவிடுவது என அதிகார கட்டமைப்பும் இதற்கு பக்கபலமாக நிற்கிறது. இந்த ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க. கலவர கும்பலுக்கு எதிராகவும் இஸ்லாமிய மக்களுக்கு ஆதரவாகவும் பரந்துபட்ட உழைக்கும் மக்கள், ஜனநாயக சக்திகள் அணிதிரள்வதன் மூலமே இக்கலவர கும்பலை முறியடிக்க முடியும்.
இன்குலாப்
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram