20.03.2025
நெல்லை ஜாகீர் உசேன் படுகொலை!
திமுக அரசும் போலீசுமே குற்றவாளிகள்!
பத்திரிகை செய்தி
குவாரி கொள்ளைக்கு எதிராகப் போராடிய புதுக்கோட்டை ஜெகபர் படுகொலைக்குப் பின்னர் தற்போது சமூக ஆர்வலரான நெல்லை ஜாகீர் உசேன் படுகொலை செய்யபட்டுள்ளார்.
நெல்லை வக்பு சொத்தினை காப்பாற்ற வேண்டும் என தொடர்ந்து போராடி வந்த ஜாகீர் உசேன், தவ்பீக் என்பவரால் தனக்கு கொலை மிரட்டல் உள்ளது என போலீசு நிலையத்தில் புகாரளித்துள்ளார்.
முகநூலிலும் இது குறித்து வீடியோ பதிவிட்டப் பின் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
தவ்பீக் கொடுத்த பொய்ப்புகாரின் பேரில் ஜாகீர் மீது எஸ்.சி/எஸ்.டி வன்கொடுமைச் சட்டம் போடப்பட்டுள்ளது. இசுலாமியரில் எஸ்.சி என்ற பிரிவே இல்லாத போது ஜாகீர் உசேனை மிரட்டவே நெல்லை போலீசு எஸ்.சி/எஸ்.டி வன்கொடுமைச் சட்டம் போட்டுள்ளது.
தலித் மக்கள் வன்கொடுமையால் பாதிக்கும் போது போலீசு, எஸ்.சி/எஸ்.டி வன்கொடுமைச் சட்டத்தை எளிதில் பதிவதில்லை.
போராட்ட சக்திகளை அடக்குவதற்கே கேடாகப் பயன்படுத்துகிறது தமிழ்நாடு போலீசு.
இப்பிரச்சினையில் எவ்விதப் பொறுப்புமின்றி சட்டமன்றத்தில் தமிழ்நாட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியிருப்பது கண்டிக்கத்தக்கது ஆகும்.
கொலைகாரன் தவ்பீக்கை முன்னரே கைது செய்யாமல் காலில் சுட்டுப் பிடித்து விட்டோம் என்ற போலீசின் பித்தலாட்ட நாடகத்தை தமிழ்நாடு மக்கள் ஏற்கப்போவதில்லை.
போலீசும் சமூக விரோதிகளும் இணைந்தே இப்படுகொலையை மேற்கொண்டுள்ளதாகவே கருத முடியும். ஆகவே தொடர்புடைய காவல்நிலைய போலீசுக்காரர்கள் அனைவரும் உடனடியாக கைது செய்யப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும் என்று மக்கள் அதிகாரம் கேட்டுக் கொள்கிறது.
தோழமையுடன்
தோழர் சி. வெற்றிவேல் செழியன்,
மாநிலச் செயலாளர்,
மக்கள் அதிகாரம்
தமிழ்நாடு – புதுவை
9962366321
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram