நாக்பூர் கலவரம்: ஆர்.எஸ்.எஸ்-ஐ தடை செய்யாமல் இந்தியாவிற்கு அமைதியில்லை

ஆர்.எஸ்.எஸ். தலைமையகம் அமைந்துள்ள நாக்பூர் மாவட்டத்தின் மஹால் பகுதியில் இந்த ஆர்ப்பாட்டங்கள் நடந்தன. பின்னர் சத்ரபதி சிவாஜி சிலைக்கு மாலை அணிவித்த காவி கும்பல் மதவெறி முழக்கங்களை எழுப்பிக்கொண்டு ஒளரங்கசீப்பின் உருவப் பொம்மையையும் இஸ்லாமிய மக்களின் புனித நூலான குரானையும் எரித்தது.

காராஷ்டிரா மாநிலத்தின் நாக்பூர் மாவட்டத்தில் முகலாயப் பேரரசர் ஒளரங்கசீப் சிலையை அகற்ற வேண்டும் என்று முழக்கத்தை முன்வைத்து விஸ்வ ஹிந்து பரிஷத், பஜ்ரங் தளம் போன்ற ஆர்.எஸ்.எஸ்-இன் குண்டர் படைகள் திட்டமிட்ட கலவரத்தில் ஈடுபட்டுள்ளது. இச்சம்பவம் நாடு முழுவதும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிராவின் சத்ரபதி சம்பாஜி பகுதியில் அமைந்துள்ள ஒளரங்கசீப் கல்லறையை அகற்ற வேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ். கும்பல் நீண்ட நாட்களாக வெறுப்பு பிரச்சாரம் செய்து வந்தது. அதற்காக “ஒளரங்கசீப் ஒரு கொடுங்கோலன்”, “சத்ரபதி சம்பாஜியை படுகொலை செய்தவன்” என்றெல்லாம் இஸ்லாமிய மக்களுக்கு எதிரான மதவெறுப்பு பிரச்சாரத்தை பரப்பி வந்தது.

அதனை தீவிரப்படுத்தும் விதமாக, சத்ரபதி சம்பாஜி கதாப்பாத்திரத்தில் விக்கி ஹெளசல் நடித்த “சாவா” என்கிற இந்தி படத்தை காவி கும்பல் திட்டமிட்டே வெளியிட்டது. அப்படத்தில் ஒளரங்கசீப்பை மிகவும் கொடூரமானவராக சித்தரித்திருந்தது. இது காவி கும்பலின் பிரச்சாரத்திற்கு துணைபோனது.

நடந்துமுடிந்த சட்டமன்றத் கூட்டத்தொடரில் பேசிய சமாஜ்வாதி எம்.எல்.ஏ. அபு ஆஷ்மி, “17-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த முகலாயப் பேரரசரை கொடூரமான சகிப்புத்தன்மையற்ற ஆட்சியாளராக நான் பார்க்கவில்லை. இப்போதெல்லாம் திரைப்படங்கள் மூலம் ஒளரங்கசீப் மீது தவறான பிம்பம் உருவாக்கப்படுகிறது” என்று சாவா படம் குறித்த தனது கருத்தினை தெரிவித்திருந்தார்.

அதனை தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட காவி கும்பல், அபு ஆஷ்மி இந்துக்கள் மனதை புண்படுத்தி விட்டதாகக் கூறி அவர் மீது பல வழக்குகளை பதிவு செய்தது. மார்ச் 26-ஆம் தேதி வரை சட்டமன்ற கூட்டத்தொடரிலிருந்து அபு ஆஷ்மியை இடைநீக்கம் செய்தது. இதன் பின்னர் ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க. கும்பல் ஒளரங்கசீப் கல்லறையை அகற்ற வேண்டும் என்கிற தீவிரமான வெறுப்பு பிரச்சாரத்தில் ஈடுபட்டது.

இந்நிலையில், நேற்று (மார்ச் 17) காலை விஷ்வ ஹிந்து பரிஷத், பஜ்ரங் தளம் உள்ளிட்ட இந்துமதவெறி காவி குண்டர் படைகள், “சத்ரபதி சம்பாஜி நகரில் உள்ள ஒளரங்கசீப் கல்லறையை அகற்றாவிட்டால், அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்டது போல கரசேவகர்கள் மூலம் கல்லறையை வேரோடு பிடுங்கி எரிவோம்” என்று மிரட்டல் விடுத்துள்ளது. காவி கும்பலுக்கு சாதகமாக மகாராஷ்டிரா பா.ஜ.க. முதல்வர் தேவேந்திர பட்நாவிஸ், “எல்லோரும் ஒளரங்கசீப் கல்லறையை இடிக்க விரும்புகிறார்கள். அதற்கான சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்” என்று வெறுப்பை கக்கினார்.

அதற்கு மேலாக, துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, “நாங்கள் மராத்தியர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கிறோம். உண்மையான தேசபக்தன் ஔரங்கசீப்பை போற்ற மாட்டான். யாரும் ஔரங்கசீப்பை ஆதரிக்க மாட்டார்கள். மகாராஷ்டிரத்தின் எதிரியின் மிச்சங்களை (ஔரங்கசீப்பின் கல்லறை) நாம் ஏன் வைத்திருக்க வேண்டும்” என்று இஸ்லாமியர்களுக்கு எதிராக மதவெறி, இனவெறியை தூண்டிவிட்டார். மாநிலத்திலுள்ள அனைத்து கட்சிகளும் இதற்கு ஆதரவளித்தன.


படிக்க: உ.பி.: ஹோலி பண்டிகையில் இஸ்லாமியரை அடித்துக்கொன்ற காவி கும்பல்


மேலும், விஷ்வ ஹிந்து பரிஷத், பஜ்ரங் தளம் அமைப்புகள் ஔரங்கசீப்பின் கல்லறையை அகற்றக்கோரி மகாராஷ்டிரா மாநிலத்தின் புனே, கோலாப்பூர், நாசிக், மாலேகான், நாக்பூர், அஹல்யாநகர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் போராட்டங்கள் என்ற பெயரில் கலவர முயற்சிகளை மேற்கொண்டது.

குறிப்பாக, ஆர்.எஸ்.எஸ். தலைமையகம் அமைந்துள்ள நாக்பூர் மாவட்டத்தின் மஹால் பகுதியில் இந்த ஆர்ப்பாட்டங்கள் நடந்தன. பின்னர் சத்ரபதி சிவாஜி சிலைக்கு மாலை அணிவித்த காவி கும்பல் மதவெறி முழக்கங்களை எழுப்பிக்கொண்டு ஒளரங்கசீப்பின் உருவப் பொம்மையையும் இஸ்லாமிய மக்களின் புனித நூலான குரானையும் எரித்தது. பின்னர் 11 மணிக்கு சிட்னிஸ் பூங்கா பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த கார் மற்றும் இருசக்கர வாகங்களுக்கு தீ வைத்து வாகனங்களை தீக்கிரையாக்கியது. வீடுகளின் மேல் கல் வீசி தாக்குதல் நடத்தி அட்டூழியத்தில் ஈடுபட்டது. இதில் 30 பேர் காயடைமந்துள்ளனர். 60 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இரவு 7.30 மணி மணிக்கு சிட்னிஸ் பூங்கா அருகே காவி கும்பல் வன்முறையை தீவிரப்படுத்தியது.

அதனைத்தொடர்ந்து இரவு 10:40 மணிக்கு ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தலைமை அலுவலகத்திலிருந்து இரண்டு கிலோ மீட்டர் தொலைவிலுள்ள ஹன்சபுரி பகுதியில் வன்முறையை தொடங்கியது காவி கும்பல். அப்பகுதியில் உள்ள வாகனங்கள் மற்றும் கடைகளுக்கு தீ வைத்து எரித்து வெறியாட்டம் போட்டுள்ளது. வீடுகள் மற்றும் மருத்துவமனை மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தியுள்ளது. இதனால் நாக்பூர் மாவட்டத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இத்தாக்குதல் சம்பவம் குறித்து ஹன்சபுரி மக்கள் கூறுகையில், “ஒரு குழு இங்கு வந்தது. அவர்களின் முகங்கள் துணிகளால் மறைக்கப்பட்டிருந்தன. அவர்கள் கைகளில் கூர்மையான ஆயுதங்கள், ஸ்டிக்கர்கள் மற்றும் பாட்டில்களை வைத்திருந்தனர். அவர்கள் கலவரத்தை தொடங்கினர். கடைகளை சேதப்படுத்தினர். கற்களை வீசினர். வாகனங்களிலும் தீ வைத்தனர்” என்று தெரிவித்துள்ளனர்.

ஆர்.எஸ்.எஸ். கும்பலானது இந்தாண்டு தனது நூற்றாண்டை கொண்டாட உள்ளது. கலவரங்களின் மூலம் இந்தியாவில் காலூன்றிய ஆர்.எஸ்.எஸ். கும்பல் தனது நூற்றாண்டையும் கலவரங்களின் மூலமே ‘கொண்டாட’ எத்தனிக்கிறது. மகாராஷ்டிரா மட்டுமின்றி, உத்தரப்பிரதேசம், மேற்குவங்கம், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களிலும் இராமநவமி, ஹோலி என இந்து பண்டிகைகளின் மூலம் கலவர முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறது. தமிழ்நாட்டில் திருப்பரங்குன்றத்தை மையப்படுத்தியும், திருவள்ளுவருக்கு காவிச் சாயம் பூசுவது போன்ற செயல்களில் ஈடுபடுவதன் மூலமும் மதக்கலவரத்தை தூண்ட காவி கும்பல் எத்தனிக்கிறது. இவையெல்லாம், ஆர்.எஸ்.எஸ். கும்பலை இம்மண்ணிலிருந்து பிடுங்கி எறிந்தால் மட்டுமே இந்திய மக்களால் இந்நாட்டில் அமைதியை அனுபவிக்க முடியும் என்பதை மீண்டும் மீண்டும் நிரூபிக்கிறது.


ஆசாத்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க