வருகின்ற ஏப்ரல் மாதத்தில் மேற்குவங்க மாநிலத்தில் ஆயிரக்கணக்கான இராமநவமி ஊர்வலங்களை நடத்தப்போவதாக அம்மாநில பா.ஜ.க. தலைவர் பேசியிருப்பது மேற்குவங்கத்தில் மதக்கலவரத்தை தூண்ட ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க. கும்பல் ஆயத்தமாகி வருவதை வெட்டவெளிச்சமாக்கியுள்ளது.
கடந்த மார்ச் 14-ஆம் தேதி அன்று புர்பா மெதினி பூர் மாவட்டத்தில் தனது சொந்த தொகுதியான நந்திகிராமில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பா.ஜ.க. மூத்தத் தலைவர் சுவேந்து அதிகாரி கலந்துகொண்டார். நிகழ்ச்சியில் பேசிய அவர், “இராமரை பிரார்த்தனை செய்ய எங்களுக்கு அனுமதி தேவையில்லை. இராமநவமி ஊர்வலங்களை நடத்துபவர்கள் திரிணாமுல் காங்கிரஸ் அரசு நிர்வாகத்திடம் அனுமதிபெற தேவையில்லை. நாங்கள் அமைதியான பேரணிகளை நடத்துவோம். மற்றவர்களும் (இஸ்லாமியர்கள்) அமைதியாக இருப்பதை உறுதி செய்வது நிர்வாகத்தின் பொறுப்பு” என்று மதவெறியூட்டி கலவரத்திற்கு அழைப்பு விடுத்தார். இந்து மதவெறியை தூண்டும் விதமாக இந்த ஆண்டு இறுதிக்குள் தனது தொகுதியில் உள்ள சோனாச்சுராவில் ஒரு இராமர் கோவில் கட்டப்படும் என்ற அறிவிப்பையும் வெளியிட்டுள்ளார்.
பா.ஜ.க. தலைவரின் மதவெறி பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ள ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் அமைச்சர் ஃபிர்ஹாத் ஹக்கீம் “சுவேந்து அதிகாரி போன்ற பா.ஜ.க. தலைவர்களின் சொல்லாட்சிகளால் மாநில மக்கள் மயங்க மாட்டார்கள். இராமகிருஷ்ணா, விவேகானந்தர், ஸ்ரீசைதன்யர் மற்றும் ரவீந்திரநாத் தாகூர் ஆகியோரின் பூமியில் மக்கள் தேசபக்தி அறிக்கைகளால் பாதிக்கப்பட முடியாது. ஒவ்வொருவருக்கும் அவரவர் வழியில் பண்டிகைகளைக் கொண்டாட உரிமை உண்டு. இராமநவமி பேரணிகளை நடத்த விரும்புவோர் அவ்வாறு செய்வார்கள். அவர்களுக்கு சுவேந்து அதிகாரியின் தூண்டுதல்கள் தேவையில்லை” என்று தெரிவித்துள்ளார்.
மேற்குவங்கத்தில் இந்துக்களின் சார்பாக பேசுவதற்கு பா.ஜ.க. தலைவருக்கு எந்த அதிகாரமும் இல்லை என்று தெரிவித்துள்ள சி.பி.ஐ(எம்) தலைவர் சுஜன் சக்ரவர்த்தி, “இராம நவமி மேற்குவங்கத்தில் ஒரு வெகுஜன இந்து பண்டிகையாக ஒருபோதும் இருந்ததில்லை. அதை ஒரு அரசியல் நிகழ்வாக மாற்றியது பா.ஜ.க. மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிகள்தான். ஒரு விழாவில் பங்கேற்பது ஒருவரின் தனிப்பட்ட விருப்பம். மாநிலத்தில் இந்து மதத்தின் பாதுகாவலர் சுவேந்து அதிகாரி அல்ல” என்று தெரிவித்துள்ளார்.
வருகின்ற ஏப்ரல் 6-ஆம் தேதி அன்று வட மாநிலங்களில் இந்துக்களின் இராம நவமி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. உத்திரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான், குஜராத் போன்ற மாநிலங்களில் இப்பண்டிகை பரவலாக கொண்டாடப்படுகிறது. மேற்குவங்க மக்கள் காளியை முக்கியத் தெய்வமாக வணங்குவதால் அம்மக்கள் இராமநவமி பண்டிகையை பெரியளவில் கொண்டாடுவதில்லை. ஆனால், எதிர்வரும் 2026 மேற்குவங்க சட்டமன்றத் தேர்தலை குறிவைத்து, அம்மாநிலத்தில் இராமநவமி ஊர்வலங்களை நடத்தி மாநிலம் முழுவதும் மதக்கலவரங்களை நடத்தவும் அதன்மூலம் இந்து மக்களின் வாக்குகளை அறுவடை செய்யவும் பா.ஜ.க. திட்டமிட்டுள்ளது.
படிக்க: கர்நாடகா: விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தைக் கலவரமாக மாற்றிய காவிக் கும்பல்
முக்கியமாக, மேற்குவங்கத்தில் கடந்த ஆண்டு சிறிய அளவில் நடைபெற்ற இராமநவமி ஊர்வலத்தில் பெரும்பாலான இடங்களில் பா.ஜ.க. கும்பல் மதக்கலவரங்களை நடத்தியது. இந்தாண்டு பெரியளவில் இந்துமுனைவாக்கம் செய்வதற்காக தனியாக கலவரத் திட்டம் போட்டுகொண்டு பா.ஜ.க. செயல்பட்டு கொண்டிருக்கிறது. சுவேந்து அதிகாரி பேசுகையில், “கடந்த ஆண்டு சுமார் 50,000 இந்துக்கள் ஊர்வலங்களில் பங்கேற்றனர். இந்த ஆண்டு நாடு முழுவதும் 2,000 பேரணிகளில் குறைந்தது ஒரு கோடி இந்துக்கள் வீதிகளில் இறங்குவார்கள்” என பேசியிருப்பது இதனை நிரூபிக்கிறது. மேலும், உத்திரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம், குஜராத் போன்ற மாநிலங்களிலிருந்து ஒரு கோடி ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க. குண்டர்களை மேற்குவங்கத்தில் இறக்கி இக்கலவரத்தை செய்ய பா.ஜ.க. திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
பாசிச பா.ஜ.க. ஆட்சிக்கு வந்த பிறகு இஸ்லாமிய மக்கள் மீதான கலவரங்களை திட்டமிட்டு நடத்தி வருகிறது. விநாயகர் சதுர்த்தி, இராம நவமி, ஹோலி போன்ற இந்து பண்டிகை நாட்களில் மசூதிகள் மீது தாக்குதல் நடத்துவது, இஸ்லாமிய மக்களை படுகொலை செய்வது என கடந்த பத்து ஆண்டுகளாக பா.ஜ.க. கலவர ஆட்சி நடத்தி வருகிறது. இக்கலவரங்களின் மூலமே ஒவ்வொரு மாநிலங்களிலும் ஆட்சியை பிடிக்கிறது. கடந்தாண்டு ஒடிசா மாநிலத்தில் பா.ஜ.க. முதன்முறையாக ஆட்சியை பிடித்ததும் மதக்கலவரங்களின் மூலமே ஆகும். தற்போது உத்திரப்பிரதேசத்தில் ஆட்சியை தக்கவைத்து கொள்வதற்காக யோகி ஆதித்யநாத் தலைமையிலான பா.ஜ.க. அரசு ஹோலி பண்டிகை அன்று மசூதிகள், இஸ்லாமிய மக்கள் மீது திட்டமிட்ட தாக்குதல்களை நடத்தி வருவதும் எதிர்வரும் 2027 உத்தரப்பிரதேச சட்டமன்றத் தேர்தலை குறிவைத்தே ஆகும்.
ஆனால், பா.ஜ.க-வையும் அதன் பாசிச ஆட்சியையும் எதிர்ப்பதாக சொல்லும் எதிர்க்கட்சிகள் அதற்கெதிராக மாற்று சித்தாந்தத்தை முன்வைத்து அரசியல் செய்து மக்களை அணித்திரட்டுவதற்கு மாறாக, பா.ஜ.க-வின் இந்துத்துவத்தையே மிதவாதமாக பின்பற்றுகின்றன. இது மதக்கலவரங்களின் மூலமும் இஸ்லாமிய வெறுப்பு பிரச்சாரங்களின் மூலமும் பா.ஜ.க. தனக்கான அடித்தளத்தை உருவாக்கி கொள்வதற்கும் ஆட்சியை பிடிப்பதற்கும் அம்மாநிலங்களை விளைநிலமாக மாற்றுகிறது.
எனவே, மேற்குவங்கத்தில் பா.ஜ.க. ஆட்சியை பிடிப்பதை தடுக்க வேண்டுமெனில், அம்மாநில மம்தா பானர்ஜி அரசு மிதவாத இந்துத்துவதை கைவிட்டுவிட்டு பாசிச பா.ஜ.க. அரசிற்கு எதிரான மாற்று சித்தாந்தத்தை முன்வைத்து மக்களை அணித்திரட்ட வேண்டும். மதவெறி கலவரத்திற்கு அழைப்பு விடுத்த பா.ஜ.க. தலைவர் சுவேந்து அதிகாரியை உடனே கைது செய்து மதக்கலவர முயற்சிகளை முறியடிக்க வேண்டும். விநாயகர் சதுர்த்தியை போல இராமநவமியும் பிற மாநிலங்களில் திணிக்கப்படுவதை தடுத்து அம்மாநில மக்களின் பார்ப்பனிய எதிர்ப்பு மரபை உயர்த்தி பிடிக்க வேண்டும்.
ஆசாத்
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram