கிரீஸ் நாட்டில் மக்கள் எழுச்சியும் நாடுதழுவிய வேலைநிறுத்தப் போராட்டமும்

உலகின் நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளின் தலைநகரங்கள் உள்ளிட்டு 400 இடங்களில் கிரீஸ் நாட்டின் மக்கள் திரள் போராட்டங்கள் எழுச்சி மிக்க வகையில் நடந்திருக்கின்றது.

சென்ற பிப்ரவரி 28 அன்று ஒரே நாளில் கிரீஸ் நாட்டின் பல நகரங்களில் மொத்தமாக 265 இடங்களில் மாபெரும் மக்கள் ஆர்ப்பாட்டங்கள் நடந்தன. அத்துடன் அதே நாளில் அதே கோரிக்கைக்காக உலகின் ஆறு கண்டங்களிலும் உள்ள 132 நாடுகளில் உள்ள கிரீஸ் நாட்டின் தூதரகங்களுக்கு முன்னால் மக்கள் இதே போன்று பெரியதும் சிறியதுமான ஆர்ப்பாட்டங்களை நடத்தியிருக்கின்றனர். அதாவது உலகின் நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளின் தலைநகரங்கள் உள்ளிட்டு 400 இடங்களில் கிரீஸ் நாட்டின் மக்கள் திரள் போராட்டங்கள் எழுச்சி மிக்க வகையில் நடந்திருக்கின்றது.

கிரீஸ் நாட்டில் டெம்ப்பி நகரத்தில் கடந்த 2023-ஆம் ஆண்டு பிப்ரவரி 28 அன்று பயணிகள் ரயில் ஒன்று, நிலையத்தில் நின்று கொண்டிருந்த சரக்கு ரயிலின் மீது மோதியதால் ஏற்பட்ட விபத்தில் 57 பேர் உயிரிழந்தனர், 85 பேர் கடுமையான காயமடைந்தனர். நின்று கொண்டிருந்த சரக்கு ரயில் மீது பயணிகள் ரயில் மோதிய சிறிது நேர இடைவெளியில் மிகப்பெரிய தீப்பிழம்பு ஒன்று பந்து போல் மேலெழுந்து பரவியதால் அந்த பகுதி முழுவதுமே தீப்பிடித்து எரிந்து சாம்பலாகியிருக்கின்றது. ஆனால் அரசாங்கமோ உடனடியாக விபத்து நடந்த இடத்தின் தடயங்களை அழிக்கும் வகையில் பரபரப்பாக சுத்தம் செய்து முடித்துவிட்டது. அத்துடன் இந்த விபத்துக்கான காரணம் என்பது மனிதத் தவறு என்றும் கட்டமைப்பில் உள்ள குறைபாடுகள் என்றும் பொதுப்படையாக கூறி மக்களை நம்ப வைக்க முயன்றது. தீ விபத்து நடந்தது பற்றி எதுவுமே பேசாமல் கள்ளமௌனம் காத்தது.

அதாவது நின்று கொண்டிருந்த சரக்கு ரயிலில் எளிதில் தீப்பிடிக்கின்ற ஏதோ ஒரு ரசாயன எரிபொருள் ஏற்றப்பட்டு இருந்திருக்கிறது. இரயில்கள் மோதிய அதிர்ச்சியில் அந்த எரிபொருள் அழுத்தத்திற்குள்ளாகி பிரம்மாண்டமான அளவில் தீப்பிடித்து 100 மீட்டர் விட்டம் கொண்ட பெரிய தீப்பந்து மேலெழும்பி இருக்கிறது. விபத்தில் தப்பி உயிர் பிழைத்தவர்களும் தொடர்ந்து ஏற்பட்ட தீயினால் மாண்டு போயினர் என்பது மக்களின் குற்றச்சாட்டாகும். பல தனி ஆய்வாளர்களும் அக்கருத்தை முன் வைத்துள்ளனர். ஆனால், இரண்டாண்டுகள் ஆகியும் இதில் உயிரிழந்தவர்களுக்கு நீதி கிடைக்கவில்லை என்பதை கண்டித்தே லட்சக்கணக்கான மக்கள் ஒன்றுதிரண்டு மாபெரும் போராட்டத்தை நடத்தியுள்ளனர்.

ஜெர்மனியில் பெர்லின்; பிரிட்டனில் லண்டன், எடின்பர்க், மான்செஸ்டர்; அமெரிக்காவில் நியூயார்க், போஸ்டன்; பிரேசிலில் ரிய டி ஜெனரியோ; ஆஸ்திரேலியாவின் சிட்னி என்று உலக நாடுகளின் முக்கிய தலைநகரங்களில் எல்லாம் இப்போராட்டங்கள் பெரும்வீச்சுடன் நடந்திருக்கின்றன.


படிக்க: கிரீஸ் விவசாயிகள் போராட்டம் | புகைப்படங்கள்


கிரீஸ் தலைநகர் ஏதென்சில் மட்டும் 4.3 லட்சம் மக்கள் பங்கேற்றனர். ஏதென்சின் சின்டாக்மா சதுக்கம் ஒரு அங்குலம் இடைவெளி இல்லாமல் நிரம்பி இருந்தது. 11 மணிக்கு ஆர்ப்பாட்டம் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் சதுக்கம் எட்டு மணிக்கே நிரம்பி வழிந்தது; சதுக்கத்திற்கு வெளியே இரு திசைகளிலும் ஒரு கிலோ மீட்டர் தூரத்தை அடைத்துக் கொண்டு நின்றிருந்தது மக்கள் கூட்டம் என்று கிரீஸின் முதன்மையான செய்தி பத்திரிக்கைகள் செய்தி வெளியிட்டிருந்தன.

மக்கள் பலரும் அவரவர் தனித்தனியே வீடுகளில் தயாரித்த பதாகைகள் முழக்க அட்டைகளை கைகளில் ஏந்தி நின்றனர். அரசாங்கத்தை “கொலைகாரர்கள்” (Murderers) என்று முழங்கினர். “தனியார் மையம் கொல்லும்” (Privatisation Kills), “எனக்கு ஆக்சிஜன் கிடைக்கவில்லை” ( I have no Oxygen ) என்பது போன்ற முழக்கங்கள் எல்லோருடைய கவனத்தையும் கவர்ந்தன.

டெம்ப்பி இரயில் விபத்தில் பாதிக்கப்பட்டோரின் உறவினர்கள் சங்கம் என்கிற அமைப்புதான் அரசுக்கு எதிரான இம்மக்கள் போராட்டத்திற்கு முதலில் அழைப்பு விடுத்தது. பின்னர் அதற்கு ஆதரவாக பொதுத்துறைகள் தொழிற்சங்க கூட்டமைப்பு மற்றும் தனியார் தொழிலாளர்கள் சார்ந்த கிரேக்க தொழிலாளர்கள் கூட்டமைப்பு ஆகிய இருபெரும் அமைப்புகளும் ஒன்றிணைந்து பொது வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்திருந்தன. தொழிலாளர்கள், இளைஞர்கள், மாணவர்கள் என்று பல லட்சக்கணக்கான மக்கள் பங்கேற்ற வேலை நிறுத்தங்களும் பெருந்திரள் ஆர்ப்பாட்டங்களும் போராட்டங்களும் கிரீஸ் முழுவதிலும் ஏதென்ஸ் உள்ளிட்ட ஏறக்குறைய எல்லா நகரங்களிலும் நடந்திருக்கின்றன.

2008-இல் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிக்கு பின் கிரீஸ் நாட்டில் எத்தனையோ மக்கள் திரள் போராட்டங்கள் நடந்திருக்கின்றன. ஆனாலும் இவ்வளவு மக்கள் ஒருசேர பங்கேற்றதில்லை. இந்தப் போராட்டத்தில் மொத்த நாடுமே ஸ்தம்பித்துப் போனது என்றால் மிகை இல்லை. நாட்டில், பேருந்துகள், ரயில்கள், விமானங்கள் அனைத்தும் அதாவது எல்லா போக்குவரத்தும் ஒட்டுமொத்தமாக நிறுத்தப்பட்டன. விமானங்கள் அனைத்தும் தரையிறக்கப்பட்டதுடன் ஆங்காங்கே அப்படி அப்படியே நிறுத்தி வைக்கப்பட்டன. விமான சேவைகள் அனைத்தும் இரத்து செய்யப்பட்டன.

எல்லா துறை சார்ந்த தொழிலாளர்களும் அதாவது மீன்பிடிக்கும் கடலோடிகள் தொடங்கி ரயில் ஓட்டுநர்கள், விமான ஓட்டுநர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள், ஆசிரியர்கள், வழக்குரைஞர்கள் என்று எல்லாரும் வேலைநிறுத்தத்தில் பங்கேற்றுள்ளனர். எல்லா அரசு அலுவலகங்களும் பலவகை தனியார் அலுவலகங்களும் மூடப்பட்டிருந்தன. நாடு தழுவிய வகையில் பெரும்பாலான கடைகளும் மூடப்பட்டிருந்தன. மருத்துவமனைகளில் அவசரப் பிரிவுகள் மட்டுமே இயக்கப்பட்டன. சிலவகை ரயில்கள் மட்டும் இயக்கப்பட்டன. காரணம், அவைதான் பயணிகளை போராட்ட களங்களுக்கு கொண்டு செல்ல வேண்டி இருந்தது என்று பத்திரிகையாளர்கள் எழுதினர்.

இது ஒரு சமூக சுனாமி என்று தலையங்கம் எழுதியுள்ளது ஒரு பத்திரிகை. இது இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் எல்லையை தாண்டியது. கொலையாளிகள் அனைவரும் அடையாளப்படுத்தப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும் என்கிற கோரிக்கைதான் மக்களை அணிதிரட்டியிருக்கிறது. ஆனால் அரசு இந்த போராட்டங்களில் மக்கள் ஈடுபடுவதை தடுப்பதற்கு இயன்ற அனைத்தையும் செய்தது. போராட்டம் நடந்த இடங்களில் ஏராளமான துறையினர் குவிக்கப்பட்டனர். கலவர தடுப்பு போலீஸ் (Riot Police) பிரிவும் குவிக்கப்பட்டருந்தது. மொத்தமுள்ள 65 ஆயிரம் போலீசில் கணிசமான பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டதாக அரசு கூறிக் கொண்டது. ஒரு கட்டத்திற்கு பிறகு கூட்டம் அதிகமானதைக் காரணமாக்கிக் கொண்டு போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசி கூட்டத்தை கலைக்க முயன்றனர். ஸ்டன்ட் கிரானேட் எனப்படும் கையெறி குண்டுகளையும் பயன்படுத்தினர். பெருத்த சத்தத்துடன் மின்னல் போன்ற ஆற்றல் மிகுந்த ஒளியை பரப்பக்கூடிய கையெறி குண்டுகளால் பத்திரிக்கையாளர் பலரும் காயமடைந்தனர்.

ரயில்வே தலைமை அலுவலகத்தில் கூரையின் மீது ஏறி “கொலைகாரர்கள்” என்ற பதாகையை உயர்த்திப் பிடித்த 25 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். சிதறி ஓடியவர்கள் மீண்டும் மீண்டும் அடுத்தடுத்த இடங்களில் போராட்டங்களில் கலந்து முழக்கமிட்டனர். செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்த ஹெவி என்னும் பெண் ஒருவர் கூறும்போது “நான் இறந்தவர்களின் நினைவுக்காகவும் குற்றவாளிகளை மறைத்து காப்பாற்றத் துடிக்கும் அரசின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவிப்பதற்காகவுமே வந்தேன்” என்று கூறினார். கிரிஸ்டாஸ் என்னும் இசை கலைஞர் கூறுகையில், “இப்பிரச்சினையில் நீதியை நிலைநாட்ட வேண்டும் என்று இந்த அரசாங்கம் எதையுமே செய்யவில்லை” என்று குற்றம் சாட்டினார். இது விபத்தல்ல உண்மையிலேயே ஒரு படுகொலை என்று கூறினார்.

விபத்தில் காயமடைந்த ஒரு பெண்மணி விபத்தை தெரிவிப்பதற்காக ஐரோப்பாவின் அவசர எண் 112-ஐ கைபேசியில் அழைத்துள்ளார். உடனே அந்தப் பகுதி முழுவதும் தீப்பிடித்து மிகப்பெரிய தீப்பந்து குப்பென்று மேலெழும்பியது. தீப்பிழம்புக்கு காரணம் அந்த சரக்கு ரயிலில் ஏற்றப்பட்டு இருந்த ஏதோ ஒரு எளிதில் தீப்பற்றும் எரிபொருள்தான் என்று பரவலாக மக்கள் கருதுகின்றனர். பல்வேறு தனி ஆய்வு நிறுவனங்களும் அந்த கருத்தை ஆமோதிக்கின்றன. இதை மறைக்கும் நோக்கத்தில்தான் அரசாங்கம் இந்த விபத்துக்கான காரணத்தையே தெளிவுபடுத்தாமல் மக்களிடம் மறைத்தும் மழுப்பியும் பேசி வருகிறது. இவை எல்லாம் உயர்மட்ட அதிகாரிகள் மற்றும் அமைச்சர்கள் தொடர்புடைய விஷயங்களாதலால் அவர்களை காப்பாற்றும் நோக்கில் அரசாங்கம் இவ்வாறு நடந்து கொள்கிறது என்பதே மக்களின் முதன்மையான குற்றச்சாட்டு ஆகும்.


படிக்க: கிரீஸ் விவசாயிகள் போராட்டம் | புகைப்படங்கள்


விபத்தில் தனது 21 வயது மார்த்தி எனும் மகளை இழந்த தாயான மரியா கிறிஸ்டியானோ என்பவர்தான் விபத்தில் இறந்தோரின் உறவினர்களுக்கான சங்கத்துக்கு தலைவராவார். “இந்த நாடாளுமன்றத்தை நோக்கி, இந்த கொலைகாரர்களை நோக்கி கேட்கிறேன்” என்று தொடங்கிப் பேசினார். “இறந்துபோன எங்கள் உறவுகளின் உடல்களை நீங்கள் அவமரியாதையான முறையில் அடக்கம் செய்தீர்கள். அவர்களின் சிதறிய எலும்புகளும் சதை துண்டுகளும் பல இடங்களில் இன்னும் வெட்டவெளியில் கிடக்கின்றன. உயிர்களின் புனிதத்தை மதியாத குற்றம் இழைத்திருக்கிறீர்கள். அவற்றுக்குரிய தண்டனையை நீங்கள் நிச்சயம் பெறுவீர்கள். இறந்தவர்கள் நிச்சயம் உங்களைப் பழிவாங்குவார்கள்” என்று குமுறினார்.

ஹெலனிக் விமானம் மற்றும் ரயில் விபத்துகளின் புலனாய்வு ஆணையம் (HARSIA – Hellenic Air and Rail Accident Investigation Authority) வெளியிட்ட அறிக்கை அரசாங்கத்தின் பொய்களை அம்பலப்படுத்தி இருக்கிறது. தீப்பிழம்பு எதனால் ஏற்பட்டது என்பதை துல்லியமாக கண்டறிய முடியாது எனினும் வல்லுநர்களின் அறிக்கைகள் மற்றும் கருத்துகள், அவதானிப்புகளை வைத்து பார்க்கும் போது இதுவரை அறியப்படாத ஒரு எரிபொருள் இருந்திருக்கிறது என்பது தெரிகிறது என்று கூறியிருக்கிறது.

இரண்டு ஆண்டுகளாகியும் அதற்கான காரணங்களை அரசாங்கம் கண்டறியவில்லை என்பது மக்களின் கோபத்திற்கு காரணமாகியது. பிப்ரவரி 28க்கு முந்திய நாள் மிகவும் பொதுவாக மனிதத் தவறுகளால் அந்த விபத்து நேர்ந்ததாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும் காலாவதியான கட்டுமானங்களும், தொழில்நுட்ப மற்றும் கட்டமைப்பு சிக்கல்களும் காரணம் என்று கூறியதை மக்கள் நம்பவில்லை. ஒரு கருத்துக் கணிப்பின்படி கிரீஸ் நாட்டு மக்கள் பத்தில் ஏழு பேர் அரசு உண்மையை மறைக்கிறது என்று கருத்துரைத்துள்ளனர்.

மக்களின் இந்தப் போராட்டம் காரணமாக பிரதமர் கிரியாக்கோஸ் மிட்சோ டாகிஸுக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானத்தை எதிர்க்கட்சிகள் கொண்டு வந்தன. இருப்பினும் ஆளும் கட்சியினரால் அது தோற்கடிக்கப்பட்டது. இந்த ஆட்சியாளர்களை சட்டரீதியாக எதுவும் செய்ய முடியாது என்ற நிலைமையை ஏற்படுத்தியது. இவையெல்லாம்தான் ஏற்கெனவே பலவாறாய் கனன்று கொண்டிருந்த பல லட்சக்கணக்கான மக்களின் கோபக் கனலைக் கிளறிவிட்டிருக்கிறது.

இவ்வாறு சட்டவிரோதமான முறையில் எங்கோ கொண்டு செல்வதற்காக ஏற்றப்பட்டு இருந்த அந்த ரகசிய எரிபொருள் குறித்த தகவல் அம்பலமாகிவிடும் என்பதை மறைக்கும் விதமாகத்தான் அரசு இந்த தீ விபத்து குறித்த உண்மையான காரணத்தை மறைத்து மேலோட்டமாகவும் மழுப்பலாகவும் பேசி வருகிறது என்பதே மக்களின் சந்தேகமாகும். இது அரசின் உயர்மட்ட அதிகாரிகள் மற்றும் அமைச்சர்கள் தொடர்புடைய மக்கள் விரோத தேச விரோத செயல்கள் என்பதனால்தான் அரசு உண்மையை மறைக்க இவ்வளவு மோசமாக முயற்சிக்கின்றது என்பது பரவலான மக்களின் கருத்தாகும்.

இப்போது இரண்டு ஆண்டுகள் முடிந்த நிலையிலும் இறந்தவர்களுக்கான எந்த நீதியும் வழங்கப்படாத நிலையில் தான் இரண்டாவது ஆண்டின் அதே நாளான பிப்ரவரி 28 அன்று இம்மாபெரும் மக்கள் போராட்டம் நடந்திருக்கிறது. இரயில் விபத்துக்கான காரணங்களை மறைக்க பார்க்கும் அரசாங்கத்தைக் கண்டிக்கும் வகையில் மட்டுமில்லாமல் அரசாங்கத்தின் பல்வேறு அரசியல் பொருளாதாரக் கொள்கைகளுக்கு எதிரான மக்களின் எழுச்சியாக இப்போராட்டங்கள் நடந்திருப்பதாக அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.


சுந்தரம்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க