21.03.2025

பாலஸ்தீனம் மீது பாசிச இஸ்ரேல் மீண்டும் இனவெறித் தாக்குதல்!

பத்திரிகை செய்தி

டந்த ஜனவரி 19-ஆம் தேதியன்று காசா உடனான போர் நிறுத்த ஒப்பந்தத்தம் கையெழுத்தானது. இதனை மீறி இனவெறி இஸ்ரேல் அரசானது கடந்த மார்ச் 18 அன்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலையில் காசாவில் மிகவும் தீவிரமான, கொடூரமான வான்வழித் தாக்குதலை நடத்தியுள்ளது.

காசாவில் மீண்டும் தாக்குதலை நடத்தியதில், இதுவரை 600க்கும் மேற்பட்டோர் இனப்படுகொலை செய்யப்பட்டுள்ளனர். தாக்குதல் தொடங்கப்பட்ட 48 மணி நேரத்தில் மட்டும் 183 குழந்தைகள் உட்பட 436 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக காசா சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கடந்த 2023 அக்டோபர் 7 முதல் காசா பகுதியில் இஸ்ரேலின் தாக்குதல்களில் 18,000க்கும் மேற்பட்ட பாலஸ்தீன குழந்தைகள் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தூங்கிக் கொண்டிருந்த காசா மக்கள் மீதும், தற்காலிகத் தங்குமிடங்களைத் தேடி அலைந்து கொண்டிருக்கும் மக்களைக் குறிவைத்தும் தற்போதைய தாக்குதல் நடத்தப்பட்டிருப்பது அயோக்கியத்தனமாகும்.

பாசிச இஸ்ரேலால் இனப்படுகொலை செய்யப்பட்ட பாலஸ்தீனிய மக்களின் மொத்த எண்ணிக்கை தற்போது 49,547 ஆக உயர்ந்துள்ளது; 1,12,719 பேர் காயமடைந்துள்ளனர்.

ஏற்கெனவே 15 மாதங்களாக இஸ்ரேலின் இனவெறித் தாக்குதலால் பாதிக்கப்பட்டுள்ள காசாவின் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட குழந்தைகள் இன்னும் அச்சத்திலும், ஆபத்திலும் சிக்கித் தவிப்பதாகப் பலரும் எச்சரித்து வருகின்றனர்.

குழந்தைகள் மீதான தாக்குதல் குறித்து, “உண்மையான இறப்பு எண்ணிக்கை மிக அதிகமாக இருக்க வாய்ப்புள்ளது. மேலும் குழந்தைகள் தாழ்வெப்பநிலை, ஊட்டச்சத்துக் குறைபாடு, நீரிழப்பு மற்றும் சிரங்கு போன்றவற்றால் கடுமையாகப் பாதிக்கப்படுகின்றனர்” என்று சர்வதேச குழந்தைகள் பாதுகாப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.

000

மார்ச் 2-ஆம் தேதியுடன் போர்நிறுத்த ஒப்பந்தத்தின் ஆறு வாரக் கால முதல் கட்டம் முடிவுக்கு வந்தது. ஆனால், இரண்டாம் கட்ட போர்நிறுத்தத்தை அமல்படுத்தி, போரை நிரந்தரமாக முடிவுக்குக் கொண்டுவருவது; காசாவிலிருந்து இஸ்ரேல் இராணுவம் முழுமையாக வெளியேறுவது போன்றவற்றை நடைமுறைப்படுத்த இஸ்ரேல் அடாவடியாக மறுத்துள்ளது. மாறாக, முதல் கட்டத்தையே தொடர வேண்டும் என்று காசாவிற்கு அழுத்தம் கொடுத்தது. இதன்மூலம் ஹமாஸ் வசமுள்ள அனைத்து இஸ்ரேலிய பணயக் கைதிகளையும் விடுவித்துவிட்டு காசா மக்களையும் ஹமாஸையும் நிராயுதபாணியாக்கி அவர்கள் மீது தாக்குதல் தொடுப்பது என்று நயவஞ்சகமாகத் திட்டமிட்டது. இந்த சதித்திட்டத்திற்கு இணங்க ஹமாஸ் மறுத்துவிட்டது. இதனைத் தொடர்ந்து தான் மீண்டும் காசா மீதான தாக்குதலை இஸ்ரேல் தொடங்கியுள்ளது.

பணயக் கைதிகளை மீட்பது மற்றும் ஹமாஸை ஒழிப்பது என்பதற்காக மீண்டும் போரைத் தொடங்கியிருப்பதாக நெதன்யாகு கும்பல் சித்தரிக்க முயல்கிறது. பாசிஸ்ட் டிரம்ப்பின் மேலாதிக்க விரிவாக்க நோக்கத்திற்காகவும், நெதன்யாகுவின் பாலஸ்தீன ஆக்கிரமிப்பு நோக்கத்திற்காகவும் இத்தாக்குதல் தொடங்கப்பட்டுள்ளது.

பேச்சுவார்த்தையில் மத்தியஸ்தராகச் செயல்பட்ட எகிப்து, “இந்தப் புதிய தாக்குதல்கள் போர் நிறுத்த ஒப்பந்தத்தின் அப்பட்டமான விதி மீறல்” என கண்டனம் தெரிவித்துள்ளது.

கடந்த இரண்டு வாரங்களாக ஹமாஸ் அதிகாரிகள் டிரம்ப் நிர்வாக அதிகாரிகளுடன் போர் சூழல் குறித்துப் பேசி வருகின்றனர். இந்நிலையில், அமெரிக்க அதிபர் டிரம்ப் நிர்வாகத்தின் முழு ஆதரவுடன் பாசிச இஸ்ரேல் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி காசா மீதான தனது இரத்த வெறிபிடித்த போரை மீண்டும் தொடங்கியுள்ளது.

பாசிஸ்ட் டிரம்ப் ஒருபக்கம் போரை நிறுத்தும் நடவடிக்கையில் ஈடுபடுவதாக நாடகமாடிக்கொண்டு, மற்றொருபுறம் அமெரிக்க மேலாதிக்க, அதிகார விரிவாக்க நோக்கத்தில், பாலஸ்தீனிய மக்களை ஜோர்டான் மற்றும் எகிப்து போன்ற அண்டை நாடுகளுக்கு இடம்பெயரச் செய்யத் திட்டமிட்டு வருகிறார். உள்நாட்டுப் போரையும் மனிதகுல நெருக்கடியையும் சந்தித்துக் கொண்டிருக்கும் சூடான், சோமாலியா, சிரியா போன்ற நாடுகளுக்கு காசா மக்களை நிரந்தரமாகக் குடியேற்றிவிட்டு காசாவை ‘கேளிக்கை’ நகரமாக மாற்றப்போவதாக பாசிஸ்ட் டிரம்ப் பேசியிருந்தது இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.

உலகெங்கிலும் பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக நடத்தப்பட்ட போராட்டங்கள் ஹமாஸ் அமைப்பை அழிப்பதாகக் கூறிய பாசிச இஸ்ரேல் அரசை நெருக்கடிக்கு உள்ளாக்கின. தற்போது காசாவை அழித்து, பாலஸ்தீனத்தை ஆக்கிரமிக்கத் துடிக்கும் இனவெறிப்பிடித்த ட்ரம்ப் மற்றும் நெதன்யாகு கும்பலின் சதித்திட்டம் அம்பலமாகி இத்தாக்குதலைக் கண்டித்தும் பல நாடுகளில் போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. மீண்டும் இந்த போரிலும் இனவெறி பிடித்த பாசிச இஸ்ரேல் வீழ்வது உறுதியே.

சர்வதேச உழைக்கும் மக்கள், ஜனநாயக சக்திகள் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறித் தாக்குதல் நடத்தும் அமெரிக்க – இஸ்ரேலை கண்டிக்க வேண்டும். பாலஸ்தீன மக்களின் விடுதலைப் போராட்டம் வெல்வதற்குத் துணை நிற்க வேண்டும். டிரம்ப் – நெதன்யாகு பாசிசக் கும்பலுக்கு எதிராகக் குரல் கொடுக்க வேண்டும்.

  • பாசிச இஸ்ரேலே, பாலஸ்தீனம் மீதான போரை உடனே நிறுத்து!
  • போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறுவதை நிறுத்து!
  • பாலஸ்தீன மக்களின் விடுதலைக்கான போராட்டம் வெல்லட்டும்!
  • சர்வதேச உழைக்கும் மக்களும், ஜனநாயக சக்திகளும், அமெரிக்க – இஸ்ரேல் சதித்திட்டத்திற்கு எதிராக அணிதிரள்வோம்!


மக்கள் அதிகாரம்,
கோவை மண்டலம்.
94889 02202

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க