அநுரவின் கவர்ச்சிகர முகமூடிக்குள் ஒளிந்திருக்கும் மறுகாலனியாக்கத்தின் கோரமுகம்

இலங்கை பொருளாதார நெருக்கடியில் சிக்குவதற்கு ஊற்றுக்கண்ணாக அமைந்த - முந்தைய ஆட்சியாளர்களால் அமல்படுத்தப்பட்ட மறுகாலனியாக்கக் கொள்கைகளையே கவர்ச்சிகரமான முகமூடி அணிந்து அமல்படுத்திக் கொண்டிருக்கிறது அநுர தலைமையிலான இலங்கை அரசு.

றுகாலனியாக்கக் கொள்கைகளால் வாழ்வாதாரம் பறிக்கப்பட்ட இலங்கை மக்கள் மே 2022-இல் கிளர்ந்தெழுந்தனர். அப்போதைய ஆட்சியாளர்களான ராஜபக்சே கும்பலை நாட்டை விட்டே விரட்டி, அதிபர் மாளிகையை மக்கள் கைப்பற்றினர். இத்தகையதொரு வரலாற்றுச் சிறப்புமிக்க எழுச்சிக்குத் தலைமைத் தாங்க சரியான அரசியல் தலைமையும், மாற்று அரசியல் – சமூக – பொருளாதாரத் திட்டமும் இலங்கையில் இல்லை. இதன் காரணமாக, அமெரிக்க ஏகாதிபத்தியம் தலையீடு செய்து, குறுக்குவழியில் ரணில் விக்கிரமசிங்கே என்னும் தனது அடிவருடியை  அதிபராக நியமித்துப் போராட்டத்தை நசுக்கியது. ரணிலின் இரண்டாண்டு ஆட்சியில் இலங்கை மென்மேலும் ஐ.எம்.எஃப். கடன் வலைக்குள் சிக்க வைக்கப்பட்டது; மிச்சமிருந்த மானியங்களும் மக்கள்நலத் திட்டங்களும் பலியிடப்பட்டன; வருமான வரி உயர்த்தப்பட்டது; விலைவாசி உயர்வோ தாங்க முடியாத அளவுக்கு ஏறிக் கொண்டே சென்றது. “இந்தச் சவாலான கொள்கை நடவடிக்கைகளை இலங்கை ஏற்கெனவே நடைமுறைப்படுத்தத் தொடங்கியிருப்பது பாராட்டத்தக்கது” என்று ஐ.எம்.எஃப். பாராட்டுமளவுக்குக் கொடூர ஆட்சி நடத்தினார் ரணில்.

இத்தகைய சூழலில், கடந்த ஆண்டு செப்டம்பரில் நடந்த அதிபர் தேர்தலில், ‘இடதுசாரிகள்’ என்று சொல்லிக் கொள்ளும் “தேசிய மக்கள் சக்தி” (NPP) என்னும் கூட்டணியின் தலைவர் அநுர குமார திசநாயக்க வெற்றி பெற்றார். அதன்பின் நடந்த பாராளுமன்றத் தேர்தலிலும், மொத்தமுள்ள 225 இடங்களில் 159 இடங்களை வென்றது என்.பி.பி. கூட்டணி. “வளமான நாடு, அழகான வாழ்க்கை” என்ற பெயரில் அதிபர் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை என்.பி.பி. வெளியிட்டிருந்தது.  அதில், இலங்கைக்குத் தேவை ஆட்சியாளர்களின் மாற்றமல்ல, பிரம்மாண்டமான – ஒட்டுமொத்த சமூகநிலை மாற்றம், மறுமலர்ச்சி என்று ஆரவாரமாக அறிவித்துக் கொண்டது. தாங்கள் ஆட்சிக்கு வந்தால் இதனையெல்லாம் நிறைவேற்றுவோம் என்று ஏராளமான வாக்குறுதிகளைப் பட்டியலிட்டது. ஆனால், இலங்கை சந்தித்துவரும் அரசியல் – பொருளாதாரப் பிரச்சினைகளுக்கான உண்மையான காரணங்களைப் பற்றி வாய் திறக்கவில்லை. மாறாக, முந்தைய ஆட்சியாளர்கள் – சில குடும்பங்களின் –  ஊழல் நிறைந்த ஆட்சிதான் பிரச்சினைகளுக்குக் காரணம் என்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தியது.

அதிபரின் நிறைவேற்று அதிகாரத்தை முடிவுக்குக் கொண்டுவந்து, பாராளுமன்றத்தின் அதிகாரத்தை நிலைநாட்டுவோம் என்றும், அதிபர் – பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான சலுகைகள், ஓய்வூதியங்களை ரத்து செய்ய விரும்புவதாகவும் அறிவித்தது. இதன் மூலம் அரசின் செலவுகள் குறைக்கப்படும் எனவும், மக்களுக்கான ஆட்சியாக தங்களது ஆட்சி இருக்குமெனவும் கூறுகிறது. இதனையெல்லாம் பார்க்கும்போது, மிகப்பெரும் அதிரடி மாற்றங்களைச் செய்யத் துடிக்கும் உண்மையான இடதுசாரி அரசு போன்ற தோற்றம் தென்படுகிறதல்லவா? ஆனால், நாட்டைக் கொள்ளையிட்டு, மக்களின் வாழ்வை நசுக்கிக் கொண்டிருக்கும் ஏகாதிபத்தியங்கள் பற்றி இந்த ‘இடதுசாரிகள்’ ஓரிடத்தில் கூட பேசுவதில்லை.

மாறாக, இலங்கை பொருளாதார நெருக்கடியில் சிக்குவதற்கு ஊற்றுக்கண்ணாக அமைந்த – முந்தைய ஆட்சியாளர்களால் அமல்படுத்தப்பட்ட மறுகாலனியாக்கக் கொள்கைகளையே கவர்ச்சிகரமான முகமூடி அணிந்து அமல்படுத்திக் கொண்டிருக்கிறது அநுர தலைமையிலான இலங்கை அரசு.

அந்நியச் செலாவணி பெருக்கமும், ஐ.எம்.எஃப். உடன் பேச்சுவார்த்தையும்:

“தகவல் தொழில்நுட்பம் மற்றும் சுற்றுலா தொழிலை முன்னேற்றுவதன் ஊடாக அந்நிய செலாவணி இருப்பை வளர்த்தெடுப்பது; தேசிய முன்னுரிமைகள் மற்றும் நீண்டகால வளர்ச்சி நோக்கங்களுடன் ஒத்துவரக்கூடிய உத்தேச மற்றும் தற்போது இடைநடுவில் கைவிடப்பட்டுள்ள அந்நிய நேரடி முதலீடுகளை (FDI) துரிதப்படுத்துவது; ஏற்றுமதி பன்வகைமைப்படுத்தல் மூலமாக வெளிநாட்டுச் சந்தைகளின் பங்கினை அதிகரிப்பதற்காக, நிலவுகின்ற வர்த்தக உடன்படிக்கைகளை மீள்பரிசீலனை செய்வதற்கான உடன்படிக்கைகளை செய்துகொள்வது” ஆகியவற்றை தேர்தல் அறிக்கையில் என்.பி.பி. முன்மொழிந்திருக்கிறது. அதாவது, தற்சார்பு வேளாண்மை, சிறு-குறு-நடுத்தரத் தொழில் வளர்ச்சி பற்றி கவர்ச்சிகரமான வாக்குறுதிகளைக் கொடுத்திருக்கும் அதே சமயத்தில், நாட்டை வலிமைமிக்கதாக மாற்றவும் அந்நிய செலாவணியைப் பெருக்கவும் – இலங்கையில் பொருளாதார நெருக்கடியை தீவிரப்படுத்தியதற்கு முக்கிய காரணமாக அமைந்த – ஏற்றுமதி பொருளாதாரத்தை ஊக்குவிக்க வேண்டும் என்கிறது.

சீனாவுடன் ஒப்பந்தம் போட்டு, பெட்ரோலிய சுத்திகரிப்பு ஆலையை நிறுவச் செய்து, பெட்ரோலியப் பொருட்களை ஏற்றுமதி செய்து பணம் ஈட்டுவது; துறைமுகங்களைப் பிற நாடுகளுக்கு குத்தகைக்கு விடுவது; ஏற்றுமதிக்கான கடல்சார் உற்பத்தியைப் பெருக்குவது; தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியை ஏற்படுத்தி டாலர்களை ஈட்டுவது; அந்நிய நேரடி முதலீடுகளை ஈர்ப்பதன் மூலம் டாலர்களை ஈட்டுவது என்பதெல்லாம் மறுகாலனியாக்கத்தின் அங்கமாகவே இருந்து வருகின்றன. எனவே, மறுகாலனியாக்கத்தை நடைமுறைப்படுத்துவதில் இதுவரை ஆட்சி செய்த கட்சிகளில் இருந்து, என்.பி.பி. எந்த வகையிலும் வேறுபடவில்லை என்பதையே அதன் வாக்குறுதிகள் காட்டுகின்றன.

இவை எல்லாவற்றையும் விட, வறிய மற்றும் நிர்கதி நிலைக்கு உள்ளாகியுள்ள மக்களை அந்த நிலைமையிலிருந்து மீட்டெடுப்பதற்கான வேலைத்திட்டமொன்றின் உள்ளடக்கத்தையும் அது அமலாக்கப்பட வேண்டிய விதத்தையும் பற்றியும் சர்வதேச நாணய நிதியத்துடன் மீள் பேச்சுவார்த்தை நடத்த போவதாக தனது தேர்தல் அறிக்கையில் என்.பி.பி கூறியிருக்கிறது.

ஈவிரக்கமற்ற ஏகாதிபத்திய கொள்ளைக்காரக் கும்பலிடம், துன்ப துயரத்தில் உழன்றுவரும் மக்கள் நலன் காக்கும் வகையிலான ஒரு செயல்திட்டத்தை முன்வைத்து பேச்சுவார்த்தை நடத்த முடியுமா? அமெரிக்க ஏகாதிபத்தியம் இதை ஏற்றுக்கொண்டு, ஐ.எம்.எஃப்-பின் கடுமையைக் குறைத்துக்கொள்ள ஆணையிட்டு விடுமா? கேப்பையில் நெய் வடிந்தால், நாடு வளமாகும் வாழ்க்கை அழகாகுமென என மக்களை நம்பச் சொல்கிறார்கள்.

மோ(டி-அ)தானியின் மேலாதிக்கத்திற்கு அடிபணிதல்:

என்.பி.பி. முன்வைத்த தேர்தல் வாக்குறுதிகளை ‘நடைமுறைப்படுத்தும்’ வகையில் அடுத்தடுத்த நடவடிக்கைகளை அநுர குமார திசநாயக்க மேற்கொண்டு வருகிறார். ஆட்சிப் பொறுப்பேற்றதும் முதலில் இந்தியாவிற்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல்வேறு ஒப்பந்தங்களைப் போட்டார்.

இந்தியாவில் உள்ளதைப் போன்று இலங்கை மக்களுக்கும் ஆதாரைப் போன்ற அடையாள அட்டை வழங்கும் திட்டம் ரணில் ஆட்சியிலேயே ஏற்றுக்கொள்ளப்பட்டது. அதற்கான நிதியில் பாதியை வழங்குவதாக ஏற்றுக்கொண்டு, முதல் தவணையாக 45 கோடி ரூபாயை இந்தியா ஏற்கெனவே இலங்கையிடம் அளித்தது. இலங்கையில் இப்போதுள்ள அடையாள அட்டையில் பெயர், முகவரி, வயது போன்ற விவரங்கள்தான் உள்ளன. கைரேகை, கண்விழிப்படலம் போன்ற பயோமெட்ரிக் தகவல்களைப் பதிவு செய்யும் ஆதார் அட்டை அநுர ஆட்சியில் அறிமுகம் செய்யப்படுகிறது. இதனால், இலங்கை மக்களின் தரவுகள் அனைத்தும் இந்திய நிறுவனத்தின் பிடியில் சென்றுவிடுமென எதிர்கட்சிகள் விமர்சித்தன.

ஆனால், புதிய அரசாங்கத்தின் அமைச்சரோ, “பொறிமுறை அமைக்கப்பட்டவுடன், தரவுகளுக்கான அணுகல் இலங்கைக்கு மட்டுமே இருக்க வேண்டும் என்று அரசாங்கம் ஏற்கெனவே இந்தியக் கூட்டாளர்களிடம் தெரிவித்துள்ளது” எனக் கூறி, இத்திட்டத்தை நியாயப்படுத்தி இருக்கிறார். சில நூறு ரூபாய் செலவில் பல இலட்சம் இந்திய மக்களின் ஆதார் தரவுகளைப் பெற முடிகிறது எனில், இலங்கை மக்களின் நிலை என்னவாக இருக்கும்?

இந்தியாவிலிருந்து எரிவாயு மற்றும் எண்ணெய் ஏற்றுமதிக்கு திருகோணமலை வரை குழாய் அமைக்கும் திட்டமும், இந்தியாவையையும் இலங்கையையும் தரைவழியில் இணைக்கும் திட்டமும் ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கின்றன. இலங்கையின் மின்சாரக் கட்டமைப்பை இந்திய மின்சாரத் தொகுப்பு வலையத்துடன் (Grid)  இணைத்து விடுவது என்பதும் ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறது. மேலும், நிலக்கரி மூலம் அனல் மின்சாரம் தயாரிக்க, இந்திய அனல்மின் கழகத்துடன் போடப்பட்ட பழைய ஒப்பந்தத்தை சூரிய ஒளி மின்சாரம் தயாரிக்கும் ஒப்பந்தமாக மாற்றியுள்ளனர். இதன் மூலம் குறைந்த விலையில் மின்சாரம் கிடைக்குமென இலங்கை மக்களை நம்ப வைக்க முயல்கிறார் இலங்கை அதிபர்.

இந்தியாவின் மின்சார உற்பத்தி, விநியோகத்தில் அதானியின் ஆதிக்கம் பெருகி வரும் நிலையில், ஏற்கெனவே பூடானும், வங்கதேசமும், நேபாளமும் இந்திய மின்சாரத் தொகுப்பு வலையத்துடன் இணைக்கப்பட்டு விட்டன. இதற்கு அர்த்தம், இந்தியாவின் இன்னொரு மாநிலம் போல அதானியின் ஆதிக்கத்துக்குக் கட்டுப்பட்டாக வேண்டும் என்பதுதான். இதில் இலங்கையையும் இணைக்க ஒப்புக் கொண்டிருக்கிறார் அநுர.

ரணில் ஆட்சியில், மன்னார் – பூனேரி பகுதிகளில் 442 மில்லியன் டாலர்கள் மதிப்பிலான காற்றாலை மின்சார உற்பத்திக்கு ஒப்பந்தம் போடப்பட்டிருந்தது. இது, முறைகேடான ஒப்பந்தம் என அப்போதே இலங்கையிலிருந்து எதிர்ப்புகள் எழுந்தன. இதிலுள்ள சூழலியல் பிரச்சினைகள் தொடர்பாக நீதிமன்றங்களில் வழக்குகளும் தொடுக்கப்பட்டன. இத்தகைய ஊழல் திட்டங்களை ரத்து செய்வோம் என தேர்தல் பிரச்சாரத்தில் அநுர அறிவித்திருந்தார்.

இந்தச் சூழலில்தான், இலஞ்ச முறைகேடு வழக்கில் அதானி மீது அமெரிக்கா நடவடிக்கை எடுக்க முனைந்தது. இதையடுத்து கென்யாவில் அதானி விமான நிலைய ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டது; வங்கதேசமும் மின்சார விநியோக ஒப்பந்தத்தை மறுபரிசீலனை செய்யவிருப்பதாக அறிவித்தது. இதேபோல, விலை அதிகமாக இருப்பதால் அதானி நிறுவனத்துடன் போடப்பட்ட ஒப்பந்தத்தை மறுபரிசீலனை செய்யவிருப்பதாக அநுர அறிவித்தார். இந்திய மின் தொகுப்பு வலையத்தில் இலங்கையை இணைக்க கடந்த டிசம்பர் மாதத்திலேயே ஒப்பந்தம் போடப்பட்டு விட்டதால் திட்டத்தில் இருந்து விலகுவதாக அதானி நிறுவனமே அறிவித்துவிட்டது. இது அநுரவின் வெற்றியல்ல, அதானியின் வெற்றி. அதானியுடன் நேரடியாக ஒப்பந்தம் போட்டதால்தான் விலை அதிகமாகி விட்டதென்றும், இந்திய அரசுடன் ஒப்பந்தம் போட்டுக் கொண்டால் குறைவாக இருக்குமென்றும் இலங்கை மக்களை அநுர ஏமாற்ற நினைக்கிறார் என்பதே உண்மை.

இவை மட்டுமின்றி டிஜிட்டல் மயமாக்கம், டிஜிட்டல் பணச் சேவைகள் உள்ளிட்டவை தொடர்பாகவும் இந்திய அரசுடன் ஒப்பந்தம் போட்டுக் கொண்டுள்ளார் இலங்கை அதிபர். இவையெல்லாம் இந்தியாவில் அதானி நிறுவனம் ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருக்கும், கால்பதித்து வரும் துறைகளே ஆகும். அந்த வகையில் இலங்கையின் மீது இந்தியாவின் – அதானியின் ஆதிக்கத்தை உறுதிப்படுத்திக் கொள்ளும் மோடியின் அனைத்து முயற்சிகளுக்கும், அடிபணிந்து ஒப்புதல் கொடுத்திருக்கிறார் இலங்கையின் ‘தற்சார்பு’ நாயகர் அநுர.

இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாடு கொண்ட ‘இடதுசாரி’ என்று முதலில் கருதப்பட்ட அநுர, இந்தியாவுக்கு வந்தபோது பேசிய கருத்துகள், போட்டுக்கொண்ட ஒப்பந்தங்களால் புல்லரித்துப் போயினர் இந்திய ஆளும் வர்க்கமும் அதிகாரிகளும். இந்தியாவின் மேலாதிக்கத்திற்கான சாகர் திட்டத்துக்கு இலங்கை முழுமையாக ஒப்புக்கொண்டு விட்டது; இந்தியப் பெருங்கடலில் சீனாவின் ஆதிக்கத்தை இனி எதிர்கொண்டு விடலாம்; சில பத்தாயிரம் கோடிகளை அள்ளிக்கொடுத்து இலங்கையை வளைத்து விடலாம் என்று கணக்கு போட்டனர். ஆனால், தெற்காசியப் பகுதியில் அதிகரித்துவரும் சீன மேலாதிக்க நடவடிக்கைகள், இந்தியாவின் கணக்கு அவ்வளவு எளிதாகக் கைக்கூடாது என்பதையே காட்டுகின்றன.

சீனாவின் பட்டுப்பாதை – இலங்கையின் சுருக்குக்கயிறு:

“இலங்கை நிலம், இந்தியப் பாதுகாப்புக்கு எதிரான நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தப்பட அனுமதிக்க மாட்டோம்” என்று இந்தியாவுக்கு வந்தபோது, மோடியிடம் வாக்குறுதிக் கொடுத்தார் அநுர. அடுத்த மாதமே, சீனாவிற்குப் பயணம் செய்து சீனாவையும், சீனக் கம்யூனிஸ்ட் கட்சியையும் வானளாவப் புகழ்ந்து பல ஒப்பந்தங்களில் கையெழுத்துப் போட்டார்.

நவீன சமூக ஏகாதிபத்தியமாக மாறியுள்ள சீனா, பட்டுப்பாதை அல்லது பெல்ட் அண்ட் ரோடு எனப்படும் தனது உலக மேலாதிக்கத் திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தில் இணைந்துக் கொண்டு முழுமையாக ஒத்துழைப்பதாக அநுர ஒப்பந்தம் போட்டிருக்கிறார். இது குறித்து, “கொழும்பு துறைமுக நகரம் மற்றும் அம்பாந்தோட்டை துறைமுகம் ஆகியவை இரு தரப்பினருக்கும் இடையிலான பெல்ட் அண்ட் ரோடு ஒத்துழைப்பின் முக்கிய திட்டங்களாகும். “இந்த இரண்டு திட்டங்களும் சந்தேகத்திற்கு இடமின்றி இலங்கைக்கு நீண்டகால பொருளாதார நன்மைகளைக் கொண்டுவரும். அம்பாந்தோட்டை துறைமுகத்தைச் சுற்றி தொழில்துறை பூங்காக்கள் உருவாக்கப்படும். மேலும் கொழும்பு துறைமுக நகரம் அதிக முதலீட்டை ஈர்க்கும். இது இலங்கை மக்களின் வாழ்க்கைத் தரத்தை பெரிதும் மேம்படுத்தும்” என திசநாயக்க கூறினார் என்று செய்தி வெளியிட்டுள்ளது ஒரு சீன ஊடகம்.

இதே கொழும்பு துறைமுகத்தில் மேற்கு கொள்கலன் முனையத்தை, 700 மில்லியன் டாலர்கள் முதலீட்டில் அதானி நிறுவனம் கட்டி முடித்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.

ஆக, இந்தியா – சீனா ஆகிய நாடுகளுக்கிடையிலான மேலாதிக்கப் போட்டியினை ‘திறம்பட’ பயன்படுத்திக் கொண்டு, இலங்கையின் ‘நலனைக் காக்க’ நினைக்கிறார் அநுர. ஆனால், இவர் முந்தைய ஆட்சியாளர்களைப் போல ஊழல் – இலஞ்சம் செய்யாத, ‘தூய’ ஆட்சி தரும் ‘இடதுசாரி’ என்பதுதான் ஒரே வித்தியாசம்.

மறுகாலனியாதிக்கத்தை மண்டியிட்டு ஏற்கும் ‘இடதுசாரி’:

சீன ஊடகத்திற்குப் பேட்டி கொடுத்த அநுர, “சீன அரசாங்கம் மக்களை மையமாகக் கொண்டதாகவும், பொதுத் தேவைகளில் கவனம் செலுத்துவதாகவும் இருப்பதை நான் கவனித்தேன். அதேபோல், இலங்கையின் புதிய அரசாங்கமும் அதன் மக்களுக்குச் சேவை செய்வதில் அர்ப்பணிப்புடன் உள்ளது” என்றும், “சீனாவின் வறுமை ஒழிப்பு அனுபவம் ஒரு உலகளாவிய மாதிரியாகும், மேலும் ஐக்கிய நாடுகள் சபையால் பாராட்டப்பட்டது. சீனாவின் அனுபவத்திலிருந்து இலங்கை கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது,” என்றும் புகழ்ந்து தள்ளியிருக்கிறார்.

மேலும், சீனா ஒரு கடன் பொறியை உருவாக்கி இலங்கை துறைமுகங்களை இராணுவமயமாக்குகிறது என்ற மேற்கத்திய ஊடகங்களின் கருத்து தவறானது என்றும், “உலகளாவிய தென் நாடுகளுக்கு வளர்ச்சி தேவை, அதை வெளிப்புற முதலீடு மற்றும் கடன்கள் இல்லாமல் அடைய முடியாது. அத்தகைய உதவியை நாம் கடன் பொறியாக பார்க்க முடியாது” என்றும் அநுர கூறியிருக்கிறார். அதாவது, சீனா உலகிலுள்ள ஏழை நாடுகளை எல்லாம் காப்பாற்றவே கடன் கொடுக்கிறது, முதலீடு செய்கிறது என்ற சீன ஏகாதிபத்தியவாதிகளின் வார்த்தைகளை வாந்தியெடுத்துக் கொண்டிருக்கிறார் இலங்கையின் ‘இடதுசாரி’ அதிபர்.

வடக்கே இந்தியா, தெற்கே சீனா:

இலங்கையினுள் சீனக் காலனியைப் போல் அமைக்கப்பட்டுள்ள அம்பாந்தோட்டை துறைமுகத்தில் 3.7 பில்லியன் டாலர்கள் மதிப்பிலான எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க சீனாவின் சினோபெக் நிறுவனத்துடன் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. ரணில் காலத்தில் இருந்தே இது குறித்து விவாதிக்கப்பட்டாலும், அநுரவின் சீனப் பயணத்தில்தான் ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், “ஒரு நாளைக்கு 2,00,000 பீப்பாய்கள் சுத்திகரிக்கும் திறன் கொண்ட இந்த ஆலை, முதன்மையாக ஏற்றுமதிச் சந்தைகளுக்குச் சேவை செய்யும். இது நாட்டின் அந்நிய செலாவணி வருவாயை அதிகரிக்கும்” என்று இலங்கை அமைச்சர் பிமல் ரத்நாயக்க கூறியுள்ளார். அதாவது, பன்னாட்டுக் கார்ப்பரேட் நிறுவனங்கள் மூலம் உருவாகும் வளர்ச்சி குறித்து, இந்தியாவிலுள்ள அரசியல்வாதிகள் அரைத்துக் கொண்டிருக்கும் அதே மாவைத்தான் என்.பி.பி. அமைச்சரும் இலங்கையில் அரைத்துக் கொண்டிருக்கிறார்.

சுருக்கமாகச் சொன்னால், அம்பாந்தோட்டை துறைமுகம், எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம், கொழும்பு துறைமுகம் ஆகியவற்றில் சீனாவின் ஆதிக்கம் நிலைநாட்டப்படுவது இலங்கையின் தென் மாகாணங்கள் சீனாவின் ஆதிக்கத்திற்கு உட்படுவதைக் காட்டுகிறது. திரிகோணமலை துறைமுகத்திற்கு எண்ணெய் குழாய் அமைக்கும் திட்டம், இந்தியா – இலங்கை தரைவழி இணைப்புத் திட்டம் போன்ற ஒப்பந்தங்கள், கிழக்கு மற்றும் வடக்கு மாகாணங்கள் இந்தியாவின் ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வரப்படுவதைக் காட்டுகின்றன. மறுபக்கத்தில், அங்கேயே ஒரு ஐ.எம்.எஃப். அலுவலகத்தைத் திறந்து வைத்துக் கொண்டு, அரசின் அன்றாட நடவடிக்கைகளைக் கண்காணித்து, நாட்டையே அரித்துக் கொண்டிருக்கிறது அமெரிக்கா. ஒட்டுமொத்தத்தில் இலங்கை வேகமாக மறுகாலனியாகிக் கொண்டிருக்கிறது.

இலங்கையின் பொருளாதார வளர்ச்சி குறித்து – மறுகாலனியாக்கம் குறித்து – பழைய அரசாங்கங்கள் கைக்கொண்ட அதே கொள்கைகளையே, அநுரவின் அரசும் முன்னெடுக்கிறது. நாடு எதிர்கொண்டிருக்கும் பொருளாதாரச் சிக்கல்களைத் தீர்க்கும், மக்கள் நலன்சார் மாற்றுப் பொருளாதார திட்டம் எதுவும் என்.பி.பி. கூட்டணியிடம் இல்லை என்பது அம்பலமாகி வருகிறது. அவர்கள் முன்வைத்த தேர்தல் அறிக்கை, ‘வாக்குறுதிகள்’ நிரம்பிய வார்த்தை ஜாலமே ஆகும். நாடு எதிர்கொண்டுவரும் பிரச்சினைகளுக்கான உண்மைக் காரணம் என்ன, மக்கள் நலன்சார் மாற்று என்ன என்ற வகையில் அணுகாமல், நாங்கள் வந்தால் பொற்காலம்தான் என மக்களை ஏய்ப்பதே இதன் சாராம்சம் எனலாம். இந்திய – சீன மேலாதிக்க நலனுக்கான திட்டங்களையே, ஐ.எம்.எஃப். திணிக்கும் மறுகாலனியாக்கத்தையே நாட்டின் வளர்ச்சியாக சித்தரித்து நாடு அடிமையாவதை மறைக்கிறார்கள். இலங்கையின் புதிய அரசு, ஒட்டுமொத்த நாட்டையும் மறுகாலனியாக்கம் என்னும் புதைகுழிக்குள் இழுத்துச் செல்கிறது என்பதை ஜனநாயக சக்திகள் – மக்கள் உணர வேண்டிய தருணம் இது. இந்த உண்மையை உழைக்கும் மக்களிடம் கொண்டு சென்று அம்பலப்படுத்துவதும், பொருத்தமான அரசியல் – பொருளாதார மாற்றுத் திட்டத்தை முன்வைத்து மக்கள் எழுச்சிக்குத் தயார் செய்வதும் இலங்கை புரட்சிகர சக்திகளின் உடனடிக் கடமையாக உள்ளது.


ஆதி

(புதிய ஜனநாயகம் – மார்ச் 2025 இதழ்)

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க