பெருமுதலாளிகளுக்கான வங்கிக் கடன் ரத்து, வங்கி காலிப் பணியிடங்களை நிரப்பாதது உள்ளிட்டவற்றை கண்டித்து அனைத்து வங்கி தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு மார்ச் 24 மற்றும் 25 ஆம் தேதிகளில் நாடு தழுவிய மாபெரும் வங்கி ஊழியர்களின் போராட்டம் நடைபெறும் என்று அறிவித்துள்ளது.
நாடு முழுவதும் உள்ள வங்கிகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும்; ஒப்பந்த அடிப்படையில் ஊழியர்களை நியமிப்பதை நிறுத்த வேண்டும்; வாரத்திற்கு 5 நாட்கள் வேலைத் திட்டத்தை அமல் படுத்த வேண்டும்; பணித்திறன் ஆய்வு செய்தல் மற்றும் பணித்திறன் அடிப்படையில் ஊதியத்தொகை உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு தழுவிய போராட்டத்திற்கு அனைத்து வங்கி தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு கடந்த 13 ஆம் தேதி அன்று அழைப்பு விடுத்தது.
அதனைத் தொடர்ந்து கடந்த 17 ஆம் தேதி அன்று 9 வங்கி ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பான அனைத்து வங்கி தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு மன்றம் மற்றும் இந்திய வங்கிகள் சங்கத்திற்கும் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது. பேச்சுவார்த்தையில் ஊழியர் சங்கங்களின் கோரிக்கைகள் ஏற்கப்படாததால் திட்டமிட்டபடி மார்ச் 23 ஆம் தேதி நள்ளிரவு முதல் 25 ஆம் தேதி நள்ளிரவு வரை இரண்டு நாட்கள் வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெறும் என்று வங்கி ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. இப்போராட்டத்தில் நாடு முழுவதிலும் வங்கி ஊழியர்கள், அதிகாரிகள் என 8 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொள்வார்கள் என்கிற தகவல் வெளியாகி உள்ளது.
பின்பு செய்தியாளர்களிடம் பேசிய அனைத்து வங்கி தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பின் (UFBU United Forum Bank Of Unions) பொதுச் செயலாளர் VSR சேகர் “பொதுத்துறை நிறுவனமான வங்கிகளில் ஊழியர்களின் பற்றாக்குறையால் வாடிக்கையாளர்களுக்கு முழுமையான சேவைகளை வழங்க முடியவில்லை. கடந்த பத்தாண்டுகளுக்கு மேலாக வங்கிகளில் போதுமான அளவில் ஊழியர்கள் நியமிக்கப்படுவதில்லை. இதன் விளைவாக ஊழியர்களுக்கு அதிக அளவில் பணிச்சுமை ஏற்படுகிறது” என்று தெரிவித்துள்ளார்.
மேலும் அனைத்து வங்கி தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு (UFBU) மேகாலயா மாநில ஒருங்கிணைப்பாளர் மவ்ரோ “வங்கிகளில் ஒப்பந்த அடிப்படையில் ஊழியர்கள் நியமிக்கப்படுவது நிறுத்தப்பட வேண்டும். பொதுத்துறை வங்கிகள் அரசின் அனைத்து திட்டங்களையும் செயல்படுத்துகின்றன. ஆனால் அதனை நடைமுறைப்படுத்துவதற்கு வங்கிகளில் போதுமான ஊழியர்கள் நியமிக்கப்படுவதில்லை. இதனால் வங்கிகளில் கடுமையான ஊழியர் பற்றாக்குறை உள்ளது” என்று கூறினார்.
படிக்க: வங்கிச் சட்டம்: மக்கள் பணத்தைச் சூறையாடுவதற்கான மாபெரும் தயாரிப்பு
அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்களின்படி கடந்த 11 ஆண்டுகளில் 1,53,895 ஊழியர் பணிகள் குறைக்கப்பட்டுள்ளது. கடந்த 2013 ஆண்டில் 3,98,891 ஆக இருந்த எழுத்தர்களின் எண்ணிக்கை 2024 ஆம் ஆண்டில் 2,46,965 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. அதேபோல 2013 ஆம் ஆண்டில் 1,53,628 ஆக இருந்த துணை ஊழியர் பணிகள் 2024 ஆம் ஆண்டில் 94,358 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.
பொதுத்துறை வங்கியில் 2013 ஆம் ஆண்டில் 8,86,490 ஆக இருந்த ஊழியர் பணிகளில் 1,39,811 பணிகள் குறைக்கப்பட்டு 7,46,679 பணிகள் மட்டுமே தற்போது உள்ளது. ஆனால் தனியார்த் துறை வங்கிகளில் 2013 ஆம் ஆண்டில் 2,29,124 ஆக இருந்த ஊழியர்களின் எண்ணிக்கை 6,17,406 அதிகரித்து 2024 ஆம் ஆண்டில் 8,46,530 ஆக உள்ளது. வங்கிகள் திட்டமிட்டு தனியார்மயமாக்கப்பட்டு வருவதை இந்த புள்ளி விவரங்கள் எடுத்துக்காட்டுகின்றன.
பாசிச மோடி கும்பல் ஆட்சிக்கு வந்தது முதல் அனைத்து பொதுத்துறை நிறுவனங்களும் தனியார்மயமாக்கப்பட்டு வருகின்றன. விமான துறை தனியார்மயமாக்கப்பட்டு வருகின்றது.. அடுத்ததாக கல்வித்துறை, ரயில்வே துறை உள்ளிட்ட அனைத்து அரசுத் துறைகளையும் தனியார்மயமாக்கும் நடவடிக்கையில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.
அந்த வரிசையில் கடந்த 10 ஆண்டுகளாக பொதுத்துறை வங்கிகளை தனியார்மயமாக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது. அதற்காக வங்கி சட்டங்களைத் திருத்துவது, திட்டமிட்டு வங்கி ஊழியர்களை நியமிக்காமல் இருப்பது, போன்றவற்றின் மூலம் அரசு வங்கிகள் இயங்குவதற்கு நெருக்கடியை ஏற்படுத்தி வருகிறது, அதனைத் தொடர்ந்து கடந்த ஆண்டு டிசம்பர் 3 அன்று நடைபெற்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் வங்கிகள் சட்டத்திருத்த மசோதாவை (The Banking Laws Amendment Bill, 2024) நிறைவேற்றியது. பொதுத்துறை வங்கிகள் தனியார்மயமாக்கப்படுவதைத் தீவிரப்படுத்தவே இச்சட்டத்தைக் கொண்டுவந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
அதானி, அம்பானிகளுக்காக நாட்டையே கூறுபோட்டு விற்றுக் கொண்டிருக்கும் பாசிச கும்பலின் மக்கள் விரோதத் திட்டங்களுக்கு எதிராக, மாற்று சமூக பொருளாதார திட்டங்களை முன்வைத்துப் போராட வேண்டியது ஜனநாயக சக்திகளாகிய நம்முடைய கடமையாகும். வங்கி ஊழியர்களின் போராட்டத்திற்கு அனைத்து ஜனநாயக சக்திகளும், உழைக்கும் மக்களும் ஆதரவு அளிக்க வேண்டும்.
இன்குலாப்
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram