போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி காசா மீது கொடூரத் தாக்குதல் | படக்கட்டுரை

காசாவிற்கான நிவாரணப் பொருட்களை நிறுத்துவது; மின்சாரம், தண்ணீர் போன்றவற்றை துண்டிக்க முயன்றது என பல்வேறு வழிகளில் காசாவை மிரட்டிவந்த இஸ்ரேல், நேற்று நேரடியாகவே காசாவில் மிகப்பெரிய வான்வழி தாக்குதலை நடத்தியுள்ளது.

டந்த ஜனவரி 19-ஆம் தேதியன்று கையெழுத்தான காசா உடனான போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி இனவெறி இஸ்ரேல் அரசானது நேற்று காசாவில் கொடூரமான தாக்குதலை நடத்தியுள்ளது.

நேற்று (மார்ச் 18) காசாவின் உள்ளூர் நேரப்படி அதிகாலை 2 மணியளவில் மக்கள் தூங்கி கொண்டிருக்கும் நேரத்தில் காசா மீது கொடூரமான வான்வழி தாக்குதலை இஸ்ரேல் நடத்தியது. தெற்கு காசாவில் உள்ள கான் யூனிஸ் மற்றும் ரஃபா, வடக்கில் காசா நகரம் மற்றும் மத்திய பகுதியில் டெய்ர் எல்-பாலா உட்பட காசா முழுவதும் நடத்தப்பட்ட இத்தாக்குதலில் 404 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 562 பேர் படுகாயமடைந்துள்ளனர். அதில் பலர் கவலைக்கிடமான நிலைமையில் இருப்பதாக பாலஸ்தீன சுகாதார அமைச்சகத்தின் தலைவர் முகமது ஜாகுத் தெரிவித்துள்ளார். இத்தாக்குதல்களில் கொல்லப்பட்டவர்களில் பலர் குழந்தைகள் என்று காசா சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. தற்காலிக பள்ளிகள், மக்கள் தங்கியிருந்த குடியிருப்பு கட்டடங்கள் போன்றவற்றை குறிவைத்தே இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

கடந்த 2023-ஆம் ஆண்டு அக்டோபர் 8 அன்று காசா மீதான இனஅழிப்பு போரை தொடங்கிய இஸ்ரேல் அரசு, பாலஸ்தீன மக்கள் அடர்த்தியாக வசிக்கக்கூடிய நகரங்கள், நிவாரண முகாம்கள், தற்காலிக தங்குமிடங்கள், மருத்துவமனைகள், கருத்தரிப்பு மையங்கள் மீதெல்லாம் கொடூரத் தாக்குதல்களை நடத்தி ஏறக்குறைய ஐம்பதாயிரம் மக்களை கொன்று குவித்தது.

ஆனால், ஒரு கட்டத்தில் இனஅழிப்பு போரை தொடர முடியாத நெருக்கடியான நிலைக்கு தள்ளப்பட்ட இனவெறி இஸ்ரேல், கடந்த ஜனவரி 19-ஆம் தேதி காசாவுடன் போர்நிறுத்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. மூன்று கட்டங்களாக நடைமுறைக்கு வந்த இப்போர்நிறுத்த ஒப்பந்தத்தின் முதல் கட்டத்தில் இருதரப்பிலிருந்தும் பணயக் கைதிகள் விடுவிக்கப்பட்டு வந்தனர்.

மார்ச் 2-ஆம் தேதியுடன் போர்நிறுத்த ஒப்பந்தத்தின் ஆறு வார கால முதல் கட்டம் முடிவுக்கு வந்தது. ஆனால், இரண்டாம்கட்ட போர்நிறுத்தத்தை அமல்படுத்தி, போரை நிரந்தரமாக முடிவுக்கு கொண்டுவருவது; காசாவிலிருந்து இஸ்ரேல் இராணுவம் முழுமையாக வெளியேறுவது போன்றவற்றை நடைமுறைப்படுத்த இஸ்ரேல் அடாவடியாக மறுத்தது. மாறாக, முதல் கட்டத்தையே தொடர வேண்டும் என்று காசாவிற்கு அழுத்தம் கொடுத்தது. இதன்மூலம் ஹமாஸ் வசமுள்ள அனைத்து இஸ்ரேலிய பணயக் கைதிகளையும் விடுவித்துவிட்டு காசா மக்களையும் ஹமாஸையும் நிராயுதபாணியாக்கி அவர்கள் மீது தாக்குதல் தொடுப்பது என்று நயவஞ்சகமாக திட்டமிட்டது. இந்த சதித்திட்டத்திற்கு இணங்க ஹமாஸ் மறுத்துவிட்டது.

இதனையடுத்து, காசாவிற்கான நிவாரணப் பொருட்களை நிறுத்துவது; மின்சாரம், தண்ணீர் போன்றவற்றை துண்டிக்க முயன்றது என பல்வேறு வழிகளில் காசாவை மிரட்டிவந்த இஸ்ரேல், நேற்று நேரடியாகவே காசாவில் மிகப்பெரிய வான்வழி தாக்குதலை நடத்தியுள்ளது.

இத்தாக்குதலில் பாலஸ்தீன மக்கள்  தங்களின் அன்புக்குரியவர்களை இழந்து கதறி அழுகின்ற காட்சிகள், உடல் சிதையுண்ட குழந்தைகள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் காட்சிகள், சிதைந்துபோன வீடுகள் போன்றவற்றின் புகைப்படங்களும் காணொளிகளும்  சமூக வலைதளங்களில் வெளியாகி  அனைவரின் மனதையும் உலுக்குவதாக உள்ளன.

000

காசாவிலுள்ள அல்- மம்தானி மருத்துவமனையில் இஸ்ரேலிய தாக்குதலால் கொல்லப்பட்ட குழந்தையின் உடலை சுமந்து செல்லும் ஆண்.
இஸ்ரேலிய தாக்குதலால் அழிக்கப்பட்ட காசாவின் நுசைராத் அகதிகள் முகாமில் இடிபாடுகளுக்குள் தனது பொருட்களை தேடும் பெண்.
காசா நகரில் உள்ள அல்- மம்தானி மருத்துவமனையில் இஸ்ரேலிய தாக்குதலால் கொல்லப்பட்டவர்களின் உடல்களுக்கு முன்பாக சொல்லமுடியாத வலிகளுடன் அமர்ந்திருக்கும் மக்கள்.
இஸ்ரேலிய தாக்குதலால் கொல்லப்பட்டவரின் உடலுக்கு முன்பாக கதறி அழும் பெண்.
இஸ்ரேலிய தாக்குதலால் படுகாயமடைந்தவரை அல்-அஹ்லி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் காட்சி.
அல்-மம்தானி மருத்துவமனையில் இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலால் கொல்லப்பட்டவரின் உடலுக்கு முன்பாக பெண் ஒருவர் கதறி அழுகின்ற காட்சி.
தாக்குதலால் படுகொலை செய்யப்பட்டவர்களுக்கு அவர்களின் உறவினர்கள் இரங்கல் தெரிவிக்கும் காட்சி.
நுசைராத் அகதிகள் முகாம் மீதான இஸ்ரேலின் தாக்குதலுக்கு பின்னர் இடிபாடுகளில் தங்களது உடமைகளை தேடி அலையும் பாலஸ்தீனயர்கள்.
நுசைராத் அகதிகள் முகாமில் அழிக்கப்பட்ட தனது வீட்டின் இடிபாடுகளில் அமர்ந்து கதறி அழும் பெண்.
தாக்குதலில் படுகாயமடைந்தவர்களை கான் யூனிஸில் உள்ள நாசர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் துயரமான காட்சி.
இஸ்ரேலிய தாக்குதலால் படுகாயமடைந்த குழந்தைகள் மருத்துவமனையில் அச்சத்துடன் சிகிச்சை பெற்று வருகின்ற காட்சி.

 

இஸ்ரேலின் வான்வழித் தாக்குதலால் சித்தக்கப்பட்டுள்ள காசா நகரம்.
இஸ்ரேலின் வான்வழித் தாக்குதலாலும் பயத்தாலும் நேற்றைய தினம் செத்து மடிந்த பாலஸ்தீன குழந்தைகள்.

 

தொகுப்பு: இன்குலாப்
நன்றி: லீமாண்டே, தி இந்து, என் ஒய் டைம்ஸ், தி கார்டியன், ஸ்க்ரால், அல்ஜசீரா, டிடபிள்யூ தமிழ்.

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க