20.03.2025
நாக்பூர்: இசுலாமியர்களை ஒழித்துக் கட்ட
மகாராஷ்டிரா அரசு + ஆர்.எஸ்.எஸ் + இந்து மத வெறி கும்பல் நடத்தும் சதி!
ஆர்.எஸ்.எஸ், மார்வாடி கும்பலை தமிழ்நாட்டில் இருந்து வெளியேற்றுவோம்!
பத்திரிகை செய்தி
கடந்த சில நாட்களாக மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் முகலாய அரசர் அவுரங்கசீப்பின் கல்லறையை தகர்ப்போம் என்ற முகாந்திரத்தை வைத்துக் கொண்டு ஆர்.எஸ்.எஸ், பஜ்ரங்தள் பாசிச கும்பல் கலவரத்தை உருவாக்குவதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளன. இதை ஒட்டி நாக்பூரில் பல இடங்களில் திட்டமிட்டு இந்து மத வெறி பாசிசக் கும்பலால் கலவரங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதில் இஸ்லாமியர்களின் வீடுகள், கடைகள் உள்ளிட்டவைகள் தாக்கப்பட்டு பலர் படுகாயம் அடைந்துள்ளனர்.
சம்பாஜியைக் கொன்றவர்; இந்து மக்களை சித்திரவதை செய்தவர் என்று முகலாய மன்னர் அவுரங்கசீப்-இன் மீது பல அவதூறுகள் திட்டமிட்டு இந்து மத வெறி பாசிச கும்பலால் பரப்பப்பட்டு, மேற்கண்ட அவதூறுகளை மட்டுமே உள்ளடக்கிய அளவில் சவ்வா என்ற திரைப்படம் வெளியானது. இதற்குப் பிறகு ஒரு இந்து மதவெறி சாமியார் ஒளரங்கசீப் கல்லறையை இடிப்பவர்களுக்கு 21 லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படும் என அறிவித்தார்.
இவ்வாறு திட்டமிட்ட பொய் மற்றும் அவதூறுகளால் கலவரங்கள், ஆர்.எஸ்.எஸ் நூற்றாண்டு விழாவை ஒட்டி கட்டமைக்கப்பட்டுள்ளன.
மகாராஷ்டிரா பா.ஜ.க. முதல்வர் தேவேந்திர பட்நாவிஸ், “எல்லோரும் ஒளரங்கசீப் கல்லறையை இடிக்க விரும்புகிறார்கள். அதற்கான சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்” என்று கூறுவதன் மூலம் மகாராஷ்டிர அரசால் திட்டமிட்டு இந்த கலவரம் நடத்தப்படுவதை அறிய முடியும்.
1707ஆம் ஆண்டு இறந்த அவுரங்கசீப்பின் கல்லறையை இடிப்போம் என்று இப்பொழுது உள்ள இஸ்லாமிய மக்கள் மீது தாக்குதல் நடத்துவது என்பது உலகத்தில் எங்கேயும் நடக்காத ஒன்றாகும்.
இதற்கு எதிராக நாட்டிலுள்ள அனைத்து ஜனநாயக மற்றும் முற்போக்கு புரட்சிகர சக்திகள் ஒருங்கிணைய வேண்டும். இந்த நாட்டில் இருந்து ஆர்.எஸ்.எஸ், இந்து மத வெறி பாசிச கும்பலை விரட்டியடிப்பதற்கான திட்டத்தை முன்னெடுக்க வேண்டும்.
நாக்பூரில் நடைபெற்று வரும் இஸ்லாமிய மக்களுக்கு எதிரான கலவரத்தை நிறுத்தாவிட்டால் இப்படிப்பட்ட கலவரங்களை தமிழ்நாட்டிலும் அவர்கள் உருவாக்குவதற்கான வழி எளிதாகும்.
இஸ்லாமிய மக்களுக்கு எதிராகவும் தமிழ்நாட்டு மக்களுக்கு எதிராகவும் தொடர்ந்து செயல்பட்டு வரும் பாசிச ஆர்.எஸ்.எஸ் கும்பலும் மார்வாடி கும்பலும் தமிழ்நாட்டில் இருந்து விரட்டி அடிக்கப்பட வேண்டும்.
பிராமணாள் கஃபே, பிராமணாள் ஹோட்டல் பெயர் அழிப்புப் போராட்ட வரலாற்றை மீண்டும் நாம் முன்னெடுக்க வேண்டும். தமிழ்நாட்டில் இந்து மத வெறி, ஆதிக்க சாதி வெறிக்கு எதிரான பண்பாட்டை மீண்டும் நாம் உருவாக்க வேண்டும் என்று மக்கள் அதிகாரம் கேட்டுக்கொள்கிறது.
தோழமையுடன்
தோழர் சி. வெற்றிவேல் செழியன்,
மாநிலச் செயலாளர்,
மக்கள் அதிகாரம்
தமிழ்நாடு – புதுவை
9962366321
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram