நடந்துமுடிந்த டெல்லி யூனியன் பிரதேசத்திற்கான சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க. வெற்றிபெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைத்துள்ளது. கடந்த பத்தாண்டுகளுக்கு மேலாக ஒன்றியத்தில் ஆட்சியிலிருக்கும் பா.ஜ.க, நாட்டின் பல மாநிலங்களில் ஆட்சியைக் கைப்பற்றினாலும், இந்தியாவின் தலைநகரான டெல்லியில் கடந்த 27 ஆண்டுகளாக ஆட்சியைக் கைப்பற்ற முடியவில்லை. இதனால், டெல்லியில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசிற்கு குடைச்சல் கொடுத்து, அதன் அதிகாரங்களைப் பறித்து நிழல் ஆட்சியை நடத்திவந்த பா.ஜ.க. தற்போது நேரடியாகவே டெல்லியின் அதிகாரத்தைக் கைப்பற்றியுள்ளது.
மறுபுறம், கடந்த பத்தாண்டுகளாக டெல்லியை ஆட்சி செய்துவந்த ஆம் ஆத்மி கட்சி இத்தேர்தலில் 40 தொகுதிகளை பா.ஜ.க-விடம் பறிகொடுத்து தோல்வியடைந்துள்ளது. 2012-இல் தொடங்கப்பட்ட ஆம் ஆத்மி கட்சி குறுகிய காலத்திற்குள் டெல்லியின் ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றியதுடன், கட்சி கட்டமைப்பை பிற மாநிலங்களுக்கும் விரிவுப்படுத்தி தேசிய கட்சி அங்கீகாரத்தைப் பெற்றது. ஆனால், தற்போது கட்சி தொடங்கப்பட்ட டெல்லியிலேயே ஆட்சி அதிகாரத்திலிருந்து ஆம் ஆத்மி அகற்றப்பட்டிருப்பது, டெல்லி மட்டுமின்றி பிற மாநிலங்களிலும் அதன் கட்சி கட்டமைப்பை பலவீனப்படுத்தும் என்றும் மாநில தலைமைகள் மீதான கெஜ்ரிவாலின் கட்டுப்பாட்டை கேள்விக்குள்ளாக்கும் என்றும் வாதங்கள் முன்வைக்கப்படுகின்றன.
அதேசமயம், 2024 நாடாளுமன்றத் தேர்தலில் பல்வேறு நெருக்கடிகளையும் இழப்புகளையும் சந்தித்து தனிப்பெரும்பான்மையை கூட பெற முடியாமல் கூட்டணி ஆட்சி அமைக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்ட பா.ஜ.க., ஹரியானா, மகாராஷ்டிரா, டெல்லி என அடுத்தடுத்து சட்டமன்றத் தேர்தல்களில் வெற்றிபெற்று வருகிறது. இத்தொடர் வெற்றிகளானது பா.ஜ.க-விற்கு தான் இழந்த மக்கள் அடித்தளத்தையும் செல்வாக்கையும் மீட்டமைப்பதற்கான வாய்ப்புகளாக அமைந்துள்ளன. மேலும், இந்த வெற்றிகளானது ஒரே நாடு-ஒரே கட்சி என்ற பாசிச சர்வாதிகார பாதையில் பயணித்து கொண்டிருக்கும் பா.ஜ.க., பிற கட்சிகளை ஒழித்துக்கட்டி வருவதையும், பாசிச எதிர்ப்பு சித்தாந்தம்-கொள்கை-திட்டமற்ற கட்சிகளின் இருப்பு கேள்விக்குள்ளாகி வருவதையும் துலக்கமாக காட்டுகிறது.
டெல்லியின் சூழலும் ஆம் ஆத்மியின் கவர்ச்சிவாத அரசியலும்
டெல்லி இந்தியாவின் தலைநகரமாக இருந்தாலும், கூர்மையான வர்க்க-சாதி-சூழலியல் முரண்பாடுகளைக் தன்னகத்தே கொண்ட ஏற்றத்தாழ்வுகள் நிறைந்த நகரமாகும்.
அரசியல் கட்சி தலைவர்கள், கார்ப்பரேட் முதலாளிகளின் ஆடம்பரமான வீட்டு வளாகங்கள் நிறைந்திருக்கும் டெல்லியில் லட்சக்கணக்கான மக்கள் குடிசைகளிலும் சாலையோரங்களிலும் நாள்தோறும் அவதிப்பட்டுக் கொண்டிருக்கின்றனர். மொத்தமாக 3.4 கோடி மக்கள் வாழும் டெல்லியில் 15 லட்சத்திற்கும் அதிகமான மக்கள், குறைந்தபட்ச அடிப்படை வசதி, சுகாதாரம், பாதுகாப்பின்றி குடிசைப்பகுதிகளில் வசித்து வருகின்றனர். டெல்லியின் ஒட்டுமொத்த வாக்காளர்களில் சுமார் பத்து சதவிகிதத்தினர் இவ்வாறு குடிசைப் பகுதிகளில் வாழும் மக்களே.

அதேபோல், டெல்லி முழுவதும் ஏறக்குறைய மூன்று லட்சம் மக்கள் தங்குமிடங்களின்றி சாலையோரங்களில் வசிக்கின்றனர். வறுமை, வேலையின்மை, குடும்பப் பிரச்சினைகள், வீடுகள் இடிப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் சாலையோரங்களுக்கு துரத்தியடிக்கப்படும் இம்மக்களுக்கு தங்குமிடங்களை ஏற்படுத்தி தருவதற்கோ மாற்று ஏற்பாடுகளை செய்வதற்கோ அரசு சார்பில் எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்படுவதில்லை. சில தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இம்மக்களுக்கு தங்குமிடங்களை ஏற்பாடு செய்து கொடுத்தாலும் மொத்த தேவையுடன் ஒப்பிடும்போது அது மிகவும் சொற்பமாகவே உள்ளது. இதனால், ஒவ்வொரு ஆண்டும் காற்று மாசுபாடு, வெப்ப அலை, கடுங்குளிர், பனிப்பொழிவு, அதிக மழைப்பொழிவு, வெள்ளம் என டெல்லி எதிர்கொள்ளும் மோசமான சூழலியல் பேரழிவுகளுக்கு பலியாகி இம்மக்கள் நூற்றுக்கணக்கில் செத்து மடிகின்றனர். தற்போது கூட டெல்லியில் நிலவும் கடுங்குளிரால் 56 நட்களில் மட்டும் 474 மக்கள் இறந்துள்ளனர்.
அதேபோல், டெல்லியின் மக்கள்தொகையில் இஸ்லாமிய மக்கள் 12 சதவிகிதமாகவும் தலித் மக்கள் 16 சதவிகிதமாகவும் உள்ளனர். டெல்லியில் வேர்பரப்பியுள்ள சங்கப் பரிவார கும்பல் இஸ்லாமிய மற்றும் தலித் மக்களுக்கு எதிராக கலவரங்களையும் வன்முறை வெறியாட்டங்களையும் கட்டவிழ்த்துவிடுவது என்பது தொடர்கதையாகியுள்ளது.
இந்தியாவின் பிற மாநிலங்களுடன் ஒப்பிடும்போது டெல்லியின் மொத்த மக்கள்தொகையில் 45 சதவிகிதத்தினர் நடுத்தர மற்றும் உயர் நடுத்தர வர்க்கத்தைச் சார்ந்தவர்களாகவும் டெல்லியின் தேர்தல் முடிவை தீர்மானிக்க கூடியவர்களாகவும் உள்ளனர். இந்தியாவின் தலைநகரம் என்பதால் கணிசமான எண்ணிக்கையில் அரசு ஊழியர்களும் உள்ளனர்.
மேற்குறிப்பிட்ட பலதரப்பட்ட மக்கள் கடந்த காலங்களில் காங்கிரசின் வாக்குவங்கியாக இருந்த நிலையில், ஆம் ஆத்மி கட்சியின் உருவாக்கத்திற்கு பின்னர் அக்கட்சியின் வாக்குவங்கியாக மாறினர். குறிப்பாக, தன்னை ஒரு சாதாரண அரசு அதிகாரியாகவும் எளிய நடுத்தர வர்க்க பிரதிநிதியாகவும் ‘ஊழல் எதிர்ப்பு’ போராளியாகவும் முன்னிறுத்திகொண்டு ஆட்சியைக் கைப்பற்றிய அரவிந்த் கெஜ்ரிவால், டெல்லியின் தேர்தல் அரசியலில் தீர்மானகரமான சக்தியாக உள்ள நடுத்தர வர்க்க மக்களை ஆம் ஆத்மியின் அடித்தளமாக மாற்றினார்.
ஆனால், டெல்லியில் ஆட்சியைப் பிடித்த குறுகிய காலத்திலேயே அரவிந்த் கெஜ்ரிவாலின் ஊழல் எதிர்ப்பு சாயங்கள் கரையத் தொடங்கின. தனது போராளி அரிதாரத்தையெல்லாம் கலைத்துவிட்டு அப்பட்டமான கார்ப்பரேட் சேவையில் இறங்கினார். அதை மூடிமறைப்பதற்கு கவர்ச்சிவாதத் திட்டங்களை அமல்படுத்தி தலித் மக்கள், இஸ்லாமியர்கள், அடித்தட்டு மக்களை தனது வாக்குவங்கியாக மாற்றிகொண்டார்.
அதேசமயத்தில் இந்து மக்களின் வாக்கு பா.ஜ.க-வை நோக்கி சென்றுவிடக் கூடாது என்பதற்காக மிதவாத இந்துத்துவ அரசியலையும் ஆதிக்கச் சாதி மக்களின் வாக்குகளை அறுவடை செய்வதற்காக சாதிய அரசியலையும் முன்னெடுத்தார். இஸ்லாமிய மக்களை சங்கப் பரிவார கும்பல் வேட்டையாடுவதை வேடிக்கை பார்த்ததுடன் ஆம் ஆத்மி அதற்கு துணைபோனது. மக்கள் பிரச்சினைகளை மூடிமறைக்க கவர்ச்சிவாத அரசியலை தனது முதன்மை ஆயுதமாக கையிலெடுத்தது.
ஆனால், கடந்த பத்தாண்டுகால ஆட்சியில் இவையெல்லாம் மக்கள் மத்தியில் அம்பலப்பட்டு நாறியதோடு, ஆம் ஆத்மியின் மக்கள் விரோதமான செயல்பாடுகள் மக்களிடம் அதிருப்தியையும் கோவத்தையும் அதிகரித்தன. இதனை முதலீடாக கொண்டே பா.ஜ.க. தற்போது டெல்லியில் ஆட்சியைப் பிடித்துள்ளது.
ஆம் ஆத்மிக்கு எதிரான பா.ஜ.க-வின் அஸ்திரங்கள்
இத்தேர்தலில், ஆம் ஆத்மியை வீழ்த்துவதற்காக “ஆம் ஆத்மி ஊழல்மயமாகிவிட்டது”, “டெல்லியில் வளர்ச்சி இல்லை” ஆகிய பிரச்சாரங்களை பா.ஜ.க. கையிலெடுத்தது.
இப்பிரச்சாரத்தை முன்னின்று தொடங்கிவைத்த மோடி, ஆம் ஆத்மி டெல்லிக்கு பேரழிவானது என்று பொருள்படும் “ஆப்-டா” (AAP-Da) என்ற வார்த்தையால் அக்கட்சியை அழைத்தார். கெஜ்ரிவாலை “கட்டார் இமாந்தர்” (மிகவும் நேர்மையானவர்) என்று அக்கட்சியினர் பரவலாக அழைக்கும் நிலையில், இனியும் கெஜ்ரிவாலை அவ்வாறு அழைப்பதற்கு முகாந்திரமில்லை என பா.ஜ.க-வினர் பிரச்சாரம் செய்தனர். அரவிந்த் கெஜ்ரிவாலின் ஷீஷ் மகால் எனப்படும் வீட்டை சீரமைக்கும் பணி நடந்துவந்த நிலையில், 40 கோடி செலவில் பிரம்மாண்டமாக வீடு கட்டப்படுவதாக பா.ஜ.க. பிரச்சாரம் செய்தது. வெளிநாடுகளிலுள்ள ஆடம்பரமான வீடுகளின் புகைப்படங்களை ஷீஷ் மகால் என்ற பெயரில் இணையத்தில் பரப்பியது. ஆம் ஆத்மி கட்சியினர் மீது பா.ஜ.க. அரசு பதிந்த ஊழல் வழக்குகள் ஏற்கெனவே நடுத்தர வர்க்க மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியிருந்த நிலையில், இப்பிரச்சாரங்கள் அதனை மேலும் தீவிரப்படுத்தின.
இந்த அதிருப்தியை தனது வாக்குகளாக மாற்றி கொள்வதற்காக ஆண்டுக்கு ரூ.12 லட்சம் வரை வருமானம் ஈட்டுவோருக்கு வருமான வரி விலக்கு அளிக்கப்படும் என்று 2025-26 ஒன்றிய நிதிநிலை அறிக்கையில் பா.ஜ.க. அறிவித்தது. முன்னதாக, டெல்லியில் கணிசமான எண்ணிக்கையில் உள்ள அரசு ஊழியர்களையும் ஓய்வூதியம் பெறுபவர்களையும் குறிவைத்து எட்டாவது ஊதியக் குழு அறிவிப்பை பா.ஜ.க. வெளியிட்டிருந்தது. இவையெல்லாம் நடுத்தர வர்க்க மக்கள் மத்தியில் பெரும் தாக்கம் புரிந்தன. மேலும், பா.ஜ.க. அரசால் ஊழல் புகார் சுமத்தப்பட்ட அரவிந்த் கெஜ்ரிவால், மணீஷ் சிசோடியோ உள்ளிட்டு ஆம் ஆத்மியின் பல முக்கிய தலைவர்கள் இத்தேர்தலில் தோல்வியைச் சந்தித்திருப்பது பா.ஜ.க-வின் தந்திரங்கள் மக்களிடம் செல்லுபடியாகி இருப்பதையே காட்டுகிறது.
அடுத்ததாக, அடித்தட்டு உழைக்கும் மக்களின் வாக்குவங்கியில் பிளவை ஏற்படுத்துவதற்காக மோசமான சாலைவசதி, வாகன நெரிசல், பராமரிப்பற்ற குப்பைக் கிடங்குகள், சீரற்ற கழிவுநீர் வடிகால், குடிநீர் பற்றாக்குறை, மாசுபாடு உள்ளிட்ட உள்ளூர் பிரச்சினைகளை பா.ஜ.க. கையிலெடுத்தது. டெல்லியின் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ள யமுனை நதி சீர்கேட்டை, சூற்றுச்சூழல் சீர்கேடு-மக்கள் பாதிப்பு என்ற கோணத்தில் அல்லாமல், அதன் புனிதத்தன்மை பறிபோவதாக பா.ஜ.க. பிரச்சாரம் செய்தது. மக்கள் பிரச்சினைகளையும் இந்துத்துவமயப்படுத்தி பிரச்சாரம் செய்தது.
மேலும், ஆம் ஆத்மியின் அடித்தளமாக உள்ள குடிசைப்பகுதி மக்களின் வாக்குகளை கவர்வதற்காக பல்வேறு கவர்ச்சிவாதத் திட்டங்களை வாரியிறைத்ததுடன், பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தாலும் ஆம் ஆத்மியின் திட்டங்கள் செயல்படுத்தப்படும் என அறிவித்தது. 2024 நாடளுமன்றத் தேர்தல் முடிந்த உடனேயே “ஜக்கி விஸ்தாரக் யோஜனா” என்ற திட்டத்தை அறிவித்து குடிசைப் பகுதிகளின் நிலைமையை மேம்படுத்தப் போவதாக பிரச்சாரம் செய்தது. ஜனவரி மாதத் தொடக்கத்தில் அசோக் விகார் என்ற குடிசைப் பகுதியில் மோடி அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றை திறந்து வைத்ததும் புதிய கட்டடங்களுக்கான அடிக்கல் நாட்டியதும் குடிசைப் பகுதி மக்கள் மத்தியில் பெரும் தாக்கம் புரிந்தன. அமித்ஷா நேரடியாக குடிசைப் பகுதிகளுக்கே சென்று வாக்குகளை சேகரித்தார். ஆர்.எஸ்.எஸ். சார்பாக குடிசைப் பகுதிகளுக்கென அப்பகுதி மக்களையும் உள்ளடக்கிய தனி பிரச்சார அமைப்பே உருவாக்கப்பட்டிருந்தது.
2023-ஆம் ஆண்டு ஜி-20 மாநாட்டின்போது ஓக்லா, சுந்தர் நாகரி, துக்ளகாபாத் உள்ளிட்ட குடிசைப் பகுதிகள் பாசிச பா.ஜ.க. கும்பலால் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன. பா.ஜ.க-வின் கட்டுப்பாட்டில் உள்ள போலீசால் இம்மக்கள் மீது பல்வேறு குற்ற வழக்குகளும் பதியப்பட்டுள்ளன. ஆனால், இத்தேர்தலில் குடிசைப்பகுதி தொகுதிகளில் பா.ஜ.க. வெற்றிபெற்றிருப்பதும், அதன் வாக்கு சதவிகிதம் அதிகரித்திருப்பதும் பா.ஜ.க-வின் பிரச்சாரங்கள் இம்மக்கள் மத்தியில் செல்வாக்கு செலுத்தியிருக்கிறது என்ற வேதனைக்குரிய உண்மையை எடுத்துக்காட்டுகிறது. கடந்த பத்தாண்டுகளாக டெல்லியை ஆட்சிசெய்த ஆம் ஆத்மி கட்சி மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் துரோகமிழைத்தது; பா.ஜ.க-விற்கு இணையாக ஆம் ஆத்மி, காங்கிரஸ் ஆகிய இரண்டு கட்சிகளும் இம்மக்களின் பிரச்சினைகளை வெறும் வாக்குகளாக மட்டுமே அணுகியது போன்றவையே இதற்கு காரணமாகும்.
அதேபோல், இஸ்லாமிய மக்கள் அதிகம் வசிக்கும் ஏழு தொகுதிகளிலும் கடந்தமுறை ஆம் ஆத்மி வெற்றிபெற்ற நிலையில் இம்முறை முஸ்தபாபாத் தொகுதியில் பா.ஜ.க. வெற்றிபெற்றுள்ளது. அத்தொகுதியில் ஓவைசியின் ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சி வேட்பாளர் வாக்குகளை பிரித்தது இதற்கு ஒரு காரணம் எனினும், மொத்தமாகவே ஆம் ஆத்மிக்கு வாக்களிக்கும் இஸ்லாமிய மக்களின் வாக்கு சதவிகிதம் இத்தேர்தலில் சரிந்துள்ளது. காஷ்மீர் சிறப்புரிமை இரத்து உள்ளிட்டு இஸ்லாமிய மக்கள் மீது பாசிசக் கும்பல் தொடுத்த தாக்குதல்களுக்கும் கலவரங்களுக்கும் ஆம் ஆத்மி மறைமுகமாக துணைநின்று இஸ்லாமிய மக்களுக்கு துரோகமிழைத்ததே இதற்கு முக்கிய காராணமாகும். இத்தேர்தலின்போது இஸ்லாமிய மக்களின் பகுதிகளில் ஆம் ஆத்மி பெரியளவில் பிரச்சாரம் செய்யாமல் புறக்கணித்ததாக அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.
ஆனால், பா.ஜ.க. நூற்றுக்கணக்கான ஆர்.எஸ்.எஸ். கைக்கூலிகளை டெல்லியில் இறக்கி வேலை செய்துள்ளது. இத்தேர்தலையொட்டி ஏறக்குறைய 50 ஆயிரம் சிறியளவிலான சந்திப்புகள், கூட்டங்கள் மூலம் ஆர்.எஸ்.எஸ். நான்கு லட்சம் மக்களைச் சந்தித்ததாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ஹரியானா, மகாராஷ்டிரா தேர்தலைத் தொடர்ந்து தற்போதைய டெல்லி சட்டமன்றத் தேர்தலிலும் பா.ஜ.க. மீதான ஆர்.எஸ்.எஸ்-இன் பிடி இறுகி வருவதை இது வெளிக்காட்டியது.
மேலும், தேர்தல் ஆணையத்தின் துணையுடன் பல்வேறு தேர்தல் முறைகேடுகளிலும் பா.ஜ.க. ஈடுபட்டது. 2019 நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகான நான்கு ஆண்டுகளில் டெல்லியில் நான்கு லட்சம் வாக்காளர்களின் எண்ணிக்கைகள் அதிகரித்திருந்த நிலையில், 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகான ஏழு மாதங்களில் மட்டும் நான்கு லட்சம் வாக்காளர்களின் எண்ணிக்கைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. இவையெல்லாம் இணைந்துதான் ஆம் ஆத்மியை வீழ்த்தி பா.ஜ.க. வெற்றிபெற்றுள்ளது.
நிர்பந்தித்து ஏற்கச் செய்யும் பார்ப்பனிய நரித்தனம்:
ஆம் ஆத்மி முதல் பலி மட்டுமே!
டெல்லியில் இவ்வெற்றியை சாதிப்பதற்காக பா.ஜ.க. கடந்த ஐந்தாண்டுகளுக்கு மேலாக தீவிரமாக முயற்சி செய்து வந்தது. அமலாக்கத்துறை, வருமான வரித்துறை, சி.பி.ஐ., நீதிமன்றம், போலீசு என ஒட்டுமொத்த அதிகாரக் கட்டமைப்பின் துணையுடன் ஆம் ஆத்மி கட்சியை ஒழித்துக்கட்டுவது, அதன் அதிகாரத்தைப் பறிப்பது என தொடர்ந்து காய்களை நகர்த்தி வந்தது.
குறிப்பாக, 2020-ஆம் ஆண்டு நடந்த டெல்லி சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க. தோல்வியை தழுவிய பிறகு “டெல்லி தேசிய தலைநகர் பிரதேச அரசாங்கத்தின் (திருத்தம்) சட்டம், 2023”-ஐ பா.ஜ.க. நிறைவேற்றியது. இதன்மூலம் டெல்லியில் அதிகாரிகளை பணியமர்த்துவது, இடமாற்றம் செய்வது உள்ளிட்ட அதிகாரங்கள் ஆம் ஆத்மி அரசாங்கத்திடமிருந்து பறிக்கப்பட்டு ஆளுநர் கரங்களில் குவிக்கப்பட்டன. இதனை எதிர்த்து ஆம் ஆத்மி உச்சநீதிமன்றத்தை அணுகியதையடுத்து, அச்சட்டத்திற்குத் தடைவிதித்த உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு, டெல்லியின் நிர்வாக மற்றும் சட்டமன்ற அதிகாரங்கள் அரசாங்கத்தினுடையது என்று உறுதி செய்தது.
ஆனால், உச்சநீதிமன்ற உத்தரவை காலில் போட்டு மிதித்த பா.ஜ.க. உடனடியாக அவசர சட்டம் இயற்றி சட்டத்தை நிறைவேற்றியது. அதன்பிறகு தற்போதுவரை இச்சட்டத்தின் மீதான விசாரணையும், ஆம் ஆத்மி தாக்கல் செய்த இன்ன பிற மனுக்களும் கிடப்பில் போடப்பட்டுள்ளன.
இச்சட்டத் திருத்தத்திற்கு பிறகு டெல்லி ஆம் ஆத்மி அரசால் தனது அரசாங்கத்திற்கென ஒரு உதவியாளரை கூட நியமித்துகொள்ள முடியவில்லை. அரசு ஊழியர்கள் மீது கட்டுப்பாடு, முடிவெடுக்கும் அதிகாரமற்ற முதலமைச்சராக அரவிந்த் கெஜ்ரிவால் மாற்றப்பட்டார். சிறிய திட்டங்களைக் கூட நடைமுறைப்படுத்த முடியவில்லை என ஆம் ஆத்மி வெளிப்படையாகவே தெரிவித்தது. முன்னர், முக்கியமான கொள்கை முடிவெடுக்கும் விவகாரங்களுக்கு மட்டுமே துணைநிலை ஆளுநரின் ஒப்புதல்கள் தேவைப்பட்ட நிலையில், இச்சட்டத் திருத்தத்திற்கு பிறகு அன்றாட நிகழ்வுகளுக்குக் கூட ஆளுநரின் ஒப்புதலை நாட வேண்டிய சூழல் உருவானது. ஆம் ஆத்மி அரசுக்கு குடைச்சல் கொடுப்பதற்கேற்ப குஜராத் பா.ஜ.க. தலைவரான வினய் குமார் சக்சேனா டெல்லியின் துணைநிலை ஆளுநராக நியமிக்கப்பட்ட பின்னர் டெல்லி அரசாங்கத்தின் செயல்பாடுகளே முடக்கப்பட்டன. மொஹல்லா மருத்துவகத்தின் (கிளினிக்) மருந்துப்பொருள் கொள்முதலில் ஊழல் நடந்ததாகக் கூறி, டெல்லியின் சுகாதாரத்துறை, மருத்துவமனைகளுக்கு மருந்துகள் வாங்குவதற்கான நிதி முற்றிலுமாக நிறுத்தப்பட்டது இதற்கு சான்றாகும்.
முன்னதாக, 2022-ஆம் ஆண்டு நகராட்சி தேர்தலில் பல இடங்களில் பா.ஜ.க-வை தோற்கடித்து ஆம் ஆத்மி வெற்றிபெற்றதையடுத்து, “டெல்லி நகராட்சி திருத்த மசோதா 2022-ஐ” நிறைவேற்றி டெல்லியின் நகராட்சிகளையும் துணைநிலை ஆளுநரின் கட்டுப்பாட்டின் கீழ் பா.ஜ.க. கொண்டுவந்தது.
இதன் உச்சக்கட்டமாக, ஆம் ஆத்மி கட்சியையும் ஆட்சியையும் ஒட்டுமொத்தமாக முடக்கும் விதமாக அரவிந்த் கெஜ்ரிவால், மணீஷ் சிசோடியா, சத்தியேந்திர குமார் என முக்கியமான 17 தலைவர்களை சிறையிலடைத்தது. இந்தியாவில் பதவியிலிருக்கும் முதலமைச்சர் ஒருவரை கைது செய்தது இதுவே முதன்முறையாகும். பல்வேறு போராட்டங்களுக்குப் பிறகு பிணையில் வெளிவந்த அரவிந்த் கெஜ்ரிவால் முதல்வர் பதவியிலிருந்து விலகுவது போன்ற முயற்சிகளை எடுத்தாலும் பா.ஜ.க-வின் தீவிரமான பிரச்சாரத்திற்கு முன் அவை செல்லுபடியாகவில்லை.
இவையெல்லாம் மக்கள் மத்தியில் ஆம் ஆத்மி மீதான அதிருப்தியை அதிகரித்தன. ஆம் ஆத்மி அரசால் சுதந்திரமாக செயல்பட முடியவில்லை என்பதையும் மக்கள் உணர்ந்து கொண்டனர். ஆனால், டெல்லி அரசு முடக்கப்படுவதை மக்கள் மத்தியில் கொண்டுசென்று பிரச்சாரம் செய்து போராட்டங்களைக் கட்டியமைப்பதற்குப் பதிலாக சட்டப்போராட்டங்களிடத்தில் ஆம் ஆத்மி சரணடைந்தது. இவையெல்லாம் பா.ஜ.க-விற்கே சாதகமாக அமைந்தன.
டெல்லி தேர்தல் முடிவு மீதான விவாதத்தில் இதுவே முக்கியமான பரிசீலனைக்குரியது. டெல்லி அரசாங்கத்தை முடமாக்கி வெற்றிபெற்ற பா.ஜ.க-வின் இந்த உத்தி டெல்லிக்கு மட்டும் உரித்தானதல்ல. டெல்லி ஒரு யூனியன் பிரதேசம் என்பதனாலோ, ஆம் ஆத்மி தேசிய கட்சியாக வளர்கிறது என்பதாலோ மட்டுமே பா.ஜ.க. ஆம் ஆத்மி அரசை முடக்கவில்லை. இந்தியாவின் பிற மாநிலங்களுக்கும் இந்தநிலை ஏற்படும், அவை ஏற்கெனவே தொடங்கிவிட்டன என்பதே கவனத்திற்குரிய விசயம்.
சான்றாக, தமிழ்நாட்டை பொறுத்தவரை தமிழ்நாட்டிலிருந்து வசூலிக்கப்படும் வரியில் சொற்பத் தொகையை மட்டுமே நிதியாக திருப்பியளிக்கிறது மோடி அரசு. அதையும் முறையாக கொடுக்காமல் இழுத்தடிப்பது; சொத்துவரி, மின்கட்டணம் போன்றவற்றை உயர்த்தினால்தான் நிதி விடுவிக்கப்படும் என்று மிரட்டி நிர்பந்திப்பது என சொந்த நாட்டிற்குள்ளேயே ஐ.எம்.எஃப்-வை போல எதிர்க்கட்சிகள் ஆளும் மாநில அரசுகளிடம் அடாவடி செய்கிறது. கொத்துக்கொத்தாக மக்கள் உயிரிழந்தாலும் பேரிடர் நிதியென ஒரு பைசா கூட தரப்படுவதில்லை. தற்போது கூட புதிய கல்விக் கொள்கையை ஏற்காவிட்டால் ஐந்தாயிரம் கோடி நிதியை விடுவிக்க முடியாது என்று பாசிச மோடி அரசு மிரட்டுகிறது.
டெல்லி, தமிழ்நாடு மட்டுமின்றி எதிர்க்கட்சிகள் ஆளும் எல்லா மாநில அரசுகளுக்கும் இதுதான் நடந்துகொண்டிருக்கின்றது. ஆனால், இக்கட்சிகள் இதற்கெதிராக மக்கள் போராட்டங்களைக் கட்டியமைக்காமல் அதனை ஏற்றுக் கொள்வதன் மூலம் பாசிச கும்பலின் இந்துராஷ்டிர பொருளாதாரக் கட்டமைப்பிற்குள்ளேயே உழல்கின்றன.
துணைநிலை ஆளுநரை கொண்டு சட்டமன்றத்தை முடக்குவது, நிதியை வழங்க மறுப்பது, நிர்பந்தங்களை விதிப்பது போன்றவையெல்லாம் பா.ஜ.க-வின் தொந்தரவுகளாகவும் ஜனநாயகமற்ற தன்மையாகவுமே எதிர்க்கட்சிகள் பார்க்கின்றனவே ஒழிய, அவையெல்லாம் பெயரளவிலான மாநில உரிமை, கூட்டாட்சி போன்றவற்றையெல்லாம் இல்லாதொழிக்கும் பா.ஜ.க-வின் கட்டமைப்பு மாற்றங்கள் என புரிந்துகொண்டு எதிர்ப்பதில்லை. இதற்கு முக்கிய காரணம் இக்கட்சிகளிடம் மாற்று அரசியல்-பொருளாதாரத் திட்டம் இல்லை என்பதே ஆகும்.
ஆனால், இந்தியாவில் பாசிச சர்வாதிகாரம் அரங்கேறிவரும் சூழலில், பாசிச எதிர்ப்பு மாற்று திட்டமில்லாமல், வெறுமனே கவர்ச்சிவாதத் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதன் மூலம் மட்டுமே ஆட்சியில் தொடர முடியாது என்பதையே டெல்லி தேர்தல் முடிவு உணர்த்துகிறது.
சித்தாந்தமற்ற கட்சிகளின் அந்திமகாலம்
ஹரியானா சட்டமன்றத் தேர்தலை போலவே டெல்லி தேர்தலிலும் ஆம் ஆத்மி, காங்கிரஸ் இரு கட்சிகளும் இந்தியா கூட்டணி சார்பாக போட்டியிடாமல் தனித்து நின்றே போட்டியிட்டன. இரண்டு கட்சிகளும் தலைவர்களும் மேற்கொண்ட பிரச்சாரங்கள் பா.ஜ.க-வின் பிரச்சாரப் பணியை எளிதாக்குவதாக அமைந்தன.
தேர்தல் முடிவில் காங்கிரஸ் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லையெனினும் எட்டு சதவிகித வாக்குகளை பெற்று பல தொகுதிகளில் ஆம் ஆத்மியின் வாக்குகளை பிரித்துள்ளது. காங்கிரசும் ஆம் ஆத்மி கட்சியும் இணைந்து போட்டியிட்டிருந்தால் கூடுதல் தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்க முடியுமென்றும், பா.ஜ.க. தனிப்பெரும்பான்மையாக பெற்றதை தடுத்திருக்க முடியுமென்றும் அரசியல் விமர்சகர்கள் தெரிவித்தனர்.
ஆனால், இத்தேர்தல் முடிவு குறித்த காங்கிரஸ் தலைவர்களின் பேச்சுகள் இத்தேர்தல் முடிவின் மீதும் காங்கிரஸ் கட்சி எவ்வித பரிசீலனையையும் மேற்கொள்ளவில்லை என்பதை எடுத்துக்காட்டுகிறது. டெல்லி காங்கிரசின் தலைவர் தேவேந்திர யாதவ், இம்முறை காங்கிரசு பெற்ற பூஜ்ஜியம் (தொகுதி) கடந்த தேர்தலில் பெற்ற பூஜ்ஜியத்திலிருந்து வேறுபட்டது என்றும் ஆம் ஆத்மி ஆட்சியிலிருந்து அகற்றப்பட்டிருப்பதால், டெல்லியில் தலித்துகள் மற்றும் சிறுபான்மையினரின் வாக்குகளை மீண்டும் பெற முடியும் என்ற நம்பிக்கை வந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். காங்கிரசின் மூத்த தலைவர்களும் இத்தகைய கருத்துகளையே வெளிப்படுத்தினர். ஆம் ஆத்மியின் இத்தோல்வி டெல்லியில் மட்டுமின்றி கோவா, பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களிலும் காங்கிரசின் கட்சி அடித்தளத்தை பலப்படுத்துவதற்கு உதவும் என்று காங்கிரசு பூரிப்படைகிறது.
பா.ஜ.க. போன்றதொரு பாசிச கட்சி ஆட்சியதிகாரத்தில் இருக்கும்போது பிற கட்சிகளின் கட்சி கட்டமைப்பு திட்டமிட்டு செல்லரிக்கப்படும்; பாசிசத்தை எதிர்க்கும் கட்சிகள் தன்னுணர்வுடன் கட்சி கட்டமைப்பை பலப்படுத்த வேண்டியது பாசிச எதிர்ப்பில் முக்கியத்துவமுடையதாகும். மறுபுறத்தில், பாசிஸ்டுகளின் குதிகால் நரம்பாக உள்ள மக்கள் அடித்தளத்தை சரித்து மாற்று சித்தாந்தம்-மாற்றுத் திட்டத்தின் கீழ் பாசிச எதிர்ப்பு முகாமில் திரட்டுவதும் அவசியமாகும். ஆனால், பாசிஸ்டுகளின் அடித்தளத்தை சரிப்பதற்கு நம்பிக்கையற்று போயுள்ள காங்கிரசு, தன்னுடைய கூட்டணி கட்சிகளின் மக்கள் அடித்தளத்தை சரித்து தன்பக்கம் இழுத்துக் கொள்வதிலேயே கவனம் செலுத்துகிறது.
காங்கிரசின் இந்த அணுகுமுறையை வெளிப்படையாக கண்டிக்கும் பத்திரிகையாளர்கள், தமிழ்நாடு, ஜார்க்கண்ட் போன்ற மாநிலங்களில் வேறு வழியில்லாமல் கூட்டணி கட்சிகளை முழுமையாக சார்ந்துள்ள காங்கிரசு, பிற மாநிலங்களில் இழந்த தனது செல்வாக்கை அடைவதற்கு கூட்டணி கட்சிகளை பலிகொடுக்கிறது என்று விமர்சித்துள்ளனர். சொல்லப்போனால், டெல்லி தேர்தலில் ஆம் ஆத்மியை வீழ்த்தியதில் பா.ஜ.க-விற்கு நேரடி பாத்திரம் உள்ளதெனில் காங்கிரசிற்கு மறைமுக பாத்திரம் உள்ளது. மேலும், உண்மையான பாசிச எதிர்ப்பிலிருந்து பா.ஜ.க-வை எதிர்கொள்ளாத காங்கிரசின் நடவடிக்கை ஒவ்வொரு தேர்தலிலும் பா.ஜ.க-விற்கு துணைசெய்வதாகவே உள்ளது.
மறூபுறம், 1990-களிலிருந்தே டெல்லியில் ரோஹிங்கியா இஸ்லாமியர்களுக்கு எதிரான வெறுப்பு பிரச்சாரத்தை பா.ஜ.க மேற்கொண்டுவரும் நிலையில், இத்தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி அதனை கையிலெடுத்தது. ரோஹிங்கியா இஸ்லாமியர்களை பா.ஜ.க-வே டெல்லியில் தங்கவைத்துவிட்டு அதனை வைத்து அரசியல் செய்வதாக பிரச்சாரம் செய்தது. ரோஹிங்கியா இஸ்லாமியர்களின் குழந்தைகள் பள்ளிகளில் சேர்க்கப்படுவதால் டெல்லி மக்களின் குழந்தைகளின் நலன் பாதிக்கப்படுவதாகக் கூறி அக்குழந்தைகளை பள்ளிகளில் சேர்க்கக் கூடாது என்ற அயோக்கியத்தனமான உத்தரவை முதல்வர் அதிஷி பிறப்பித்தார்.
மேலும், பா.ஜ.க, மோடியை எதிர்ப்பதாக சொல்லும் அரவிந்த் கெஜ்ரிவால் ஆர்.எஸ்.எஸ்-யும் இந்துத்துவத்தையும் ஒருநாளும் எதிர்த்ததில்லை. பா.ஜ.க-வை போன்றே ஆம் ஆத்மியும் பனியா போன்ற கார்ப்பரேட் கும்பலை தனது பின்புலமாக கொண்டிருக்கிறது. பா.ஜ.க-விற்கு மாற்றான ஆர்.எஸ்.எஸ்-க்கு ஏற்ற ஒரு ஸ்டெப்னியாகவே அரவிந்த் கெஜ்ரிவால் ஆம் ஆத்மியை முன்னிறுத்தி வருகிறார். இத்தேர்தல் நேரத்தில், பா.ஜ.க. மீது குற்றச்சாட்டுகள் வைத்து ஆர்.எஸ்.எஸ்-க்கு அரவிந்த் கெஜ்ரிவால் கடிதம் எழுதியதே அதற்கு சான்று.
ஆனால், டெல்லியில் தொடர்ச்சியாக மூன்றுமுறை ஆட்சியைக் கைப்பற்றிவந்த காங்கிரசை ஒழிக்கட்டுவதற்கான ஆயுதமாகவே ஆம் ஆத்மியை உருவாக்கியது ஆர்.எஸ்.எஸ். தற்போது அந்த ‘கடமை’யை ஆம் ஆத்மி நிறைவேற்றிவிட்ட நிலையில் ஆம் ஆத்மியையும் தூக்கியெறிந்துவிட்டு நேரடியாக பா.ஜ.க-வை அதிகாரத்திற்கு கொண்டுவந்திருக்கிறது. இது ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க. சங்கப் பரிவாரங்கள், அம்பானி-அதானி…போன்ற கார்ப்பரேட் முதலாளிகள் என பாசிச சக்திகளின் எந்த அங்கத்துடனும் இணைந்து எதிர்க்கட்சிகளால் சமாதான சகவாழ்வு வாழ முடியாது என்பதையும் பாசிஸ்டுகளின் பாதையில் பங்குபோட முடியாது என்பதையும் மீண்டும் நிரூபிக்கிறது.
மேலும், ஒடிசா, மகாராஷ்டிரா வரிசையில் டெல்லியிலும் ஆம் ஆத்மியை வீழ்த்தி பா.ஜ.க. வெற்றிபெற்றிருப்பது, பா.ஜ.க-வால் காங்கிரசு ஆளும் மாநிலங்களை மட்டுமே கைப்பற்ற முடிகிறது, பிராந்திய கட்சிகளை தோற்கடிக்க முடிவதில்லை என்ற நிலையை மாற்றிள்ளது. ‘ஜெய் ஸ்ரீ ராம்’-க்கு மாற்று ‘ஜெய் ஜெகன்நாத்’ இல்லை என்பதை ஒடிசா தேர்தல் காட்டியது; பா.ஜ.க-வின் இந்து-இந்தி தேசவெறிக்கும் முன்னாள் மராத்திய தேசியவெறி செல்லுபடியாகாது என்பதை மகாராஷ்டிராவில் உத்தவ் தாக்கரேவின் வீழ்ச்சியும்; பா.ஜ.க-வின் இந்துத்துவ பாசிச திட்டத்தின் முன் ஹனுமன் சலிச்சாவும் கவர்ச்சிவாதமும் நிற்காது என்பதை டெல்லி தேர்தல் முடிவும் காட்டியுள்ளன.
பா.ஜ.க. தேர்தல் கட்டமைப்பையே பாசிச தன்மையாக மாற்றியிருக்கும் நிலையில், மாற்றுத் திட்டமோ சித்தாந்தமோ இல்லாமல் எதிர்க்கட்சிகள் தேர்தலை அணுகுவது பாசிசமயப்படுத்தப்படும் இத்தேர்தல் கட்டமைப்பில் தங்களுக்கும் ஓர் இடம் கேட்பதாகவே உள்ளன. ஆனால், பா.ஜ.க-வோ ஒவ்வொரு கட்சியாக சிதைத்து ஒரு கட்சி சர்வாதிகாரம் என்ற நிலையை நோக்கி நகர்ந்துக் கொண்டிருக்கிறது. இவையெல்லாம் மாற்று அரசியல்-பொருளாதார திட்டமும் பாசிச எதிர்ப்பு சித்தாந்தமுமின்றி பாசிஸ்டுகளை வீழ்த்த முடியாது என்பதையே மீண்டும் நிரூபிக்கின்றன.
துலிபா
(புதிய ஜனநாயகம் – மார்ச் 2025 இதழ்)
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram