கடந்த பத்தாண்டுகால பா.ஜ.க. ஆட்சியில் பத்திரிகையாளர்களை தன்னருகில் கூட நெருங்கவிடாத வரலாற்று சிறப்புக்குரிய இந்திய பிரதமர் நரேந்திர மோடி பாட்காஸ்ட் நிகழ்ச்சி ஒன்றில், தான் விமர்சனங்களை விரும்புவதாகக் கூறி 130 கோடி இந்தியர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்.
அமெரிக்க விஞ்ஞானியும் பாட்காஸ்டருமான லெக்ஸ் ஃப்ரிட்மேன் உடன் பாட்காஸ்ட் நிகழ்ச்சி ஒன்றில் இந்திய பிரதமர் மோடி மூன்று மணி நேரம் உரையாடினார். இந்த உரையாடலில் அமெரிக்க அதிபர் பாசிஸ்ட் டொனால்ட் டிரம்புடனான தனது ஒற்றுமைகள், இந்தியா-சீன உறவுகளில் உள்ள முரண்பாடுகள், உக்ரைனில் அமைதிக்கு அழைப்பு விடுக்கும் வாய்ச்சவடால்கள், பாகிஸ்தான் மீதான வழக்கமான தேசவெறி பேச்சுக்கள், ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க-வின் இழிபுகழ்கள், 2002 குஜராத் இனப்படுகொலை குறித்த பொய் தகவல்கள் என பல விசயங்கள் குறித்து மோடி கதையளந்திருந்தார்.
இந்நிலையில், நேற்று (மார்ச் 16 – ஞாயிற்றுக்கிழமை) பதிவேற்றப்பட்ட இந்த பாட்காஸ்ட்டின் ஒரு பகுதியில், “ஜனநாயகத்திற்கு விமர்சனம் எவ்வாறு அவசியம்” என்பது குறித்து மோடி விளக்கியதை கேட்ட இந்திய மக்கள், பேசுவது இந்திய பிரதமர்தானா? என ஒரு நொடி குழம்பி போயினர்.
மோடி பேசுகையில், “உங்கள் நரம்புகளில் ஜனநாயகம் உண்மையிலேயே இயங்கினால், நீங்கள் அதை ஏற்றுக்கொள்ள வேண்டும். நமது வேதங்களில், உங்கள் விமர்சகர்களை எப்போதும் நெருக்கமாக வைத்திருங்கள் என்று கூறப்பட்டுள்ளது. விமர்சகர்கள் உங்கள் நெருங்கிய தோழர்களாக இருக்க வேண்டும். ஏனெனில் உண்மையான விமர்சனத்தின் மூலம், நீங்கள் விரைவாக முன்னேறலாம் மற்றும் சிறந்த நுண்ணறிவுடன் ஜனநாயக ரீதியாக வேலை செய்யலாம்” என்று எழுதி கொடுத்தவற்றையெல்லாம் ஒன்று விடாமல் ஒப்பித்தார்.
படிக்க: புதிய கல்விக்கொள்கையை ஏற்காவிட்டால் நிதி தர முடியாது: மிரட்டும் மோடி அரசு
“ஆனால், எனது உண்மையான குற்றச்சாட்டு என்னவெனில், இப்போதெல்லாம், நாம் பார்ப்பது உண்மையான விமர்சனங்கள் அல்ல. உண்மையான விமர்சனத்திற்கு முழுமையான ஆய்வு, ஆழமான ஆராய்ச்சி மற்றும் கவனமான பகுப்பாய்வு தேவை. அது பொய்களிலிருந்து உண்மையைக் கண்டறிய வேண்டும். ஆனால், இன்று, மக்கள் குறுக்குவழிகளைத் தேடுகிறார்கள். குற்றச்சாட்டுகளுக்கும் விமர்சனத்திற்கும் இடையே ஒரு பெரிய வித்தியாசம் உள்ளது. நீங்கள் கொடுக்கும் குறிப்புகள் குற்றச்சாட்டுகளாகும். அவை விமர்சனங்கள் அல்ல. ஒரு வலுவான ஜனநாயகத்திற்கு, உண்மையான விமர்சனம் அவசியம். குற்றச்சாட்டுகள் யாருக்கும் பயனளிக்காது; அவை தேவையற்ற மோதல்களை மட்டுமே ஏற்படுத்துகின்றன” என்று மோடி விமர்சனங்கள் குறித்து பாடம் எடுத்தார்.
ஆனால், எதார்த்தத்தில், இந்தியாவில் பேச்சுரிமை, கருத்துரிமை, பத்திரிகையாளர் சுதந்திரம் போன்றவற்றிற்கு கல்லறை கட்டப்பட்டு வருவதை இந்திய மக்கள் நன்கறிவர்.
மக்களின் கருத்து சுதந்திரத்தை ஒடுக்க அதிகளவில் இணைய முடக்கம் செய்யும் நாடுகளில் இந்தியா தொடர்ந்து முதலிடங்களில் இருந்து வருகிறது. ஜம்மு&காஷ்மீரும் தற்போது மணிப்பூரும் அதற்கு சாட்சியாய் உள்ளன. அதேபோல் பத்திரிகையாளர்கள் அதிகளவில் கொல்லப்படும் நாடுகளிலும் இந்தியா முன்னிலை வகிக்கிறது. மோடி அரசை விமர்சிக்கும் பத்திரிகையாளர்கள் கைது செய்யப்படுவதும், தாக்கப்படுவதும், கொல்லப்படுவதும் தொடர்கதையாகியுள்ளது. சோதனை, இணைய முடக்கம், தடை என மோடி அரசுக்கு அடிபணியாத ஊடகங்கள் பல்வேறு வழிகளில் ஒடுக்கபடுகின்றன.
சமீபத்தில் கூட, அமெரிக்காவிலிருந்து இந்திய மக்கள் கைகள் விலங்கிடப்பட்டு, இராணுவ விமானங்களில் இழிவான முறையில் நாடு கடத்தப்படுவதை வேடிக்கை பார்க்கும் மோடியை விமர்சித்து கார்டூன் வெளியிட்டதற்காக விகடன் இணையதளம் முடக்கப்பட்டதை இந்தியாவே காறி உமிழ்ந்தது. குஜராத்தில் காங்கிரசின் இஸ்லாமிய எம்.பி. ஒருவர் கவிதை எழுதியதற்காக பா.ஜ.க. அரசு அவர் மீது பதிவு செய்த குற்ற வழக்கை உயர்நீதிமன்றம் உறுதி செய்தது.
மறுபுறம், கடந்த பத்தாண்டுகால பா.ஜ.க. ஆட்சியில் மோடி ஒருமுறை கூட பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தியதில்லை. இந்தியாவில் நடக்கும் எந்தவொரு நிகழ்விற்கும் பத்திரிகையாளர்களிடம் மோடி விளக்கம் கொடுத்ததில்லை. கடந்த 2023-ஆம் ஆண்டு அரசுமுறை பயணமாக மோடி அமெரிக்காவிற்கு சென்றிருந்தபோது, மோடியிடம் கேள்வி எழுப்பியதற்காக அமெரிக்காவின் பெண் பத்திரிகையாளரை சமூக வலைதளங்களில் மிகவும் இழிவான முறையில் சித்தரித்து பேசியது ஆர்.எஸ்.எஸ். சங்கி கும்பல். “அமெரிக்க பெண் பத்திரிகையாளர் மீதான இந்த வன்கொடுமையை ஏற்றுகொள்ள முடியாது” என்று அமெரிக்காவின் வெள்ளை மாளிகை இதற்கு தனது கண்டனத்தை பதிவு செய்தது. இதுதான் மோடியும் சங்கி கூட்டமும் விமர்சனங்களை விரும்புவதன் லட்சணம். கனவிலும் விமர்சனங்களையும் மாற்றுகருத்துகளையும் விரும்பாத கோழையும் தொடைநடுங்கியுமான பாசிஸ்ட் மோடி, தான் விமர்சனங்களை விரும்புவதாக சொல்வதை கேட்டு நம்மால் வாயால் சிரிக்க முடியவில்லை.
எனவே, மோடி வேண்டுமானால் துளியும் வெட்கமின்றி வாய்க்கு வந்த கதைகளையெல்லாம் அளக்கலாம். ஆனால், மோடி அரசை விமர்சித்ததற்காக படுகொலை செய்யப்பட்ட கல்புர்கி, கௌரி லங்கேஷ் போன்றவர்களும், கருப்பு சட்டங்களால் வேட்டையாடப்பட்டு பீமா கோரேகான் போன்ற வழக்குகளில் சிறையில் அடைக்கப்பட்டு கொல்லப்பட்டுவரும் செயற்பாட்டாளர்களும், இந்தியாவில் கருத்து சுதந்திரத்தின் இருண்ட காலத்திற்கு இரத்த சாட்சியாய் இருப்பர்!
சோபியா
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram