கோகுல்ராஜ் ஆணவக்கொலை வழக்கு என்பது அவ்வளவு எளிதில் யாராலும் மறக்க முடியாத சம்பவமாகும். தமிழ்நாட்டில் நடந்த சாதிக்கொலைகளின் இருண்டப் பக்கங்களில் கோகுல்ராஜ் ஆணவக்கொலையும் தவிர்க்கமுடியாத வகையில் இடம்பெறும்.
சேலம் மாவட்டம் ஓமலூரில் தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரி கோகுல்ராஜும் அவருடன் படிக்கும் ஆதிக்கச் சாதியை சார்ந்த சுவாதி என்பவரும் கடந்த 2015-ஆம் ஆண்டு ஜூன் 23-ஆம் தேதி திருச்செங்கோடு அர்த்தநாரீசுவரர் கோயிலுக்கு சென்றனர். இவர்கள் இருவரும் பேசிக்கொண்டிருப்பதை கண்ட தீரன் சின்னமலை பேரவை என்ற ஆதிக்கச் சாதி சங்கத்தின் தலைவன் யுவராஜும் அவனுடன் வந்த கும்பலும் கோகுல்ராஜ்ஜை தாக்கி கடத்திச் சென்றது. மறுநாள், நாமக்கல் அருகே உள்ள கிழக்கு தொட்டிபாளையம் இரயில் தண்டபாளத்தில் தலை வேறு உடல் வேறாகவும் நாக்கு துண்டிக்கப்பட்டும் கொடூரமான முறையில் கோகுல்ராஜ் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.
இந்த ஆணவக்கொலை சம்பவம் ஒட்டுமொத்த தமிழ்நாட்டையும் உலுக்கியது. கோகுல்ராஜின் தாய் தனது மகனின் கொலைக்கு நீதிக்கேட்டு போராடிக்கொண்டிருக்க, கொலைகாரன் யுவராஜ் தைரியமாக வெளியில் சுற்றி கொண்டிருந்தான். சாதித் திமிருடன் ஊடகங்களுக்கு நேர்காணல் கொடுத்து வந்தான். தன்னை கைது செய்ய முடியாது என்று அரசு அதிகாரிகளுக்கு நேரடியாகவே சவால் விடுத்தான். இவ்வழக்கை விசாரித்த போலீஸ் அதிகாரி விஷ்ணுப்பிரியாவும் மர்மமான முறையில் உயிரிழந்தார். நீண்ட போராட்டத்திற்கு பிறகே யுவராஜ் கைது செய்யப்பட்டான்.
ஏழு ஆண்டுகள் கழித்து கடந்த 2022-ஆம் ஆண்டு கோகுல்ராஜ் கொலை வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது. குற்றஞ்சாட்டப்பட்ட 15 பேரில் ஐந்து பேர் விடுக்கப்பட்டு 10 பேருக்கு சாகும்வரை ஆயுள் தண்டனை விதித்து உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இது கோகுல்ராஜின் தாயும் வழக்குரைஞர் தோழர் ப.பா.மோகனும் பல்வேறு நெருக்கடிகளை கடந்து நீண்டநெடிய போராட்டம் நடத்தியதன் விளைவாக கிடைத்த தீர்ப்பாகும். குறிப்பாக, சுவாதி உட்பட பலரும் பிறழ் சாட்சிகளாக மாறியதால் வழக்கின் போக்கு மாறியதை முறியடித்தது; ஆரம்பத்தில் போடப்பட்ட அரசு தரப்பு வழக்குரைஞர் சரியாக செயல்படாதது; அரசு வழக்குரைஞராக ப.பா.மோகனை நியமிக்க நடந்த போராட்டம்; அரசு வழக்குரைஞருக்கு வழங்க வேண்டிய டோல் பாஸ், ஊதியத்தை கூட ப.பா.மோகனுக்கு அரசு வழங்காதது என பல்வேறு நெருக்கடி, போராட்டங்களுக்கு பிறகுதான் யுவராஜுக்கு ஆயுள் தண்டனை பெற்று தரப்பட்டது.
படிக்க: கொலைகாரன் யுவராஜை கொண்டாடும் இழிவு: ம.க.இ.க. கண்டனம்
இந்நிலையில், கடந்த மூன்று ஆண்டுகளாக வேலூர் மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டிருந்த கொலைக் குற்றவாளி யுவராஜ், சில நாட்களுக்கு முன்பு தனது மகளின் பூப்புனித நிகழ்ச்சிக்காக பரோலில் வெளிவந்தான். சிறையில் நன்னடத்தை காரணமாக பரோல் அளிக்கப்பட்டுள்ளதாக போலீசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மக்களுக்காக போராடிய பேராசிரியர் சாய்பாபாவிற்கு தனது தாயின் மரணத்திற்கு செல்ல கூட அனுமதி மறுத்த அரசானது, கொலைக் குற்றவாளிக்கு பரோல் வழங்கி இது சாதிவெறியர்களுக்கான அரசு என்பதை நிரூபித்தது.
இந்நிலையில், யுவராஜ் பரலோலில் வெளிவந்ததை ஆதிக்கச் சாதிவெறியர்கள் ஆரவாரமாக கொண்டாடுகிறார்கள். போலீசின் முன்பே கொலைகாரன் யுவராஜ்க்கு ஆரத்தி எடுத்து வரவேற்பது; விடுதலை பேராளி போல யுவராஜை சித்தரிப்பது; “சாதிப்பெருமையை நிலைநாட்ட இன்னும் எத்தனை கொலைகள் வேண்டுமானலும் செய்யலாம்” என சமூக ஊடகங்களில் சாதிவெறியூட்டுவது என யுவராஜின் பரோல் விடுவிப்பை ஒட்டி சாதிவெறியர்கள் கொட்டமடிக்கின்றனர்.
இதன் உச்சக்கட்டமாக சாதிவெறியன் யுவராஜ் பேசும் ஒரு காணொளியில், தான் ஒரு கொலைக்குற்றவாளி என்பதற்கான எந்தவித குற்றவுணர்ச்சியுமின்றி ஏதோ மாபெரும் தியாகியை போல பேசுகிறான். அவன் பேசியதை ஆதரித்து “மாவீரன்” எனக் கோஷமிடுகின்றனர் சாதிவெறியர்கள். இதனை தடுத்து யுவராஜின் பரோலை இரத்து செய்து அவனை மீண்டும் சிறையிலடைப்பதற்கு மாறாக, சாதிவெறியன் யுவராஜ்க்கு ஜனநாயகம் வழங்கி இந்த இழிச்செயல்களை வேடிக்கைப் பார்க்கிறது அரசு கட்டமைப்பு.
இதனை கண்டித்து யுவராஜ் கொண்டாடப்படும் புகைப்படத்தையும் கோகுல்ராஜின் தாய் தனியாக நிற்கும் புகைப்படத்தையும் இணைத்து பதிவிட்டு தமிழ்நாட்டின் சாதிய இழிவை அம்பலப்படுத்துகின்றனர் முற்போக்கு இளைஞர்கள். தமிழ்நாட்டின் புரட்சிகர-ஜனநாயக சக்திகள் யுவராஜுக்கு பரோல் வழங்கியதை கண்டித்துள்ளனர்.
000
சமீப ஆண்டுகளாக தமிழ்நாடு முழுவதும் தாழ்த்தப்பட்ட மக்கள் மீதான சாதியத் தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன. சான்றாக, சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் தாழ்த்தப்பட்ட மாணவன் அய்யாச்சாமி கல்லூரிக்கு புல்லட் பைக்கில் செல்வதை சகித்துகொள்ள முடியாத மூன்று ஆதிக்கச் சாதிவெறியர்கள் அவரின் இரு கைகளையும் வெட்டினர். அவர்களின் குடும்பத்திற்கு பல ஆண்டுகளாகவே சாதி ரீதியான தொல்லை கொடுத்து வந்துள்ளனர் என்பது அதனோடு அம்பலமாகியது.
சேலம் மாவட்டம் பெரிய வடக்கம்பட்டியில் ஆறாம் வகுப்பு பள்ளி மாணவன் தெருவில் செருப்பு அணிந்து சென்றதற்காக சாதிவெறி தலைக்கேறிய இரு பெண்கள், “தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த நீ எப்படி எங்கள் தெருவில் செருப்பு போட்டுக் கொண்டு நடக்கலாம்?” என சாதிப்பெயரை சொல்லி அச்சிறுவனை இழிவாக திட்டி தாக்கியுள்ளனர்.
வேங்கைவயல் கிராமத்தில் குடிநீரில் மலம் கலந்த உண்மை குற்றவாளிகளை இரண்டாண்டுகளாக பாதுகாத்து வந்த தி.மு.க. அரசு, தற்போது பாதிக்கப்பட்ட மக்களையே குற்றவாளியாக்கியுள்ளது. திராவிட மாடல் ஆட்சி என்று சொல்லிக்கொள்ளும் தி.மு.க. ஆட்சியில் தனது கூட்டணியிலுள்ள வி.சி.க. கட்சியால் சுதந்திரமாக தனது கட்சி கொடியை ஏற்ற முடிவதில்லை.
தூத்துக்குடி மாவட்டம் திருவைகுண்டத்தில் கபடி போட்டியில் வெற்றிப் பெற்றதை கொண்டாடியதற்காக 11-ஆம் வகுப்பு படிக்கும் தேவேந்திர ராஜா என்ற சிறுவனை, ஆதிக்கச் சாதிவெறி தலைக்கேறிய 18 வயதுகுட்பட்ட மூன்று சிறுவர்கள் கொடூரமாக தாக்கியது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. நன்றாக படித்ததற்காக வீடுபுகுந்து வெட்டப்பட்ட சின்னதுரை என்ற மாணவன். தென்மாவட்டங்களில் தலைவிரித்தாடும் சாதிவெறி தாக்குதல்களுக்கு அழியா சாட்சியாக விளங்குகின்றான். அரசு பதிவுசெய்த புள்ளிவிவரத்தின்படியே, திருநெல்வேலி மாவட்டத்தில் மட்டும் கடந்த ஐந்து ஆண்டுகளில் 1095 பேர் சாதிய வன்கொடுமையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
படிக்க: கபடி போட்டியில் வென்றதற்காக தலித் மாணவன் மீது கொலை முயற்சி!
இவ்வாறு ஆதிக்கச் சாதிவெறியர்கள் தாழ்த்தப்பட்ட மக்கள் மீது தங்குதடையின்றி தொடர்ச்சியான தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். சமூகத்தில் பூதாகரமாக வெளிவரும் சம்பவங்களின்போது மட்டும் குற்றவாளிகள் மீது வழக்கு தொடர்வது என்பதோடு நிறுத்திகொள்கிறது அரசு. ஊடகங்களில் வெளிவராத சம்பங்களும் பேசுபொருளாகாத சம்பவங்களும் கற்றோடு கரைந்துவிடுகின்றன. பாதிக்கப்பட்ட மக்கள் மீதான தாக்குதல்கள் தொடர்கின்றன.
மறுபுறம், யுவராஜ் போன்ற சாதியக் கொலை குற்றவாளிகள் தியாகிகளை போல கொண்டாடப்படுவதும் அதனை அரசு வேடிக்கை பார்ப்பதும் ஆதிக்கச் சாதிவெறி மனநிலையில் இருப்பவர்களுக்கு சாதிவெறி போதையை அதிகரிப்பதாகவே அமைகிறது. மேலும், ஆதிக்கச் சாதிவெறி குற்றவாளிக்கு ராஜ மரியாதை வழங்கும் அரசு எவ்வாறு சாதி தாக்குதல்களை தடுக்க நடவடிக்கை எடுக்கும்? சாதிய தாக்குதல்களை தடுக்க வக்கில்லாத வகையிலும் அதை பாதுகாக்கும் வகையிலும்தான் அரசு உள்ளது.
மற்றொருபுறம், ஆதிக்கச் சாதி சங்ககளில் ஆர்.எஸ்.எஸ். ஊடுருவி இளைஞர்கள் மத்தியில் ஆதிக்கச் சாதிவெறியை ஊட்டி வருகிறது. யுவராஜ் பேசும் கூட்டங்களில் பங்கேற்பவர்களில் பெரும்பாலானோரும் இளைஞர்களே ஆவர். ஆகையால், சாதியத் தாக்குதல்களை தடுக்க ஆதிக்கச் சாதிவெறி சங்ககள் உட்பட, ஆர்.எஸ்.எஸ். ஊடுருவியுள்ள அனைத்து சாதி சங்கங்களும் தடை செய்யப்பட வேண்டும். யுவராஜ் போன்ற சாதியக் கொலை குற்றவாளிகளின் அனைத்து விதமான ஜனநாயகத்தையும் உரிமைகளையும் பறிக்க வேண்டும். சமூகத்தில் முற்போக்கு, சாதிய எதிர்ப்பு, சமத்துவ சிந்தனைகளை விதைக்க வேண்டும்.
சாதியக்கூறுகளை அனுமதிக்காத தாழ்த்தப்பட்ட மக்களுக்கு உண்மையான ஜனநாயகத்தை வழங்குகின்ற பாசிச எதிர்ப்பு ஜனநாயக குடியரசை அமைக்க அனைவரும் ஒன்றிணைந்துபோராட வேண்டும்.
ஹைதர்
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram