அதிகரித்துவரும் காற்று மாசுபாடும் – நோய்களும்: என்ன செய்ய போகிறோம்?

உலக அளவில் காற்று மாசுபாடு அதிகம் உள்ள நகரங்களின் பட்டியலில் இந்தியாவில் மேகாலயா மாநிலத்தில் உள்ள பைர்னிஹார்ட் முதலிடத்திலும், புது தில்லி இரண்டாவது இடத்திலும் உள்ளன. காற்று மாசுபாடு அதிகம் உள்ள முதல் 100 நகரங்களில் இந்தியாவின் 74 நகரங்கள் இடம் பெற்றுள்ளன.

லகளவில் காற்று மாசுபாடு அதிகம் உள்ள நாடுகளின் பட்டியலில் இந்தியா ஐந்தாவது இடத்தில் இருப்பதை பலரும் விமர்சித்து வருகின்றனர்.

ஸ்விட்சர்லாந்தை சேர்ந்த காற்றின் தர குறியீடு தொழில்நுட்ப நிறுவனமானது (ஐ.க்யூ.ஏ.ஐ.ஆர்), 2024-ஆம் ஆண்டின் தரவுகளின் அடிப்படையில் காற்று மாசுபாடு அதிகம் உள்ள நாடுகள் மற்றும் நகரங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. 138 நாடுகளில் 8,954 நகரங்களிலிருந்து காற்றின் தர குறியீடு தரவுகள் சேகரிக்கப்பட்டு இவ்வறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காற்றின் தர கண்காணிப்பு மையங்களிலிருந்து தரவுகள் சேகரிக்கப்பட்டுள்ளன.

காற்று மாசுபாடு அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில் ஆப்பிரிக்க நாடான சாட் முதலிடத்தில் உள்ளது. இந்நாட்டில், காற்று மாசுபாட்டை அளவிடும் பி.எம். 2.5 நுண் துகளின் அளவு பரிந்துரைக்கப்பட்டதை விட 18 மடங்கு (91.8) அதிகமாக பதிவாகியுள்ளது. அடுத்தடுத்த இடங்களில் வங்கதேசம் (78), பாகிஸ்தான் (73.7), காங்கோ (58.2) ஆகிய நாடுகள் உள்ளன.

ஐந்தாவது இடத்தில் இந்தியா (50.6) உள்ளது. உலக சுகாதார அமைப்பின் பரிந்துரை அளவைவிட பத்து மடங்கு அதிகமாக இந்தியாவில் காற்று மாசுபாடு நிலவுகிறது. இந்தியாவில் காற்று மாசுபாடு சார்ந்த உயிரிழப்புகள் அதிகரித்து வருவதாக பல்வேறு ஆய்வுகள் எச்சரிக்கின்றன.

மேலும், உலக அளவில் காற்று மாசுபாடு அதிகம் உள்ள நகரங்களின் பட்டியலில் இந்தியாவில் மேகாலயா மாநிலத்தில் உள்ள பைர்னிஹார்ட் முதலிடத்திலும், புது தில்லி இரண்டாவது இடத்திலும் உள்ளன. காற்று மாசுபாடு அதிகம் உள்ள முதல் 100 நகரங்களில் இந்தியாவின் 74 நகரங்கள் இடம் பெற்றுள்ளன.

கடந்த 2021-ஆம் ஆண்டில் உலகளவில் ஏற்பட்ட மொத்த உயிரிழப்புகளில் 12 சதவிகிதம், அதாவது 81 லட்சம் பேர், காற்று மாசுபாடு காரணமாக உயிரிழப்பதாக ஐ.நா-வின் யுனிசெப் அமைப்பின் ஆய்வில் தெரியவந்துள்ளது. இதில் இந்தியாவில் 21 லட்சம் பேரும் சீனாவில் 23 லட்சம் பேரும் காற்று மாசுபாட்டால் உயிரிழந்துள்ளனனர். இவ்விரு நாடுகள் இணைந்து மொத்த உலகளாவிய இறப்புகளில் 54 சதவிகிதத்தை கொண்டுள்ளன.

புதிய நோய்களை பெற்றெடுக்கும் மறுகாலனியாக்கம்:

தெற்காசியாவில் புகையிலை, உணவு பற்றாக்குறை, உயர் இரத்த அழுத்தம் உள்ளிட்ட பாதிப்புகளுக்கு அடுத்து அதிக அபாயம் கொண்டதாக காற்று மாசுபாடு திகழ்கிறது.

நுரையீரல் நோய்களில் 40 சதவிகிதம் காற்று மாசுபாடு காரணமாகவே ஏற்படுகின்றன. இவை, வயது முதிர்ந்தவர்களுக்கு அதிகமாக வருகின்ற இதய நோய், பக்கவாதம், சா்க்கரை நோய், நுரையீரல் புற்றுநோய் போன்ற தொற்றா நோய்களின் அபாயத்தை அதிகரிக்கும் வல்லமை கொண்டதாக உள்ளன. குறிப்பிட்ட காலத்துக்கு முன்பே பிறந்த குழந்தைகளின் மரணம் ஆகியவற்றுக்கு 60 சதவிகிதம்வரை காற்று மாசுபாடுதான் காரணம் என்று ஐ.சி.எம்.ஆா். ஆய்வு முடிவு கூறுகிறது.

உலக சுகாதார நிறுவனத்தின் தரவுகளின்படி நுரையீரல் புற்றுநோயால் ஏற்படும் 29 சதவிகித மரணத்துக்கு காற்று மாசுபாடு காரணமாகிறது. மேலும், இதய நோயால் ஏற்படும் இறப்புகளுக்கு 2.5 சதவிகிதமும், சுவாச நோய்த்தொற்று இறப்புக்கு 17 சதவிகிதமும், பக்கவாதத்தால் ஏற்படும் இறப்புகளுக்கு 24 சதவிகிதமும் காற்று மாசுபாடு காரணமாகிறது.

ஞாபக மறதி நோய் (டிமென்ஷியா), மன இறுக்கம் மற்றும் ஒரு சில நரம்பியல் கோளாறுகளுக்கு காற்று மாசுபாடு எப்படி காரணமாகிறது என்பதை ஆராய்ச்சியாளா்கள் கண்டறிந்துள்ளனர். மேலும், ஒரு கா்ப்பிணி பெண் காற்று மாசுபாட்டால் பாதிக்கப்படும்போது எடை குறைந்த குழந்தை பிறப்பு, முன்கூட்டியே குழந்தை பிறப்பு போன்ற பாதிப்புகள் ஏற்படக்கூடும் என்று எச்சரிக்கை விடுக்கின்றனர்.


படிக்க: இந்தியாவில் காற்று மாசுபாட்டினால் ஆண்டுந்தோறும் 15 லட்சம் மக்கள் உயிரிழப்பு


தில்லியில் ஏற்கெனவே 22 லட்சம் குழந்தைகள் நுரையீரல் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டுள்ளனர். உலக சுகாதார அமைப்பு கருத்தின்படி, தில்லியில் ஏற்படும் மாசுபாடானது, கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பகுதி பக்கவாதம், இதயக் கோளாறுகள் மற்றும் நுரையீரல் புற்றுநோய் போன்ற நோய்களுக்கு காரணமாகின்றன. தில்லியில் காற்று மாசுபாட்டால் ஏற்படும் உடல்நலக் கோளாறுகளால் ஆண்டுக்கு 10,000 முதல் 30,000 போ் வரை இறப்பதாக பல்வேறு ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

மலேசியாவைச் சேர்ந்த காற்று மாசுபாடு ஆய்வாளர் ஃபாத்திமா அஹமத் பேசுகையில், “மாசுபட்ட காற்றை நீண்ட காலம் சுவாசிப்பதால் சுவாசக் கோளாறு, அல்சைமர் நோய், புற்றுநோய் ஆகியவை ஏற்படலாம். காற்று மாசுபாடு காரணமாக ஒவ்வொரு ஆண்டும் சுமார் 70 லட்சம் உயிரிழப்புகள் ஏற்படுகின்றன என்று உலக சுகாதார அமைப்பு மதிப்பிட்டுள்ளது. மேலும், உலக மக்கள்தொகையில் 99 சதவிகிதம் பேர் பரிந்துரைக்கப்பட்ட காற்று தர அளவை பூர்த்தி செய்யாத இடங்களில் வாழ்கிறார்கள் என்று உலக சுகாதார அமைப்பு முன்பு கண்டறிந்துள்ளது. உங்களிடம் மோசமான தண்ணீர் இருந்தால், ஒருவேளை தண்ணீர் இல்லை என்றாலும், நல்ல தண்ணீர் வரும்வரை அரை மணிநேரம் உங்களைக் காத்திருக்கச் சொல்லலாம். ஆனால், நீங்கள் மோசமான காற்று நிலவும் இடங்களில் இருந்தால், சுவாசிப்பதை நிறுத்தச் சொல்ல முடியாது” என்கிறார்.

சராசரி இந்தியரின் ஆயுட்காலத்தை 5.3 ஆண்டுகள் வரை காற்று மாசுபாடு குறையச் செய்யும்; அதேநேரம், வட இந்தியாவில் காற்று மாசுபாடு காரணமாக அங்கு உள்ளவா்களின் ஆயுள் எட்டு ஆண்டுகள் வரை குறையும். உலக சுகாதார அமைப்பின் வழிகாட்டுதல்களுடன் ஒப்பிடும்போது தில்லியில் 1.8 கோடி மக்கள் சராசரியாக 11.9 ஆண்டுகள் ஆயுட்காலத்தை இழக்கும் நிலையில் உள்ளனா். இந்தியாவில் 103 கோடி போ், மாசுபாட்டின் அளவில் உலக சுகாதார நிறுவனத்தின் வழிகாட்டுதலை மீறும் பகுதிகளில் வாழ்கின்றனா் என்று சொல்லப்படுகிறது. 1998-ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் காற்று மாசுபாடு இப்போது 67.7 சதவிகிதம் அதிகரித்துள்ளது.

நாசமாக்கப்படும் சுற்றுச்சூழல்: என்ன செய்யப் போகிறோம்?

பெய்ஜிங், சியோல், தென்கொரியா, போலந்து நாடுகளில் உள்ள பல நகரங்களில் வாகனங்கள், மின் உற்பத்தி நிலையங்கள், தொழிற்சாலைகள் மீதான கடுமையான விதிமுறைகள் மூலம் தங்கள் காற்றின் தரத்தை மேம்படுத்தி வருகின்றன. சுகாதாரமான முறையில் ஆற்றலை ஊக்குவித்து பொது போக்குவரத்தில் முதலீடு செய்து வருகின்றனர். சில நாடுகள் தனியார் போக்குவரத்தை கட்டுபடுத்தி பொது போக்குவரத்தை அதிகரித்து வருகின்றன.

இவையெல்லாம் உடனடியான சீர்த்திருத்த நடவடிக்கையாக இருந்தாலும் பெரும்பாலான நாடுகள் தனியார்மயம், தாராளமயம், உலகமயக் கொள்கையை தீவிரமாக கடைபிடித்து வருகின்றன. இதன்விளைவாக கார்ப்பரேட் கும்பல் தனது லாப வெறிக்காக சுற்றுச்சூழலையும், இயற்கை வளங்களையும் கொள்ளையடித்து சூறையாடி வருகிறது. கார்ப்பரேட் கும்பலின் நடவடிக்கைகளை நிறுத்தாமல் சிறுசிறு சீர்திருத்தங்களை செய்வதனால் பெரிதும் பயனளிக்க போவதில்லை. இன்றைய நிலையில் உலகெங்கும் புதிய நோய்கள் உருவாகுவதும், தீர்க்க முடியாத அளவில் நோய்கள் பெருகி வருவதும் மனித இனத்திற்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக மாறியிருக்கிறது.

இந்தியாவில் தனியார்மயம்-தாராளமயம்-உலகமயம் என்ற மறுகாலனியாக்கக் கொள்கையை அமல்படுத்தியதிலிருந்து சுற்றுச்சூழல் பாதுகாப்பு விரோதமான நடவடிக்கைகளால் இயற்கை வளங்கள் நாசமாக்கப்பட்டு கொண்டிருக்கிறது. பாசிச மோடி கும்பல் ஆட்சிக்கு வந்ததிலிருந்து அதானி, அம்பானி போன்ற கார்ப்பரேட் கும்பலுக்கு இயற்கை வளங்களை தாரைவார்ப்பதும், அவர்களின் இயற்கை சுரண்டலுக்கு சாதகமான சட்டங்களை திருத்துவதும், நாசகர திட்டங்களை அமல்படுத்துவதும் வாடிக்கையாக கொண்டுள்ளது. இன்று பிறக்கும் குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை அனைவரும் புதிய நோய்களுக்கு ஆட்படுவது இயல்பானதாக மாற்றப்பட்டுக் கொண்டிருக்கிறது. இயற்கை வளங்கள், சுற்றுச்சூழல் மீதான பாதுகாப்பை பேணும் சரியான மாற்று திட்டத்தை முன்வைத்து போராட்டக்களத்தை கட்டியமைக்க வேண்டியுள்ளது.


குழலி

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க