உ.பி.: ஹோலி பண்டிகையில் இஸ்லாமியரை அடித்துக்கொன்ற காவி கும்பல்

காவி கும்பலானது இராம நவமி, விநாயகர் சதுர்த்தி போன்ற பண்டிகை நாட்களில் மசூதிகள் மற்றும் இஸ்லாமிய மக்கள் மீது திட்டமிட்ட கொடூர தாக்குதல்களை கட்டவிழ்த்துவிட்டு வருகிறது.

மார்ச் 14 அன்று இந்துக்களின் ஹோலி பண்டிகை வடஇந்திய மாநிலங்களில் கொண்டாடப்பட்டது. வெள்ளிக்கிழமையான அன்றைய தினத்தில் இஸ்லாமிய மக்களின் ரம்ஜான் பண்டிகைக்கான சிறப்பு தொழுகை நாளும் வந்தது. அன்றைய தினத்தில் இஸ்லாமிய மக்களுக்கு எதிரான வன்முறைகளை கட்டவிழ்த்து விடுவது, இஸ்லாமியர்களை படுகொலை செய்வது, பெண்களை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்குவது, இஸ்லமியர்களின் வழிபாட்டு உரிமையை பறிப்பது, மசூதிகள் மீது தாக்குதல் நடத்துவது வடமாநிலங்கள் முழுவதும் மதவெறியாட்டம் போட்டது ஆர்.எஸ்.எஸ். காவி கும்பல்.

இந்நிலையில்தான், உத்திரப்பிரதேசத்தின் உன்னாவ் பகுதியில் ஹோலி பண்டிகை முடிந்த மறுநாளான மார்ச் 15 அன்று ஹோலி வண்ணப்பொடி பூசிக்கொள்ள மறுத்ததற்காக இஸ்லாமியர் ஒருவரை காவி கும்பல் அடித்து கொன்ற சம்பவம் இந்தியா முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்திரப்பிரதேசத்தின் சதாரில் உள்ள காசிம் நகர் ரப்பன்னா மசூதி அருகே வசித்துவந்த 48 வயதான முகமது ஷெரிப் சவுதி அரேபியாவில் ஓட்டுநராக பணிபுரிந்து வந்துள்ளார். இரண்டு மாதங்களுக்கு முன்பு தன்னுடைய சொந்த ஊருக்கு திரும்பியுள்ளார். இந்நிலையில், ஹோலி பண்டிகை முடிந்த மறுநாள் சனிக்கிழமை (மார்ச் 15) அன்று அருகிலுள்ள மசூதிக்கு தொழுகைக்கு சென்றுள்ளார். செல்லும் வழியில் மொஹல்லா காஷிஃப் அலி சராய் சுங்கி பவர் ஹவுஸ் என்கிற இடத்தில் ஹோலி கொண்டாடி கொண்டிருந்த கும்பல் அவர் மீது வலுக்கட்டாயமாக ஹோலி வண்ணப்பொடிகளை வீசியுள்ளது.


படிக்க: ஹோலி பண்டிகை: காவி கும்பலின் அடுத்த ஆயுதம்!


இதற்கு அவர் எதிர்ப்பு தெரிவித்த பின்பும் மதவெறிப்பிடித்த அக்கும்பல் மீண்டும் அவர் மீது வண்ணப்பொடிகளை வீசியதால் கடுமையான வாக்குவாதம் நடந்துள்ளது. சிறுது நேரத்தில் மதவெறி போதை தலைக்கேறிய அக்கும்பல் அவரை கொடூரமாக தாக்கியுள்ளது. மிருகத்தனமான தாக்குதல்களால் மயக்கடைந்து கீழே சரிந்து விழுந்த முகமது ஷெரிப்பை அருகில் இருந்தவர்கள் மீட்டு அருகிலிருந்த மேடையில் அமரவைத்து குடிக்க தண்ணீர் கொடுத்துள்ளனர். ஆனால், சில நிமிடங்களில் கீழே சரிந்து விழுந்த முகமது ஷெரிப் அநியாயமாக உயிரிழந்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் படுகொலைக்கு காரணமானவர்களை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போராட்டங்களை ஒடுக்குவதற்காக யோகி தலைமையிலான பா.ஜ.க. அரசு பல்வேறு போலீஸ் நிலயங்களிலிருந்து போலீசையும், விரைவு அதிரடி படையினரையும் இறக்கியது. போராடிய மக்களை சமாதானப்படுத்த முயன்ற போலீசு அதிகாரி சோனம் சிங், புகார்கள் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டு தாக்குதல் நடத்தியவர்களை அடையாளம் கண்டு கைது செய்வதற்கான முயற்சிகள் நடந்து வருகின்றது என்று தெரிவித்தார்.

ஆனால், அதே உன்னவ் போலீசு ஒரு சமூக ஊடகப் பதிவில் முகமது ஷெரிப்பின் படுகொலையை ‘இயற்கை மரணம்’ என்று பொய்யாக பதிவிட்டுள்ளது. “கோட்வாலி சதார் போலீசு ஷெரிப்பின் உடலை மீட்டு வீடியோ பதிவுடன் கூடிய பிரேத பரிசோதனையை செய்தனர். பிரேத பரிசோதனை அறிக்கையில் மாரடைப்புதான் மரணத்திற்கு காரணம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. உடலில் எந்தக் காயக்குறிகளும் இல்லை. மற்ற அனைத்து அம்சங்களையும் போலீசு முழுமையாக விசாரித்து வருகின்றனர்” என்று உன்னவ் போலீசு தெரிவித்துள்ளது. ஆனால் ஷெரிப் மாரடைப்பால்தான் உயிரிழந்தார் என்பதற்கான அதிகாரப்பூர்வ மருத்துவ அறிக்கையினையும் உன்னவ் போலீசு வெளியிடவில்லை என்பது இங்கே கவனிக்கத்தக்கது.

பாசிச கும்பல் ஆட்சி செய்யக்கூடிய ராஜஸ்தான், அசாம், உத்திரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் ஹோலி பண்டிகையையொட்டி அதிகளவிலான வன்முறை சம்பவங்கள் பதிவாகியுள்ளன. காவி கும்பலானது இராம நவமி, விநாயகர் சதுர்த்தி போன்ற பண்டிகை நாட்களில் மசூதிகள் மற்றும் இஸ்லாமிய மக்கள் மீது திட்டமிட்ட கொடூர தாக்குதல்களை கட்டவிழ்த்துவிட்டு வருகிறது.

குறிப்பாக, உத்திரப்பிரதேசத்தில் யோகி தலைமையிலான பா.ஜ.க. அரசு எதிர்வரும் சட்டமன்றத் தேர்தல் ஆதாயத்திற்காக இஸ்லாமிய மக்களுக்கு எதிரான மதவெறி பிரச்சாரத்தில் ஈடுபடுவது, அம்மக்களை படுகொலை செய்வது, மதக்கலவரங்களை தூண்ட முயற்சிப்பது என தன்னுடைய தாக்குதலை தீவிரப்படுத்தி வருகிறது. அதன் மூலம் இந்து மக்களின் பெரும்பான்மையான வாக்குகளை பெறுவதற்கு எத்தனிக்கிறது. இக்கும்பலுக்கு எதிராக பரந்துபட்ட உழைக்கும் மக்களையும் ஜனநாயக சக்திகளையும் அணித்திரட்ட வேண்டியது நம் முன்னே உள்ள கடமையாக உள்ளது.


இன்குலாப்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க