பள்ளிகளில் அதிகரிக்கும் பாலியல் வன்கொடுமைகள்: தீர்வின் திசை எது?

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் அதிகரித்துவரும் சூழலில், குழந்தைகளின் பாதுகாப்பு மையமாக விளங்க வேண்டிய பள்ளிகளிலேயே இத்தகைய பாலியல் கொடூரங்கள் அரங்கேறி வருவது மிகவும் அபாயகரமான போக்காக உள்ளது.

ந்தாண்டு தொடக்கத்தில் அண்ணா பல்கலைக்கழக மாணவி ஒருவர் பல்கலைக்கழக வளாகத்திலேயே பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும் பேசுபொருளானது. கல்வி நிறுவனங்களில் மாணவிகளின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கிய இச்சம்பவத்திற்கு பிறகு, தமிழ்நாடு முழுவதும் குறிப்பாக, பள்ளிகளில் பெண் குழந்தைகள் மீதான பாலியல் வன்முறைச் சம்பவங்கள் அடுத்தடுத்து அரங்கேறிவருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த பிப்ரவரி மாதம் கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்துவந்த மாணவி, அதே பள்ளியைச் சார்ந்த மூன்று ஆசிரியர்களால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட கொடூரச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது. மேலும், பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட மாணவிக்கு கருக்கலைப்பு செய்யப்பட்ட அதிர்ச்சிகர தகவலும் வெளியானது.

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே சிக்கனம்பட்டி ஊராட்சி குப்பூரில் அரசு மாதிரி பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு மாணவி ஒருவருக்கு அப்பள்ளியில் தற்காலிக உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றிவந்த சிவக்குமார் என்பவன் பாலியல் தொந்தரவு அளித்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது.

கோவை மாவட்டம், மருதமலை அருகே ரேஸ்கோர்ஸ் சாலை பகுதியில் அமைந்துள்ள ஒன்றிய அரசுப் பள்ளியில் ஓவிய ஆசிரியராக பணியாற்றிவரும் ராஜன் என்பவன் வகுப்பு நேரத்தில் ஓவியப் பயிற்சி அளிக்கும்போது மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்துள்ளான். இதுகுறித்து மாணவிகள் பள்ளியின் முதல்வரிடம் புகார் அளித்ததன் பேரில் ஓவிய ஆசிரியர் ராஜன் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளான்.

13-க்கும் மேற்பட்ட மாணவிகளை பாலியல் வன்முறைக்குள்ளாக்கிய பாலியல் பொறுக்கி சிவராமன்.

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே செயல்பட்டுவரும் தனியார் சி.பி.எஸ்.சி. பள்ளியில் நான்காம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு அப்பள்ளியின் தாளாளர் சுதாவின் கணவர் வசந்தகுமார் (54) பாலியல் தொல்லை கொடுத்துள்ளான். இது சம்பந்தமாக விசாரிக்க பள்ளிக்குச் சென்ற மாணவியின் பெற்றோரிடம் பள்ளியின் தாளாளர் சுதா, “எனது கணவர் இன்னும் இரண்டு நாட்களில் வெளிநாடு சென்றுவிடுவார். இந்தப் பிரச்சினையை பெரிதாக்க வேண்டாம்” என்று கேட்டுக்கொண்டதாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த மாணவியின் தந்தை, உறவினர்கள் உள்ளிட்ட நூற்றுக்கணக்கானோர் பள்ளி முன்பு திரண்டு பாலியல் தொல்லை கொடுத்த வசந்தகுமார் மீதும் பள்ளி நிர்வாகத்தின் மீதும் உடனடியாக நடவடிக்கை எடுத்திட வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டதோடு ஆத்திரத்தில் பள்ளிக்குள் புகுந்து அலுவலகத்தை அடித்து உடைத்தனர்.

மேற்குறிப்பிட்டவை அனைத்தும் கடந்த ஒரு மாதத்திற்குள் நடந்த, ஊடக வெளிச்சம் பெற்ற சில சம்பவங்கள் மட்டுமே. இவையில்லாமல் பள்ளியில் பணிபுரியும் சத்துணவு அமைப்பாளர் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது; பள்ளிக்கு சென்றுவரும் மாணவிகளை வழிமறித்து பாலியல் தொல்லை கொடுத்தது; ஆபாசப் படங்களுக்கு அடிமையான சிறுவர்கள் சிறுமியைக் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்தது என பல்வேறு சம்பவங்கள் இந்த ஒரு மாத காலத்திற்குள் நடந்துள்ளன.

குழந்தைகளுக்கெதிரான பாலியல் வன்முறைகள் அதிகரித்துவரும் சூழலில், குழந்தைகளின் பாதுகாப்பு மையமாக விளங்க வேண்டிய பள்ளிகளிலேயே இத்தகைய பாலியல் கொடூரங்கள் அரங்கேறி வருவது மிகவும் அபாயகரமான போக்காக உள்ளது.

வெற்று அறிவிப்புகளன்றி வேறொன்றுமில்லை

பள்ளிகளில் அதிகரித்துவரும் பாலியல் வன்முறைச் சம்பவங்கள் குறித்து கருத்து தெரிவித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, பாலியல் துன்புறுத்தல் சம்பவங்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாக நடந்து கொண்டிருக்கிறது என்கிறார். இதிலிருந்தே குழந்தைகள் பாதுகாப்பு மீது தி.மு.க. அரசு கொண்டுள்ள அக்கறையின் லட்சணத்தை புரிந்துகொள்ள முடியும். எந்த பிரச்சினை எழுந்தாலும் அதை மூடிமறைப்பதற்கும், முட்டுக்கொடுப்பதற்கும் தி.மு.க. அரசு எடுக்கும் முயற்சிகளில் கால்வாசி கூட அப்பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக எடுப்பதில்லை. பள்ளிகளில் அதிகரித்துவரும் பாலியல் வன்முறைப் பிரச்சினையிலும் இதேநிலைதான் தொடர்கிறது.

சான்றாக, கல்வி நிறுவனங்களில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் நடைபெறாமல் தடுக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான உயர்நிலை ஆலோசனைக் கூட்டம் ஒன்று கடந்த பிப்ரவரி மாதத்தில் தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் என். முருகானந்தம் தலைமையில் நடைபெற்றது. இதில், கல்வி நிறுவனங்களில் புதியதாக ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்களை (தற்காலிக மற்றும் நிரந்தர) பணி நியமனம் செய்யும் முன் போலீஸ்துறை சரிப்பார்ப்பு சான்று (Police verification certificate) பெறுவது கட்டாயமாக்கப்படும்; போக்சோ வழக்குகளில் தண்டனை பெற்ற ஆசிரியர்கள் மற்றும் இதர பணியாளர்களின் பள்ளி மற்றும் உயர்கல்வி சான்றிதழ்கள் தகுந்த விதிமுறைகளைப் பின்பற்றி இரத்து செய்யப்படும்; குழந்தைகளுக்கு சுய பாதுகாப்பு கல்வி வழங்கப்படும் என பல அறிவிப்புகள் தமிழ்நாடு அரசு சார்பில் வெளியிடப்பட்டன.

தி.மு.க. அரசு அதிரடியான நடவடிக்கைகளை எடுப்பதுபோல ஊடகங்கள் இந்த அறிவிப்புகளை ஊதிப் பெருக்குகின்றன. ஆனால், ஏற்கெனவே 2012-இல் அ.தி.மு.க. ஆட்சிக்காலத்தில் பாலியல் குற்றங்களில் ஈடுபடும் ஆசிரியரின் கல்விச் சான்றுகள் அனைத்தையும் இரத்து செய்வது உள்ளிட்ட அம்சங்களைக் கொண்ட அரசாணை (அரசாணை நிலை எண். 121) நிறைவேற்றப்பட்டுள்ளது. ஆனால், இதில் எதுவும் நடைமுறைக்கு செல்லவில்லை என்பதே எதார்த்தம். இந்த அரசாணையின்கீழ், எத்தனை குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது என்ற விவரங்களே தங்களிடம் இல்லை என்கிறார் பள்ளிக்கல்வித்துறை செயலாளர் சந்திரமோகன். தற்போதுள்ள அரசாவது, 2012 அரசாணையை முறையாக நடைமுறைக்குக் கொண்டுவர வேண்டும் என்ற கோரிக்கையை குழந்தைகள் நல ஆர்வலர்கள் பலர் முன்வைத்து வருகின்றனர்.

எனவே, தற்போது தி.மு.க. அரசு வெளியிட்டுள்ள இந்தப் புதிய அறிவிப்புகள் மக்கள் மத்தியில் எழும் கொந்தளிப்பைத் தணிப்பதற்காக வெளியிடப்பட்டுள்ள வெற்று அறிவிப்புகள் மட்டுமே என்பது தெளிவாகிறது.

அதேபோல, கடந்த பத்து ஆண்டுகளில் பாலியல் புகார்களில் சிக்கிய ஆசிரியர்களின் பட்டியலைக் கல்வித்துறைச் சேகரித்துள்ளதாகவும் ஒரு செய்தி வெளியாகியுள்ளது. இப்பட்டியலில், தொடக்கக் கல்வித்துறையில் 80 பேர், பள்ளிக்கல்வித்துறையில் 175 பேர் என 255 பேர் இடம்பெற்றுள்ளனர். இவர்கள் மீது பணிநீக்கம், கல்வித்தகுதி இரத்து உள்ளிட்ட நடவடிக்கைகளை எடுக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், இவையும் எந்தளவிற்கு நடைமுறைக்கு செல்லும் என்பது கேள்விக்குறிதான்.

ஏனெனில், தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டவர்களில் 16 சதவிகிதம் பேர்தான் தண்டனை பெறுகிறார்கள். தமிழ்நாட்டில் 2012 – ஜூன் 2022 காலகட்டத்தில் மட்டும் 20,829 போக்சோ வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஆனால், இதில் 60 சதவிகிதத்திற்கும் மேலான வழக்குகள் இன்னும் நிலுவையில் உள்ளன.

அதிலும், பாலியல் குற்றங்களில் ஈடுபடும் ஆசிரியர்களை அதிகபட்சம் பணியிட மாற்றம் செய்வது; பணியிடை நீக்கம் செய்வது போன்ற நடவடிக்கைகள்தான் மேற்கொள்ளப்படுகிறது. சான்றாக, கிருஷ்ணகிரியில் நடந்த சம்பவத்தை எடுத்துகொள்வோம். இச்சம்பவம் குறித்து கிருஷ்ணகிரி மக்கள் அதிகாரம் அமைப்பு தோழர்கள் நேரில் சென்று விசாரித்தபோது, இவ்வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள பாலியல் குற்றவாளியான சின்னசாமி (57), குடிபோதைக்கு அடிமையானவன் என்றும் பள்ளிக்கு குடிபோதையில் வந்து வகுப்புகள் எடுப்பான் என்றும் மக்கள் தெரிவித்தனர். மற்றொரு குற்றவாளியான ஆறுமுகம் (48), ஏற்கெனவே பணிபுரிந்துவந்த பள்ளியில் பாலியல் குற்றத்தில் ஈடுபட்டதற்காக பணியிடை நீக்கம் செய்யப்பட்டு, அதன் பின்னர் மத்தூர் நடுநிலைப்பள்ளிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளான்.
ஒரு ஆசிரியரால் சர்வசாதாரணமாக குடித்துவிட்டு பள்ளிக்கு வர முடிகிறது; ஏற்கெனவே பாலியல் குற்றமிழைத்திருந்தாலும் மீண்டும் வேறு பள்ளியில் ஆசிரியராக பணிபுரிய முடிகிறது. இதிலிருந்தே, குழந்தைகளின் பாதுகாப்பில் அரசு நிர்வாகம் எந்தளவிற்கு அலட்சியமாக நடந்துகொள்கிறது என்பதைப் புரிந்துகொள்ள முடியும்.

பள்ளிகளில் நிறுவனமயமாகும் பாலியல் வன்முறைகள்

பள்ளிகளில் பாலியல் வன்முறை அதிகரிப்பது குறித்து பேசியுள்ள பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, “ஒவ்வொரு ஆண்டும், சுமார் ரூ.40,000 கோடிக்கும் அதிகமாக நிதி ஒதுக்கப்படும் பள்ளிக் கல்வித்துறையில், அரசுப் பள்ளிகளில் மட்டுமே இதுபோன்ற பாலியல் குற்றங்களும், மாணவ, மாணவியர் எதிர்கொள்ளும் இதர பிரச்சினைகளும் அதிகளவில் நடைபெறுகின்றன” என்று கூறுகிறார். இதன்மூலம், நைச்சியமாக அரசுப் பள்ளிகளில் மட்டும்தான் அதிகமாக பாலியல் வன்முறைச் சம்பவங்கள் நடக்கிறது என்பது போன்ற பிம்பத்தை ஏற்படுத்த முயல்கிறார் அண்ணாமலை.

ஆனால், அரசு மற்றும் தனியார் பள்ளி இரண்டிலும் குழந்தைகள் மீதான பாலியல் வன்முறைகள் அதிகரித்து வருகிறதென்றாலும், அரசு பள்ளிகளைக் காட்டிலும் தனியார் பள்ளிகளில்தான் நிறுவனமயமான முறையில் பாலியல் வன்கொடுமைகள் அரங்கேறி வருகின்றன. பத்ம சேசாத்ரி (ராஜகோபாலன்), சின்மயா (மிதுன் சக்ரவர்த்தி), சுஷில் ஹரி பள்ளி (சிவசங்கர் பாபா), கள்ளக்குறிச்சி சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, ஸ்ரீசைதன்யா தனியார் பள்ளி என நிறுவனமயமான முறையில் தனியார் பள்ளிகளில் நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் ஏராளம். இந்த எல்லா வழக்குகளிலும் பள்ளி நிர்வாகமும் போலீசு, நீதிமன்றம் உள்ளிட்ட அதிகார வர்க்கமும் பாலியல் குற்றவாளிகளுக்கு ஆதரவாகவே செயல்பட்டுள்ளது.

சுஷில் ஹரி பள்ளி, சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி போன்ற தனியார் பள்ளிகளை நடத்தும் முதலாளிகளின் பணபலம், அரசியல் பலம், ஆர்.எஸ்.எஸ்., இந்து முன்னணி உள்ளிட்ட சங்கப்பரிவார கும்பலுடனான உறவு காரணமாக இந்தக் கும்பலால் பள்ளி மாணவிகள் மீதான பாலியல் சுரண்டலை எந்தவித தடையுமின்றி நடத்த முடிகிறது. அதிகார வர்க்கமும் இவர்களுடன் கூட்டுச் சேர்ந்துகொண்டு இக்குற்றங்களுக்கு உறுதுணையாக இருந்து சேவை செய்கிறது.

சான்றாக, கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே கந்திகுப்பம் என்ற இடத்தில் உள்ள கிங்ஸ்லி கார்டன் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளியில் போலி ஆவணங்கள் மூலம் என்.சி.சி. பயிற்சியாளராக பணியாற்றிவந்த நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த சிவராமன் என்பவன் 13-க்கும் மேற்பட்ட மாணவிகளைப் பாலியல் வன்முறைக்குள்ளாக்கிய கொடூரச் சம்பவம் அரங்கேறியது. இதற்கு அந்தப் பள்ளியின் முதல்வர் சதீஷ்குமார், பள்ளி தாளாளர் சாம்சன் வெஸ்லி, ஆசிரியர்கள், பயிற்சியாளர்கள் உள்ளிட்ட 11 பேர் துணையாக இருந்ததாக கைது செய்யப்பட்டனர். கடந்த மூன்று ஆண்டுகளாக கிருஷ்ணகிரி மட்டுமல்லாமல், வேறு பல மாவட்டங்களில் பல பள்ளி-கல்லூரிகளில் போலியான ஆவணங்கள் தயாரித்து தன்னை என்.சி.சி. பயிற்சியாளராக காட்டி பணியாற்றியதும் பல முகாம்களை நடத்தியதும் வெளிச்சத்திற்கு வந்தது. இந்த என்.சி.சி. முகாம்களுக்கு இராணுவம், அதிவிரைவுப்படை, போலீஸ் துறைகளில் ஏற்கெனவே பணிபுரிந்தவர்களைக் கூட்டாளிகளாக சேர்த்துக் கொண்டு இயங்கி வந்ததும் அம்பலமானது. ஆகமொத்தத்தில், பள்ளி நிர்வாகம்-கட்சி பின்னணி-அதிகாரவர்க்க கூட்டு என மிகப்பெரிய வலைப்பின்னலுடன் மிகவும் நிறுவனமயமான முறையில் அரங்கேறிவந்த இந்தப் பாலியல் வன்கொடுமை சம்பவம் அம்பலமாகி ஒட்டுமொத்த தமிழ்நாட்டையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

இதுபோன்று நிறுவனமயமான முறையில் நடக்கும் பாலியல் குற்றங்களில் பாதிக்கப்படும் மாணவிகளுக்கு நீதி கிடைப்பது என்பது இயலாத ஒன்று. இக்குற்றங்களில் ஈடுபடும் குற்றவாளிகளைக் கைதுசெய்ய வைப்பதற்கே மிகப்பெரியளவில் போராட வேண்டியுள்ளது என்பதே எதார்த்த நிலை.

போராட்டங்களே இக்கொடுமைகளுக்கு முடிவுகட்டும்!

பள்ளிகளில் அதிகரித்துவரும் பாலியல் வன்முறைச் சம்பவங்களைத் தடுப்பதற்கு குழந்தைகள் நல ஆர்வலர்களால் பெரும்பான்மையாக முன்வைக்கப்படும் தீர்வு என்பது தமிழ்நாட்டில் “குழந்தைகள் பாதுகாப்பு கொள்கையை” உருவாக்க வேண்டும் என்பதே. குழந்தைகளுக்கு பள்ளிகளில் நடக்கக்கூடிய அனைத்து வன்முறைகள் மீதும் கவனம் செலுத்தும் வகையில் இக்கொள்கை வடிவமைக்கப்பட வேண்டும் என்கிறார்கள் ஆர்வலர்கள். குழந்தைகள் பாதுகாப்பிற்கு தனிக்கொள்கை உருவாக்குவது, பாலியல் விழிப்புணர்வு கல்வி அளிப்பது, உளவியல் ஆலோசனை மையம் போன்றவையெல்லாம் அவசியமானதுதான். ஆனால், அவை மட்டும் போதாது.

பள்ளி, கல்லூரிகளில், அரசுப் பதவிகளில் வேலை செய்பவர்கள் பாலின சமத்துவம் தொடர்பான புரிதல் கொண்டவர்களாக, சமூக அக்கறை கொண்டவர்களாக இருப்பது அவர்களது தகுதிக்கான முதன்மை நிபந்தனையாக்கப்பட வேண்டும். கல்வி நிலையங்களில் மாணவர்கள் இளைஞர்களின் சங்கங்கள், பெற்றோர், ஆசிரியர்கள், மாணவர்களை உள்ளடக்கிய சங்கங்கள் நிறுவப்பட வேண்டும். அவை முழுச் சுதந்திரத்துடனும் ஜனநாயகத்துடனும் செயல்பட வேண்டும். இச்சங்கங்களின் மூலம் மாணவர்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்பட வேண்டும். இவ்வாறு பள்ளிகளில் சுதந்திரமான ஜனநாயகவெளியை உருவாக்கும்போதுதான் மாணவர்கள் தங்களுடைய பிரச்சினைகளை அச்சமின்றி வெளிப்படுத்த முடியும்.
பெரும்பாலான தனியார் பள்ளிகள் பெற்றோர்கள் பள்ளிக்குள் நுழைவதற்கு கூட அனுமதிப்பதில்லை. இவ்வாறு இல்லாமல் பள்ளிகள் வெளிப்படைத்தன்மையுடன் இயங்க வேண்டும்.
அதேசமயம், நிறுவனமயமான முறையில் அரங்கேறும் பாலியல் குற்றங்களைத் தடுப்பதற்கு கூடுதலான கவனம் செலுத்த வேண்டியுள்ளது. பாலியல் குற்றவாளிகளைப் பாதுகாக்கும், கண்டுகொள்ளாமல் விடும், தனியார் பள்ளிகளை சீல் வைத்து, அரசு தன் பொறுப்பில் எடுத்து நடத்த வேண்டும். பாலியல் குற்றவாளிகளுக்கு துணைபோகும் அரசு அதிகாரிகளைக் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும். ஆர்.எஸ்.எஸ். உள்ளிட்ட சங்கப் பரிவார அமைப்புகளுடன் தொடர்பில் இருக்கும் பள்ளிகளில் இத்தகைய பாலியல் குற்றங்கள் அதிகளவு நடைபெறுகின்றன. எனவே அத்தகைய பள்ளிகளைக் கண்டறிந்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும், குழந்தைகள், பெண்கள் மீதான பாலியல் வன்முறைச் சம்பவங்களுக்கு முக்கிய காரணிகளாக இருக்கும் ஆபாசப் படங்களைத் தடை செய்வது; கஞ்சா, சாராயம் போன்ற போதைப்பொருள்களை ஒழித்துக் கட்டுவது; பெண்களைப் போதைப்பொருளாக சித்தரிக்கும் விளம்பரங்கள், பத்திரிகைகள் முதலியவற்றை தடை செய்வது போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். ஜனநாயக சக்திகள், ஆசிரியர்கள் மாணவர்கள் என அனைவரும் மேற்கண்ட கோரிக்கைகளை முன்வைத்து போராட்டங்களை கட்டியமைப்பதன் மூலமே இப்பிரச்சினைக்கு தீர்வு காணும் திசையை நோக்கி முன்னேற முடியும்.


மதி

(புதிய ஜனநாயகம் – மார்ச் 2025 இதழ்)

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க