காசாவில் இனஅழிப்பு போரை மீண்டும் தொடங்கிய இஸ்ரேல்

தெற்கு காசாவில் உள்ள கான் யூனிஸ் மற்றும் ரஃபா, வடக்கில் காசா நகரம் மற்றும் மத்திய பகுதியில் டெய்ர் எல்-பாலா உட்பட காசா முழுவதும் நடத்தப்பட்ட இத்தாக்குதலில் 404 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 562 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

டந்த ஜனவரி 19-ஆம் தேதியன்று கையெழுத்தான காசா உடனான போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி இனவெறி இஸ்ரேல் அரசானது நேற்று காசாவில் கொடூரமான தாக்குதலை நடத்தியுள்ளது.

நேற்று (மார்ச் 18) காசாவின் உள்ளூர் நேரப்படி அதிகாலை 2 மணியளவில் மக்கள் தூங்கி கொண்டிருக்கும் நேரத்தில் காசா மீது கொடூரமான வான்வழி தாக்குதலை இஸ்ரேல் நடத்தியது. தெற்கு காசாவில் உள்ள கான் யூனிஸ் மற்றும் ரஃபா, வடக்கில் காசா நகரம் மற்றும் மத்திய பகுதியில் டெய்ர் எல்-பாலா உட்பட காசா முழுவதும் நடத்தப்பட்ட இத்தாக்குதலில் 404 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 562 பேர் படுகாயமடைந்துள்ளனர். அதில் பலர் கவலைக்கிடமான நிலைமையில் இருப்பதாக பாலஸ்தீன சுகாதார அமைச்சகத்தின் தலைவர் முகமது ஜாகுத் தெரிவித்துள்ளார். இத்தாக்குதல்களில் கொல்லப்பட்டவர்களில் பலர் குழந்தைகள் என்று காசா சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. தற்காலிக பள்ளிகள், மக்கள் தங்கியிருந்த குடியிருப்பு கட்டடங்கள் போன்றவற்றை குறிவைத்தே இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இத்தாக்குதல் குறித்து பேசிய காசாவிலுள்ள ஆசிரியர் அகமது அபு ரிஸ்க், “எங்கும் இஸ்ரேலிய தாக்குதல்கள்” என்ற சத்தத்தைக் கேட்டு தானும் தனது குடும்பத்தினரும் விழித்தெழுந்ததாகக் கூறினார். “நாங்கள் பயந்தோம், எங்கள் குழந்தைகள் பயந்தார்கள். நாங்கள் உயிரோடிருப்பதை உத்திரவாதப்படுத்த எங்கள் உறவினர்களிடமிருந்து பல அழைப்புகள் வந்தன. ஆம்புலன்ஸ் ஒரு தெருவிலிருந்து இன்னொரு தெருவுக்கு ஓடத் தொடங்கியது. பல குடும்பங்கள் தங்கள் குழந்தைகளின் படுகாயமடைந்த உடல்களை தங்கள் கைகளில் ஏந்திகொண்டு உள்ளூர் மருத்துவமனைகளுக்கு ஓடின” என்று மிரட்சியுடன் தெரிவித்துள்ளார்.


படிக்க:காசா: கருத்தரித்தல் மையங்களை தாக்கி இனஅழிப்பு செய்யும் இஸ்ரேல்


கடந்த 2023-ஆம் ஆண்டு அக்டோபர் 8 அன்று காசா மீதான இனஅழிப்பு போரை தொடங்கிய இஸ்ரேல் அரசு, பாலஸ்தீன மக்கள் அடர்த்தியாக வசிக்கக்கூடிய நகரங்கள், நிவாரண முகாம்கள், தற்காலிக தங்குமிடங்கள், மருத்துவமனைகள், கருத்தரிப்பு மையங்கள் மீதெல்லாம் கொடூரத் தாக்குதல்களை நடத்தி ஏறக்குறைய ஐம்பதாயிரம் மக்களை கொன்று குவித்தது.

ஆனால், ஒரு கட்டத்தில் இனஅழிப்பு போரை தொடர முடியாத நெருக்கடியான நிலைக்கு தள்ளப்பட்ட இனவெறி இஸ்ரேல், கடந்த ஜனவரி 19-ஆம் தேதி காசாவுடன் போர்நிறுத்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. மூன்று கட்டங்களாக நடைமுறைக்கு வந்த இப்போர்நிறுத்த ஒப்பந்தத்தின் முதல் கட்டத்தில் இருதரப்பிலிருந்தும் பணயக் கைதிகள் விடுவிக்கப்பட்டு வந்தனர்.

மார்ச் 2-ஆம் தேதியுடன் போர்நிறுத்த ஒப்பந்தத்தின் ஆறு வார கால முதல் கட்டம் முடிவுக்கு வந்தது. ஆனால், இரண்டாம்கட்ட போர்நிறுத்தத்தை அமல்படுத்தி, போரை நிரந்தரமாக முடிவுக்கு கொண்டுவருவது; காசாவிலிருந்து இஸ்ரேல் இராணுவம் முழுமையாக வெளியேறுவது போன்றவற்றை நடைமுறைப்படுத்த இஸ்ரேல் அடாவடியாக மறுத்தது. மாறாக, முதல் கட்டத்தையே தொடர வேண்டும் என்று காசாவிற்கு அழுத்தம் கொடுத்தது. இதன்மூலம் ஹமாஸ் வசமுள்ள அனைத்து இஸ்ரேலிய பணயக் கைதிகளையும் விடுவித்துவிட்டு காசா மக்களையும் ஹமாஸையும் நிராயுதபாணியாக்கி அவர்கள் மீது தாக்குதல் தொடுப்பது என்று நயவஞ்சகமாக திட்டமிட்டது. இந்த சதித்திட்டத்திற்கு இணங்க ஹமாஸ் மறுத்துவிட்டது.

இதனையடுத்து, காசாவிற்கான நிவாரணப் பொருட்களை நிறுத்துவது; மின்சாரம், தண்ணீர் போன்றவற்றை துண்டிக்க முயன்றது என பல்வேறு வழிகளில் காசாவை மிரட்டிவந்த இஸ்ரேல், நேற்று நேரடியாகவே காசாவில் மிகப்பெரிய வான்வழி தாக்குதலை நடத்தியுள்ளது.

“நெதன்யாகுவும் அவரது தீவிரவாத அரசாங்கமும் போர்நிறுத்த ஒப்பந்தத்தை இரத்து செய்ய முடிவெடுத்துள்ளது” என இத்தாக்குதலை ஹமாஸ் கண்டித்துள்ளது. போர்நிறுத்தத்தை எட்டுவதற்கான அனைத்து முயற்சிகளையும் இஸ்ரேல் சீர்குலைத்து வருவதாக பாலஸ்தீன இஸ்லாமிய ஜிஹாத் (PIJ) ஆயுதக் குழு விமர்சித்துள்ளது. காசாவின் பல மூத்த அதிகாரிகளும் இக்கருத்தை வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில், நெதன்யாகு மற்றும் இஸ்ரேல் அரசாங்க அதிகாரிகளின் கருத்துகளும் இஸ்ரேலின் சதித்திட்டத்தை உறுதிப்படுத்துவதாக உள்ளன.

இஸ்ரேலில் இருந்து பிடிக்கப்பட்ட பணயக் கைதிகளை ‘விடுவிக்க மறுத்த’தற்காகவும், முதல்கட்ட போர்நிறுத்தத்தை நீட்டிக்க மறுத்ததற்காகவும் ஹமாஸுக்கு எதிராக ‘வலுவான நடவடிக்கை’ எடுக்க இஸ்ரேல் இராணுவத்திற்கு உத்தரவிட்டதாக இஸ்ரேலின் பிரதமர் பாசிஸ்ட் பெஞ்சமின் நெதன்யாகு கூறியுள்ளார். “இனிமேல், இஸ்ரேல் அதிகரித்துவரும் இராணுவ வலிமையுடன் ஹமாஸுக்கு எதிராக செயல்படும்” என்று இஸ்ரேலின் பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. மீதமுள்ள கைதிகள் விடுவிக்கப்படாவிட்டால், “நரகத்தின் வாயில்கள்” திறக்கப்படும் என்று கூறியுள்ள இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் காட்ஸ், “அனைத்து பணயக் கைதிகளும் வீடு திரும்பும் வரை மற்றும் போரின் அனைத்து நோக்கங்களும் அடையப்படும் வரை நாங்கள் சண்டையை நிறுத்த மாட்டோம்” என்று ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.


படிக்க: மீண்டும் காசாவை ஒடுக்க ஆயத்தமாகும் இஸ்ரேல்


மேலும், இத்தாக்குதலில் ஹமாஸ் தலைவர் கொல்லப்பட்டிருப்பதாக ஹமாஸ் அமைப்பு தெரிவித்துள்ளது. இவையெல்லாம் ஹமாஸை அழித்து காசாவை ஆக்கிரமிக்கத் துடிக்கும் இனவெறி இஸ்ரேலின் திட்டத்தை அம்பலப்படுத்துகின்றன.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்புடன் தாக்குதல்கள் குறித்து இஸ்ரேல் ஆலோசனை நடத்தியதாக அமெரிக்க வெள்ளை மாளிகையின் பத்திரிகை செயலாளர் கரோலின் லீவிட் கூறியிருப்பது இத்தாக்குதலுக்கு பின்னால் அமெரிக்கா இருப்பதை உறுதிப்படுத்துகிறது. முன்னதாக, உள்நாட்டு போரையும் மனிதகுல நெருக்கடியையும் சந்தித்து கொண்டிருக்கும் சூடான், சோமாலியா, சிரியா போன்ற நாடுகளுக்கு காசா மக்களை நிரந்தரமாக குடியேற்றிவிட்டு காசாவை ‘கேளிக்கை’ நகரமாக மாற்றப்போவதாக பாசிஸ்ட் டிரம்ப் பேசியிருந்தது இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.

எனவே, எப்படியேனும் காசாவை கைப்பற்றிவிட வேண்டும் என்று இஸ்ரேலும் அமெரிக்காவும் நாக்கை தொங்கவிட்டு காத்திருக்கின்றன. அதற்காக காசா மக்கள் மீது வெவ்வேறு வழிகளில் தாக்குதல் தொடுத்து வருகின்றன.

“இந்தத் தாக்குதலுக்கு எதிர்ப்புத் தெரிவிக்க அரபு மற்றும் இஸ்லாமிய நாடுகளில் உள்ள மக்களும், உலகின் சுதந்திர மக்களும் வீதிகளில் இறங்கிப் போராட வேண்டும்” என்று ஹமாஸ் அமைப்பு அழைப்பு விடுத்திருப்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். ஏனெனில், காசா உடன் போர்நிறுத்த ஒப்பந்தம் செய்துகொள்ள இஸ்ரேலை நெட்டித்தள்ளியதற்கு உலக மக்களின் பாலஸ்தீன ஆதரவு போராட்டங்கள் முதன்மையானவையாகும். அத்தகைய போராட்டங்கள் மட்டுமே தற்போது ஒப்பந்தத்தின்படி போர்நிறுத்தத்தை எட்டுவதற்கு வழிவகுக்கும்.


இன்குலாப்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க