19.03.2025

கோவை, திருப்பூர் விசைத்தறியாளர்களின்
காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் வெல்லட்டும்!

பத்திரிகை செய்தி

இன்றைய கால நிலைக்கு ஏற்ப நியாயமான கூலி உயர்வு ஒப்பந்தம் போடக் கோரியும் மின் கட்டண உயர்வை இரத்து செய்யக் கோரியும் கடந்த ஜனவரி 2024 முதல் கடந்த 15 மாத காலமாக விசைத்தறியாளர்கள் போராடி வருகின்றனர்.

தொழிலாளர் நலத்துறையுடன் கோவையில் நான்கு முறையும், திருப்பூரில் நான்கு முறையும் – எட்டுகட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றும், சோமனூர் மற்றும் தெக்கலூர் பகுதிகளில் ஆயிரக்கணக்கான விசைத்தறியாளர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தியும், 150-க்கும் மேற்பட்ட கிராமங்களில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசைத்தறிக் கூடங்களில் கருப்பு கொடி ஏற்றி போராடியும் விசைத்தறியாளர்களுக்கு தீர்வு எட்டப்படவில்லை.

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஒருமுறை பேச்சுவார்த்தை நடத்தியும் எந்தவித முன்னேற்றமும் இல்லை. மாதக் கணக்கில் போராடினாலும் மில் உரிமையாளர்கள் பேச்சுவார்த்தைகளில் கலந்துகொண்டு விசைத்தறி நெசவாளர்களின் கோரிக்கைகளுக்கு இணங்குவதில்லை. இதனால் விசைத்தறியாளர்களின் வாழ்க்கை நலிவுற்று போவதுடன், பல்லடம், சோமனூர் பகுதிகளில் பல்வேறு இடங்களில் விசைத்தறிகள் உடைக்கப்பட்டு கிடைக்கின்ற விலைக்கு விற்கும் அவலம் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், மின்கட்டண உயர்வு, விலைவாசி உயர்வு, உதிரி பாகங்கள் விலை உயர்வு, தொழிலாளர்கள் கூலி உயர்வு ஆகியவற்றிற்கு ஏற்ப விசைத்தறியாளர்களுக்கு நியாயமான கூலி உயர்வு ஒப்பந்தம் போட வேண்டும்; 2022 நெசவு கூலி உயர்வு ஒப்பந்தத்தில் தீர்மானிக்கப்பட்ட கூலியை காட்டிலும் குறைத்து வழங்கிய கூலியை இந்த ஒப்பந்தத்தில் இணைக்க வேண்டும்; கூலியை முறையாக பெறுவதற்கு சட்டப் பாதுகாப்பு வழங்கும் வகையில் ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட வேண்டும் உள்ளிட்ட நியாயமான கோரிக்கைகளை முன்வைத்து விசைத்தறியாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை அறிவித்துள்ளனர்.

கோவை, திருப்பூர் மாவட்டங்களில் இன்று (19.03.2025) முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் செய்வது என்ற அறிவிப்பை கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறியாளர்கள் சங்க கூட்டமைப்பு வெளியிட்டது. இப்போராட்டத்தால் கோவை, திருப்பூர் மாவட்டங்களில் உள்ள சோமனூர், கண்ணம்பாளையம், அவிநாசி, தெக்கலூர், புதுப்பாளையம், பெருமாநல்லூர் ஆகிய பகுதிகளில் சுமார் 1.25 லட்சம்  விசைத்தறிகள் இயக்கப்படாமல் நிறுத்தப்பட்டுள்ளன. 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசைத்தறியாளர்கள் போராட்டத்தில் கலந்துகொண்டுள்ளனர். இந்த வேலைநிறுத்த போராட்ட அறிவிப்பால் கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் காடா துணி உற்பத்தி நிறுத்தப்படும் சூழல் உருவாகியுள்ளது.

பல ஆயிரக்கணக்கான விசைத்தறியாளர்கள் மற்றும் இத்தொழிற்சார்ந்த பல லட்சக்கணக்கான தொழிலாளர்கள் தங்களது குடும்பங்களின் வாழ்வாதாரத்தை காப்பாற்றிகொள்ள வேண்டி, தங்களை தாங்களே வருத்திக்கொள்ளும் இக்கடினமான முடிவை எடுக்க வேண்டிய நிலைக்கு வேறுவழியின்றி தள்ளப்பட்டுள்ளனர்.

இந்த காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு கோவை மக்கள் அதிகாரம் ஆதரவளித்து துணைநிற்கும்.

தமிழ்நாடு அரசு, இவ்விவகாரத்தில் தலையிட்டு, ஜவுளித்துறை கூலித் தொழிலாளர்கள், விசைத்தறியாளர்களின் வாழ்வாதார பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என மக்கள் அதிகாரம் கேட்டுக்கொள்கிறது.

தமிழ்நாடு அரசே,

மின் கட்டண உயர்வை ரத்து செய்!

மில் உரிமையாளர்கள் நெசவுக்கேற்ப கூலி உயர்வு வழங்க நடவடிக்கை எடு!

கோவை, திருப்பூர் மாவட்டங்களில் கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறியாளர்களின் போராட்டம் வெல்லட்டும்!


மக்கள் அதிகாரம்,
கோவை மண்டலம்.
9488902202
தமிழ்நாடு – புதுவை
9962366321

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க